Published:Updated:

`` ஏதோ கிடைக்கிறத வச்சு வாழ்க்கை போகுது" - செருப்பு தைக்கும் தொழிலாளியின் வாழ்க்கை!

வீரன் - செருப்பு தைக்கும் தொழிலாளி
News
வீரன் - செருப்பு தைக்கும் தொழிலாளி

"ஒரு நாளைக்கு பத்தும் கிடைக்கும், நாப்பதும் கிடைக்கும், நூறும் கிடைக்கும். இவ்ளோதான் கிடைக்கும்னு நிரந்தரம் ஏதும் இல்லைங்க."

வேக வேகமாக நாகரிகம் வளர்ச்சி அடைந்துவரும் இந்த உலகில்தான் ஏழ்மையில் வாழும் பல குடும்பங்கள் வசித்துவருகின்றன. ஒரு முக்கியப் பகுதியில் உள்ள சாலையின் ஓரமாக ஒரு காததூரம் நாம் கடந்து செல்வதற்குள் குறைந்தது 2, 3 எளியோரையாவது பார்த்துவிடுவோம். செருப்பு தைப்பவர்கள் முதற்கொண்டு சிறு சிறு பொருள்களை கூவிக் கூவி விற்பனை செய்பவர்கள் வரை பல்வேறு விதமான மனிதர்களைச் சந்தித்திருப்போம். தங்களின் அன்றாட வாழ்க்கையை நகர்த்திச் செல்வதற்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்ட, வெயிலிலும் மழையிலும் அவர்கள் படும்பாட்டை நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஒரு மனிதரைத்தான் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் வழியில் ஆலங்குப்பம் எனும் ஊரில் பார்த்தோம்.

வீரன்
வீரன்

சாலை ஓரமாக மண் தரையில் விரிக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளைச் சாக்கின் மீது பழைய செருப்புகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. அதனருகே சுருக்கம் நிறைந்த வெண்ணிறத் துணியை உடுத்தி முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். தன்னைக் கடந்து செல்லும் மனிதர்களைப் பார்த்து "வாங்க சாமி..! ஏதாவது தச்சுக் கொடுக்கணுமா!" என்று கனிவாகக் கேட்டவாறு இருந்தார். அவரைச் சந்தித்துப் பேசினோம். "என்னுடைய பேரு வீரன். நான் இதே ஊர்லதான் இருக்கேன். எங்க வீட்டில, அண்ணன் தம்பி; அக்கா தங்கச்சின்னு மொத்தம் நாங்க 7 பேரு. நான்தான் 5வது ஆளு. எங்க அப்பா, அம்மா ரெண்டுபேரும் கூலி வேலை செய்துதான் கஷ்டப்பட்டு எங்களை வளத்தாங்க. அப்போ கொஞ்சம் சொத்து இருந்துச்சு, அதையும் அப்போதே வித்துட்டாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நான் ஏதும் படிக்கல, ஆரம்பத்துல ஏதோ பள்ளிக்கூடம் பக்கம் போவேன் வருவேன் அவ்வளவுதான். எங்க அப்பா செருப்பு தைப்பாரு. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நானும் செருப்பு தைக்கிறேன். எனக்கு இப்போ 65 வயசு கிட்ட இருக்கும். இந்தத் தொழில், ரொம்ப கஷ்டங்க. தினமும் காலையில இதே மாதிரி ஒரு மரத்தடியில வந்து உக்காருவேன். பொழுது சாயுற வரைக்கும் அங்கேயேதான் இருப்பேன். யாராவது செருப்பு அறுந்துடுச்சுன்னு சொல்லி வந்தாங்கன்னா தச்சுக் கொடுப்பேன். அதுக்காக, அவங்க அஞ்சோ பத்தோ கொடுப்பாங்க. "இதோ போயிட்டு வந்து தரேன்"னு சொல்லிட்டுப் போறவங்களும் உண்டு. சில தெரிஞ்ச மனுஷங்க வருவாங்க, அவங்க கிட்ட இவ்வளவு கொடுங்க அப்படின்னு கேக்கவா முடியும். அவங்களா பாத்து எதாவது கொடுத்தா உண்டு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒரு நாளைக்கு பத்தும் கிடைக்கும், நாப்பதும் கிடைக்கும், நூறும் கிடைக்கும். இவ்ளோதான் கிடைக்கும்னு நிரந்தரம் ஏதும் இல்லைங்க. ஏதோ கிடைக்கிறத வச்சு வாழ்க்கை போகுது. மழை அடவுல வீட்லதான் இருப்போம். எந்த வேலையும் இருக்காது. ஏதோ... ஒண்ணு, அரைன்னு சேர்த்து வச்சிருந்தா அதை வச்சு கஞ்சி குடிச்சுக்க வேண்டியதுதான். இல்லாட்டி அக்கம் பக்கத்துல கடன் வாங்கிப்பேன். மழைக்கு அப்பால சம்பாதிச்சு, சேத்து வச்சுக் கொடுத்துடுவேன். எனக்கு மூணு பசங்க, ஒரு பொண்ணு. எல்லோருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. எல்லாரும் வெளிய இருக்காங்க. இதுக்கு முன்னாடி, பக்கத்துல இருக்கிற குரூர் ஊர்லதான் இருந்தேன். அங்க எனக்குன்னு ஒரு வீடு இருந்துச்சு. கடன் தொல்ல அதிகமாகிப்போக அதையும் வித்துக் கடனைக் கொடுத்துட்டேன். இப்போ இங்க என் பையனோட வீட்ல இருக்கேன். எனக்குன்னு சொந்தமாக வீடுகூட இல்லைங்க. முன்பெல்லாம் செருப்பைப் புதுசா நாங்களே செய்து விற்போம். இப்போ எல்லாரும் செருப்பைக் கடையில வாங்கிப் போட்டுக்கிறாங்க. அதனால செருப்பைப் புதுசாக செய்யறது இல்லைங்க. யாராவது வந்து செய்து தரச் சொல்லிக் கேட்டால்தான் உண்டு" என்றார் வருத்தமாக.

சுப்பிரமணியன்
சுப்பிரமணியன்

சற்று தள்ளி அமர்ந்திருந்த மற்றொரு செருப்பு தைக்கும் தொழிலாளி சுப்பிரமணியன் என்பவரோ, "சின்ன வயசுல இருந்தே செருப்பு தைக்கிறேன். என் அப்பா இதே தொழிலைத்தான் செய்வாங்க, எங்க அம்மா களை வெட்டப் போவாங்க. அப்படித்தான் எங்களை வளத்தாங்க. எனக்குப் படிப்பு வாசனையே கிடையாது. அந்தக் காலத்துல எங்க வீட்டுல ரொம்ப கஷ்டமா இருந்தாங்க. அப்போ எங்கள எங்கிருந்து படிக்க வச்சிருக்கப் போறாங்க. இப்போ என்னோட பசங்களும் கூலி வேலைக்குத்தான் போகுதுங்க. இந்தத் தொழில்ல ஒரு நாளைக்கு 100, 50ன்னு கிடைக்கும். சில நாள் அதுவும் இருக்காது, 20, 30 வந்தா அதோட சரியாப்போச்சு" என்றார்.