Published:Updated:

`நண்பன் ஒருவன் வந்தபிறகு..!' - ஐ.டி இளைஞர் பகிரும் நட்பதிகாரம் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

நண்பர்களைப் பற்றி நினைத்தவுடன் உடனடியாக உங்கள் மனதில் தோன்றும் ஒன்றிரண்டு பெயர்களுக்குச் சொந்தக்காரர்களே உங்களுக்கு மிக நெருங்கிய நண்பர்களாயிருந்திருப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

என் 3 இடியட்ஸ் (3 Idiots) பக்கங்கள்..

தேசிய கல்லூரி, திருச்சி (National College, Trichy)

பல அறிஞர்களையும் ஒரு ஜனாதிபதியையும் (முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்கள்) கொடுத்த திருச்சியின் ஒரு பழைமையான கல்லூரி. ஒரு காலத்தில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் எங்கள் கல்லூரி மைதானத்தில் நடந்ததாக எங்கள் பேராசிரியர் கூறியிருக்கிறார். அவ்வளவு பெரிய மைதானம் கேலரியுடன் இருந்தது. இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை.

Representational Image
Representational Image

அங்குதான் நான் இயற்பியலில் இளங்கலை படிப்பு (B.Sc. Physics) மூன்று வருடங்கள் படித்தேன். என்னுடைய வாழ்நாளில், வாழ்வின் பல புதிய பரிமாணங்களைத் தெரிந்துகொள்ளவும், என்னுடைய அறிவை பல புதிய கோணங்களில் விரிவுபடுத்தவும் உதவிய நாள்கள் அவை. அதற்கு உதவியவர்கள் என்னுடன் படித்த நண்பர்கள்.

உன் நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன் என்று ஒரு பழமொழி உண்டு.

அவ்வாறான நல்ல நண்பர்களுடன் நான் எவ்வாறு அறிமுகமானேன், அவர்களுடன் பழகுவதற்கு முன் அவர்களைப் பற்றிய எனது எண்ணம், அவர்களுடன் பழகிய பின் அவர்களைப் புரிந்துகொண்ட விதம் குறித்து இங்கு பேச ஆசைப்படுகிறேன்.

அனைவருடைய வாழ்விலும் இதுபோன்ற நட்புகள் கட்டாயம் இருந்திருக்கக் கூடும். நண்பர்களைப் பற்றி நினைத்தவுடன் உடனடியாக உங்கள் மனதில் தோன்றும் ஒன்றிரண்டு பெயர்களுக்குச் சொந்தக்காரர்களே உங்களுக்கு மிக நெருங்கிய நண்பர்களாயிருந்திருப்பார்கள். இன்றும் நம்முடைய வாழ்வின் மறக்க முடியாத இனிமையான நாள்கள் நம் கல்லூரி நாள்களே என்பது அனைவரும் மறுக்காத உண்மை.

Representational Image
Representational Image

நமது வாழ்வில் தினம்தினம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன, நாம் கற்றுக்கொள்ளும் மாணவனாக இருந்தால். கற்றுக் கொடுப்பவர்கள் அனைவருமே குருதான் அவர் ஆசிரியராக இருந்தாலும், நண்பர்களாயினும் பெற்றோராயினும், நம் குழந்தைகளாயினும் (அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பனாகிய முருக கடவுளைப்போல) ஒன்றே.

நண்பர்கள் அமைவதுகூட கடவுள் கொடுத்த வரம்தான் (கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்). நீங்களாக நண்பர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது. நட்பு தானாக அமையும்.

அதற்கு நீங்கள் ஒரே பெஞ்சில் அமர்ந்திருக்கவோ, ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாகவோ, ஒரே சாதி மதத்தைச் சேர்ந்தவராகவோ, அழகாகவோ, புத்திசாலிகளாகவோ இருக்க வேண்டியதில்லை.

கல்லூரி சேர்க்கைக்காகச் சென்றிருந்த சமயம் எங்கள் கல்லூரியின் துணை முதல்வர் (பெயர் நினைவில்லை) என்னிடம் சொன்னது...

Representational Image
Representational Image
Pixabay

"நல்லா படிக்கணும்… நல்ல பசங்களுடன் சேர வேண்டும்… நன்றாகப் படித்து பெற்றோர் பெயரைக் காப்பாற்ற வேண்டும்" என்று வாழ்த்தி அனுப்பினார். அந்த வாக்கு பலித்திருக்க வேண்டும், எனக்கு அவ்வாறான நண்பர்கள் கிடைத்தார்கள்.

சண்முகராஜா கல்லூரியில் என்னுடைய முதல் நண்பன் [கடைசியாகச் சந்தித்தபோது திருச்சி கோர்ட்டில் வக்கீலாக இருந்தான்] காரணம் நானும் அவனும் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். அறிமுகம் இல்லாத கூட்டத்தில் எனக்குத் தெரிந்த ஒரு முகமாக அவன் இருந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.

கல்லூரியில் என்னுடைய முதல்நாள் நன்றாக நினைவிருக்கிறது. அட்டவணைப்படி முதல் நாள் காலை வகுப்புகள் முழுவதும் ஆய்வகச் செய்முறைக்கான (Practical’s Lab- Properties of Matter) வகுப்புகள். நானும் மிகுந்த உற்சாகத்துடன் வகுப்பில் அமர்ந்திருந்தேன். எங்களை ஆய்வக உதவியாளர் ஆய்வகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு பேராசிரியர் ரங்கன் அவர்கள் வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்துகொண்டிருந்தார்.

Representational Image
Representational Image
Pixabay

அப்போது முதல் பெயராக "B.K. வேங்கட சுப்பிரமணியன்" என்று கூப்பிட்டார். அது யார் என்று பார்க்கும் ஆவலில் (அந்த ஆவலுக்குக் காரணம் அதுவரை அத்தகைய நீண்ட பெயரை நான் கேள்விப்பட்டதில்லை.) தேடியபோது அந்தப் பையன் வரவில்லை என்று தெரிந்தது. அவர் அடுத்தடுத்து பெயர்களை வாசிக்க அனைவரும் ப்ரசென்ட் சார் (Present Sir) என வருகையை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தோம்.

அப்போது ஒரு மாணவன் சிறிது தாமதமாக அனுமதிச் சீட்டுடன் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டான். பார்ப்பதற்கு சற்று முரட்டு உருவமாக மீசை தாடியுடன் இருந்தான். எனக்கு அப்போது மீசை முளைக்கவில்லை (இப்போதுவரை சரியாக முளைக்கவில்லை அது வேறு விஷயம்). அவனைப் பார்த்தவுடன் என் மனதில் நான் இப்படி நினைத்துக்கொண்டேன்.

"இந்தப் பையனிடம் எந்தப் பிரச்னையும் செய்யக் கூடாது செய்தால் அவ்வளவுதான் நம்மை அடி பிச்சுடுவான்..."

"பாத்தா கல்யாணம் பண்ற வயசு மாதிரி தெரியுது இப்பதான் ப்ளஸ் டூ முடிசிருக்கானா நம்ப முடிலயே."

(ஜெய்காந்த் என்னை மன்னிப்பாயாக...)

Representational Image
Representational Image
Stephan Seeber on Unsplash

முதல் நாள் கல்லூரிக்கு வராத அந்தப் பையனும் முதல்நாளே லேட்டாக வந்த இந்தப் பையனும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களாகப்போகிறவர்கள் என்று எனக்கு அப்போது தெரியாது.

நாங்கள்தான் அந்த 3 இடியட்ஸ்…

ஆரம்பத்தில் ஒருவாரம் நங்கள் காமகோடி ப்ளாக்கில் (Kamakoti Block) அமர்ந்திருந்தோம். ஒரு வாரத்துக்குப் பிறகு, ஒருநாள் மதியம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அந்த நீண்ட நெடிய பெயர் கொண்ட வெங்கட் என்று நாங்கள் எங்களுடைய நட்பு வட்டத்தில் அழைக்கும் BK வேங்கட சுப்பிரமணியனைப் பார்த்தேன். நான் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் சென்ற நாள்களில் சற்று கூச்ச சுபாவத்துடன் (நகர்ப் புறத்து பையன்களுடன் எப்படி ஐக்கியமாவது என்ற குழப்பத்தில்) இருந்தேன். எனக்குப் பின் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த வெங்கட்டைப் பார்த்து...

"நீங்கதானே வேங்கட சுப்ரமணியன் என்னாச்சு ஒருவாரமாக வரவில்லை..." என்று கேட்டேன். ஏனோ எனக்கு அவனைப் பார்த்து மட்டும் அப்படிக் கேட்கத் தோன்றியது.

"இல்ல தலைவா கொஞ்சம் உடம்பு சரியில்லை... ஜாண்டிஸ்... அதுதான்..."

அந்தக் குரலில் இருந்த அந்த நட்பான தொனியில் நான் வெகுவாக ஈர்க்கப்பட்டேன். எப்படி ஒருவரால் பார்த்தவுடன் அதுவும் முதல் சந்திப்பிலேயே அவ்வளவு நட்பாகப் பேச முடியும்?

அது வெங்கட்டால் மட்டுமே முடியும்.

Friends
Friends

எனக்குள் இருந்த தேவையற்ற சில தாழ்வு மனப்பான்மையை (inferiority complex) (காரணம் கிராமத்திலிருந்து வந்த பின்புலம் (Village Background), உடைத்து என்னை வெளிக்கொண்டு வந்ததில் பெரும்பங்கு அவனுக்கு உண்டு.

சிலர் அருகிலிருக்கும்போது மட்டும் பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாக இருக்கும், அது போன்ற ஒருவன்தான் வெங்கட். இப்போது பாசிட்டிவ் எனர்ஜி என்று எழுதினாலும் அன்று அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஏதோ இனம்புரியாத ஓர் உணர்வு அவன் அருகிலிருக்கும்போது இருக்கும். பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி என்பதெல்லாம் நான் பிற்பாடு தெரிந்துகொண்ட விஷயங்கள்.

நண்பன் திரைப்படத்தில் வரும் வசனத்தைப்போல் நான் அவனிடம் சொல்ல ஆசைப்படும் வாக்கியம்...

"நண்பா (தலைவாதான் சொல்லிட்டோம்ல) யு ஆர் கிரேட்!"

அவன் அடிக்கடி சொல்வான்.

நிலவுக்குச் செல்ல முயற்சி செய்தால்தான் உன்னால் குறைந்தபட்சம் ஒரு மரத்தின் உச்சிக்காவது செல்ல முடியும் என்று.

“Think for the Moon, you will land up at least on a treetop.”

அவனுக்கு யார் சொன்னார்களோ தெரியாது, எனக்குச் சொன்னது அவன்தான்.

Representational Image
Representational Image

உன் எண்ணங்களை நீ உயர்வாக வைத்திரு... அந்த எண்ணங்களை அடைவதற்கு முயற்சி செய். ஒருநாள் அந்த எண்ணம் ஈடேறும் என்பதுதான் தத்துவம்.

``உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.” என்று வள்ளுவர் கூறியதைப் போல.

அவன் பல விஷயங்களை,

நான் மாற்றிக்கொள்ள வேண்டியவை பற்றி குறிப்பிட்டும் அவனுடைய செய்கைகள் மூலமாகவும் போகிறபோக்கில் கற்றுக் கொடுத்திருக்கிறான். அவன் எனக்குச் சொல்லாத ஒரு விஷயம் அவனுடைய நோட் புக்கில் இவ்வாறு (+X or X+) ஒரு சிம்பல் எழுதி வைத்திருப்பான். அது என்னவென்று இதுவரை எனக்குச் சொன்னதில்லை.

நானும் புரியாமலேயே அதைப் பயன்படுத்தியபோது என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து இதைப் படித்துவிட்டு பிறகு அதைப் பயன்படுத்து என்று சொன்னதாக ஞாபகம். அந்தப் புத்தகத்தின் பெயர் எனக்கு நினைவில்லை. அந்தப் புத்தகத்தை நான் படிக்கவில்லை (காரணம் அது ஆங்கில புத்தகம், மேலும் எனக்கு ஆங்கில புத்தகத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அப்போது அறிவு இருந்ததாக நானே நம்பவில்லை) அந்தக் குறியீட்டையும் நான் பயன்படுத்தவில்லை.

உங்களுக்கு இடையே எந்தக் கருத்து வேறுபாடும் வந்ததில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். நிறைய உண்டு. அவற்றைத் தாண்டி பிறர் சொல்வதைக் குறுக்கிடாது கேட்டு பிறகு தன் கருத்தைச் சொல்பவர்கள் அமைவது மிக அரிது. கருத்து வேறுபாடுகள் எந்தவிதத்திலும் எங்களுடைய நட்பை பாதித்ததில்லை. எப்போதும் கருத்து வேறுபாடுகள் தொடர்பான எங்களுடைய வாதப் பிரதிவாதங்கள் இருவருடைய தனிப்பட்ட உணர்வுகளைக் (Personal feelings) காயப்படுத்தியதில்லை.

Representational Image
Representational Image

எனக்கு இர்விங் வாலஸ் (Irving Wallace) ஐ அறிமுகப்படுத்தி ஆங்கில நாவல்களைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியதும் அவனே. என்னுடைய தற்போதைய பழக்கவழக்கங்களுக்கும் என்னுடைய நம்பிக்கைக்கும் இன்று நான் ஒரு கணினி பொறியாளன் (Software Engineer) ஆக இருப்பதற்கும் இந்த இரு நண்பர்களே காரணம்.

இந்தப் பதிவில் நான் அதிகம் வெங்கட்டை பற்றி மட்டுமே பேசியிருக்கிறேன். ஜெய்காந்தை பற்றி பிறிதொரு நாள் வேறொரு பதிவில் பேசலாம்.

"உனக்கு எப்போவுமே அவன்தான்டா ஃபிரெண்டு..." ஜெய்காந்தின் மனக்குரல் (Mind Voice) கேட்கிறது.

``சாரி (Sorry) டா மச்சான் உனக்கான பக்கம் என்னுள் இருக்கிறது எழுதுவேன்."

அன்புடன்,

ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு