Published:Updated:

புற்றுநோயால் மனமுடைந்த 10 வயது சிறுவன்... தலையை மொட்டையடித்த கேரளப் பெண் போலீஸ்!

அபர்ணா லாவா குமார்
அபர்ணா லாவா குமார்

`மூன்று வருடங்களுக்கு முன், நான் ஒரு பள்ளிக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கு, பத்து வயது பையன் ஒருவன் மொட்டை போட்டு, முகத்துல மாஸ்க் போட்டிருந்தான். அவனுக்கு ரத்தப்புற்றுநோய். ஹீமோதெரபியில் இருப்பதால், முடி கொட்டியுள்ளது என்றனர்.’

'கண்ணுக்கு மை அழகு... கார் கூந்தல் பெண் அழகு...' என்ற பாடல் வரிகள் உண்மைதான். ஒவ்வொரு பெண்ணும் தன் முடியைப் பாதுகாக்க, அழகாக்க எடுக்கும் முயற்சிகள் ஏராளம். தலை வாரும்போது, வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாக முடி உதிர்ந்தாலே கவலைப்படும் பெண்கள் உள்ள இக்காலத்தில், புற்றுநோயாளிகளுக்காக மொட்டை அடித்துள்ளார், ஒரு பெண் போலீஸ் அதிகாரி. 'போலீஸ் மொட்டை போடக் கூடாது என்பது சட்டம். பிறகு எப்படி?' என்று பல கேள்விகளுடன் திருச்சூரில் உள்ள பெண் காவல்துறை அதிகாரியான அபர்ணா லவக் குமாரிடம் பேசினோம் .

அபர்ணா லவக் குமார்
அபர்ணா லவக் குமார்

"மூன்று வருடங்களுக்கு முன், நான் ஒரு பள்ளிக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கு, ஒரு பத்து வயது பையன் மொட்டைபோட்டுட்டு, முகத்துல மாஸ்க் போட்டிருந்தான். பார்க்க வித்தியாசமா இருந்தது. அவனுக்கு ரத்தப்புற்றுநோய் இரண்டாம் நிலை என்றும், அவன் ஹீமோதெரபியில் இருப்பதால் முடி கொட்டியுள்ளது என்றும் அவனின் டீச்சர் கூறியதைக் கேட்டு அதிர்ந்தேன். அவனை சக மாணவர்கள் கிண்டல்செய்வதால், அவன் மனத்தளவிலும் பாதிக்கப்பட்டிருந்ததை உணர முடிந்தது. 'விக்' வாங்க முடியாத ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன்.

நிஜ முடியால் செய்யப்படும் 'விக்' 25 ஆயிரம் ரூபாய். செயற்கை முடியால் செய்யப்படும் 'விக்' ரூபாய் 2000 ரூபாய். அன்றே நான் புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்று, முட்டி அளவு இருந்த என் முடியைத் தோள் அளவுக்கு வெட்டி, ஏழ்மையான புற்றுநோயாளிகளுக்கு உபயோகிக்குமாறு தானம் அளித்தேன். தற்போது, முழுத் தலையையும் மொட்டையடித்து, அதே மருத்துவமனைக்கு முடியை வழங்கியுள்ளேன். நான் ஆதரவற்றோர் பள்ளியில் படித்தவள். அதனால் ஏழ்மையின் கஷ்டத்தை என்னால் உணர முடியும்" என்று கூறினார் அபர்ணா. "என் உயர் அதிகாரி விஜயகுமார் சாருக்கு என் நன்றிகள்.

புற்றுநோய் பாதிப்புகுள்ளானவர்களுக்காக முடியை தானம் செய்த அபர்ணா லவக் குமார்
புற்றுநோய் பாதிப்புகுள்ளானவர்களுக்காக முடியை தானம் செய்த அபர்ணா லவக் குமார்

காவல்துறையினர் மொட்டை போடக்கூடாது என்றாலும் நான் உதவும் மனப்பான்மையில் செய்ததால், அவர் என்னைப் பாராட்டினார். அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்றுத்தான் செய்தேன். எனக்கு இரண்டு மகள்கள். தற்போது பெரியவள் எம்.எஸ்ஸியும், சிறியவள் பத்தாம் வகுப்பும் படித்துவருகின்றனர். இவர்கள் இருவரும் 2017-ம் ஆண்டு புற்றுநோயாளிகளுக்காகத் தங்கள் முடியைத் தானமாக வழங்கியுள்ளனர்" என்கிறார் அபர்ணா.

கணவரை இழந்த நிலையில், வாழ்வில் மேடு பள்ளங்களைச் சந்தித்தவர். தற்போது இந்த உதவியால் வைரலாகி உள்ளவர், கடந்த 2008 -ம் ஆண்டு அவர் செய்த ஓர் உதவிக்காகப் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ''2008-ல் ஒரு வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்தேன். அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தனர். அவர்களுக்கு, மருத்துவத் தேவைக்காக அவசரமாக பணம் தேவைப்பட்டது. என்ன செய்வதென்று அவர்கள் திகைத்து நின்றபோது, என்னுடைய 3 பவுன் தங்க வளையல்களை அடமானம் வைக்கக் கொடுத்தேன்.

அபர்ணா லாவா குமார்
அபர்ணா லாவா குமார்

அதன்மூலம், அந்தப் பிரச்னை தீர்ந்தது. அப்போது, இச்செயல் பரவலாகப் பேசப்பட்டது. நான் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் உள்ளதால், பிறருக்கு என்னால் உதவ முடிகிறது.

நாம் செய்யும் எந்த ஒரு காரியமும் பிறரை சந்தோஷப்படுத்த வேண்டும். யாரையும் கஷ்டப்படுத்துவதாக இருக்கக்கூடாது. நம்மால் பிறர் கண்ணீர் சிந்தாவண்ணமும், பிறரின் கண்ணீரைத் துடைப்பவர்களாகவும் வாழ வேண்டும்" என்று அழகான மலையாளத்தில் சிரிப்புடன் கூறி முடித்தார், அபர்ணா லவக்குமார்.

புற்றுநோயாளிகளுக்கு முடி தானம் கொடுக்க விரும்பமா? புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக முடி தானம் கொடுக்க விரும்புவோர் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று 'செரியன்' அறக்கட்டளையைச் சேர்ந்த சார்லஸ் விளக்கினார்.

"முதலில் முடியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். நாம் தானம் அளிக்கும் முடியில், எந்த ஒரு பூச்சும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். அதாவது ஹேர் டை, ஹென்னா போன்ற எதுவும் இருக்கக்கூடாது. குறைந்தபட்சம் 10 இஞ்ச் அளவுக்கு முடியைத் தானம் அளிக்க வேண்டும். நீங்கள் எந்த அளவிற்கு முடியை வெட்டப்போகிறீர்களோ அந்த அளவில் ஒரு Hair band மற்றும் நடுவில் ஒரு Hair band போட்டுக்கொள்ளுவது அவசியம்.

அபர்ணா லாவா குமார்
அபர்ணா லாவா குமார்

பின்பு, மேலே உள்ள Hair band -க்கு மேலிருந்து முடியை வெட்ட வேண்டும். வெட்டிய முடியை ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றி, அதை ஒரு ஸிப்லாக் பையில் போட்டு முடி, தானம் பெற்றுக்கொள்ளும் இடங்களுக்கு அனுப்ப வேண்டும். முடியை வீட்டிலும் வெட்டலாம் அல்லது சலூன்களில் வெட்டியும் அளிக்கலாம்" என்று கூறினார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு