Published:Updated:

`திருவிழா இல்லாம வீதிகள் வெறிச்சோடிப் போச்சு..!’ - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

வெளியூர் திருவிழாவுக்கே வண்டி கட்டி வேடிக்கை பார்க்கப் போவோம்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பங்குனி, சித்திரை பிறந்தாலே பக்கத்து ஊரில் திருவிழாக்கள் அணிவகுக்கும். பாட்டுக் கச்சேரி, முளைப்பாரி ஊர்வலம், மாட்டுவண்டி பந்தயம் என ஒவ்வொரு ஊரிலும் திருவிழா களைகட்டும். அதிலும் அத்தை ஊரில் நடக்கும் திருவிழாவை வேடிக்கை பார்ப்பதைப் போல் சென்று ‘அம்பாளை’ பார்ப்பது மாதிரி நம்ம ‘ஆளையும்’ பார்ப்பதில் தனி சுகமே உண்டு.

Representational Image
Representational Image

வெளியூர் திருவிழாவுக்கே வண்டி கட்டி வேடிக்கை பார்க்கப் போவோம்... உள்ளூர் (நாகலாபுரம்) கோயில் திருவிழா என்றால் சொல்லவே வேண்டாம்... அந்த ஒரு வாரமும் பிஸியான ஷெட்யூல்தான் நமக்கு.! முதல் நாள் இரவு அக்னிச் சட்டி ஊர்வலம், அடுத்த நாள் காலை பொங்கல் வைத்தல், கிடாவெட்டு, அன்னதானம், அடுத்தநாள் முளைப்பாரி ஊர்வலம், வாண வேடிக்கை, சிலம்பாட்டம் என கலைநிகழ்ச்சிகள் வரிசைகட்டி நிற்கும்.

அதிலும் முளைப்பாரி ஊர்வலத்தில் மேளக்காரர்களையும், கரகாட்ட கோஷ்டியையும் களைப்படைய வைப்பதில் நமக்கு அலாதி பிரியம்.

“டேய் தள்ளிப் போய் ஆடுங்கடா...பொம்பளை பிள்ளைக முளைப்பாரி தூக்கி வாறாக...அங்கிட்டு போய் ஆடுங்கடா...” என ஊர் பெருசுகள் ஆளாளுக்கு சொன்னாலும் நமக்கு என்னவோ அங்கேயேதான் ஆடுவோம் என்கிற அளவுக்கு நாம் அடித்த ‘ஆல்கஹால்’ நம்மை மாற்றிவிடும்..! (அதுமட்டுமில்லாமல் நாம ஆடுறதே பொம்பளை பிள்ளைகளின் கவனத்தை ஈர்க்கத்தானே..!)

Representational Image
Representational Image

“அட விடுங்கப்பா... வருஷத்தில ஒருநாள் இளவட்டப்பயக ஆடிட்டு போகட்டுமே.. இப்ப என்ன கெட்டுப் போச்சு?” என நமக்கும் சிலர் சப்போர்ட் பண்ணுவார்கள். அவர்களையும் வட்டத்திற்குள் சேர்த்து ஒரு குத்தாட்டம் போட்டாத்தான் ஆத்ம திருப்தி ஏற்படும்.

இதில் பரிதாபத்துக்குரியவர்கள் மேளக்காரர்கள்தான். “அடுத்த வருஷம் இந்த ஊருக்காரங்ககிட்ட அட்வான்சே வாங்கக் கூடாதுடா சாமி..." என்று நினைக்கிற அளவுக்கு இளவட்டங்களின் ஆட்டம் அலப்பறையாக இருக்கும். ஒருத்தர், குறிப்பிட்ட ஒரு பாடலுக்கு வாசிக்க வேண்டும் என்பார். மற்றொருவர், வேறு ஒரு பாட்டுக்கு வாசிக்கச் சொல்லுவார். இன்னொருத்தர், அங்கிட்டு தள்ளிப் போய் மேளம் அடி என்பார். ``இதில் யாரு பேச்ச சாமி நாங்க கேட்க..?” என நொந்துபோவார்கள் அவர்கள்.

ஒரு வழியாக முளைப்பாரி ஊர்வலம் சிறப்பாகச் சென்று, குளத்தில் போய் கரைத்த பிறகுதான் கோயில் கமிட்டி நிர்வாகிகளுக்கு நிம்மதி வரும். “ஏப்பா... யாரும் சண்டை சத்தம் போடலியே... நல்லபடியா முளைப்பாரியை கரைச்சாச்சு. அதே மாதிரி பாட்டுக்கச்சேரி, கபடிப் போட்டியிலும் யாரும் பிரச்சனை பண்ணக்கூடாது" என்பார் ஊர் பெரியவர். எவனாச்சும் சேட்டை பண்ணிப்புட்டானா? போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி, நிலைமையை வெளிப்படையாவே சொல்லிடுவார்.

Representational Image
Representational Image

இருந்தாலும் திருவிழா முடியறதுக்குள்ள சின்னச்சின்ன சண்டைகள், டியூப் லைட் உடைப்பு, மைக் செட் சேதம் எனச் சில அமளிதுமளிகள் அரங்கேறும். இப்படி ஒவ்வொரு ஆண்டும் கோயில் திருவிழா என்றாலே, தனி உற்சாகம் இருக்கும். வெளியூரில் வேலைபார்த்தாலும் திருவிழாவுக்கு என்று குடும்பங்கள் ஒன்று கூடிடும். ஆனால், தூர தேசத்தில் இருந்து வந்த கொரோனா, இந்த வருஷம் திருவிழாவை நடத்தவிடாமல் பண்ணிருச்சே என்பது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கு!

- சி.அ.அய்யப்பன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு