Published:Updated:

முள்ளாய் தைப்பது காதல் மட்டுமே..! - காதல் மனைவியின் கடைசிக் கடிதம் #MyVikatan

Representational Image
Representational Image

ஈகோவால் பிரிந்த கணவனிடமிருந்து விவாகரத்துக் கடிதம் வந்தது குறித்து மனைவி எழுதிய கடிதம்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கரம் பிடித்த நாளது கனவாய் நிதம் என்னை கலங்கச் செய்கிறது. காலை தொடங்கும் அலாரம் முதல் கனவில் உலரும் வார்த்தைகள் வரை காவியமாய்க் கடந்த ஒன்றரை ஆண்டு கல்யாண வாழ்க்கை, கானலாய்ப் போகுமென்று கடவுளும் அறிந்திருப்பாரோ தெரியவில்லை. விதியின் பெயர் சொல்லி வலி அதை ஏற்கும் மனமும் எனக்கில்லை. ஆயிரங்காலத்துப் பயிரென்று ஆன்றோர் சொன்னது அரைமணி நேரச் சண்டையில் நாற்றங்காளோடு முடிந்ததும் ஏனோ! நாம் என்ற விடையில் தொடங்கிய நம் வாழ்வோ, இன்று நான் நீ என்ற வினாவில் கேள்விக் குறியாய் நிற்பதும் ஏனோ?

Representational Image
Representational Image
Alex Iby / Unsplash

ஈகோ என்றொரு வார்த்தையின் எதார்த்தமும் ஆணவம் என்றொரு வார்த்தையின் அர்த்தமும் விளங்குது இங்கே. அன்பைச் சொன்ன காதல் முத்தங்கள், ஆசை சொன்ன காமத்தின் முத்தங்கள் என இனிய மதுர மொழிகள் பல மொழிந்த இதழ்கள் இழிசொல்லொன்றை எனை நோக்கி வீசியதை இன்றளவும் ஏற்க முடியாமல் தவிக்கிறேன். பிரியாத உறவொன்றைப் பிடிவாதம் வந்து பிரித்ததேனோ! வந்தெனை அழைப்பாயென இங்கு நானும் தேடி வருவேனென அங்கு நீயும் நம் முரண்பட்ட மனங்களுக்குள் முள்ளாய் தைப்பது காதல் மட்டுமே.

ஆத்திரமும் கோபமும் அடுத்த இரண்டொரு நொடிக்கு மேல் நீடிக்காது என்ற உண்மை அறிந்திருந்தும். எதிரும் புதிருமாய், எலியும் பூனையுமாய் இருந்திருந்தாலும் அதிகபட்சம் இரண்டொரு நாளில் சண்டைகள் அனைத்தும் சமாதானமாகிடும் என்பதை அறிந்திருந்தும், அந்த நொடியில் அறிவார்ந்த சிந்தனையற்று, ஆத்திரத்தில் பிரிந்திருந்தால் புரியும் தேடலும், அன்பும் என்றெண்ணி சிறுகீரல், பெரும் விரிசலின் துவக்கம் என்பதை மறந்து, வீட்டை விட்டு வந்தேன். சிறுகீரலில் காதலை உணரும் நொடி வரும் வரை காத்திருந்தோம். ஆனால் காலமோ காத்திருக்கவில்லை. எவர்க்கும் எதற்கும் சுதர்சன சக்கரமாய் நில்லாமல் சுழன்றது. உருண்டோடியது ஓராண்டு காலம்.

Representational Image
Representational Image
Jon Asato / Unsplash

அட்சதை போட்டு ஆயுள் நூறு பெறுவாய் என வாழ்த்திய அம்மாவுக்கோ, இன்று நான் தந்த பரிசு அழுகை மட்டுமே, செல்ல மகளே என் உலகம், அவள் பெருமை ஊர் சொல்லக் கேட்க வேண்டுமென்று தன் வாழ்நாளெல்லாம் எனக்கென வாழ்ந்த அப்பாவுக்கோ நான் தந்த பரிசு, “வாழாவெட்டியாய் வீட்டோடு உன் மகள் வந்துவிட்டளாமே” என ஊர் சொல்லக் கேட்பது. இதற்கிடையில், உன்னையும் என்னையும் பிணைக்க இரண்டொரு முறை நம் வீட்டார்கள் செய்த பிரயத்தனங்கள் அத்தனையும் ஏட்டிக்குப் போட்டியான விதண்டாவாதங்களால் பயனற்றுப் போயின. மனதை அறியும் தொழில்நுட்பமும் கண்டறிந்திருந்தால் முரண்பட்ட வார்த்தைகளால் முடிவின்றி வீணாய்ப் போன நம் தொலைபேசி உரையாடல்களாவது நம்மை இணைத்திருக்கும. ஏற்றமும் இறக்கமுமாய்ப் போனாலும், எல்லாம் ஒரு நாள் கூடி வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன்.

ஓராண்டு முடிந்த நிலையில், காலைப் பனியின் ஈரம் காயும் முன்னே காதோடு வந்தது செய்தி. கல்யாண வாழ்க்கையில் பிடிப்பற்றுப் போனதாம் மாப்பிள்ளை வீட்டாருக்கு. காயங்கள் போதும், காதலும் போதும், கல்யாண நாடகமும் போதும் கையெழுத்து மட்டும் போட்டுவிடு... இந்த விவாகரத்துப் பத்திரத்தில் என்று. வலிமை உடையது பெண்ணின் மனம் என்றாலும் வலியை மட்டுமே வாழ்நாளெல்லாம் தருவது என்ன நியதியோ? உன்னால் மிளிர்ந்த என் திறமையும் உன்னுள் உறைந்த என் பெருமையும் கேலி செய்கிறது என்னை, அதிகாரம் தூள்பரக்க ஆளுமை செய்த தன் சொந்த வீட்டிலேயே அகதியாய் அறைக்குள் முடங்கிக் கிடக்கும் பேதைப் பெண்ணே என, விம்மிக்கொண்டு வந்தது விம்மல். எனினும் இருப்பதெல்லாம் இருக்கட்டும் ஆயிரம் புலம்பல்கள் நெஞ்சை முறசாய்க் கொட்டித் தீர்த்தாலும் நடந்ததெதுவும் மாறப்போவதில்லை.

Representational Image
Representational Image

கடந்த ஒராண்டு காலத்தில் உன்னிடமிருந்து ஏதேனும் ஒரு தகவலோ செய்தியோ வாராதா என ஏங்கிக் காத்திருந்தேன். ஆனால், மறந்தும் நினைக்கவில்லை என் நெஞ்சில் இடியாய் உடையும் விவாகரத்துப் பத்திரம் வருமென்று. காலத்தின் கட்டாயமோ... இல்லை காதலின் பிரதிபலனோ தெரியவில்லை. ஆனால் கையில் இருப்பது என்னவோ, உன்னிடமிருந்து வந்த விவாகரத்துப் பத்திரம். கையெழுத்துப் போட்டு விடு என உன் வீட்டாரும், கையெழுத்துக்குப் பின்னாவது உன் பொழுது நற்பொழுதாய் விடியட்டும் என என் வீட்டாரும் இவர்களுக்கிடையில் இருதலைக் கொள்ளியாய் நானும் என் காதலும், காகிதம் அதில் கையெழுத்திட்டால்... காலமெல்லாம் சேர்ந்து வாழ்வோமென்று அக்னி சாட்சியாய் நாமிட்ட சங்கல்பமும் பொய்யென்று போகுமோ!

கருமேகங்களின் சாட்சியாய், காற்றின் கீதமதில் மௌனத்தின் மொழியில் மனதால் நாம் கொண்ட சத்தியங்களும், வெறும் நீருண்டு வாழும் அற்ப பேனாவில் நாமிடும் கையெழுத்தால் நமை வேறென்று சொல்லிடுமா? கைமீறிப் போன காலமதில் கண்ணீர் ஊற்றால் புலம்பித் தேம்பிக் கரைவதில் பயனில்லை. விரும்பிக் கரம் பிடித்தேன் அன்று உனை அறியும்முன்னே. இன்றோ, விரும்பாமல் கையெழுத்திடுகிறேன் உனை அறிந்த பின்னே. “நீயின்றி இனி நான்” என்று சொல்ல அறிவுக்குத் தெரிந்த ஆயிரம் காரணங்களைவிட, அழைப்பு மணி ஒலிக்கும்போது, காலடிச் சத்தம் காதுகளைத் துளைக்கும்போது, வாசலில் மோட்டார் நிறுத்தும் சத்தம் கேட்கும்போது, அரைத் தூக்கத்தில் விழிக்கும் போது, பிழையதை உணரும்போது, பிடித்ததைச் சொல்லும்போது, மகிழ்ச்சியில் துள்ளும்போது, குழப்பத்தில் விழும்போது என எப்போதும் உனைத் தேடி “நீயின்றி நானேது” என்று வாடித் தவிக்கும் ஆழ்மனதிற்கு என்ன சொல்லி உணர்த்துவேன். “பிதற்றும் என் மனதில் பிழையாய் இனி என்றும் நீ” என்று.

Representational Image
Representational Image

காலத்தின் வலிமை உணர்ந்தும், நம் காதலின் ஆழம் அறிந்ததால் கையெழுத்திடுகிறேன்... வியர்த்த கைகளதில் வியர்வைக்குள் நழுவும் பேனாவை விரக்தியில் இறுக்கப்பிடித்து கையெழுத்திட்டாள். 'சுவேதா கிருஷ்ணன்' என்று கையெழுத்திட்ட மறுநொடியில், கண்கள் அந்த பத்திரத்தில் அவனது பெயரைத் தேடியது. 'கிருஷ்ணன்.R' பார்த்த நொடியில் பொங்கி வரும் பேரலையாய் கதறியது மனம். பெயரில்கூட நீயற்ற நான் அடையாளமற்றுப் போவேனே.

-ஐஸ்வர்யா சந்திரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு