Published:Updated:

`கொரோனா அச்சம்... தாயின் ஈமச் சடங்குகளைச் செய்யமுடியாமல் தவித்த நபர்!’- நெகிழவைத்த ஜனமைத்திரி போலீஸ்

ஜனமைத்திரி போலீஸ்
ஜனமைத்திரி போலீஸ்

அறிகுறிகள் எதுவும் இல்லாததால் அவர்கள் அப்போதே விடுவிக்கப்பட்டுள்ளனர். என்றாலும், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனக் கூறி அவர்களைத் தனிமைப்படுத்தியுள்ளது மாநில அரசு.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் ராமசுவாமி. இவர் துபாயில் வங்கிப் பணியாளராக வேலைபார்த்து, அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது கொரோனா அச்சம் கேரளாவில் வெகுவாக ஏற்பட்டுள்ள நிலையில் துபாயிலேயே இருந்துள்ளார். ஆனால், விதி அங்கு இருக்க விடவில்லை. கடந்த 15-ம் தேதி ஆனந்த்தின் தாய், கீதா நாராயணன் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் மறுநாள் தன் குடும்பத்தினருடன் காலை 7.45 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்துள்ளார் ஆனந்த். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அறிகுறிகள் எதுவும் இல்லாததால், அவர்கள் அப்போதே விடுவிக்கப்பட்டுள்ளனர். என்றாலும், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனக் கூறி அவர்களைத் தனிமைப்படுத்தியுள்ளது மாநில அரசு.

ஆனந்த்
ஆனந்த்

உடனடியாக வீட்டுக்கு வந்தவர்கள் தாய்க்கு ஈமச் சடங்குகளைச் செய்துள்ளனர். இறுதிச்சடங்கு செய்தபின் தங்கள் சம்பிரதாயம்படி இறந்த தாய்க்கு 13 நாள்கள் சடங்குகள் செய்ய தீர்மானித்துள்ளனர். ஆனால், தனிமைப்படுத்தலில் இருப்பதால் அதற்குரிய பொருள்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடைகளில் போன் செய்து பொருள்களை டெலிவரி செய்யுமாறு கேட்டுள்ளனர். ஆனால், எந்தப் பயனும் இல்லை. வைரஸ் அச்சம் காரணமாக யாரும் அவரது வீட்டுக்கு பொருள்களைக் கொண்டுவர சம்மதிக்கவில்லை. இதனிடையே, கேரள மைத்திரி போலீஸை (மக்கள் போலீஸ்) அழைத்து தங்கள் நிலைமையை எடுத்துச் சொல்லியுள்ளனர்.

விவரங்களைக் கேட்டறிந்த போலீஸார் பொருள்களை அனுப்பி வைக்குமாறு கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், யாருமே வைரஸ் அச்சத்தின் காரணமாக ஆனந்த் வீட்டுக்கு வருவதற்குத் தயாராக இல்லை. நிலைமையை உணர்ந்த ஜனமைத்திரி காவலர்கள் நிராஸ் மற்றும் உமேஷ் ஆகிய இருவரும் நேரடியாகக் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கினார். பொருள்கள் நிறைய இருந்ததால் ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு வரலாம் என முயன்றுள்ளனர். ஆட்டோக்காரர்களும் மறுக்கவே, இறுதியாகப் பொருள்களைத் தங்கள் வண்டியிலேயே சுமந்துகொண்டு ஆனந்த்தின் வீட்டுக்கு வந்துள்ளனர். காவலர்களின் செயலில் நெகிழ்ந்த ஆனந்த், காவலர்கள் வண்டியில் பொருள்களோடு இருப்பதைப் போட்டோவாக எடுத்து அவர்களின் செயலை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

ஜனமைத்திரி போலீஸ்
ஜனமைத்திரி போலீஸ்

இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பலரும் நிராஸையும் உமேஷையும் பாராட்டி வருகிறார்கள். இவர்கள் இருவர் மட்டுமல்ல. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், கொரோனா அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை மருத்துவத் துறையினருடன் சேர்ந்து கண்காணித்து வருகிறார்கள் கேரள ஜனமைத்திரி போலீஸார். கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றைத் தங்களின் வழக்கமான பணிகளுக்கு மத்தியிலும் வாங்கி வந்து கொடுத்து வருகிறார்கள் ஜனமைத்திரி போலீஸார். அவர்களின் உதவியால் கேரள அரசு கொரோனா நோயை விரட்ட முனைந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு