
திட்டித் தீர்த்து சண்டை பிடித்து கத்திக் கோபப்படுவோம் எதற்காக? அப்படியேனும் அந்தச் சண்டை சரியாகி சமாதானம் ஆகிவிடாதா என்கிற எண்ணத்தில்தானே?
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
எனக்கு சிறு வயதில் பயங்கர கோபம் வரும். பல்லைக் கடித்துக்கொண்டு என் இயலாமையை எண்ணிக் கோபப்படும்போது ரத்தம் கொதிப்பதை உணர முடியும். ஆனால், அந்தக் கோபம் பல இடங்களில் எனக்கு கெட்டபெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது.
"நீ சொல்றது சரிதான். ஆனா, இது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை!" என்ற சமாதானக் குரல்களைக்கேட்டு ஓய்ந்துபோய் கோபம் என்னைவிட்டுச் சென்றுவிட்டது. இப்போது கோபம் வந்தால்கூட அதைத் தடுத்து நிறுத்த எனக்கு வழி தெரியும்.

குறைவாக மதிப்பிடப்பட்ட அல்லது தவறாக மதிப்பிடப்பட்ட உணர்வுகளில் கோபம் முதல் இடம் பெறும். அதில் எப்போதும் எனக்கு பெரும் வருத்தம் உண்டு. பல தருணங்களில் அன்பின் வெளிப்பாடே கோபமாகப் பிரதிபலிக்கிறது. நமக்கு மிகவும் நெருக்கமானவர் நம்மை காயப்படுத்தும்போது வரும் கோபம் நிச்சயம் நமக்கு தெரியாதவர் நம்மை காயப்படுத்தும்போது வருவதே இல்லை.
"நீ என்னடா, என்னை சொல்றது" எனச் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். இதுவே நம் அப்பா, அம்மா, உடன்பிறந்தவர்கள் கணவன், மனைவி என மனதுக்கு நெருக்கமானவர்கள் நம்மை வேண்டும் என்றே காயப்படுத்தினால்கூட வெறுப்பு வராது. மாறாகக் கோபம் கொப்பளிக்கும்.
திட்டித் தீர்த்து சண்டைபிடித்து கத்தி கோபப்படுவோம் எதற்காக? அப்படியேனும் அந்தச் சண்டை சரியாகி சமாதானம் ஆகிவிடாதா என்கிற எண்ணத்தில்தானே? மனதிற்குள் ஆயிரம் கேள்விகளோடும் வெறுப்போடும், பொறுமையாய் இருப்பதைக்காட்டிலும் அன்பானவரைத் தக்கவைத்துக்கொள்ள கோபப்படும் மனது அழகானதுதானே?
இப்படியான அழகான உணர்வை நாம் எப்பொழுதும் ஏன் தவறான தீய குணநலன்கள் வரிசையில் வைத்துவிடுகிறோம். 90-களில் பெற்றோர் குழந்தை வளர்ப்பில் ஒரு வகையாக இருந்தார்கள்.

மிகவும் பொறுப்பாக இருந்தார்கள். தம் குழந்தைகளைப் படிக்க வைத்தார்கள். நாம் எல்லோரும் படித்து பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கிறோம். இதெல்லாம் தாண்டி பெற்றோருக்கு வீடுகளில் பயங்கர மரியாதை கிடைக்கும். காரணம் "அப்பா கோபக்காரர்", "அம்மா திட்டுவார்." வீட்டில் எது சரி இல்லை என்றாலும் அப்பாவுக்கு கோபம் வரும். அம்மாவுக்கு மரியாதையாக நடந்துகொள்ளவில்லை என்றால் கோவம் வரும். இப்படி ஒரு பயம் பிள்ளைகளிடம் இருக்கும். இப்போது நாம் யாராவது கோபப்படுகிறோமா, கண்டிப்போடு நடந்து கொள்கிறோமா என்பது பெரிய கேள்விக்குறி. குழந்தைகளிடம் மனைவியிடம் கணவனிடம் என யாரிடமும் கோபப்பட முடிவதில்லை.
நியாயமான காரணங்களுக்கு கோபப்படுபவன் யாரையும் ஏமாற்ற மாட்டான், மனிதரிடத்தில் அதிக அன்பும் நம்பிக்கையும் கொண்டிருப்பான்.வாசகி சண்முகப்பிரியா
நான் பள்ளியில் படித்த காலத்தில்கூட என் தோழிகளில் ஒருவர் பயங்கரமாகக் கோபப்படுவார். "அவளைப் பத்தி தெரியாதா, இப்ப கத்துவா! அப்புறம் வந்து சாரி சொல்லுவா?" என்று நாங்கள் அவளைப் புரிந்துகொண்டோம். இல்லையென்றால் "அவளின் கோபம் நியாயம்தானே" என நாங்கள் மன்னிப்பு கேட்கவும் தயங்கியதில்லை. இப்போது நாம் நியாயமான காரணங்களுக்கு கோபப்பட்டால்கூட புரிந்துகொள்ள யாரேனும் இருக்கிறார்களா எனக் கேட்டால் நம்மிடம் பதில் இருக்கிறதா? நம் நண்பர்கள் யாரேனும் தவறுசெய்யும் பட்சத்தில் அவர்களை நாம் உரிமையோடு கண்டிக்க முடிகிறதா? "எதுவா இருந்தாலும் யோசிச்சு பண்ணு!" என்பதோடு நம் கடமைமுடிந்தது. நண்பர்களுக்குப் பிரச்னை என்றால் தோள் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், உரிமையோடும் அக்கறையோடும், இதைச் செய்யாதே என கண்டிக்கத்தான் ஆளில்லை.

நாமும் யாருக்கும் அறிவுரை சொல்லத் தயாராக இல்லை. தேவைக்கு மீறி பொறுமையாக இருப்பது, 'நமக்கு ஏன் வம்பு' என ஒதுங்கிக்கொள்வதற்குச் சாக்காகச் சொல்லப்படுகிறதோ என்றே தோன்றுகிறது. அவனுக்கு நல்லது சொல்ல போய் ஏதேனும் தவறாகிப்போனால் நம் மேல் பழி விழும் என்ற பயம் ஒரு காரணம் என்றால் அறிவுரை சொன்னால் அதை ஏற்றுக்கொள்பவர்களும் அரிதாகிப்போனார்கள்.
அதீத அன்பு சில நேரங்களில் கேலியாக பார்க்கப்படுவது போல சாதாரண கோபம்கூட மிருகத்தனமாகச் சித்திரிக்கப்படுகிறது.வாசகி சண்முகப்பிரியா
``எனக்கே புத்தி சொல்ல வந்துட்டான்'' என்று ஈகோ எட்டி பார்க்கிறது. உறவில் விரிசல் விழுகிறது. கோபம் என்று இல்லை, எல்லா உணர்வுகளுமே நம்முள் வெளிக்காட்ட முடியாமல் மழுங்கி போய் இருக்கிறது. கோபப்பட்டு சண்டை போட்டு நிம்மதியைக் கெடுத்துக் கொள்வதைக் காட்டிலும் பொறுமையாக இருந்து உறவுகளைத் தக்க வைத்துக்கொள்ள நினைக்கிறோம். இதுவே நாளடைவில் மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. அதில் இருந்து வெளிய வர நம் வாழ்நாளை செலவழிக்க வேண்டி இருக்கிறது. அதீத அன்பு சில நேரங்களில் கேலியாகப் பார்க்கப்படுவது போல சாதாரண கோபம்கூட மிருகத்தனமாகச் சித்திரிக்கப்படுகிறது.

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் இல் மட்டும் நம் அன்பும் பிரியமும் ரௌத்திரமும் றெக்கைகட்டி பறக்கிறது. யாரையும் காயப்படுத்தாமல் இருக்க நினைப்பது நல்ல விஷயம்தான். இப்படி வீடுகளில் நெருங்கிய வட்டாரத்தில் கோபத்தைக் குறைத்துக்கொண்ட நாம் வீட்டை விட்டு வெளியே சென்றால் எங்கே எதற்காகக் கோபப்படுவோம்?
அநியாயத்தைக் கண்டு கேள்வி எழுப்புதலின் பேர்தான் ரௌத்திரம் என்பது நமக்கெல்லாம் மறந்து போனதோ?
வேலைக்குச் சென்ற புதிதில் எல்லாவற்றுக்கும் கோபப்பட்டுக் கொண்டிருந்த பின் நாளடைவில் அதைக் குறைத்துக்கொண்டேன். கோபம் குறைந்தது என்பதைவிடவும் எதார்த்தம் புரிந்தது என்பதே உண்மை. சக மனிதனுக்கு எதிராக நடக்கும் எந்த அநியாயத்துக்கும் உணர்ச்சி வசப்படாமலிருக்க பழகிக்கொண்டால் மட்டுமே இங்கு நிம்மதியாக வாழமுடிகிறது. இங்கே உணர்வுகளை நேர்மையாக வெளிப்படுத்துபவன் முட்டாளாகப் பார்க்கப்படுகிறான். எல்லாவற்றையும் மனதுக்குள் வைத்துக்கொண்டு சமயத்துக்கு தகுந்தாற்போல நடந்து கொள்பவனே பிழைக்கத் தெரிந்தவன்.
நியாயமான காரணங்களுக்கு கோபப்பட்டால்கூட இங்கே என்ன கத்தினாலும் எதுவும் மாறாது என நம்மிடம் ஒரு பதில் இருக்கிறது. ஆனால், இங்கே எல்லா மாற்றங்களுக்கும் தனி மனித கோபம் பெரும்பங்கு வகிக்கிறது என்பதை மறந்துவிடுகிறோம்.
நன்றாக யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று நிச்சயம் புரியும். நியாயமான காரணங்களுக்கு கோபப்படுபவன் யாரையும் ஏமாற்ற மாட்டான், மனிதரிடத்தில் அதிக அன்பும் நம்பிக்கையும் கொண்டிருப்பான்.

மக்களின் கோபமே அவர்களைப் போராட்டத்தில் ஈடுபட வைக்கிறது. அடுத்த முறை நம்மில் யாரேனும் அதிகாரத்தால் அடக்குமுறைக்கு ஆளாகும்போது அதற்காகக் கோபப்படுங்கள். எதையும் மாற்ற முடியவில்லை என்றாலும் அதற்கு எதிராக குரல் கொடுங்கள். நிச்சயம் அந்த உணர்வு உங்களுக்கு மகிழ்வைத் தரும். தனி மனித கோபம் அவசியம்தான் போல என்று லேசாகத் தோன்றுகிறது அல்லவா? கோபப்படுறது தப்பில்லை பாஸ்!
- சண்முகப்பிரியா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.