Published:Updated:

ஓ `காதல்' கண்மணி! - சிறுகதை #MyVikatan

Love
Love ( Image by Gerd Altmann from Pixabay )

என் முகத்தையும் அதில் லேசாய் படர்ந்திருக்கும் பதற்றத்தையும் ஊன்றிப் பார்த்தவளை திசை திருப்ப வேண்டி, ``மக எந்திரிச்சிட்டாளா?" என்றேன்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

`வா பொன்மயிலே...

நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது...'

தலைக்குள் ஓடிய பாடல் காலையில் கண்களைத் திறக்க வைத்தது, சடாரென்று எகிறிய இதயத் துடிப்புடன்.

`என்றும் நீயின்றி நானில்லை

நானின்றி நீயில்லை கண்மணி...'

வரிகள் மண்டைக்குள் லூப்பில் ஓட அதற்கு மேலும் இருப்பு கொள்ளாமல் எழுந்தேன் படுக்கையைவிட்டு. அருகில் உறங்கும் மனைவி நல்லவேளையாக ஏற்கெனவே எழுந்துவிட்டிருந்தாள். அவள் முகத்தைப் பார்க்கும் மனநிலையில் அப்போது நான் இல்லை.

காலைக் கடன்களை முடிக்கும் அவகாசத்தில் தடதடக்கும் இதயத்தை சமனப்படுத்தும் முயற்சி அடுத்த அரை மணி நேரம் தோல்வியில் முடிந்தது.

`நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது...'

மூன்று வார்த்தைகளும் சுழன்று சுழன்று மூச்சடைக்க வைத்தன. இதற்கு மேலும் பாத்ரூமில் இருக்க முடியாது. ஆழமான மூச்சிழுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தவனை சூடான காபிக் கோப்பையுடன் எதிர்கொண்டாள் என் மனைவி.

Representational Image
Representational Image

``என்ன சர்ப்ரைஸ்... சண்டேயும் அதுவுமா இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சிட்டீங்க..? உடம்புக்கு ஒண்ணும் இல்லைல..?" என்றாள் லேசான கவலையுடன்.

`சே...சே... அதெல்லாம் எதுவும் இல்லை. ஒரு முக்கியமான ரிப்போர்ட் நாளைக்கு சப்மிட் பண்ணணும்... பிரிப்பரேஷன் இருக்கு" என்றேன் காபியை வாங்கிக்கொண்டு.

என் முகத்தையும் அதில் லேசாய் படர்ந்திருக்கும் பதற்றத்தையும் ஊன்றிப் பார்த்தவளை திசை திருப்ப வேண்டி, ``மக எந்திரிச்சிட்டாளா?" என்றேன்.

ஒரு நொடி மௌனம் காத்தவள், ``அவளா..? அதுக்குள்ளேயா..? சண்டேயும் அதுவுமா..?" என்று பதில் சொன்னாள், `சரி, நானும் இந்த ஆட்டத்தை ஆடுகிறேன்' என்பதாய்.

``டிஃபன் ரெடியானதும் சொல்லு" என்று சொல்லிவிட்டு லேப்டாப்பை அரணாய் இழுத்துக்கொண்டு அமர்ந்தேன்.

லாக்டௌனின் உச்சக்கட்ட காலம். சாதாரண நாளாயிருந்தால் வெளியே சென்றிருப்பேன் எதையாவது வாங்கும் சாக்கில். இப்போது அதற்கும் வழியில்லை. வொர்க் ஃப்ரம் ஹோம் என்று செய்வதற்கு இருவருக்கும் வேலை இருந்ததால் சம்பளத்தைப் பற்றியோ சாப்பாட்டைப் பற்றியோ கவலைகள் இல்லை. இரண்டாமாண்டு கல்லூரிப் படிக்கும் மகளின் ஆன்லைன் வகுப்புகளும் தொடங்கப்பட்டு விட்டதால் அவளைப் பற்றிய கவலையும் இல்லை. வீட்டில் வேறு எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லை, வெளியே போகமுடியவில்லை என்ற ஒன்றைத் தவிர. அதுவும் இத்தனை நாள்கள் பிரச்னையாகத் தெரியவில்லை.

`நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது...'

பாழாய்ப்போன இந்தப் பாடல் மண்டைக்குள் ஒலிக்கும் வரை வாழ்க்கை வகுக்கப்பட்ட வழியில் குலுங்கலில்லாமல்தான் ஓடிக்கொண்டிருந்தது. 27 வருடங்களாக எட்டி மட்டும் பார்த்துக்கொண்டிருந்த நினைவு, இன்று மனதில் கூடாரம் அடித்து அமர்ந்துகொண்டிருந்தது ஏன் என்று தெரியவில்லை.

லேப்டாப்பைத் திறந்தவனின் கை ரிப்போர்ட் டாகுமென்ட்டைத் திறந்து வெறுமனே கர்சரை மேலும் கீழும் அலைக்கழித்தது. எவ்வளவு முயன்றும் நிலைகொள்ள மறுத்தது மனது. வீடு மறந்து, வேலை மறந்து, சூழல் மறந்து, மனைவி மறந்து, மகள் மறந்து... பின்னோக்கிப் பறந்த நினைவு கல்லூரிக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டது. மனதை அதன் போக்கில் சிறிது விட்டுத்தான் பிடிக்க வேண்டும் என்று கடிவாளத்தை சற்றுத் தளர்த்த, அது தறிகெட்டு ஓடிய வேகத்தைப் பார்த்து, இதைவிட்டால் பிடிக்க முடியாது என்று உணர்ந்து லேப்டாப்பை பட்டென்று மூடிவிட்டு எழுந்தேன்.

Representational Image
Representational Image

கையும் காலும் சும்மா இருப்பதால்தானே மனம் ஓடுகிறது என்று எண்ணி குளிக்கப் போகும் முடிவுடன் வார்ட்ரோபின் முன் வந்து நின்றேன் உடைகள் எடுக்கும் எண்ணத்துடன். கதவில் பொருத்தியிருந்த ஆளுயரக் கண்ணாடி, ஐம்பதுகளின் ஆரம்பத்தில், முன் வழுக்கையுடன், கண்ணாடி அணிந்த, ஆங்காங்கே மீசை நரைத்திருந்த, இளம் தொந்தி உருவத்தைக் காட்டினாலும், என் கண்களுக்குத் தெரிந்தது என்னவோ கருகருவென சிலிர்த்து அடங்கா முடியும், முகம் நிறைய புசுபுசு மீசையும், கால்பந்து ஆடும் ஸ்போர்ட்ஸ்மேன் உடலும் கொண்ட உருவத்தைத்தான்.

உச்சந்தலையில் கொட்டிய குளிர்ந்த நீர் மனதின் கொதிப்பில் சூடாகி உடலில் வழிந்து விழுந்தது.

ஈரத்தலையைத் துடைத்தபடி வந்தவரிடம், ``டிஃபன் ரெடி. சூட இருக்குறப்போ சாப்பிடுங்க அப்பாவும் மகளும்" என்றாள் என் மனைவி.

``எந்திரிச்சிட்டாளா மகாராணி?" என்று கேட்டபடி வந்து அமர்ந்தவனை...

``என்னப்பா... இன்னிக்கு கொஞ்சம் ஹைப்பரா இருக்கீங்க... காபி குடிச்ச கடுவன் மாதிரி..." என்றாள் என் மகள்.

காற்றடைத்த பலூனைக் குத்தும் கூர் ஊசியாய் அவளின் வார்த்தைகள் மாற, மற்ற தினங்களில் பதிலுக்கு இரண்டு கேலிகளை அள்ளி விடும் நான் அன்று கத்தினேன்... ``வாய மூடு. அப்பா மகள்னு ஒரு தராதரம் இல்லை..? என்ன பேசற நீ..? என்ன வளர்த்து வச்சிருக்கா உங்கம்மா..? எல்லாம் அவ குடுக்கற இடம்... சே... மனுஷன நிம்மதியா சாப்பிடக்கூட விடாம..." என்று.

தட்டில் வைத்த தோசையைத் தள்ளி வைத்து விட்டு எழுந்து ரூமுக்குள் சென்று கதவை பட்டென்று மூடினேன். அது டம்மென்று மூடிய சத்தத்தில் உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.

Representational Image
Representational Image

`சே! என்ன மனிதன் நான்? என்னையும் மகளையும் உலகமாய் நினைத்து வாழும் அன்பான, ஆதரவான மனைவி... அறிவும் ஆனந்தமுமாய் மகள்... எப்படி இப்படிப் பேசத் துணிந்தது அவர்களை..? இவர்கள் தானே எனக்கும் உலகம்... இவர்களுக்காகத்தானே எல்லாம்... அதிலும் என் மனைவி... என் அத்தனையுமானவள் அவள்தானே...'

`அத்தனையுமா...?'

`அத்தனையும்தான்... காதலைத் தவிர...'

`ஏன் காதலைத் தவிர...? 20 வருடங்களுக்கும் மேலாக உன்னுடன் வாழ்ந்து உன் வாழ்வின் எல்லா நிலைகளிலும் உனக்கு சகலமுமாய் இருந்திருக்கிறாள்... அவளுக்கு இல்லையா உன் காதல்...?'

`இல்லை.'

`ஏன் இல்லை?'

`என்னிடம் இருப்பு இல்லை அது...'

`என்ன செய்தாய் இருந்ததை...?'

`என் கல்லூரிக் காலத்திலேயேக் கொட்டித் தீர்த்துவிட்டேன் இன்னொருத்தியிடம்...'

நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது'

வெடித்துச் சிதறியது விம்மல் ஒன்று நெஞ்சுக்கூட்டிலிருந்து.

``Is he okay, Ma?"

``Just leave him be, Baby. He'll work it out".

மூடிய கதவுக்கு அப்பால் இருந்து மெல்லிய கவலை தோய்ந்த குரல்கள்.

சட்டென்று உறைத்தது.

Yes, I'll have to work it out.

முடிவுக்கு வந்தவனாய் அலைபேசியை எடுத்தேன். டைரி ஆப் ஒன்றில் பாஸ்வேர்டு போட்டு குறித்து வைத்திருந்த எண்ணை எடுத்தேன். நண்பன் ஒருவன் மூலமாக வாங்கி வைத்த அலைபேசி எண். எண் மாறினால் மாறிய புது எண்ணை என்னிடம் சேர்க்கும் பொறுப்பும் அவனுடையதுதான். ஏழு வருடங்களுக்கு முன் கொடுத்த எண் அது. போன முறை அவனிடம் பேசும்போதுகூட எண் மாறவில்லை என்று உறுதி செய்தான்.

விரல்கள் நடுங்க எண்களை அழுத்தினேன். என்ன பேசப்போகிறேன், ஏன் பேசப்போகிறேன், மறுமுனையில் இருந்து குரல் வருமா, வந்தால் அந்தக் குரலும் என்ன பேசும், ஏதேனும் பேசுமா... எதையும் யோசிக்காமல் கால் பட்டனை அழுத்தியது விரல்.

இரண்டாவது ரிங்கில்...

``ஹலோ..."

``..."

அந்தக் குரல் தான்.

``ஹலோ... Who is this?"

அந்தக் குரலே தான்.

``எப்பிடிமா இருக்கே..?"

``..."

``Sorry to call. உன் குரலை கேட்கணும்ன்னு தோணுச்சு."

``..."

``நல்லா இருக்கல்ல..."

"ஹலோ... sorry... wrong number."

இணைப்பு துண்டிக்கப்பட்ட நேரத்தில் தலைக்குள் ஓடியது...

`நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது...'

தெரியவில்லையோ என் குரல்..?

மறந்திருக்குமோ..?

`வா... பொன்மயிலே...'

மறக்க முடியுமா..?

`நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது...'

தவறு செய்துவிட்டேனா..?

`என்றும் நீயின்றி நானில்லை...'

அழைத்திருக்கக் கூடாதோ..?

`நானின்றி நீயில்லை...'

20 வருடங்களுக்குப் பிறகு அந்தக் குரல்...

அதே குரல்...

`கண்மணி...'

டிடிங்...

டிடிங்...

டிடிங்...

Representational Image
Representational Image

Whatsapp நோட்டிபிகேஷன் அடுத்தடுத்து அழைத்தது அவன் அழைத்த எண்ணிலிருந்து.

`How are you?'

`Sorry, my family was with me'

`Had to cut the call'

`Sorry to have called' - Send

`Miss you too much' - Send

`Just wanted to hear your voice - Send

டிடிங்...

`Have to go'

டிடிங்...

`Will text later'

`Ok. Bye' - Send

டிடிங்...

`Bye'

போனும் மனமும் அமைதியானது.

மனதில் மைக் செட் போட்டு அலறிய பாடல் இப்போது மெலடி பிஜிஎம் ஆனது.

`வா... பொன்மயிலே...

நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது...'

டிடிங்...

`கண்மணி'

சட்டென்று சகலமும் ஒற்றைப் புள்ளியில் நின்றது. மூச்சு ஆழமாய் உள்ளே போனது. எங்கோ வெளியே காகம் ஒன்று கரைந்தது.

ரூமிலிருந்து பால்கனி கதவைத் திறந்து வெளியே வந்தேன். முகத்தில் புன்னகை ஒட்டியிருப்பது தெரிந்தது. எல்லாம் வெளிச்சமாய் இருந்தது. மெல்லிய காற்று வீசியது.

`கண்மணி...'

ஒற்றை வார்த்தையை உதடு முணுமுணுத்தது.

வீட்டினுள் என் மனைவியின் அலைபேசி ஒலித்தது.

இரண்டாவது ரிங்கில் எடுத்தாள்.

``ஹலோ..."

``..."

``ஹலோ... who is this?"

``..."

``ஹலோ... sorry... wrong number".

--------------------


- கா.தாஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு