Published:Updated:

`கூட்டி கூட்டி ஓடா தேஞ்சேன்... 18 மாசம் சம்பளம் வரலை” - பிரதமருக்கு தூய்மைப் பணியாளர் கடிதம்

மோடிக்குக் கடிதம் அனுப்பும் சுந்தர்ராஜ்
மோடிக்குக் கடிதம் அனுப்பும் சுந்தர்ராஜ்

கடைசியில், பாரத பிரதமர் மோடிக்கு, 'தூய்மை இந்தியா திட்டத்தை நீங்கதான் உயர்வா பேசுறீங்க. ஆனால், எனக்கு 18 மாதச் சம்பளம் வரவில்லை. நீங்களாவது என்னோட சம்பளப் பணத்தை வாங்கித் தாங்க' என்று கடிதம் அனுப்பியிருக்கிறார்.

அரசு அதிகாரிகள், தங்களுக்குக் கீழ் பணியாற்றும் தொழிலாளிகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு, சுந்தர்ராஜின் கதை ஓர் உதாரணம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள லாலாபேட்டையைச் சேர்ந்தவர், சுந்தர்ராஜ். தூய்மைப் பணியாளரான இவர், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 1983ம் வருடத்திலிருந்து பணிபுரிந்து, கடந்த வருடம் ஓய்வுபெற்றார். ஆனால், தற்காலிகப் பணியாளராகத்தான் இவ்வளவு காலமும் பணியாற்றி வந்திருக்கிறார். அவர் பலமுறை தனது பணியை நிரந்தரமாக்கக் கோரியும் எந்த அதிகாரியும் அவருக்கு உதவவில்லை.

தூய்மைப் பணியில் சுந்தர்ராஜ்
தூய்மைப் பணியில் சுந்தர்ராஜ்

உச்சக்கட்ட கொடுமையாக அவர் கடைசியாகப் பணியாற்றிய 18 மாதங்களுக்கான சம்பளத்தைக்கூடத் தராமல் அலைக்கழிக்க, கலெக்டர் முதல் முதல்வரின் தனிப்பிரிவு வரை மனு அனுப்பி ஓய்ந்துவிட்டார். கடைசியில், `தூய்மை இந்தியா திட்டத்தை நீங்கதான் உயர்வா பேசுறீங்க. ஆனா, குறைஞ்ச சம்பளத்தில், நான் வேலை பார்க்கும் இடத்தை சுத்தமா வச்சுருந்தேன். ஆனால், எனக்கு 18 மாதச் சம்பளம் வரவில்லை. நீங்களாவது என்னோட சம்பளப் பணத்தை வாங்கித் தாங்க' என்று பிரதமர் மோடிக்கே கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார்.

அவருக்குப் பணி ஓய்வு அளிக்கப்பட்ட பிறகும், தனது சம்பளப் பணத்தை வாங்கும் வரையில், தினமும் அதே மேல்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணியை மேற்கொள்வது என்று, தொடர்ந்து பணி செய்து வருகிறார். லாலாபேட்டை அஞ்சல் அலுவலகத்தில் பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பிக்கொண்டிருந்த அந்த மனிதரைச் சந்தித்துப் பேசினோம்.

பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தோடு சுந்தர்ராஜ்
பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தோடு சுந்தர்ராஜ்

``எனக்கு 62 வயசாயிருச்சு. என் மனைவி மூக்காயி கூலி வேலைக்குப் போறா. எங்களுக்கு ஒரே மகன். பேரு சங்கர். அவனுக்குத் திருமணமாகி, மூணு பிள்ளைங்க இருக்காங்க. அவனும் இந்தப் பஞ்சாயத்துல வேலை செய்றான். குடும்பம், குட்டின்னு ஆனதால, அவன் தனியா போயிட்டான். எனக்கு 18 மாசம் சம்பளம் வரலை. என் மனைவிக்கும் சரியா வேலை கிடைக்கலை. அதனால், மூணு வேளை சோத்துக்கே அல்லாடுறோம் தம்பி" என்று விசும்புகிறார்.

"நான் லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1983ல 60 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். கடந்த வருடம் ஓய்வுபெற்றபோது, எனக்கு மாசச் சம்பளம் வெறும் 1,025 ரூபாய்தான். ஆனால், அந்தச் சம்பளத்தையும், 18 மாதங்களா கொடுக்கலை. நான் நிரந்தரப் பணியாளரும் இல்ல. பகுதிநேரப் பணியாளராகத்தான் வச்சிருந்தாங்க. என்னைப் பணி நிரந்தரம் பண்ணும்படி, 2003ல் இருந்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், கல்வித்துறை இயக்குநர்கள், கல்வித்துறை அமைச்சர்கள், முதலமைச்சர்கள்னு எல்லோருக்கும் மனு அனுப்பி ஓஞ்சு போனேன். யாரும் எனக்கு உதவலை. ஆனா, பக்கத்துல உள்ள அய்யர்மலை உள்ளிட்ட சில பள்ளிகளில் எனக்குப் பிறகு தற்காலிகத் துப்புரவாளர்களாகச் சேர்ந்தவங்களை எல்லாம் பணி நிரந்தரம் பண்ணினாங்க. என்னை மட்டும் கைவிட்டுட்டாங்க.

தூய்மைப் பணியில் சுந்தர்ராஜ்
தூய்மைப் பணியில் சுந்தர்ராஜ்

ஆனாலும், 'படிக்குற பிள்ளைங்க புழங்குற இடத்தைதானே சுத்தம் பண்றோம்'னு மனசை தேத்திக்கிட்டு, இந்த முக்காத்துட்டு சம்பளத்துக்காக மாடு மாதிரி உழைச்சேன். பள்ளி வளாகம் முழுக்க 35 வகுப்பறைகள் இருக்கு. கழிப்பிடங்கள் வேற இருக்கு. தினமும் அதிகாலை மூணு மணிக்குத் தொடங்கி ஆறு மணி வரை ஒத்தையாளா கூட்டிச் சுத்தம் பண்ணுவேன். ஆனா, வீட்டுக்குப் பசியோட போனா சோறு இருக்காது. பலவேளைகள்ல எனக்கும், என் பொண்டாட்டிக்கும் வெறும் பச்சைத்தண்ணிதான் சாப்பாடு. ஆனா, சம்பளம் குறைச்சல்னு ஒருநாளும் என்னோட வேலையில குறை வச்சதில்லை.

ஆனால், அந்தக் கம்மி சம்பளத்தையும் 18 மாசமா தரலேன்னா எப்படி? 31.07.2019 ல் பள்ளி தலைமை ஆசிரியரா இருந்த மாலா டீச்சர் இரண்டு சால்வைகளை எனக்கு போத்தி, 'நீங்க இன்றுமுதல் ஓய்வு பெறுறீங்க'னு அனுப்பப் பார்த்தாங்க. '18 மாசச் சம்பளம் வரலையேம்மா'னு கேட்டதுக்கு, 'மேலிடத்திலிருந்து வந்தா கொடுப்போம்’னு சொன்னாங்க. எனக்கு மனசு கனத்துப் போயிருச்சு தம்பி. அதன்பிறகு, தினமும் பள்ளிக்கு நடையா நடந்து, சம்பளத்தைக் கேட்டேன். இதே பதிலைத்தான் சொல்வாங்க. அடுத்த இரண்டு மாசத்துல அவங்க மாறி, மாதேஸ்வரங்கிறவர் தலைமை ஆசிரியரா வந்தார். அவரும் என் சம்பளத்தை வாங்கித்தர மெனக்கெடலை.

சுந்தர்ராஜ், மூக்காயி...
சுந்தர்ராஜ், மூக்காயி...

'என் வேலையைத்தான் நிரந்தரம் பண்ண யாரும் உதவலை. எனக்கு வரவேண்டிய 18 மாசச் சம்பளத்தையாவது வாங்கித் தாங்க சாமி'னு மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். பலனில்லை. முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினேன். கொஞ்ச நாள்ல குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர். லாலாப்பேட்டை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், 'சுந்தர்ராஜ் பணியாற்றிய காலத்திற்கு உரிய ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு பெறப்படவில்லை. அதனால், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து ஊதியம் வழங்கிவிட்டு, நிதி ஒதுக்கீடு பெற்றதும் ஈடுசெய்து கொள்ளலாம்'னு அந்தக் கடிதத்தில் சொல்லியிருந்தார். ஆனால், தலைமை ஆசிரியர், 'உங்க சம்பளத்தை அவங்கதான் அனுப்பணும். இங்க நிதி எதுவும் இல்லை'னு கைவிரிச்சுட்டார்.

மொத்தமா, எனக்கு வரவேண்டிய சம்பளம் ரூ.18,450. இதை வாங்குறதுக்காக இதுவரைக்கும் கடன் வாங்கி பத்தாயிரத்துக்கு மேல செலவு பண்ணிட்டேன். உழைச்ச காசை வாங்க இவ்வளவு போராட வேண்டி இருக்கே... மனசு கனத்துப் போச்சு தம்பி. என் பொண்டாட்டிகூட, 'அதை விட்டுத் தள்ளு'னு சொன்னா. ஆனா, எனக்கு விட மனசு வரவில்லை. அதனால்தான், பிரதமருக்கு லெட்டர் அனுப்பியிருக்கிறேன். 'இந்தியா முழுக்க தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்தி, எங்க ஆள்களை முன்னிலைப்படுத்தினீங்க. நீங்களே துடைப்பத்தைக் கையில் வச்சுக்கிட்டு பல இடங்கள்ல கூட்டுற மாதிரியான போட்டோவை எடுத்து, நாடு முழுக்கப் பரப்புனீங்க. ஆனால், நீங்க சொல்ற காலத்துக்கு முன்பே, கடந்த 37 வருஷமா லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியைச் சுத்தமா வச்சுக்கப் பாடுபட்டேன். குறைஞ்ச சம்பளம்தான்;ஆனா நிறைவா வேலை பார்த்தேன்.

அஞ்சல் அலுவலகத்தில் சுந்தர்ராஜ்
அஞ்சல் அலுவலகத்தில் சுந்தர்ராஜ்

ஆனா, அந்தச் சம்பளத்தையும் எனக்கு 18 மாசமா தரலை. எங்களோட பணியின் மகத்துவம் உண்மையில் உங்களுக்கு தெரியும்னா, எனக்கு வரவேண்டிய சம்பளப் பாக்கியை நீங்களாவது வாங்கித் தாங்க. இதற்காக, அரசாங்கத்தோட அத்தனை கதவுகளையும் தட்டிப் பார்த்து ஓஞ்சுப் போயிட்டேன்'னு எழுதி அனுப்பி இருக்கிறேன். பார்ப்போம், இதுக்குப் பிறகாவது என் சம்பளம் கிடைக்குதானு. ஆனா, இதுக்கு மேல நான் சம்பளத்துக்காக யாருக்கிட்ட போய் முட்டி மோதுறதுனு தெரியலை" என்று கலங்கிய கண்களோடு சொல்கிறார் சுந்தர்ராஜ்.

லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாதேஸ்வனிடம் சுந்தர்ராஜ் நிலைகுறித்து பேசினோம்.

"நான் இப்போதுதான் பணிமாறி வந்திருக்கிறேன். சுந்தர்ராஜூக்குச் சம்பளப் பாக்கி இருக்கிறதா தெரியலையே" என்றவரிடம், சுந்தர்ராஜ் சொன்ன தகவல்கள் அனைத்தையும் சொன்னோம். அதன்பிறகு, "அவர் தற்காலிக ஊழியராக, தொகுப்பூதியத்தில் பணியாற்றியிருக்கிறார். நிரந்தரப் பணியில் அவர் இருந்திருந்தால், அவருக்கு வர வேண்டிய அனைத்துச் சம்பள பாக்கிகளும் தானாக வந்திருக்கும்.

அவருக்கு ஏழெட்டு மாசத்துக்கான சம்பள பாக்கி வர வேண்டியிருக்கலாம். அதை உயரதிகாரிகளுக்கு எழுதிதான் கேட்க முடியும். நான் இதுல வேற எதுவும் செய்ய முடியாது!" என்று முடித்துக்கொண்டார்.

குரலற்ற எளிய மனிதர் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வாதாரத்துக்குப் பிரதமரைத்தான் நாட வேண்டும் என்றால், இந்த நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

அடுத்த கட்டுரைக்கு