Published:Updated:

`கொண்டாட்டத்தில் பன்றிகளும் அன்னப்பறவைகளும்..!' - லாக் -டவுணால் துளிர்த்தெழும் இயற்கை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

ஸ்பெய்ன் நாட்டின் பார்சிலோனா நகரில் காட்டுப் பன்றிகள் திரிகின்றன...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மனிதகுலம் மொத்தத்தையும் அச்சுறுத்தி, ஏறக்குறைய உலகம் முழுவதையும் ஊரடங்க வைத்துவிட்ட கொரோனா கிருமியால் ஒரு நன்மையும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது…

சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் புவி வெப்பமடைவதையும் உடனடியாகத் தடுக்கவேண்டி, ஆண்டுக்கணக்கில் போராடும் தன்னார்வலர்களாலும் விஞ்ஞானிகளாலும், உலக நாடுகளின் கூட்டு முயற்சிகளாலும் சாதிக்க முடியாத ஒன்றை சப்தமில்லாமல் சாதித்துக்கொண்டிருக்கிறது கோவிட் 19 வைரஸ். மனிதனின் ஆக்ரமிப்பிலிருந்து தற்காலிக விடுதலை பெற்றிருக்கும் இயற்கை, நிலம், நீர், வானம் எனப் பூமி முழுவதும் தன் புனரமைப்பை மிக வேகமாக நடத்திக்கொண்டிருக்கிறது.

Representational Image
Representational Image

நோய்த் தொற்று அபாயத்தால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நவீன மனிதனின் கனரகத் தொழிற்சாலைகளும் வாகனப் போக்குவரத்தும் நின்றுபோனதால், பூமியின் வளிமண்டலத்தில் மாசு மிக வேகமாகக் குறைந்துவருகிறது. ஊரடங்கை முதலில் அமல்படுத்திய சீனப் பெருநகரங்களின் காற்று மாசு மிகக் கணிசமான அளவுக்குக் குறைதுவிட்டது.

காற்றை மாசுப்படுத்தும் வாயுக்களில் முதன்மையானது நைட்ரஜன் டை ஆக்சைடு. இதனால் ஐரோப்பாவில் மட்டும் வருடத்துக்கு 68 ஆயிரம் பேர் மரணமடைகிறார்கள். காற்றில் மாசு அதிகமாகும்போது, பெருநகரங்களில் விதிக்கப்படும் வாகனப் போக்குவரத்து கட்டுப்பாடுகளால்கூட இவ்வாயுவின் அளவை ஒன்று அல்லது இரண்டு சதவிகிதத்துக்குத்தான் இதுவரை குறைக்க முடிந்தது.

Representational Image
Representational Image

இரண்டு மாத கால ஊரடங்கினால், தொழிற்சாலைகளின் உற்பத்திக் கழிவுகளும் போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் மாசும் கணிசமான அளவு குறைந்ததனால், சீனாவில் மட்டுமே 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்கள் காக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரம் அறிவிக்கிறது. இது, சீனாவின் கொரோனா பாதிப்பால் உயிரிந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கையைவிட பலமடங்கு அதிகம்.

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தகவல்களின்படி, பாரீஸ், மிலன், மேட்ரிட் போன்ற ஐரோப்பிய பெருநகரங்களில் காற்றில் கலந்துள்ள நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவு, சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்ததைவிட 30 சதவிகிதம் குறைந்துள்ளது.

விமானங்களின் இடைவிடாத ரீங்காரம் தடைபட்ட வானில், பறவைகள் கூட்டம் பயமின்றி வட்டமிடுகின்றன.

தங்களை அடக்கி ஒடுக்கி, ஒழிக்கவும் தயங்காத மனிதன் எனும் இயற்கையின் சர்வாதிகாரி, சர்வமும் அடங்கி வீட்டினுள் முடங்கிக்கிடக்கும் சூழலில், வாகன இரைச்சலும் மனித காலடி ஓசைகளும் ஓய்ந்த பெருநகரங்களில், பறவைகள் உச்ச ஸ்தாயியில் பாடிப் பறக்கின்றன.

paris
paris

ஸ்பெய்ன் நாட்டின் பார்சிலோனா நகரில், காட்டுப் பன்றிகள் திரிகின்றன. சிலி நாட்டின் சான்டியாகோ நகரில் ஓர் இளம் சிறுத்தை உலா வருகிறது. பாரீஸ் நகரின் வீதிகளில் வாத்துகள் நடை பயில்கின்றன. வெனிஸ் நகர நீர்நிலைகளில் அன்னப்பறவைகள் நீந்துவதை அடிக்கடி காண முடிவதோடு, மீன் கூட்டங்களும் தென்பட ஆரம்பித்துவிட்டன.

உயிரியல் பூங்காக்களை ஒட்டிய நெடுஞ்சாலைகளை முயல், எலி, ஓணான், பாம்பு போன்ற சிறு உயிரினங்கள் வாகனங்களுக்கு அடியில் சிக்கும் பயமின்றி நிதானமாகக் கடக்கின்றன.

மக்கள் ஊரடங்கிய சில நாள்களிலேயே இந்தியாவின் பல இடங்களில் மான்களும் காட்டெருமைகளும் பயமின்றி உலாவரத் தொடங்கிவிட்டன.

மனிதன் தன் விடுமுறை கொண்டாட்டங்களுக்காக வளைத்துக்கொண்ட கடற்கரைப் பகுதிகளை ஆமைகளும் நண்டுகளும் மீட்டெடுத்துவருகின்றன. கடல் பறவைகள் பயமின்றிக் களைப்பாறுகின்றன.

Representational Image
Representational Image

தொழிற்சாலைக் கழிவுகளும், கப்பல் போக்குவரத்தும் ஒடுங்கிய கடல்பரப்பில் மீன்கள் துள்ளி நீந்துகின்றன. மக்கள் நடமாட்டத்தால் மாயமாய் மறைந்திருந்த டால்பின்கள், மத்தியதரைக்கடலின் கடலோரப் பகுதிகளுக்கு மீண்டும் திரும்பிவிட்டன. ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகளில் ஆமைகள் கூடுகின்றன.

இயற்கை முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதான மமதையுடன், பூமியின் மற்ற உயிரினங்கள் அனைத்தையும் அடக்கப் பழக்கியோ கூண்டில் அடைத்தோ பார்த்து பழகிய மனிதன், முதல்முறையாகச் செயலற்று, ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னாலிருந்து இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

தன் வசிப்பிடங்களுக்கு வெளியே, வெட்டப்படாத புற்களுக்கிடையே மலர்ந்து சிரிக்கும் பூக்களை சுதந்திரமாய்ச் சுற்றும் வண்டுகளையும், வண்ணத்துப்பூச்சிகளையும் பார்ப்பவனின் கண்களில் சுதந்திரத்தின் அருமையை உணர்ந்த ஏக்கமும், தன் ஆதி மூதாதையரின் கல்கத்தி தொடங்கி இன்றைய அதிநவீன அணுஆயுதம் வரை தான் கண்டுபிடித்த எந்த ஒரு ஆயுதத்தாலும் தற்காத்துக்கொள்ள முடியாத ஒரு பேராபத்தை நேருக்குநேர் கண்டுணர்ந்த அச்சமும் ஒரு சேர நிழலாடுகின்றன.

Representational Image
Representational Image

இயற்கை ஏற்படுத்திய இந்தச் சூழலும்கூட, தன் குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு அதன் அறையைச் சுத்தம் செய்யும் ஒரு தாயின் பரிவாகத்தான் தோன்றுகிறது. இதிலிருந்து மீண்டு வெளியேறும் மனிதன், தன் வீட்டுத் தோட்டத்தின் குருவிக்கூடும் தன் பாதையில் ஊறும் பூச்சிகளின் வரிசையும் பாதிக்காதபடி விலகிச் செல்வானா அல்லது வழக்கம் போலவே எட்டி உதைப்பானா என்ற கேள்விக்கான பதிலை பொறுத்தே அவனின் எதிர்காலம் அமையும்!

-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு