
நெசவுத் தொழிலில் தறியில் மை ஆகாமல் இருக்க சுற்றி தரும் பேப்பரை எடுத்து மை இல்லாத பக்கத்தைத் திருப்பி படிக்க வைப்பார்...
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
ஓர் அடர்ந்த காடு. அந்தக் காட்டில் சிங்கம் ஒன்று தலைதெறிக்க ஓடி வந்தது. அதனை மரத்தின் மேலிருந்து கே... கே...
"என்னது 'கே' வா அது.. ஒழுங்கா படி"
அப்பாவின் அந்தக் கேள்வியால் எனக்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது.
"இல்லப்பா.. கோ.." தேம்பிக்கொண்டே படித்தேன்.
"ஆமா.. கோ.. படி"
"கோணங்கி"
"ஓர் அடர்ந்த காடு. அந்தக் காட்டில் சிங்கம் ஒன்று தலைதெறிக்க ஓடி வந்தது. அதனை மரத்தின் மேலிருந்து கோணங்கி, சோணங்கி என்ற குரங்குகள் கண்டன"

படித்து முடித்ததும் அப்பாவின் முகத்தில் ஒரு சந்தோசம். அந்த நொடி என்னுள் ஒளிந்திருந்த பயம் மெல்ல கரைந்தது.
என் அப்பா நான் முதல் ரேங்க் வாங்கியதற்காக பெருமையோ, சந்தோசமோ பட மாட்டார். ஆனால் இந்தத் தமிழை பிழையின்றிப் படிக்கும் பொழுது அவர் முக தசை கூறும் பாவனைகள் இருக்கின்றதே.. அதை அத்தனை சீக்கிரம் பிற வெற்றியில் காண இயலாது. அதற்காகவே தமிழை முடிந்த வரை பிழையின்றிப் படிக்கவும் எழுதவும் வெகு சீக்கிரம் கற்றுக்கொண்ட ஞாபகம் இன்னும் என் நினைவில் உள்ளது.
எனக்கு தெரிந்து நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது இருந்தே என்னை தமிழ்ப் புத்தகம் படிக்கக் கூறி அப்பா அருகில் அமர்ந்து கொள்வார். அப்பாவிற்கு தமிழ்தான் படிக்கத் தெரியும். அவர் மகளின் படிப்பறிவைக் கணக்கிடவும் அவர் கையில் எடுத்த ஆயுதமும் தமிழ் மொழிதான்.
நான் ஐந்தாம் வகுப்பு வந்ததும் என் தமிழ்ப் புத்தகங்களை நான் சுலபமாகப் படிக்கிறேன் என்று செய்தித்தாள்களை நான் ஓட ஓட என்னை விரட்டிப் பிடித்துப் படிக்கவைப்பார். நெசவுத் தொழிலில் தறியில் மை ஆகாமல் இருக்க சுற்றித் தரும் பேப்பரை எடுத்து மை இல்லாத பக்கத்தைத் திருப்பிப் படிக்க வைப்பார். பேப்பரில் இருந்த மை கையில் ஒட்டியதோடு சேர்ந்து தமிழும் என்னோடு ஒட்டிக் கொண்டது.

நான் ஆறாவது படிக்கும் பொழுது ஒரு நாள் தமிழ்ப் பாட வேளையில் ஒவ்வொரு பத்தியாக ஒவ்வொருவரை தமிழ் ஆசிரியை படிக்கச் சொன்னார். என் முறை வந்தது. நானும் எழுந்து படித்தேன். நான் படித்து முடித்தவுடன் ஆசிரியை கை தட்டினார்.
"உன் பேர் என்னம்மா.. நல்லா தமிழ் படிக்கிறயே" என்றார்.
எனக்கு அவ்வளவு பெருமை என் பெயரைக் கேட்டுவிட்டார். என் பெயர் ஆசிரியைக்குத் தெரிந்துவிட்டது என்று வானுக்கும் மண்ணுக்கும் குதித்தேன். அன்று முதல் தமிழ் ஆசிரியைகள் தேவதை ஆகி போனார்கள். தமிழ்ப் பாட வேலைகள் சொர்க்கமாகியது.
அதற்கு ஏற்ப.. ஒவ்வொரு ஆண்டும் எனக்கு தமிழ்ப் பாடத்திற்கு தேவதைகளே வந்தனர்.
"நல்ல சிரிச்ச முகமா நம்ம விருந்தினர வரவேற்று உப்பே இல்லாம கூழ் ஊத்தினாலும் அது அமிர்தம்தான் கண்ணுங்களா.. அததான் விவேகசிந்தாமணி பாட்ல சொல்றாரு...
ஒப்புடன் முகம் மலர்ந்து
உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும்
உண்பதே அமிர்தம் ஆகும்
முப்பழமொடு பால் அன்னம்
முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியோடு
கடும்பசி ஆகும் தானே"
எட்டாம் வகுப்பு தமிழ் ஆசிரியை படிக்கப் படிக்க எங்கள் உயிருக்குள் மனிதம் ஊறிக்கொண்டு இருந்தது.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு நாள்..

"இன்னிக்கு தமிழ் கிளாஸ் வெளில இருக்க மரத்துக்கு கீழயாம். தமிழம்மா வரச் சொன்னாங்க" கிளாஸ் லீடர் கூறி விட்டு ஓடினாள்.
புதிதாய்ப் பழகிய தாவணியுடன் மரத்திற்குக் கீழே அமர்ந்து தமிழ்ப் பாடம் கேட்கும் சுகம் இருக்கிறதே.. சொல்லி மாளாது.
நாங்கள் செல்வதற்கு முன்னே மரத்தில் கீழ் உள்ள திட்டில் தமிழ் ஆசிரியை பொற்கொடி அமர்ந்திருந்தார்
"இன்னிக்கு நம்ம அகநானூறு பார்க்கப்போறோம்.. தலைவி தோழி கிட்ட சொல்ற கூற்றுதான் இது.. என்ன சொல்றா தலைவி.. நானும் தலைவனும் ஒண்ணா இருக்கப்ப நாரை மட்டும் தானே இருந்தது.. அதுவும் சாட்சி சொல்ல வாராதே என்று புலம்பித் தவிக்கிறாள்"
அதைக் கூற கூற ஆசிரியையின் முக பாவத்தை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதோடு சேர்ந்து...
மரத்தின் உள்ள இலைகள் காற்றிடம் பேசும் சல சலப்பு சத்தம்... ஒரு கையில் மண்ணில் படாமல் தாங்கிக் கொண்டிருந்த தாவணியின் முந்தி... மறுகையில் புத்தகத்தோடு பேசிக்கொண்டிருந்த பென்சில்...
நானும் தமிழும் தேனும் இனிப்புமாய்த் தித்தித்துக் கொண்டு இருந்தோம்.
பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியை வகுப்பிற்குள் நுழையும் பொழுது மனப்பாடப் பகுதியில் உள்ள பாடல்களைச் சொன்னபிறகுதான் வணக்கம் சொல்லி அமர வேண்டும்.
பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் ஆசிரியை பால் வண்ணம் பிள்ளை துணைப் பாடம் நடத்தியதும் உள்ளுக்குள் ஏதோ பாரம் தொற்றிக்கொண்டது.
தமிழ் என்னை என்றுமே உயிர்ப்புடன்தான் வைத்திருந்தது. அழ வைக்கும் சிரிக்க வைக்கும் சிலிர்க்க வைக்கும் வெட்கப்பட வைக்கும் துள்ளல் போட வைக்கும் அச்சம் துறந்து வீரம் காண்பிக்கும்.

அதே தமிழ் என்னிடம் கோபம் கொண்டது கல்லூரியில் தமிழ் அல்லாத பட்ட படிப்பை தேர்வு செய்ததால். ஆனால் நான் விடாமல் அவ்வப்பொழுது ஓடிச் சென்று தமிழை இருக அணைத்துக்கொள்வேன். தமிழை தொட்டுப் பார்க்கவே அவ்வபொழுது புத்தகங்கள் படிப்பேன்.
தமிழைத் தேடி நூலகம் சென்றேன். அன்றே நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன்.
"எந்த மாதிரி புக்ஸ் வேணும்.. அந்தப் பக்கம் நாவல், இங்க கவிதை நூல், வாழ்க்கை வரலாறு புத்தகங்கள், கட்டுரைகள்.. மேல் அறைல வார மாத இதழ்கள், மோட்டிவேஷ்னல் புக்ஸ், வரலாறு...." என்று விளக்கிக் கொண்டிருந்தவரிடம்
"அதெல்லாம் அடுத்து படிச்சிக்கிறேன் சார்.. சமச்சீர் கல்வி ஆனப்றோம் வந்த ஸ்கூல் தமிழ் புக்ஸ் இப்போ எனக்குக் கிடைக்குமா?!"
இன்னும் சிறுபிள்ளையாய்த் தமிழ் தேவதைகளைத் தேடும் நான்.
-செ.ரேவதி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.