Published:Updated:

தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமா? - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
News
Representational Image

ஊரடங்கு நாள்கள் துவங்கும் முன்பே தேவையான மதுவை பலர் வீடுகளில் வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``புகை பிடித்தால் இறப்பாய்

மது குடித்தால் இறப்பாய் இரண்டும்

விற்றால் வாழ்வில் சிறப்பாய்''

என்பார் கவிஞர் தமிழன்பன். ஒவ்வொரு முறை மதுவிலக்கு குறித்து பேசும்போதெல்லாம் தள்ளிக்கொண்டே போனது. தற்போது தீநுண்மியினால் ஏற்பட்ட ஊரடங்கினால் மாதக் கணக்கில் மதுக்கடைகள் திறக்கவில்லை.

Representational Image
Representational Image

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முப்பது நாள்கள் மது அருந்தவில்லையெனில் குடிமகன்கள் மதுவை மறந்து விடுவார்கள் என நடுநிலையாளர்கள் கூறிவந்த நிலையில் அவர்கள் அத்தனை பேரின் கூற்றினையும் பொய்ப்பித்துள்ளது ஆந்திர எல்லையோர மதுபானக்கடை. தமிழகமெங்கும் மதுக்கடை திறப்புக்குக் காத்துள்ளனர் மதுப்பிரியர்கள்.

தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமா எனும் கேள்வி மீண்டும் எழும்பியுள்ளது.

#நிதி நெருக்கடி

தமிழக அரசியலில் நீண்ட நாள்களாய் மதுவிலக்கு அமலில் இருந்தது. அண்ணா முதல்வரான பிறகும் அது தொடர்ந்தது. இந்தியாவில் 1970-ம் ஆண்டுக்குப் பிறகு நிதிநெருக்கடி ஆரம்பித்தது.

அப்போது மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அது என்னவெனில் ``மதுவிலக்கைப் புதிதாய் அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே உதவிப்பணம் நஷ்ட ஈடாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தத்திட்டம் வரும் முன்பே குஜராத்திலும், தமிழகத்திலும் மதுவிலக்கு அமலில் இருந்தது. இச்சட்டத்தில் விலக்கு அளித்து தமிழகத்துக்கு உதவிப்பணம் கோரினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. ஆனால் மத்திய அரசு மறுத்துவிட்டது.

#மதுவிலக்கு ரத்து

தமிழகத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க மதுவிலக்கை ஒத்திவைக்க ஆலோசித்தனர். கொள்கை சார்ந்த பிரச்னை என்பதால் பல கருத்துகள் கட்சியிலும் வந்தன. நடிகர் எம்.ஜி.ஆரும் நீண்ட யோசனைக்குப் பின் கோவையில் நடந்த தி.மு.க பொதுக்குழுவில் ஆதரவு தெரிவித்ததோடு.. அரசு தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.. நிரந்தரமாக அல்ல என மக்களிடம் தெரிவித்தார்.

பின்பு 1971-72ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கும்போது 30.8.1971 முதல் மதுவிலக்கு தமிழகத்தில் ரத்து செய்யப்படுவதாக (தற்காலிகமாக) அறிவித்தார்.

அந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் கே.கே ஷா ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் ஆண்டுக்கு 26 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுதந்திரா கட்சி எம்.எல்.ஏ-க்கள் டாக்டர் ஹண்டே, வி.எஸ் ஸ்ரீகுமார், வெங்கடசாமி நாயுடு ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.

ராஜாஜியும், காயிதேமில்லத்தும் முதல்வரின் இல்லத்துக்கே சென்று மதுவிலக்கை வலியுறுத்தினர். அதற்கு தமிழகத்தின் நிதி ஆதாரத்துக்காக, மத்திய அரசு மானியம் கொடுக்காமை, அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இன்மை ஆகியவையினால் கைவிடப்பட்டது என்றார். மேலும் ``நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என சட்டப்பேரவையில் கேட்டார். பின்பு நிதிநிலை சீரானபின் மீண்டும் 1973-ல் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. செப்டம்பர் 1-ம் தேதி 7000 கள்ளுக்கடைகள் மூடப்பட்டன.

Representational Image
Representational Image

#மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியில்

எம்.ஜி.ஆர் தி.மு.க-வை விட்டு வெளியேறிய பின் கருணாநிதி மீது சுமத்திய குற்றச்சாட்டில் மதுவிலக்கை நீக்கியதும் ஒன்று.

இவர் பொறுப்பேற்ற (1977-80) காலகட்டத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டபோது. ஆனால், மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. 30 வயதுக்கு மேற்பட்டோர் ரூ.25 கட்டணம் செலுத்தி தாசில்தார் அலுவலகத்தில் மது பெர்மிட் பெறலாம் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. பின்பு 2003-ம் ஆண்டில் ஜெயலலிதா அரசு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மொத்த விற்பனை விநியோகம் செய்தது.

#மாநில வருவாய்

தமிழகத்தில் மதுவிலக்கு வந்தும் வராமல் போய்விட்டது. தமிழக வருவாயில் (30,000 கோடி) பெரும்பாலான வருவாயை இது ஈட்டித்தருவதாலும் பல முக்கியப் புள்ளிகளின் மதுபானத் தொழிற்சாலைகள் இயங்குவதாலும் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. ஒவ்வோர் ஆண்டும் இதில் எளிதாய் அதிக வருவாய் வருவதால் பிற வருவாய் ஈட்டும் வழிகளைக் காண சுணக்கம் ஏற்படுகிறது. பல தொழிலாளர்கள் இதில் பணிபுரிவதால் மதுக்கடைகளை மூடும்போது வேலையிழக்கும் அபாயமும் உள்ளது. நிச்சயம் மாற்றுவழி கண்டறிந்து வருவாயை பெருக்க வேறு வழி காணப்பட வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#மக்களின் மனநிலை

பெரும்பணக்காரர்கள், கூலிவேலை செய்வோர்கள்தான் முன்பு மதுப்பிரியர்களாக இருந்தனர். இன்று நாகரிகத்தின் அடையாளமாக கல்லூரி மாணவர்கள், தொழில்நுட்ப பணி நாடுநர்களும் மது அருந்த ஆரம்பித்துவிட்டனர். ஒரு சந்தோஷத்தை அனுபவிக்க சேர்ந்து குடிப்பது இன்று கலாசாரமாகிவிட்டது. புதுப்பட டிக்கெட் வாங்குவதுபோல் வார இறுதியில் பாட்டில் வாங்குவது த்ரில் அனுபவமாக பார்க்கப்படுகிறது.

ஆங்கிலேயர்கள் போல் அளவாய் குடிக்காமல் மிதமிஞ்சி குடித்து தள்ளாடுவதும், மயங்கி கீழே விழுவதும், குடிப்பதாக இருக்கும் புகைப்படம் பதிவிடுவதும் பெருமையாகவும் சாகசமாகவும் பார்க்கப்படுகிறது. ஊரடங்கு நாள்கள் துவங்கும் முன்பே தேவையான மதுவை பலர் வீடுகளில் வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர். தற்போது இன்னும் பல நாளுக்குத் தேவையானதை கூட்டு குடிநீர் திட்டமாக பலர் ஒன்றிணைந்து வாங்கிச் செல்கின்றனர். குடிக்காதவர்களை ஏதோ வேற்றுக்கிரக வாசிகளாக காணும் போக்கும் அதிகரித்து வருகிறது.

Representational Image
Representational Image

உடல் உழைப்பே இல்லாமல் இன்றைய இறுக்கமான பணிச் சூழலில் மது ஒன்றே தங்களை விடுவிக்கும் என விதிகளை உருவாக்கியுள்ளனர். புத்தகம் படிக்கலாம், யோகா செய்யலாம், குழந்தைகளுடன் நேரத்தை செலவிடலாம் என்பது பிற்போக்குத்தனமாகப் பார்க்கப்படுகிறது.

#எதிர்காலம்

மதுவிலக்கிற்காக உயிர்நீத்த சசிபெருமாள், மதுவுக்கு எதிராய் போராடும் பலரை பார்க்கும்போது அப்போதைக்கு மது தவறு என மதுப்பிரியர்களுக்கு பட்டாலும் மீண்டும் மது அருந்தச் செல்கின்றனர். சிலருக்கு சந்தோஷத்தில் மது அருந்துவர், பலருக்கு மது அருந்துவதே சந்தோஷம் என இருக்கின்றனர்.

மதுக்கடைகளை படிப்படியாக மூடினால்தான் வருங்காலத்தில் புதிதாய் மதுவுக்குப் பழகுபவர்களைத் தடுக்க முடியும். நாளை முதல் குடிக்க மாட்டேன் என எண்ணாமல் இன்று ஒருநாள் குடிக்க மாட்டேன் எனும் மனநிலையை ஏற்படுத்த வேண்டும்.

ஒருவருக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மது விற்கக் கூடாது. விலை ஏற்றலாம். கட்டுப்பாடுகளை விதிக்கலாம். வீதிகளில் மது அருந்தினால் தண்டனை வழங்கலாம். மதுவில் ஆல்கஹாலின் அளவைக் குறைக்கலாம். இப்படிச் செய்தால் ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

"சட்டம் போட்டு நிறுத்த முடியாது, ஆரோக்கியத்துக்கு ஒத்துக்கொள்ளாத து அவனவனே நிறுத்தி விடுவான்’’

என மதுவிலக்கு குறித்த கேள்விக்குப் பதிலளித்தார் கண்ணதாசன். அது தனி மனித ஆரோக்யமா? நாட்டின் ஆரோக்யமா? என போக போகத் தெரியும்.

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/