ரிடையர்மென்ட் ஹோம்ஸ் சரியா, தவறா? - அனுபவம் பகிரும் வாசகி #MyVikatan

அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடத்தல் வேண்டும் என்பார்கள். ஆனால், அவர்களின் அனுபவங்களை முதலில் கேட்டுத் தெரிந்து கொண்டால்தான் அவர்கள் கூறுவதைக் கேட்கலாமா, கூடாதா, ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்ற முடிவுக்கே நாம் வரமுடியும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
வயது என்பதை வெறும் எண்ணாக மட்டுமே கருதினால் வாழ்நாள் முழுவதும் நம்மை மகிழ்ச்சியாக வாழவைக்கும். வயதுக்குண்டான ஈகோ நம்மை திமிராக நடக்கச் செய்திடாது; மதிப்பு, மரியாதைக் கேட்டு, அதைத் தொலைக்கச் செய்திடாது; என் பிள்ளைகள் என்னைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்க வைத்திடாது.
குவாக் குவாக் என்று அழுதுகொண்டே ஆரம்பித்த நம் ஒவ்வொருவரின் எண் கணக்கு பல கூட்டல், பெருக்கல், சில கழித்தல், பிரித்தல் என ஆண்டவன் போடும் கணிதமே. அவர் கணக்கின் விடை கிடைத்ததும் நாம் இவ்வுலகிலிருந்து விடை பெற்றிடுவோம். இவ்வளவேதான் வாழ்க்கை. இதற்கிடையில் ஏன் வீணா போன ஈகோ? நாங்கள் பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் எங்கள் சொல்படிதான் நடக்க வேண்டும் என்ற விவாதங்கள் எதற்கு?

அனுபவசாலிகளின் பேச்சு கேட்டு நடத்தல் வேண்டும் என்பார்கள். ஆனால், அவர்களின் அனுபவங்களை முதலில் கேட்டுத் தெரிந்துகொண்டால்தான் அவர்கள் கூறுவதைக் கேட்கலாமா, கூடாதா, ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்ற முடிவுக்கே நாம் வர முடியும். 70, 80 வருடங்கள் இந்த பூமியில் வாழ்ந்துவிட்டால் மட்டும் அனுபவசாலிகள் ஆகிவிடமாட்டார்கள். அப்படி வாழ்பவர்கள் அவர்தம் வாழ்க்கையை எப்படி வாழ்ந்துள்ளார்கள் என்பதுதான் மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டும்.
அன்றைய நாள்களில் முதியோர் இல்லம் என்பது ஏதோ வயதானவர்களுக்கான சிறைச்சாலை போல் சித்திரிக்கப்பட்டு வந்தது. பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை அங்கு விட்டுவிட்டால் அது கேவலமானதாகக் கருதப்பட்டது (ஏன் இன்றும் சிலர் அந்த மனப்பாங்குடன்தான் இருக்கிறார்கள்). ஏனெனில், அன்று கூட்டுக்குடும்பம் என்ற ஒன்றைக் கடைப்பிடித்து வந்தனர்.
ஆனால், இன்றைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்பம் சாத்தியமா என்று கேட்டால், சிலரால் சாத்தியம், பலரால் சாத்தியமில்லை என்றுதான் கூற முடியும்.

கடந்த 20 வருடங்களாகவே, வேலைக்குப் போகும் இளைஞர்களின் வாழ்க்கை என்பது படுவேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. அன்றுபோல காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை என்ற வரையறை இல்லாத வேலைகளையே பெரும்பாலும் அனைவரும் செய்கின்றனர். இதில் இரவு, பகல் என்ற வித்தியாசமுமில்லை, ஆண், பெண் என்ற பாகுபாடுமில்லை. அனைவரும் இப்படி ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் வேளையில் வீட்டில் முதியவர்களைப் பார்த்துக்கொள்ள எங்கிருந்து நேரம் இருக்கும்?
இதனால் இன்றைய இளைஞர்களிடம் மட்டுமல்லாமல், இன்றைய முதியவர்களும், நாளைய முதியோர் ஆகப் போகிறவர்களும், என அனைத்து வயதினரிடமும் மாற்றங்களைக் காண முடிகிறது.
அப்போது வேலைக்குச் சென்ற இப்போதைய முதியவர்கள், சுதந்திரத்தை விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அன்றுபோல் இன்று பிள்ளைகளைச் சார்ந்து அவர்கள் இல்லை. அதாவது, அவர்களில் சிலர் 15 வயது முதல், பலர் 25 வயது முதல் குடும்பத்துக்காக உழைக்க ஆரம்பித்திருப்பார்கள். குடும்பச் செலவுகள், குழந்தைகளுக்கான செலவுகள், பண்டிகை நாள்கள் செலவுகள், சொந்தபந்தங்களின் விசேஷங்களுக்கான செலவு, வேலைப்பளு என ஆரம்ப காலத்திலிருந்து அவர்களின் ரிட்டையர்மென்ட் ஏஜ் வரை ஓடி ஓடி அனைவருக்கும் செய்து ஓய்ந்தவர்கள். அந்த ஓட்டத்தில் அவர்களின் வயதுக்குரிய விஷயங்களை பலர் அனுபவிக்காமல் இருந்திருப்பார்கள்.
எப்படி இன்றைக்கு நாம் சம்பாத்தியம், வீடு, குழந்தைகள் என ஓடிக்கொண்டிருக்கிறோமோ, அதேபோல அவர்களும் ஓடியவர்கள்தானே! ஆனால், இதில் ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால்...
அன்றைக்கு இருந்தவர்களில் பலர் அவர்களின் சின்னச் சின்ன ஆசைகளைக்கூட வெளிக்காட்ட முடியாமல் இருந்தனர். இந்த ஆசையை நிறைவேற்ற நினைத்தால் செலவாகிடுமோ, அந்தப் பணமிருந்தால் இதை செய்திடலாமே அல்லது அதைச் செய்திடலாமே என்று எண்ணி தங்களுக்காக எதையுமே செய்துகொள்ளாமல் வாழ்ந்தார்கள்.

இன்றைய காலத்தில் தனக்கு மிஞ்சித்தான் எவருக்கும் என்ற மனப்பான்மை பெருகிக்கொண்டிருப்பதால், அவரவர் சம்பாதிப்பதை அவரவர் நன்றாகச் செலவு செய்து வருகிறார்கள். இது சரியா, தவறா என்ற விவாதத்திற்கு இப்போது நாம் செல்ல வேண்டாம். இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், இன்றைய இளைஞர்கள் அவர்கள் விருப்பங்களை அவர்களே நிறைவேற்றிக்கொள்கிறார்கள். எவருக்காகவும் அவர்கள் எதையும் இழக்க விரும்பாதவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இந்தக் காலகட்டத்தில் முதியவர்கள் பலர் தங்கள் பிள்ளைகளின் சுதந்திரத்துக்குத் தடையாக இருக்க விரும்பவில்லை. பிள்ளைகளின் சந்தோஷம்தான் முக்கியமென்று எண்ணுகிறார்கள். அவர்கள் அவர்களின் வாழ்க்கையை அவர்கள் இஷ்டம் போல் வாழவிட்டு விட்டார்கள். இன்றைய முதியவர்களில் சிலர் இன்றும் தங்களின் ஈகோவை விடாமல் குடும்பத்தில் பல பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். ஆனால், பலர் அவர்களின் ஈகோவைக் கடலில் உப்பைக் கரைப்பதுபோல கரைத்துவிட்டனர்.
அத்தகைய மனமாற்றம் காரணமாக அன்றைய கொடூரமான மாமியார்கள், மாமனார்கள் எல்லாம் இன்று காணாமல் போய்விட்டனர். சிறியவர்களுக்காக பெரியவர்கள் இறங்கி விட்டுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அதே நேரம் அவர்களின் சுதந்திரத்தையும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஏனெனில், அவர்களின் பாதி வாழ்க்கையை பிள்ளைகளுக்காக நிறைய விட்டுக் கொடுத்துவிட்டார்கள் அல்லவா!

வாழ்வில் அனைத்தையும் கண்டும் கடந்தும் வந்துள்ள வயதானவர்களுக்கு எந்தவித சிந்தனையும் இருக்காது. அவர்களின் பொறுப்புகளிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். அவர்களின் சங்கடங்கள், பொறுப்புகள் என எல்லாம் முடிந்துவிட்டது. இந்த நிலையில்தான் பிள்ளைகள் அவர்களை அவர்களாக வாழவிட வேண்டும். ஆம், பலரிடம் பல திறமைகள் பொக்கிஷம் போல, மேல் கூறிய காரணங்களினால் ஒளிந்து கிடந்திருக்கும். அவற்றை அவர்கள் வெளிக்கொண்டு வர இந்த வயதைவிட்டால் பின் எந்த வயதில் அவர்களால் நிறைவேற்றிக்கொள்ள முடியப்போகிறது?
இப்போது ஆங்காங்கே பல இடங்களில் ரிடையர்மென்ட் ஹோம்ஸ் என்று முளைத்துக் கொண்டிருப்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாமே அன்றைய ஆள்களின் மனமாற்றத்தையும், அதை மதித்து மரியாதை செய்யும் இன்றைய காலகட்டப் பிள்ளைகளையும்.
இந்த ரிடையர்மென்ட் ஹோம்ஸ் என்பது பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் கிடைத்துள்ள வரப்பிரசாதம். ஆம், பிள்ளைகள் வேலை நிமித்தமாக வெளிநாடுகளிலோ, வெளியூர்களிலோ வசிக்க வேண்டியிருக்கிறது. அவர்களால் பெற்றவர்களை தங்களுடன் கூட்டிக்கொண்டு போகவும் முடியாத நிலை. அதே சமயம், பெற்றவர்கள் நல்ல இடத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றவர்களும் பிள்ளைகளும் சேர்ந்து இருவரின் நலனுக்காகவும் இப்படிப்பட்ட ரிடையர்மென்ட் ஹோம்ஸைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் பிள்ளைகளும் நிம்மதியாக வேலைபார்க்க முடிகிறது; பெற்றவர்களும் அவர்களுக்கு ஒத்த வயதிலிருப்பவர்களுடன் பேசிக்கொண்டும், விளையாடிக் கொண்டும் பொழுதை இனிதாகிக்கொள்ள முடிகிறது.
பிள்ளைகளைப் பார்க்க வேண்டும், பேரப்பிள்ளைகளுடன் இருக்க வேண்டுமென்றால், அங்குமிங்குமாக இருந்துகொள்கிறார்கள். வயதானால் ஓரிடத்தில் இருக்க மாட்டார்கள் என்றும் ஒரு கூற்று உள்ளது. பெற்றவர்கள் பிள்ளைகளின் உணர்வுகளை மதித்து நடந்துகொண்டார்களேயானால் பிள்ளைகளும் பெற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள். பிள்ளைகள் பெற்றவர்களைப் பார்த்துதான் அனைத்தும் கற்றுக் கொள்கிறார்கள். நாமே அவர்களின் முதல் ஆசான்!

என்ன தெரியுமா அதை அப்படியே படிக்கிறேன் கேளுங்கள்...
"என் அப்பா, அம்மா எங்களோட இருக்கும்போது அவங்களுக்குப் பேச வீட்டில யாருமே இருக்க மாட்டோம். நானும் என் மனைவியும் வேலைக்குப் போயிடுவோம். எங்க பொண்ணும் ஸ்கூல் போயிடுவா. அப்போ அவங்க ரெண்டு பேரும் தனியாதான் இருப்பாங்க. அப்படி அவங்களைப் பார்க்க எங்களுக்குக் கஷ்டமா இருக்கும். என்னடா இது, இவங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியலையேனு தோணும். அப்போதான் இந்த ரிடையர்மென்ட் ஹோம்ஸ் கான்செப்ட் வந்தது.
என் பெற்றோரிடம் விவரத்தை விளக்கிச் சொன்னோம். அவர்களும் புரிந்துகொண்டு அங்கு செல்ல ஒப்புக்கொண்டனர். ஆனா, இந்த சொந்தபந்தங்கள் இருக்காங்களே, அவங்கதாங்க வில்லன்களே. அதுல சிலர் எங்க பேரன்ட்ஸ் கிட்ட ஏதேதோ சொல்ல, அதைக் கேட்டு அவங்க என்னிடம் சொல்ல, அப்புறம் அவங்ககிட்ட நான் சொன்னேன்... 'நீங்க போய் ஒரு மாசம் ட்ரையல் இருந்து பார்த்துட்டு வாங்க; பிடிச்சிருந்தா நீங்க போகலாம். இல்லாட்டி இங்கேயே எங்க கூடவே இருங்க'ன்னு சொல்லி ஒரு மாசம் அங்க தங்க வெச்சேன்.
அடுத்த மாசம் வீட்டுக்கு வந்ததும் எங்க அப்பா என்னைப் பார்த்து, "டேய் நாங்க அங்கேயே இருந்துக்கறோம்டா. மாசத்துல ஒரு வாரம் வந்து உங்ககூட இருக்கோம். அங்க அவ்வளவு நல்லாயிருக்குடா. நான் பேட்மின்டன் விளையாடி எவ்வளவு வருஷம் ஆச்சு தெரியுமா! இப்பவும் நல்லாதான் விளையாடறேன்னு எல்லாரும் சொன்னாங்கடா."
அம்மாவும் அதேபோல சொல்ல, உடனே நான் அங்கு ஒரு அப்பார்ட்மென்ட் புக் செய்தேன். அதில் என் பெற்றோரைக் குடி வைத்தேன். முதல்ல ஒரு ரெண்டு மாசம் நான் ரெகுலரா ஃபோன் பண்ணிக் கேட்டேன். அப்புறம் எனக்கு டைமில்லாததால் பண்ணலை. ஆனால், அவர்கள் இருவரும் என் மகளிடமும் மனைவியிடமும் என்னிடமும் வாரத்தில் ஒரு முறை ஃபோன் போட்டு பேசினார்கள். நான்கு மாதங்கள் உருண்டோடின. ஒரு ஞாயிற்றுக்கிழமை நானும் மனைவியும் குழந்தையுமா அப்பா, அம்மாவைப் பார்க்கச் சென்றோம்.
என் மனதில் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ என்ற பதற்றம் இருந்துகொண்டே இருந்தது. அங்க போயி பார்த்தா, ரெண்டு பேரும் செம ஹெல்தியா இருந்தாங்க. எங்களைப் பார்த்ததுமே அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஃபோன் போட்டு வரச்சொல்லி எங்களை இன்ட்ரோ பண்ணி வச்சு, ஒரே அமர்க்களமாவும் சந்தோஷமாவும் இருந்தது. அன்று நானும் என் மனைவியும் முடிவு செய்தோம்... நாங்கள் ரிடையர்டு ஆனா இதே போல வந்து உட்கார்ந்து கதை பேசிகிட்டு நமக்கு பிடிச்சதைப் பண்ணிக்கிட்டு நம்ம குழந்தைகளைத் தொந்தரவு செய்யாம நம்ம முதுமையைப் போற்றி வாழ்ந்திடணும்னு. என்ன சொல்றீங்க?" என்றார்.
எனக்கு அதைக் கேட்டதும் அவரின் மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொண்டது. ஆம் மக்களே, வயதானவர்களுக்கு எந்தவித ஆசைகளும் இருக்கக் கூடாது என்று எந்தவித சட்டமுமில்லை. வயதாக வயதாக பேச்சுத் துணை மிக அவசியமான ஒன்றாகும். அதுவும் அவர்கள் ஒத்த வயதுள்ளவர்கள் என்றால் அதில் தனிசுகம் இருக்கத்தான் செய்யும்.
சிறு வயது முதல் குடும்பம், குடும்பம் என்றிருந்தவர்களுக்கு ஆஃப்டர் ரிடையர்மென்ட் லைஃப் என்பது நல்லபடியாக அமைந்தால்தான் அவர்களின் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். அன்றைய நாள்கள் போல, பெற்றவர்களைக் கொண்டு தள்ளிவிட்டு வரக்கூடியவை அல்ல, இப்போதிருக்கும் இந்த ரிடையர்மென்ட் ஹோம்ஸ். இதில் ஒரு வீடு வாங்கவே பல லட்சங்கள் ஆகும். ஆனால், கொடுத்த காசுக்கு பல நிறுவனங்கள் மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றன என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட இடங்களில் பிள்ளைகள் பெற்றவர்களின் நலன் கருதி இவ்வாறு அவர்கள் சம்பாதித்ததை கொடுத்து வீடு வாங்கி அதில் பெற்றவர்களை இருக்கச் செய்து மகிழ்கிறார்கள்.

இந்த மாதிரியான இடங்களில் உள்ள சௌகர்யங்களைப் பற்றி புரிந்துகொள்ளாத சில கூட்டங்களும், பழமையான அதிகார வர்க்கத்தினரும் இதைத் தவறென்று பேசினாலும், அவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில்தான் என்பதை மறந்திடாது, நமக்கும் நமது குடும்பத்துக்கும் எதில் மகிழ்ச்சியுள்ளதோ, அதையே செய்திடுவோம். சொந்தக்காரர்கள் என்ன சொல்வார்களோ, அக்கம்பக்கத்தினர் என்ன சொல்வார்களோ, இது தெரிந்தால் நாலு பேரு நாலு விதமா பேசுவாங்களோ என்கிற மாதிரியான எண்ணங்களை எல்லாம் புறம்தள்ளி வைத்திடுங்கள். அவர்கள் நாம் எது செய்தாலும் அதை விமர்சித்துக் கொண்டேதான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை அதே இடத்தில் விட்டுவிடுங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
பிள்ளைகளுக்காக மட்மே வாழ்ந்த பெற்றவர்கள் எந்த நேரத்திலும் அவர்களின் வளர்ந்த பிள்ளைகள் சொல்படிதான் நடப்பார்கள். அவர்களின் பிள்ளைகளின் நலனில்தான் அதிகம் அக்கறை காட்டுவார்கள். நாங்கள் உங்களைப் பெற்றவர்கள்; அதனால் எங்கள் கைதான் ஓங்கியிருக்க வேண்டுமென்று என்றுமே எண்ண மாட்டார்கள். அப்படி வாழ்ந்த பெற்றவர்களின் பிள்ளைகளும் என்றும் அவர்களை விட்டுவிடுவதில்லை.
முதுமை என்பதும் ஒரு பருவம்,
அதைக் கடந்திட தேவை பக்குவம்!
பிள்ளைகளைப் பெற்றோம், அவர்களுக்கு வேண்டியதை செய்தோம்... அது கடமை.
பிள்ளைகளும் அதையே நமக்குத் திருப்பி செய்தாக வேண்டுமென்று எதிர்பார்ப்பது மடமை!
நமது சந்தோஷத்துக்கு நாம் பிள்ளைகளைப் பெற்றோம்; நமது சந்தோஷத்துக்கு அவர்களை வளர்த்தோம். ஆனால், ஒரு வயதுக்கு மேல் நாம் அவர்களின் சந்தோஷத்துக்காக வாழ்ந்திட வேண்டுமே அன்றி, அப்போதும் நமக்காக வாழச்சொல்லி வற்புறுத்தக் கூடாது.
அப்படி செய்யும் இடங்களில் எல்லாம் விரிசல்கள்தான் ஏற்படும்.
பிள்ளைகளானாலும் பெற்றவர்களானாலும் ஒருவர் மற்றொருவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும். பெற்றோர் பிள்ளைகள் மீதும், பிள்ளைகள் பெற்றோர் மீதும் உண்மையான, நிபந்தனையற்ற அன்பு பாராட்டினால், அது சில சமயம் சிலரால், சில நேரங்களில் வழி தவறிச் சென்றாலும், முடிவு என்றுமே சுபம்தான்.
- பார்வதி நாராயணன்
கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;
தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ
உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.