Published:Updated:

`காற்றே என் பால்கனி!' - வாசகியின் ஜில் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

அடுத்த 3 மாதங்களுக்கு காற்றுக்கு குறைவிருக்காது. பருவமழைகூட தவறும். ஆனால் காற்று... ம்ஹும். தவறாது. மழையோடுகூடிய காற்று, இன்னும் ஆனந்தம்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

காற்றை நான் இவ்வளவு நேசிப்பேன் என்று கோவை வந்த பிறகுதான் அறிந்தேன். அதிலும் மூன்றாவது மாடியில், இரண்டு பால்கனிகள் கொண்ட எங்கள் வீட்டில் காற்றுக்குப் பஞ்சமில்லை. ஆனி தொடங்கியதோ இல்லையோ, காற்று வீசத் தொடங்கிவிடும். அடுத்த மூன்று மாதங்களுக்கு காற்றுக்குக் குறைவிருக்காது. பருவமழைகூட தவறும். ஆனால், காற்று... ம்ஹும். தவறாது. மழையோடுகூடிய காற்று, இன்னும் ஆனந்தம்.

காற்றுக்கு இவ்வளவு வலிமை இருக்கும் என்று நான் உணர்ந்திருக்கவில்லை.

வீடு பெருக்க வேண்டும் என்றால் பால்கனி, ஜன்னல் கதவுகளை மூடினால்தான் முடியும். இல்லையானால் வடிவேலு பாய் மடித்த கதைதான்.

ஒரிஜினல் குதிரை வாலுக்குக்கூட முடி கலையாது. ஆனால், என்னோட குதிரை வால் முடி, படியவே படியாது.

Representational Image
Representational Image
Unsplash

நாள்காட்டிகளை ஆணியில் நிம்மதியாக இருக்கவிடுவதில்லை இந்தக் காற்று.

சிட்டி ரோபோ மாதிரி புத்தகத்தைப் படிக்க நினைத்து, அது முடியாததால், மறுபடி மறுபடி பக்கங்களைப் புரட்டிக்கொண்டே இருக்கிறது.

எல்லா வீட்டு வேலைகளையும் நானே தனியாகச் சமாளித்துக் கொள்வேன் என்று திமிராக இருக்கும்போது, தோய்த்த துணிகளைத் தனியாகக் காயவைப்பதை எனக்கு சவாலாக மாற்றிவிடும் இந்தக் காற்று.

சரி, என்னதான் ஆனாலும் காற்று மனதுக்கு புத்துணர்வு தருகிறதே என்று அதை அனுமதி(பவி)த்தால், அது தன் சகாக்களையும் கூடவே அழைத்துவந்து வீட்டை நறநறவென்று குப்பையாக்கி விடுகிறது.

``சுழற்றி அடிக்கும் காற்றுக்கொரு சத்தம் உண்டு, கேட்டதுண்டா... கேட்டவர்கள் சொன்னதுண்டா...’’ என்று யாரும் பாடிவிடக்கூடாது. அதனால் நான் இப்பவே சொல்லிவிடுகிறேன். காற்றுக்கு உஸ்ஸ் உஸ்ஸ் என்று விசில் சத்தம் உண்டு. சிலசமயம் பாம்பு வீட்டுக்குள் வந்துவிட்டதோ என்று நான் பயந்த நாள்களும் உண்டு.

நாம் WFH செய்யும்போது, தொந்தரவு செய்யும் குழந்தையை நம் அறையைவிட்டு வெளியே அனுப்பி குழந்தையைப் பார்த்துக் கொள்ள குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆனால், குழந்தை சோகமாகக் கதவைத் தட்டியபடியே நிற்கும் அதேபோலதான், காற்றின் இத்தனை குறும்பையும் தாங்க முடியாமல், எல்லா கதவுகளையும் அடைத்து வைத்தால், காற்று வந்து கதவை தட்டிக் கொண்டே இருக்கும். ஆமாங்க, நிஜமா தட்டும். நமக்குத் தட்டும் சத்தம் கேட்கும்.

Representational Image
Representational Image

வீடும் குப்பென்று ஆகிவிடும். அந்த அமைதியைப் பொறுக்க முடியாமல், பால்கனி கதவு திறக்கப் போனால், மடை திறந்த வெள்ளம்போல், நம்மையே தள்ளிவிட்டு காற்று உட்புகுந்துவிடும். நானும் விழாமல் (?!) தடுமாறி சுதாரித்து, சிரித்துக்கொண்டே வந்துவிடுவேன்.

காற்றும் குழந்தைபோல்தான், வீட்டையே கலைத்து போட்டாலும், அது இருந்தால் மகிழ்ச்சிதான்.

- வி.சுதா சத்யநாராயணா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு