Published:Updated:

கெட்டதிலும் ஒரு நல்லது..! - வேலைக்குச் செல்லும் பெண்ணின் புலம்பல் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

பயணச்சீட்டு கொடுக்கும்போது அவர் செய்வது பலரையும் முகம் சுளிக்க வைத்தது...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

காலை 9 மணிக்கு வீட்டு வேலைகள் அனைத்தையும் பரபரப்பாக முடித்துவிட்டு, அவசர அவசரமாகப் பேருந்து நிறுத்தம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள் சிவகாமி. அவளுக்கு சுமார் 52 வயதிருக்கலாம். நல்லவேளை அவள் செல்ல வேண்டிய பேருந்து இன்னும் போகவில்லை என்று தெரிந்து பெருமூச்சுவிட்டாள்.

வியர்வையைத் துடைத்துக்கொண்டு பேருந்துக்காகக் காத்திருந்தாள். பேருந்தை தூரத்தில் பார்த்த உடனேயே போருக்குத் தயாரான வீரர்களைப்போல அனைவரும் தயாராகினர், சிவகாமி உட்பட. பேருந்தில் ஏற, முதல் படியில் கால் வைத்தாள் அவள்.

ஏறும் வழியைப் பாதி மறைத்தபடி நின்றிருந்த நடத்துநர் -

'வேகமாக உள்ளே போ' என்று சொல்ல...

'வழியை நீ மறைச்சுக்கிட்டா நாங்க எப்படி மேலே போறது.. அதுவும் ரெண்டு கையிலயும் பையை வெச்சுக்கிட்டு' என்று முணுமுணுத்தபடியே உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தாள்.

Representational Image
Representational Image
Vikatan Team

படியில் நின்றிருந்த நடத்துநரைப் பார்த்து வழிவிட்டு நின்றால் பெண்கள் சௌகர்யமாக ஏற முடியும் அல்லவா என்று மனதுக்குள்ளேயே புழுங்கினாள்.

பக்கத்தில் அமர்ந்திருந்த பெண், தன் கைக்குழந்தையை அவளிடம் கொடுத்து,

'ஒரு நிமிஷம் பிடியுங்க... டிக்கெட்டுக்கு காசு எடுத்துக்கறேன்' என்றார்.

அந்த மழலையின் சிரிப்பில் சிறிது நேரம் நனைந்தாள் சிவகாமி. ஒவ்வோர் இருக்கையாகப் பயணச்சீட்டு கொடுக்க வந்த நடத்துநர் இப்போது அவளது இருக்கையிடம் வந்தார். பயணச்சீட்டு கொடுக்கும்போது அவர் செய்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

தன் விரலை நாக்கில் தொட்டுத்தொட்டுக் கொடுத்தார். அதை வாங்கவும் முடியாமல் மறுக்கவும் வழியில்லாமல் வாங்கி உள்ளே வைத்தாள் சிவகாமி.

தனது சொந்தச் செலவில் அவர் ஒரு ஸ்பான்ஜ் வைத்துக்கொள்ளலாமே அல்லது அரசாங்கமே அவர்களுக்கு அதை வழங்கலாமே... அது அவர்களின் உடல் நலத்துக்கும் நல்லதல்லவா என்று நினைத்தாள்.

ஒரு வழியாக, அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது, அவள் பக்கத்தில் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண்ணும் இறங்கத் தயாரானாள்.

குழந்தையோடு செல்கிறாளே என்று வழியை விட்டாள். ஆனால், அந்தப் பெண்ணோ குழந்தையைத் தூக்கிக்கொண்டு செல்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் முந்தானையைப் புரளவிட்டபடி சென்றாள். அதை யாராவது மிதித்து விடுவார்களோ, அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று சிவகாமிக்குள் ஆயிரம் கவலை... தினசரி வேலைக்குச் சென்றுவரும் சிவகாமிக்கு இந்தச் சமூகத்தின்மேல் நிறைய மனக் குமுறல்கள்.

Representational Image
Representational Image
Vikatan Team

அப்படி இருந்த நேரத்தில்தான் அவள் இரண்டு மாதம் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டது, காரணம் "கொரோனா..."

சோகத்திலும் ஒரு சுகம் என்பதைப்போல வீட்டிலேயே இரண்டு மாதங்கள் இருந்தது சோகத்தை ஏற்படுத்தினாலும், அதற்குப் பிறகு அவள் வெளி உலகம் வரும்போது ஏறக்குறைய அவள் எதிர்பார்த்த மாற்றம் அங்கு நிகழ்ந்திருந்தது...

பேருந்து நிறுத்தம் சென்ற அவள் கண்கள் சந்தோஷத்தில் விரிந்தன... அனைவரும் இடைவெளி விட்டு நின்றனர். பேருந்து வந்த உடனே அனைவரும் அழகாக வரிசையில் நின்று ஏறினர். நடத்துநரும் எச்சில் தொடாமல் பயணச்சீட்டைக் கொடுத்தார். ஜன்னல் வழியே யாரும் பாக்கு போட்டு துப்பவில்லை... அனைவரிடமும் ஒருவித அன்பை உணர்ந்தாள் சிவகாமி. சோகத்திலும் ஒரு சுகம் இருப்பதைப்போல இச்சமூகத்தின் குறைகள், கொரோனாவில் சற்று தணிந்ததாக உணர்ந்தாள். இயற்கை ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

- ஜெயந்தி. ஜெ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு