Election bannerElection banner
Published:Updated:

ப்பா... அந்தக் குரல்ல கொஞ்சம்கூட பிசிர் தட்டல! - நெகிழும்`சின்னக்குயில்’ சித்ராவின் ரசிகை#MyVikatan

`சின்னக்குயில்’ சித்ரா
`சின்னக்குயில்’ சித்ரா ( Vivekanandan.N )

ஏன் சித்ரா அவர்களின் பாடல் மட்டும்? இந்தக் கேள்விக்கும் இந்தக் கட்டுரையில் பதிலிருக்கிறது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சின்னக் குயிலுக்கு வயது 57…

"வாழ்வின் வெம்மைகளில் தத்தளிக்கும் போதெல்லாம் இசை, மருந்தாகும்" என்கிறது ஒரு ஜென் தத்துவம். எந்த எல்லைகளுக்கும் கட்டுப்படாத வானம்போல, எல்லா சுவாசத்துளிகளிலும் நிறைந்திருக்கிறது இசை.

`சின்னக்குயில்’ சித்ரா
`சின்னக்குயில்’ சித்ரா

மனதுக்கு நெருக்கமான ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் நிச்சயம் ஒரு நெகிழ்வான சம்பவமும் கோடானுகோடி பேரன்பும், சொல்லைக் கடந்த நெகிழ்வுகளும் இருக்கும். சில சமயம் சொல் கடத்தாத துக்கமும் துரோகமும் இருக்கும். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், அவரின் எல்லா வாழ்வு நிலைக்கும் ஒரு பி.சுசீலா பாடலை `இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்` புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார். அவரின் விசிறியான நான், என்னுடைய ஆச்சர்யத்துக்குரிய சித்ரா அவர்களின் பாடல்களால் இழைத்துச் செய்த தொகுப்பிது.

"ஏன் சித்ரா அவர்களின் பாடல் மட்டும்?" இந்தக் கேள்விக்கும் பதிலிருக்கிறது. மாறாத வெகுளித்தனம், மாற்றமே இல்லாத புன்சிரிப்பு, சிறிதும் பிசிர் தட்டாத குரல், இதற்கெல்லாம் அகராதியில் அர்த்தம் தேடினால், கண்டிப்பாக சித்ரா என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தச் சின்னக்குயிலுக்கு இன்று பிறந்தநாள்.

`சின்னக்குயில்’ சித்ரா
`சின்னக்குயில்’ சித்ரா

`நோக்கத்த தூரத்து காணும் நாத்து' என்னும் மலையாள படத்தை தமிழில் `பூவே பூச்சூடவா' என எடுக்க விரும்பினார் இயக்குநர் பாசில். மலையாள படத்தின் பாடல்களை இசைஞானி இளையராஜாவிடம் காட்டியபோது அதனில் `ஆயிரம் கண்ணுமாயி' - என ஒலித்த சித்ராவின் குரல் இளையராஜாவை ஈர்க்கிறது. அப்படித்தான் சித்ரா என்னும் தென்றல், மலையாள தேசத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தது. இளையராஜாவின் இசையில் முதல் பாடல் `நீதானா அந்தக் குயில்' படத்தில் வரும் `பூஜைக்கேத்த பூவிது' தான். அதன்பின், 'சின்னக்குயில் பாடும் பாட்டு', 'பாடறியேன் படிப்பறியேன்' என அனைத்தும் ஏறுமுகம்தான்.

அவசரத்தில், காலை நேர பதற்றங்களோடு நகரும் நேரங்களில், அவரின் `ஏற்றம் விடும் ஓடையை இப்போதுதான் பார்க்கிறேன்' நம் காதுக்குள் நுழைந்து மகிழ்விக்கும். ஏதோ ஒரு வெம்மையின் தாக்கத்தில், உறவுகளின் சாயம் வெளுத்துப் போகையில் `உளி தாங்கும் கற்கள்தானே மண்மீது சிலையாகும், வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்' என்று நமக்கு நம்பிக்கையின் முனையைக் காட்டுவார்.

`சின்னக்குயில்’ சித்ரா
`சின்னக்குயில்’ சித்ரா

அதிலும் கடைசி முறை பல்லவியை, `மழையோ, அது பனியோ? நீ மோதிவிடு' என்று முடிக்கையில், அந்தப் `பனியோ'வில் ஒரு அழுத்தம் கொடுத்து பாடி, நமக்கு நேரடியாக நம்பிக்கையைத் தந்துவிடுவார். அவரின் `அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்' என சித்ராவின் குரல் கசிந்து உருகும்போது, தன் பாட்டியை நினைக்காத மனங்களே இருக்க முடியாது. அதே குரல் தான். ஆனால், `அன்பு பாட்டியம்மா! இனி ஏன் கவலை?` என்று பாடும்போது நாமும் சுந்தரியுடன் தீபாவளியைக் கொண்டாட பிரியப்படுகிறோம்.

`சிந்து பைரவி'-யில் அவர் வேறு ஒரு ஆவர்த்தனம். பாடறியேன் படிப்பறியேனில் வாழைப்பழ ஊசியாய் ஜே.கே.பி என்ற ஆளுமையைத் தவிடுபொடியாக்குவார். அதற்கு ஒரு அழகான துணைக்கதையும் உண்டு. வேறு பாடல் பதிய வந்த சித்ராவை, இளையராஜா `பாடறியேன் படிப்பறியேன்' பாடலையும் ஒரு நாள் தங்கி பாடித்தரச் சொல்லிக் கேட்டாராம். சித்ராவின் தந்தை மறுநாள் பரீட்சை இருப்பதால் பின்னர் வந்து பாடித்தருவதாகக் கூறினாராம். ஆனால், இளையராஜாதான், `இந்தப் பாடல் படிப்பைவிட முக்கியம்' என்று கூறி பாடச் சொன்னாராம். `அந்தப் பாடல் தேசிய விருதையே வாங்கித்தந்தது' என்று சித்ரா பேசி பூரிக்காத மேடைகளே கிடையாது. அந்தப் படத்தில் ஒரு சிறு காட்சி. சிந்துவை அனைவரும் சேர்ந்து ஊரைவிட்டு அனுப்பிவிடுவார்கள்.

‘சின்னக்குயில்’ சித்ரா
‘சின்னக்குயில்’ சித்ரா
பா.காளிமுத்து

ஜே.கே.பி கோபத்தின் உச்சியில், `சிந்து இல்லாமல் சங்கீதம் இல்லை, சங்கீதம் இல்லாமல் ஜே.கே.பி இல்லை' என்று சொல்லுவார். அடுத்த காட்சியில் சிந்து ஒரு பார்வையற்றோர் பள்ளியிலிருந்து பத்திரிகை விளம்பரம் படிப்பதை காட்டியிருப்பார் கே.பி. அதில் வெறும் இரு வரிகள்தான் `மனம் தான் பார்வை. நாங்கள் இந்த வையத்தை ஞானத்தினால் அளப்போம்' என்ற வரிகளும், அதன் ஊடாக நமக்குள் சாரத்தை இறக்கும் சித்ராவின் குரலும் இந்த வையகத்தில் பெருவரமல்லவா?!

எனக்கும் என் அண்ணனுக்கும் பொதுவாக பிடித்த பாடல்களில், `பவித்ரா'வின் `அழகு நிலவே' முக்கியமான ஒன்று. அந்தப் பாடலில் வரும், `சொந்தங்கள் என்பது தாய் தந்தது. இந்தப் பந்தங்கள் என்பது யார் தந்தது?' வரியில் `யாரில்' அவர் கொடுக்கும் அழுத்தத்தில், நமக்கென வாழும் முறைமையைக் கற்கலாம். சூழ்நிலைக் கைதிகளாய் வாழும் இந்த உலகில், பேரன்புசூழ் மனிதராய் வாழ வேண்டுமாயின், `யாரையும்' கடந்து செல்ல தைரியம் வேண்டுமல்லவா? அது அந்த `யாரில்' அடங்கியிருக்கும்.

‘சின்னக்குயில்’ சித்ரா
‘சின்னக்குயில்’ சித்ரா
Kumaresan.S

அண்ணி உச்சரித்து நான் பித்தாகிப்போன பாடல், `சின்னத்தம்பி பெரியதம்பி` படத்தின் `மழையின் துளியில்'. என்னை பொறுத்தவரை, அந்தப்பாடலின் `அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது' வரிகள் ஒலிபரப்பப்படும் ஒவ்வொரு முறையும் எனக்கும் அண்ணிக்குமான பொழுதுகளை ஓட்டிப்பார்க்கிறேன்.

`ஜூன் ஆர்' படத்தின் `புதுப்புது பூக்கள்' மறந்துவிட்ட இன்னிசை. அதில் வரும், `கடவுள் இங்கே இருப்பதாய் உனது உறவில் நான் நம்பினேன்' வரிகள், `கல்கி' படத்தின் `எழுதுகிறேன் ஒரு கடிதம்' பாடலின் `சிந்தாமணி என் கண்மணி சிற்றாடை நீ கட்டடி... என் மாளிகை முற்றத்திலே பொன்னூஞ்சல் நீ ஆடடி...' வரிகள் என அனைத்தும் தாய்மைக்கான மடி.

`திருடா திருடா' படத்தின் `புத்தம் புது பூமி`தான் பலரின் விடியல். அதனின் `புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு' கேட்கும் போதெல்லாம் கடவுள் அந்த வரத்தை சித்ராவுக்காகக் கொடுத்துவிட்டார் என்றே தோன்றும்.

இதைப் போல சின்னக்குயிலின் குரலில் சில மறக்க முடிய பாடல் வரிகள்:

`மே மாதம்` படத்தின் `என் மேல் விழுந்த மழைத்துளியே' பாடலில், `வானம் திறந்தால் மழை இருக்கும் - என் வயதைத் திறந்தால் நீயிருப்பாய்'

`சிகரம்' படத்தின் `இதோ இதோ என் பல்லவி' பாடலில் `பசியென்பதே ருசியல்லவா? அது என்று தீருமோ.'

`நாயகன்' படத்தின் `நீ ஒரு காதல் சங்கீதம்` பாடலில் `மணல்வெளி யாவும் இருவரின் பாதம் நடந்ததை, காற்றே! மறைக்காதே. தினமும் பயணம் தொடரட்டுமே.'

‘சின்னக்குயில்’ சித்ரா
‘சின்னக்குயில்’ சித்ரா
பா.காளிமுத்து

`மௌனம் சம்மதம்' படத்தின் `கல்யாண தேன் நிலா' பாடலில் `என் அன்புக் காதலா' ஆவர்த்தனம்.

`டூயட்' படத்தின் `அஞ்சலி அஞ்சலி' பாடலில் `என்னவோ என் நெஞ்சினை இசை வந்து துளைத்தது.'

`அக்னி நட்சத்திரம்' படத்தின் `நின்னுக்கோரி' பாடலில் `ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க, இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க, அழகிய ரகுவரனே.'

இன்னிசையில் ஆர்ப்பரிப்பில்லாத அபூர்வங்களைத் தந்த அவரது 25,000-க்கும் மேலான பாடல்களில், 'எதை விடுத்து எதை எடுப்பது?' அவரின் `கண்ணாளனே' பாடல், `The Guardian' என்ற பத்திரிகையின் `இறப்பதற்கு முன் கட்டாயம் கேட்க வேண்டிய பாடல்கள்' தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

6 தேசிய விருதுகள், 8 பிலிம்ஃபேர் விருதுகள், 36 மாநில விருதுகள் என இவர் பெற்ற மதிப்புகள் எண்ணிலடங்காது. சித்ரா, நம் தலைமுறைக்கான சொத்து. அவர் தலைமுறைகள் கடந்துநிற்கும் பாடகி. தொடர்ந்து 40 வருடங்களாக எந்த ஒரு சிடுக்கும் இன்றி அனைத்துக்கும் அனைவருக்கும் புன்னகையைப் பரிசளிக்கும் பேரன்புக்காரி அவர். `First Ladies` என ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்ட இசைதேவதை அவர். அந்தப் பேரன்புக்காரிக்கு, மலையாள வானம்பாடிக்கு, சின்னக்குயிலுக்கு, தாய்மைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

- மனோ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு