Published:Updated:

ரயில் வியாபாரி கற்றுக் கொடுத்த நேர்மைப் பாடம்..! - நெகிழ்வனுபவம் #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan Team )

ரயிலில் ஹியர்போன் விற்பனை செய்துகொண்டிருந்த இளைஞனிடம் அதனை வாங்கலாம் என அருகில் அழைத்தேன்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

எனது ரயில் பயணத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை இங்கே பகிர்கிறேன். ரயில் பயணங்களின் போது நிறைய வியாபாரிகளை நாம் ஓடும் ரயிலில் பார்க்கலாம். அது ஒரு தனி உலகம்.

அவர்கள் விற்கக்கூடிய பொருள்கள் பெரும்பாலும் விலை குறைந்ததாக இருக்கும். அவர்களின் வாழ்வாதாரத்திற்கான சிறிய பங்களிப்பு என்பதால் தரம் குறித்துக் கவலை கொள்ளாமல் அத்தகைய பொருள்களை நான் வாங்கி விடுவது வழக்கம்.

ஒருநாள் ரயில் பயணத்தின்போது எனது மொபைலின் ஹியர்போனை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்து விட்டேன்.

ரயிலில் ஹியர்போன் விற்பனை செய்துகொண்டிருந்த இளைஞனிடம் அதனை வாங்கலாம் என அருகில் அழைத்தேன்.

விலை எவ்வளவு என்றபோது அவர் 150 ரூபாய் என்றார். பேரம் பேசாமல் 150 ரூபாய் கொடுத்து பிடித்த வண்ணத்தில் ஒரு ஹியர்போனை வாங்கி விட்டேன்.

Representational Image
Representational Image
Vikatan Team

அவரும் மகிழ்ச்சியுடன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு அடுத்த பெட்டிக்குச் சென்றுவிட்டார். ஒரு மணி நேரம் கழித்து அவர் மீண்டும் நான் இருந்த பெட்டிக்குத் திரும்பி வந்தார். தயங்கித் தயங்கி என்னிடம் வந்தவர் ஒரு ஹியர்போனை என்னிடம் கொடுத்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "நான்தான் ஏற்கெனவே வாங்கிட்டேனே. இது எதுக்கு?" என்றேன்.

அதற்கு அவர், "இல்ல சார் உங்களுக்கு ஒரு ஹியர்போனை 150 ரூபாய்க்கு வித்ததுக்கு அப்புறம் நான் கொண்டுபோன ஹியர்போன் எல்லாத்தையுமே நிறைய பேர் பேரம் பேசி விலை குறைச்சு வாங்கினாங்க. அதிகபட்சமா ஒரு ஹியர்போனை 75 ரூபாய்க்குத்தான் விற்க முடிஞ்சது. அதிலேயே எனக்குப் போதுமான லாபம் இருக்குது.

ஆனா முதல்ல உங்ககிட்ட 150 ரூபாய்க்கு அதை வித்திருக்கேன். அது நியாயம் இல்லை. என் மனசுக்கு இது சரினு படலை. அதனால் இந்தாங்க இன்னொரு ஹியர்போனை நீங்க வச்சுக்குங்க.

இதுக்கு நீங்க ஏற்கெனவே பணம் கொடுத்துட்டீங்க" என்று கூறியபடி என் கைகளில் மற்றொரு ஹியர்போனைத் திணித்துவிட்டு அவர் அடுத்த பெட்டிக்குச் சென்றுவிட்டார்.

Representational Image
Representational Image
Vikatan Team

இத்தகைய எளிய மனிதர்கள் வாழ்க்கையின் பாடத்தை அவ்வப்போது நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த உலகில் கடல், ரயில், யானை போன்றவை பேரழகு மிக்கவை, அவற்றை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்பர். இவற்றுடன் நேர்மையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

அந்தப் பயணம் முழுக்கவே அந்த இளைஞரே மனதினுள் நிறைந்திருந்தார். கோடி ரூபாய் வைத்திருப்பவன் இலட்சம் ரூபாய் அளிப்பதை விட, பத்து ரூபாய் வைத்திருப்பவன் ஒரு ரூபாய் அளிப்பது பல மடங்கு மேலானது. அதைப் போன்றே பணக்காரரின் நேர்மையை விட, வறுமையில் ஒருவர் கடைப்பிடிக்கும் நேர்மையும் மிக மிக உயர்வானதே.

18 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பிரெஞ்சு புரட்சியில் பங்கு பெற்ற மாக்சிமிலியன் ரோபஸ்பியர் (Maximilien Robespierre) என்பவர் அரசியல் பயங்கரத்துடன் கூடிய நேர்மைதான் சமூகத்திற்கு வேண்டும் என்றார். டெயிசம் (Deism) என்ற இந்தக் கோட்பாட்டை நமது மொழியில் அவதார புருஷர்களின் சர்வாதிகாரம் எனலாம்.

ஒரு சூப்பர்மேன் தலைமையில் நேர்மையோடு கூடிய அரசியல் பயங்கரச் செயல்கள் நியாயமானவை என்று ரோபஸ்பியர் கூறினார். அவரது கூற்றின்படி புரட்சியாளன் என்பவன் ஒரு அபூர்வப் பிறவி. இத்தகைய நேர்மையான சூப்பர் மனிதனின் சர்வாதிகாரமே ஜனநாயகத்தைக் காக்கும் என்றும் ரோபஸ்பியர் நம்பினார்.

Representational Image
Representational Image
Vikatan Team

மக்கள் நேர்மையைக் காப்பாற்றவில்லை எனில், மக்களிடமிருந்து நேர்மையைக் காப்பாற்றுவது நியாயமானதே. இனி ரோபஸ்பியரின் கோட்பாட்டை நோக்கி உலகம் நகர்ந்தால் மட்டுமே நேர்மையைக் காப்பாற்ற முடியுமோ என்ற பயம் இயல்பாக எழுகிறது.

நேர்மை என்பது ஒரு உண்மையான உண்மை. மனிதன் அடையவேண்டிய மிகப்பெரிய சொத்து. தலையாய மனிதப் பண்பு. இது மனித வாழ்க்கையின் உன்னதம். மனிதத்தின் மாபெரும் வலிமையும், அற்புதமும் நேர்மையே. மனித வாழ்வின் உயர்வான குறியீடும் நேர்மையே. இது வாழ்வில் வெற்றியடைய விரும்புபவர்களின்,உச்சம் தொட நினைப்பவர்களின் கலங்கரை விளக்கமாகும்.

நேர்மை என்பது பணத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக மனிதர்கள்களால் பார்க்கப்படுகிறது.

பொய், திருட்டு, ஏமாற்றல், லஞ்ச - ஊழல் உள்ளிட்டவையே நேர்மையற்ற செயல்களாக மக்களால் ஏற்கப்படுகின்றன. இவை நேர்மையற்ற செயல்கள்தான். ஆனால் இவற்றைத் தாண்டி இன்னொரு கோணமும் நேர்மைக்கு இருக்கிறது. ஆம்,நேர்மை என்பது பணம் சார்ந்தது மட்டுமன்று, மனிதர்களது செயல்கள் சார்ந்ததும்தான்!

Representational Image
Representational Image
Pixabay

சாலையில் ஒருவருக்கு லிப்ட் கொடுக்காமல் போவதும், சாலையோர எளிய வியாபாரிகளிடம் பேரம் பேசுவதும்,

கிழிந்த ரூபாய் நோட்டை பிறர் அறியாமல் கொடுப்பதும், சில்லறை இருந்தும் கொடுக்க மறுப்பதும், கால் சென்டர் ஆட்களிடம் கடுமையாகப் பேசுவதும், ஆளில்லாத போது சிவப்பை மதிக்காமல் வாகனம் ஓட்டுவதும், குழந்தையின் வயதைக் கண்டக்டரிடம் குறைத்துச் சொல்வதும், வலது கை கொடுப்பதை உலகிற்கே கூறுவதும், எளியோரிடம் மட்டும் கொள்ளும் கோபமும், வரிசைகளில் இடையில் புகுவதும் இன்னும் இன்னும் இதுவும் இதுபோன்ற நமது பல செயல்களும் நேர்மையற்றவையே!

எனவே நண்பர்களே! பணம் சார்ந்த நேர்மையுடன்,செயல் சார்ந்த நேர்மையையும் நாம் கைக்கொள்வோம்.

சிறு சிறு செயல்களிலும் நாம் நேர்மையைக் கடைப்பிடிக்கத் தொடங்குவோம். இவை எல்லாம் கடினமானவை அல்ல. மனமிருந்தால் நம்மால் இவற்றைச் செயல்படுத்திவிட முடியும்.

நேர்மை ஒரு சிறந்த கொள்கை. அதை எத்தகைய சூழ்நிலையிலும் விட்டுவிடாமல் இருப்பது மாபெரும் வெற்றியைத் தரும். அதற்கான ஆற்றலையும் கொண்டு வரும்.

பட்டத்தின் நூல் போன்றதே மனிதர்களின் நேர்மையும். நேர்மையற்ற மனிதர்களின் உயர்வு நூலறுந்த பட்டங்கள் போன்றதே. குறுக்கு வழியில் பெறும் வெற்றி என்பது பெரும் தோல்வியே.

Representational Image
Representational Image
Pixabay

அன்பு, கருணை, இரக்கம் ஆகிய அனைத்து நற்குணங்களின் ஆணிவேராய் இருப்பது நேர்மை. ஆனால் நேர்மைக் குணம் உடையோரை இந்தச் சமூகம் சற்று ஆச்சர்யத்துடனே உற்று நோக்குவது விந்தையானது! எனவே நேர்மை குறித்த தனிமனிதர்களின் பார்வையும், அதனால் சமுதாயத்தின் பார்வையும் மாற வேண்டும்.

நேர்மைக் குணத்தை நாம் கைக்கொள்வது மட்டுமல்லாது, நம் குழந்தைகளுக்கும் சிறுசிறு விஷயங்களிலும் நேர்மையைத் கடைப்பிடிக்கக் கற்றுத்தர வேண்டும்.

எதிர்கால இளைய தலைமுறை நேர்மையான மனிதர்களையே கொண்டிருப்பின் இந்தப் பூமியே சொர்க்கப் பூங்காவாக மாறிவிடும் தானே!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு