Published:Updated:

``விகடன் செய்தியால், 20 வருஷத்துக்குப் பிறகு தீபாவளி கொண்டாடினோம்!" - நெகிழும் கரூர் பிச்சை

உணவு உண்ணும் பிச்சை குடும்பம்
உணவு உண்ணும் பிச்சை குடும்பம் ( நா.ராஜமுருகன் )

`கஷ்டங்களைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை' என மனம் கலங்கி நின்ற பிச்சையிடம் 50 பேர் சென்று, `நாங்க உங்க பின்னால் இருக்கிறோம்'னு ஒரு தெம்பைக் கொடுத்திருக்கிறோம்.

``எனக்கு வயசு 65-க்கு மேல ஆயிட்டு. எங்க குடும்பத்தைச் சூழ்ந்த தாங்க முடியாத துன்பத்தால், இருபது வருடங்களாகத் தீபாவளியைக் கொண்டாட முடியலை. ஆனா, விகடன் பத்திரிகையில எங்களைப்பத்தி எழுதியதால், நாங்களும் இந்த வருஷம் ஸ்வீட், நல்ல சாப்பாடு சாப்பிட்டு, புதுத்துணி உடுத்தி தீபாவளியைக் கொண்டாடினோம்.

வெடி வெடித்து தீபாவளி கொண்டாட்டம்
வெடி வெடித்து தீபாவளி கொண்டாட்டம்
நா.ராஜமுருகன்

மனசு முழுக்க மகிழ்ச்சி, ரொம்ப வருஷத்துக்குப் பிறகு வந்து தங்கியிருக்கு தம்பி" என்று நா தழுதழுக்கப் பேசுகிறார் பிச்சை.

விகடன் வாசகர்களுக்கு பிச்சையின் முகமும், அவரின் குடும்பத்தைச் சூழ்ந்திருக்கும் சோகக்கதைகளும் மறந்துபோயிருக்காது. கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள பாறைப்பட்டியைச் சேர்ந்தவர், பிச்சை. ஓட்டைக் கூரை வீட்டில் வசித்துவருகிறது இவரது குடும்பம்.

``மனைவி, மகளுக்கு மனநலப் பாதிப்பு... 2 தம்பிகள் மாற்றுத் திறனாளி!" - `தாயுமானவர்' பிச்சை

மனைவி பூரணமும் மகள் இந்திராணியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்; தம்பிகள் பெறக்கலானும், முருகேசனும் வாய்பேச முடியாதவர்கள். அதனால், இருவருக்கும் ஐம்பது வயதைத் தாண்டியும் திருமணம் நடக்கவில்லை. மனைவியையும் மகளையும் பார்த்துக்கொள்ளவே பிச்சைக்கு பொழுது கழிந்துவிடும். தம்பிகளுக்கு எப்போதாவது வாரச்சந்தை வேலையின்போது கிடைக்கும் சொற்ப கூலிப் பணத்தில்தான், குடும்பத்தின் வயிற்றுப்பாடு நடக்கிறது.

பிச்சை குடும்பத்துக்கு உதவியவர்கள்
பிச்சை குடும்பத்துக்கு உதவியவர்கள்
நா.ராஜமுருகன்

இந்தக் குடும்பம் படும் வேதனையை அறிந்த முன்னாள் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், இவர்களுக்கு பசுமை வீடு ஒன்றை கட்டிக்கொடுத்தார். பிச்சை குடும்பதின் சூழலை விவரித்து, நமது விகடன் இணையதளத்தில் கடந்த 08.10.2019 அன்று, ``மனைவி, மகளுக்கு மனநலப் பாதிப்பு... 2 தம்பிகள் மாற்றுத்திறனாளி!" - `தாயுமானவர்' பிச்சை என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தி, நமது வாசகர்கள் பலரை `உச்' கொட்ட வைத்தது. குறிப்பாக, கரூரைச் சேர்ந்த சமூக நல அமைப்பு ஒன்றின் கவனத்தையும் நம் கட்டுரை ஈர்த்தது.

அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சலீமும் சாதிக் அலியும், பிச்சை குடும்பத்தினரை தீபாவளி கொண்டாட வைக்க நினைத்தனர். சமூகவலைதளங்கள் மூலமாக இதை அறிந்துகொண்ட பலரும் அவர்களோடு கைகோக்க, பிச்சையின் முகத்தில் புன்சிரிப்பை வரவழைக்கும் காரியத்தில் இறங்கினார்கள். பிச்சை, அவரின் தம்பிகள், மனைவி, மகள் என எல்லோரையும் அழைத்துவந்து, கரூரில் உள்ள பிரபல துணிக்கடையில் 15,000 ரூபாய்க்கு நல்ல துணிகள் எடுத்துக்கொடுத்தனர். சமூக வலைதளங்கள் மூலமாகப் பலர் உதவ, அவர்களுக்கு 200 கிலோ அரிசி கிடைத்தது. அதோடு, ரூ 7,000-க்கு ஐந்து மாதங்களுக்குத் தேவையான மளிகைச் சாமான்களையும், வெடிகள், இனிப்புகள் என தீபாவளி கொண்டாடுவதற்குத் தேவையான அத்தனை பொருள்களையும் வாங்கிகொண்டார்கள். 50 பேர், அந்த சமூக நல அமைப்போடு கைகோக்க, நான்கு வாகனங்களில் மொத்த பொருள்களையும் ஏற்றிக்கொண்டு, பாறைப்பட்டிக்குக் கிளம்பினர்.

பிச்சை குடும்பத்துக்கு உதவி
பிச்சை குடும்பத்துக்கு உதவி
நா.ராஜமுருகன்

70 பேர் வரை சாப்பிடும் அளவுக்கு விதவிதமான அறுசுவை உணவுகளைத் தயார்செய்து எடுத்துக்கொண்டுபோனார்கள். பாறைப்பட்டியில் கால் வைத்தவர்கள், ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து பிச்சைக்கும் அவரின் குடும்பத்தினருக்கும், `தீபாவளி வாழ்த்துகள்' சொல்ல, அந்த வாழ்த்தில் நெக்குருகிப்போனார் பிச்சை. எல்லோரையும் குளிக்கச் சொல்லி, புதுத்துணியை உடுத்த வைத்தார்கள். இனிப்புகளைச் சாப்பிட வைத்ததோடு, அருகில் உள்ள சிறுவர்களைக்கொண்டு, பட்டாசுகளை வெடிக்க வைத்தார்கள். அதோடு, தாங்கள் கொண்டுபோயிருந்த அரிசி, மளிகை சாமான்கள் என அனைத்தையும் பிச்சையிடம் வழங்க, அவர் மீண்டும் கண்கலங்கினார்.

பிச்சை மற்றும் அவரின் குடும்பத்தினரை சாப்பிட வைத்தபிறகு, வந்திருந்தவர்களும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டனர். இவற்றையெல்லாம் பார்த்து நெகிழ்ந்துபோன பிச்சை, கண்முன்னே நடப்பவை அனைத்தும் கனவா, நனவா என்று கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். கிராம மக்களுக்கும் அதே மனநிலைதான்.

இதயம் முழுக்க மகிழ்ச்சியில் இளகிக் கிடந்த பிச்சையிடம் பேசினோம். ``என் மூத்த மகளும் திடீர்னு உடம்புக்கு முடியாம இறந்துபோயிட்டா. என் குடும்பத்துல என்னைத் தவிர, மற்ற எல்லோரும் ஏதோ ஒரு உடல்நலப் பிரச்னையோடதான் இருக்கிறாங்க. அதை நினைச்சு நினைச்சு நான் நொந்துபோயிருக்கிறேன். தினமும் ஒருவேளை எங்களுக்கு சோறு கிடைப்பதே கஷ்டம். கடந்த 20 வருஷமாவே இந்தக் கதிதான். இந்தச் சூழல்ல, தீபாவளி, பொங்கல்னு எங்கே நாங்க கொண்டாடுறது?

பிச்சை குடும்பத்தோடு
பிச்சை குடும்பத்தோடு
நா.ராஜமுருகன்

நல்ல துணிமணிகளை வாங்கி உடுத்தி ரொம்ப வருஷமாச்சு. விதியை நொந்துகிட்டு வாழ்ந்துகிட்டிருந்த எங்களைப் பத்தி உங்க பத்திரிகையில எழுதுனீங்க. அதனால, இவ்வளவும் நடந்திருக்கு. என்னோட ஆயுசுக்கும் உங்க பத்திரிகையையும், அதைச் சேர்ந்தவர்களையும் மறக்க மாட்டேன் தம்பி" என்றார், உணர்ச்சிமேலிட.

கரூர் சமூக நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சலீம் நம்மிடம், ``விகடன் இணையதளத்தில் பிச்சை அவர்களின் குடும்பம் படும் அல்லல்களைப் பற்றி படிச்சதும், மனசு முழுக்க சோகம் கனக்க ஆரம்பிச்சுட்டு. அவங்களுக்கு உடனே உதவ நினைச்சோம். தீபாவளி வந்ததால், பிச்சையின் குடும்பத்தை சந்தோஷமா தீபாவளி கொண்டாட வைக்கணும்னு நினைச்சோம். சமூக வலைதளங்கள் மூலம் அதற்குப் பலரும் ஒத்துழைப்பு தந்தாங்க. மளமளன்னு காரியத்தில் இறங்கி, பிச்சையின் குடும்பத்தை ரொம்ப வருஷத்துக்குப் பிறகு, தீபாவளி கொண்டாட வச்சோம்.

சலீம்
சலீம்
நா.ராஜமுருகன்

அதோடு, மாதந்தோறும் பிச்சை குடும்பத்துக்குத் தேவையான அரிசி, மளிகைச் சாமான்கள்னு உணவு சமைப்பதற்குத் தேவையான அத்தனை பொருள்களையும் தொடர்ந்து வழங்க இருக்கிறோம். எல்லாத்தையும்விட, `கஷ்டங்களைத் தவிர வேறு துணையில்லை' என்று கலங்கி நின்ற பிச்சைக்கு, முன்னால 50 பேர் போய் நின்னு, `நாங்க உங்க பின்னே இருக்கிறோம்'னு ஒரு தெம்பைக் கொடுத்திருக்கிறோம். அதுதான், பிச்சைக்கும் அவரது குடும்பத்துக்கும் இப்போது தேவையானது. அதைச் செய்த திருப்தி எங்களுக்கு ஏற்பட்டிருக்கு" என்றார் மகிழ்ச்சியாக.

பிச்சையின் மனத்தில் மெலிதாய்ப் படரத் தொடங்யிருக்கும் மகிழ்ச்சி, இதுவரை காணாதது. அது, நல் இதயங்களால் நெடுங்காலம் வரை அவரிடம் நிலைக்கட்டும்!

அடுத்த கட்டுரைக்கு