Published:Updated:

"வயசுக்குதான் ரிட்டையர்மென்ட், மனசுக்குக் கிடையாது"- வியக்க வைக்கும் விசில் தாத்தா #VikatanHumanStory

"உயரம் குறைவா இருக்கிறதால சிலர் என்னை குட்டை கிருஷ்ணன்னு லந்து பண்ணுவாங்க. அவங்கள கண்டுக்க மாட்டேன். 'போங்கடா... நான் உழைப்பால் உயர்ந்தவன்'னு சொல்லிக்குவேன்." - விசில் தாத்தா

விசில் தாத்தா கிருஷ்ணன்
விசில் தாத்தா கிருஷ்ணன் ( சாய்தர்மராஜ் )

பிரைவேட் பஸ்களின் அதிரவைக்கும் ஹாரன் சத்தங்களுக்கு இடையிலும் `காரைக்குடி, மதுரை, சிவகங்கை எனக் 'கணீர்' என்று ஒலிக்கிறது கிருஷ்ணன் தாத்தாவின் குரல். `உள்ள ஏறு... உள்ள ஏறு' என்று பொதுமக்களைப் பேருந்துகள் பார்த்து ஏற்றிவிடுகிறார்.

காக்கிச் சட்டை, காக்கி டிரௌசர், நெற்றியில் பட்டை, தோளில் வெள்ளை வேஷ்டி, வாயில் விசிலுமாக, திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளுக்கு நடுவில் ஒரு கால்பந்தாட்ட வீரர் போல சுழன்று சுழன்று வலம்வருகிறார், கிருஷ்ணன். குழந்தைகளுக்கு 'விசில் தாத்தா!'

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் வலம் வரும் டிக்கெட் கேன்வாசர், 80 வயது இளைஞர் கிருஷ்ணன். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளே நுழைந்து, மெக்கானிக், டைம் கீப்பர் எனப் பல்வேறு பணிகளைச் செய்து ஓய்வுபெற்ற இவர், தற்போது டிக்கெட் கேன்வாசராக வேலைபார்க்கிறார்.

கடும் குளிர், வெயில் என்றாலும் கிருஷ்ணன் தாத்தாவுக்கு ஓய்வு கிடையாது. எந்த பஸ் எத்தனை மணிக்கு வரும்... போகும் என்று விநாடி சுத்தமாகத் தெரிந்துவைத்துள்ள இவரிடம், எத்தனை நபர்கள் கேட்டாலும் முகம்சுழிக்காமல் பொறுமையும் பொறுப்புமாகப் பதில் சொல்கிறார்.

ஆட்களை பேருந்தில் ஏற்றிவிடுகிறார்.
ஆட்களை பேருந்தில் ஏற்றிவிடுகிறார்.

திருப்பத்தூர் அண்ணா சிலை பேருந்து நிலையத்தில் விசில் தாத்தாவை சந்தித்தோம்.

"எனக்கு 80 வயது ஆகிடுச்சு. ஆனாலும் என் உடம்புக்கு ரிட்டயர்மென்ட் கிடையாது. பஸ் ஸ்டாண்டில் இம்புட்டு மக்களைப் பழகிட்டு, வீட்டுல எப்படி சிவசிவானு உட்கார முடியும். பெருசா சம்பளம் இல்லாட்டியும் மனசுக்கு நிம்மதி இருக்குமேன்னு வேலைக்கு தினமும் வந்துடுவேன். எங்க அப்பா வைரவக் கோனார் மிகப்பெரும் ஜோதிடர்.

அப்பா இருக்கும்போது, அந்தக் காலத்துலேயே கார்ல வந்து ஜோசியம் பார்ப்பாங்க. ஆனாலும் வீட்டுல அண்ணன், தம்பி நிறையபேருங்றதால கஷ்டமும் இருந்தது. நான் வேலைக்குப் போன பிறகு வாழ்க்கை மாறுச்சு. கைநிறைய சம்பாதிச்சு, வீட்டை நல்லபடியா பாத்துக்கிட்டேன். மலேசியா, சிங்கப்பூர்னு பல நாடுகளையும் சுத்தி வந்துட்டேன். 

விசில் அடித்து பேருந்து சிக்னல் கொடுக்கிறார்.
விசில் அடித்து பேருந்து சிக்னல் கொடுக்கிறார்.
"நண்பனின் உயிரைக் காக்க பிச்சைகூட எடுப்போம்!" - குளித்தலை இளைஞர்களின் நெகிழ்ச்சிக் கதை!

எனக்கு 2 பையன், 4 பெண்குழந்தைகள். எல்லாரும் நல்லபடியா இருக்காங்க. காலையில 8 மணிக்கு இங்க வந்துடுவேன். சாய்ந்தரம் 4 மணிக்கு கிளம்பிடுவேன். இந்த இடைப்பட்ட நேரத்துல ஏகப்பட்ட நபர்களை சந்திச்சிடுவேன். சின்ன வயசில் நிறைய பேருக்கு உதவி செய்திருக்கேன். இப்போ அந்த அளவுக்கு முடியாட்டாலும், என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்றேன். நான் வேலைக்கு வரும்போது வேஷ்டி கட்ட மாட்டேன். அதைத் தோள்ல தான் போட்டுக்குவேன்.

காக்கிச் சட்டையும், டவுசரும் தான் என் அடையாளம். புதிசா வர்ற மக்கள், அப்போதான் என்னை எளிமையா அடையாளம் காணமுடியும். எப்போதும் என்கிட்ட பிள்ளையார்பட்டி விபூதி இருக்கும். பேருந்து நிலையத்துக்கு, பிறந்தநாள் குழந்தைகள் வரும். 'தாத்தா இந்தாங்க சாக்லேட்'னு கொடுக்குங்க. அப்போ, பதிலுக்கு விபூதி இட்டு வாழ்த்தி அனுப்புவேன். பேருந்து நிலையத்துல வியாபாரக்காரர்களும் என்கிட்ட தொழில் நல்லா நடக்க வேணும்னு காலைல விபூதி வாங்கிக்குவாங்க.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

இப்படி யார் வந்து கேட்டாலும் நம்மகிட்ட விபூதிக்கு பஞ்சம் இல்லை. பொட்டலம், பொட்டலமா விபூதி இருக்கு. ஆசீர்வாதம் பண்ண மனசும் இருக்கு!

உயரம் குறைவா இருக்கிறதால சிலர் என்னை குட்டை கிருஷ்ணன்னு லந்து பண்ணுவாங்க. அவங்கள கண்டுக்க மாட்டேன். 'போங்கடா... நான் உழைப்பால் உயர்ந்தவன்'னு சொல்லிக்குவேன்.

என் கழுத்துல கிடக்கும் விசிலை எனக்கு ரொம்பப் பிடிக்கும். பேருந்து நிலையத்துக்குள்ள ஓட்டுநர்கள் முறையா பஸ்ஸ ஓட்டிக்கிட்டு வரலைனா, விசில் சத்தத்திலேயே திட்டுவேன். அந்த விசில் மொழி அவங்களுக்குப் புரியும். நான் திட்டுறதப் புரிஞ்சுக்கிட்டு, பஸ்ஸை மெதுவா ஓட்டுவாங்க. பேருந்து நிலையத்துல இருக்குற பூக்கடை, பழக்கடை, டீக்கடைகாரங்க எல்லாருக்கும் என்னைத் தெரியும். இங்கேயே இருக்கிறவர்னு எனக்கு மரியாதை கொடுப்பாங்க.

விசில் தாத்தா
விசில் தாத்தா

சில பேரு எதையாவது தொலைச்சிட்டுப் போயிடுவாங்க. கண்டெடுத்தவங்க என்கிட்ட கொடுத்து 'தொலைச்சவங்க தேடிவந்தா கொடுத்துடுங்க'ன்னு நம்பிக்கையா கொடுத்துட்டுப் போவாங்க. சில பேரு, 'கிருஷ்ணன் தாத்தாகிட்ட கொடுத்திருக்கேன் சாயங்காலம் வரும்போது வாங்கிக்கோ'ன்னு பொருள்களைக் கொடுத்துட்டுப் போவாங்க.

இப்படி எல்லா பொருள்களையும் உரியவங்ககிட்ட ஒப்படைச்சிடுவேன். இதுதான் என் வாழ்க்கை. வேறு எதுவும் இல்லை என்னைப் பத்தி சொல்ல. வாழ்க்கை இப்படியே போறது சந்தோஷம்தான். வேற என்ன வேணும்" என்றார் புன்னகையுடன்.

விசில் தாத்தா கிருஷ்ணான்
விசில் தாத்தா கிருஷ்ணான்
“எனக்குத் தண்ணீர்ப் பஞ்சமே இல்லை!” - சென்னையில் ஒரு ‘தண்ணீர்’ மனிதர்!

எந்த வேலை செய்தாலும் அதை மகிழ்ச்சியோடும் மக்கள் நலனில் அக்கறையோடும் செய்தால், அதை எந்த வயதிலும் உற்சாகமாகச் செய்ய முடியும் என்பதற்கு வாழும் உதாரணமாக நம் அத்தனை பேருக்கும் அவசிய விசில் கொடுக்கிறார், இந்த கிருஷ்ணன் தாத்தா.