Published:Updated:

`கிச்சன்ல திடீர்னு டமால் டூமீல்னு சத்தம் கேட்டுச்சு..!' - வாசகியின் லாக்டெளன் ஸ்டோரி #MyVikatan

Representational Image
Representational Image

இப்படி ஒரு தருணத்தை தந்ததற்கு லாக்டௌனுக்கு நன்றி சொல்ல வேண்டும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இந்த லாக்டௌன் நாள்கள் பலருக்கும் பலவிதமான அனுபவங்களாக இருந்திருக்கும். என் போன்ற நடுத்தர வயது குடும்பத் தலைவிகளுக்கு இது ஒரு சுகமான சுமையாகத்தான் இருந்திருக்கும். அதிகப்படியான வேலைப்பளுதான் என்றாலும் இத்தனை அதிக நாள்கள் ஓர் ஆரோக்கியமான குடும்ப நேரம் செலவிட முடிந்ததில் மகிழ்ச்சியே.

Representational Image
Representational Image

இருந்தாலும் ஒரு இல்லத்து அரசிக்கு தினந்தோறும் கிடைக்கும் தனக்கான நேரம் என்பது இந்த லாக்டௌன் நாள்களில் முற்றிலும் பறிபோனது என்பதுதான் கசப்பான உண்மை. அதிகாலை முதலே வேலையைத் தொடங்கும் எனக்கு, கணவன் மற்றும் குழந்தைகளை அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் அனுப்பிவிட்டு எனக்கே எனக்காகக் கிடைக்கும் ஐந்து மணி நேரம் சொர்க்கத்துக்கு நிகரான ஒன்று. எல்லோரையும் கிளப்பி அனுப்பிவிட்டு தனியாக ஒரு ஏகாந்த நிலையில் சூடான ஒரு கப் டீயும் 90'ஸ் பாடல்களும் ஒவ்வொரு நாளும் எனக்கான ரீசார்ஜ். இந்த லாக்டௌன் நாள்களில் அந்த நேரங்கள் கிடைக்காமல் எனது பேட்டரிகள் காலியான நேரங்கள் பல.

அதுபோன்ற ஒரு பேட்டரி டவுன் ஆன மாலை நேரம் ஓயாத வீட்டு வேலைகளால் சலித்துப் போய் இருந்தேன். சோர்ந்த முகத்துடன் என்னைப் பார்த்த என் கணவரும் பிள்ளைகளும் அருகில் வந்து அமர்ந்து "ஏன் இப்படி உம்முன்னு உக்காந்துருக்கீங்க?" என்று விசாரிக்க சோர்வின் உச்சத்தில் இருந்த நான் மடை திறந்த வெள்ளம்போல் புலம்பித் தீர்த்துவிட்டேன். வெறுமனே கேட்டு விட்டு எழுந்து சென்றுவிட்டனர். திடீரென கிச்சனில் டமால் டுமீல் சத்தங்களும் எக்குத்தப்பான வாசனைகளும் வந்தன. சிறிது நேரத்தில் சுடச்சுட ஒரு முட்டை ஆம்லெட்டுடன் வந்தனர் மூவரும்.

Representational Image
Representational Image

"நீ டயர்டா இருக்குற... இத முதல்ல சாப்பிடு" என்று என்னிடம் அதைக் கொடுத்தனர்.

உண்மையிலேயே மிகவும் சுவையாக இருந்தது.

"எப்படி டா இப்படி டேஸ்ட்டா பண்ணுனீங்க?" என்று ஆச்சர்யமாகக் கேட்டேன்.

" யூடியூப் பார்த்து செஞ்சோம்" என்று பெருமையாகக் கூறினர் மூவரும்.

உண்மையில் இத்தனை நாள்களில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்ததில்லை. அம்மா வீட்டிற்குச் சென்றால் மட்டுமே உட்கார்ந்த இடத்தில் சாப்பாடு தேடி வரும். ஆனால், இன்று என் வீட்டிலேயே எனக்காக மற்றவர் சமைத்துத் தந்தது ஒரு அலாதியான இன்பம். இப்படி ஒரு தருணத்தை தந்ததற்கு லாக்டௌனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

Representational Image
Representational Image

இவை மட்டும் இல்லாமல் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் நடுஇரவு வரை தொடரும் மொனோப்போலி, லூடோ, ரம்மி போன்ற ஆட்டங்களும் டிவியில் பார்க்க புதிய நிகழ்ச்சிகள் இல்லாததால் பிள்ளைகளுக்குக் கதை சொல்லி அவர்களின் கருத்துகள் மற்றும் மன ஓட்டத்தையும் அறியச் செய்யவும் இதுபோன்று எந்த ஒரு விடுமுறையும் அமைந்ததில்லை.

இந்த லாக்டௌனில் பலர் பலவிதமான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கலாம். எனினும் நடந்த சில நல்ல நிகழ்வுகளையும் மனதில் கொள்ளவே இந்தப் பதிவு.

- விஜி குமரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு