
இல்லம்மா, பப்பு என்ன மறந்துட்டா, இன்னைக்கு கிட்டத்தட்ட 170 நாள் ஆகுது பப்பு என்னைப்பார்த்து...
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
``ஹலோ... பப்பு.. .பப்பு... பேசுடி செல்லம்... அம்மா பேசறேண்டா... ஹலோ பப்பு...''
இரண்டே வயதான தன் மகள் வினியிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள் ஜெனி... பப்பு தொலைபேசியைக் கையில் வைத்துக்கொண்டு பேச விருப்பம் இல்லாதவளாய், தன் பட்டுப்போன்ற பிஞ்சு விரல்களால் தடவி விளையாடிக் கொண்டிருக்க,
``பாட்டி கிட்ட போன் குடுடா செல்லம்'' என்றவாறு தொலைபேசியை வினியிடமிருந்து மெதுவாக வாங்கினார் ஜெனியின் தாய் மேரி...
``ஹலோ ஜெனிம்மா, எப்படி இருக்கே? டியூட்டி முடிஞ்சு ரூம்க்கு வந்துட்டியா?''
``நான் நல்லா இருக்கேன்ம்மா... ரூம்ல இருந்துதான் பேசறேன்... ஏன் அம்மா பப்பு பேச மாட்டேங்கறா?''
``இல்ல ஜெனிம்மா அவ இப்பதான் தூங்கி எழுந்தா, தூக்க கலக்கம் அதான் பேசல...''

``இல்லம்மா, பப்பு என்ன மறந்துட்டா, இன்னைக்கு கிட்டத்தட்ட 170 நாள் ஆகுது பப்பு என்னைப்பார்த்து'... கொஞ்சம் கொஞ்சமா என்ன மறந்துட்டு வர்றா. என் குரல் கூட அவளுக்குத் தெரியல...''
என்று கண்ணீர் மல்க, நா தழு தழுக்க வார்த்தைகள் தடுமாறியபடி பேச முடியாமல் விக்கினாள் ஜெனி...
``அப்படியெல்லாம் நினைக்காத ஜெனிம்மா, நாங்க அவளை நல்லாப் பார்த்துக்கிறோம். அவ தாத்தா கூட தான் தினமும் தூங்கறா. அப்பார்ட்மென்ட்ல மத்த பசங்க கூட விளையாடறா... உன்னையும் அவ அப்பாவையும் நினைக்கறதே இல்லை... அம்மா நான் அவ கூட இருக்கேன்... நீ கவலைப் படாம நிம்மதியா உன் கடமையைச் செய்...''
என்று ஆறுதல் கூறினார் மேரி.
``வயசான காலத்துல நான் உங்களுக்கும் அப்பாவுக்கும் நிறைய தொந்தரவு பண்றேன். இங்கே மும்பையில் கொரோனா நோயாளிகளோட எண்ணிக்கை அதிகரிச்சுட்டே வருதும்மா... 18 மணி நேரம் டியூட்டி பார்க்க வேண்டி இருக்கு... எப்போ சென்னைக்கு திரும்பி வருவேன்னு தெரியல... உங்க எல்லோரையும் பார்க்கணும்போல இருக்கும்மா...''
என்று கண்களில் கண்ணீர் ததும்ப, நா தழு தழுக்க, சப்தமின்றி கதறினாள் மும்பையில் பிரபல மருத்துவமனையில் கடந்த சில வருடங்களாக செவிலியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஜெனி.

``ஜெனிம்மா, மனச விடாதம்மா... நீ சாப்பிட்டு நேரமே தூங்கு... காலையில் டியூட்டிக்குப் போகணும் இல்லையா? ரொம்ப பாதுகாப்பா இருக்கணும், கடவுள் கிட்ட நீ சீக்கிரம் நல்லபடியா திரும்பி வரணும்ன்னு வேண்டிக்கிறேன்''
என்றவாறு வழியும் கண்ணீரைத் துடைத்தவாறு அலைபேசியைத் துண்டித்தார் மேரி.
``அரைகுறையாய் சப்பாத்தியை சாப்பிட்டுவிட்டு, குட்டி மகளை நினைத்து உறக்கம் வராதவளாய்ப் புரண்டு புரண்டு படுத்து பார்த்துவிட்டு, உறக்கம் வராமல் போகவே, துபாயில் இருக்கும் கணவர் மார்ட்டினுக்கு போன் செய்தாள்...''
``ஹலோ, சொல்லு ஜெனி, என்ன இந்த நேரத்துல, ஈவினிங் தானே பேசினோம்... உடம்பு சரியில்லையா?''
என்று சந்தேகம் கலந்த குரலில் கேட்க, மனசு சரியில்லை உங்க கிட்ட பேசணும் போல இருந்தது அதனால்தான் என்றாள் ஜெனி.

"நம்ம பப்புவை நினைச்சு கவலைப் படறியா?"
``ஹ்ம்ம்...''
``கொஞ்சம் வெயிட் பண்ணு... இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதத்தில் நானும் இந்தியா வந்திடுவேன். உனக்கும் 2 மாதத்தில் லீவு குடுப்பாங்க... அப்புறம் நாம பப்பு கூட நிம்மதியா சந்தோஷமா இருக்கலாம்... சரியா ஜெனி?''
``ஹ்ம்ம்'' என்று வெறுமையாகப் பதிலளித்தாள்.
``ஜெனிம்மா, ப்ளீஸ் தைரியமா இரு... காலம் இப்படியே போய் விடாது... எல்லாம் சரி ஆகும்... நீ இனிமேல் தான் ரொம்ப ரொம்ப பாதுகாப்பா இருக்கணும்.. எனக்கும் பப்புவிற்கும் நீ முக்கியம்...''
என்று தைரியம் கூறினாலும், மனமுடைந்தார்.
``நான் ரொம்ப பாதுகாப்பாதான் இருக்கேன்... பப்புவையும் உங்களையும் ரொம்ப மிஸ் பண்றேன். அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு தெரியுமா?''
என்று வேதனையுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, மார்ட்டினுக்கு அலுவலகத்தில் இருந்து முக்கியமான தொலைபேசி அழைப்பு வரவே, பிறகு பேசுகிறேன் என்று அழைப்பைத் துண்டித்தார்.
பின்பு சிறிது நேரம் குழந்தையைப் போன்று தேம்பித் தேம்பி அழுதுகொண்டே மொபைலில், தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தவாறே,
``தெரியலைங்க, நான் எப்போ உங்களை எல்லாம் பார்க்க வருவேன்னு? எங்க வார்டில் 6 பேருக்கு கோவிட் பாசிட்டிவ், குறிப்பாக என் தோழி ஸ்ருதிக்கும் பாசிட்டிவ்ன்னு இன்னைக்கு ரிப்போர்ட் வந்திருக்கு...
அவளுக்கு அடுத்த மாசம் திருமணம் முடிவாகி இருக்கு.''

" நான் செய்யுற வேலை எவ்வளவு கடினமானதா இருந்தாலும், அது எனக்கு ஒரு சுமையா ஒரு போதும் இருந்ததில்ல. ஆனா, இந்த கொரோனா சிறப்புப் பணியில முதன் முதலா ஈடுபடும்போது மனதளவில் பயம் அதிகமா இருந்தது. ஆனால் இப்போ அதுவும் பழகிடுச்சு... இந்த முக கவசம், உடல் கவசம் எல்லாம் போட்டுக்கிட்டு தொடர்ந்து 6 மணி நேரத்துக்கு மேல் உடைக் கழற்றாம வேலை செய்யுறதால, இடைப்பட்ட நேரத்துல தண்ணி கூட குடிக்க முடியாம என் உடல்நிலை சீரழிஞ்சுடுச்சு. தலை முதல் கால் வரை வியர்த்து மயக்கமே வருது.
இதையெல்லாம் சொல்லி, உங்க நிம்மதியக் கெடுக்க விரும்பல...’’ என்று தனக்குள் பேசிக்கொண்டே உறங்கிப்போன ஜெனிக்கு, மறுநாள் காலையில் உடல் அனலாகக் கொதித்தது...
- நித்யா இறையன்பு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.