Published:Updated:

56 காதல் ஜோடிகளைச் சேர்த்து வைத்த `நிஜ ஷாஜஹான்’ மதுரை மணி அமுதன்

மணி அமுதன்
மணி அமுதன்

முகநூலில் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் உட்பட பல வகையிலும் டார்ச்சர் செய்வார்கள். அதைவிட, '' `மாமா' வேலை பார்க்கிறியா?' என்று இழிவுகூடப் படுத்துவார்கள்.

''உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு

இவன் நன்மை செய்ய நன்மை செய்யப் பிறந்தவன்...''

என்று பின்னணியில் பாடல் ஒலிக்க காதலர்களைச் சேர்த்து வைக்கும் ஹீரோக்களை சினிமாவில் பார்த்து ரசித்திருப்பீர்கள். 'நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே...' என்று காதலுக்கு உதவச்சென்று கை, கால்களில் கட்டுப்போட்ட நாடோடிகளைப் பார்த்தும் உணர்ச்சி வசப்பட்டிருப்பீர்கள்.

திரைப்படங்களில் வரும் கற்பனையான சம்பவத்துக்கே இவ்வளவு உணர்ச்சிவயப்படும் நீங்கள், உண்மையான காதலர்களை, அதிலும் சாதி மதத்தை மறுத்து காதலிப்பவர்களைச் சேர்த்து வைக்கும் நிஜ மனிதர்களைச் சந்தித்திருக்கிறீர்களா?

மணி அமுதன்
மணி அமுதன்

ஒன்று இரண்டு அல்ல, 56 காதல் திருமணங்களை நடத்தி வைத்து விட்டு, அதனால் வரும் பின் விளைவுகளை எதிர்கொண்டு, தான் சார்ந்த இயக்கப்பணிகளையும் செய்துவரும் மணி அமுதன் ஓர் ஆச்சர்யமான இளைஞர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளராக இருக்கும் மணி அமுதனுக்கு சொந்த ஊர் மேலூர். மக்களுக்கான போராட்டங்களில் பங்கு கொண்டதால் அவர் மீது பல்வேறு வழக்குகள்.

''எப்போது முதல் காதல் ஜோடிக்குத் திருமணம் செய்து வைத்தீர்கள்?''

''பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு வேலை செய்வதற்காகத் திருப்பூருக்குச் சென்றேன். சிறு வயதிலிருந்து அம்பேத்கர், பெரியார் பற்றிய சிந்தனைகளை உள்வாங்கியதால், திருப்பூரில் இது போன்ற ஒத்த சிந்தனையுள்ள அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டது. திருப்பூர், கோவை பகுதிகள் தொழில் நகரம் என்பதால் அங்கு காதல் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்களைப் பெரியார் அமைப்புகள் அடிக்கடி நடத்தி வைப்பார்கள். அதைப் பார்த்து பார்த்து காதலர்களைச் சேர்த்து வைப்பது நல்ல செயல், அதிலும் ஆதிக்கச் சாதியினரால் மிரட்டப்படும் காதல் இணையர்களைச் சேர்த்து வைப்பது இன்னும் நல்ல செயல் என்று முடிவெடுத்தேன். அந்த நேரம்தான் 2010-ல் திருப்பூரில் ஒரு காதல் ஜோடி என்னிடம் உதவி கேட்டு வந்தார்கள்.

மணி அமுதன்
மணி அமுதன்

பையன் பட்டியல்சாதியையும் பெண் பிற்பட்ட சாதியையும் சேர்ந்தவர்கள். பெண் வீட்டுப் பக்கம் பயங்கர எதிர்ப்பு, அவர்களுக்கு எது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற நிலை. அவர்களை மதுரைக்கு அழைத்து வந்து இங்குள்ள சக தோழர்கள் உதவியுடன் பாதுகாத்து பின்பு பதிவுத் திருமணம் செய்து வைத்தோம். அன்று தொடங்கியது இந்தப் பணி. பின்பு மதுரை வந்து செட்டிலானதும் தி.க-வில் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டு இயக்கப் பணிகள், மக்கள் பிரச்னைகளுக்கு இயங்கிக்கொண்டு, தேடி வரும் காதல் இணையர்களைப் பாதுகாத்துத் திருமணம்செய்து வைப்பது வாடிக்கையாகிவிட்டது'' என்றார்.

''இதுவரை எத்தனை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளீர்கள்?''

''கடைசியாக நான் வசிக்கும் மேலூர் பகுதியில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் செய்து வைத்ததோடு 56-ஐ எட்டிவிட்டது.''

மணி அமுதன்
மணி அமுதன்
ஈ.ஜெ.

''காதல் ஜோடிகளை வாழ்வில் சேரவிடாமல் நம் சமூகத்தில் தடையாக இருப்பது எது?''

''ஒரே சாதிக்குள் காதல் என்றாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு காரணியாக உள்ளது. இருந்தாலும் நாளடைவில் அதைப் பெற்றோர்கள், ஊர்க்காரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அதுபோல் பிற்பட்ட சாதிக்குள் வேறு வேறு சாதியினர் காதலுக்கும் எதிர்ப்பு இருந்தாலும் அதில் பின்னாளில் சமரசம் ஆகிவிடுகிறார்கள். ஆனால், பட்டியிலின சாதியும் பிற்பட்ட சாதி அல்லது முற்பட்ட சாதியினரும் காதலிக்கும்போதுதான் பெரும்பாலனவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைப் பெரிய குற்றமாகப் பார்க்கிறார்கள். கடைசியில் ஆணவக்கொலை செய்யும் அளவுக்குச் சென்றுவிடுகிறார்கள். அவர்களை எதிர்த்து சாதி மறுப்பு ஜோடிகள் திருமணம் செய்வது என்பது மிகவும் ரிஸ்கான விஷயம்தான்.

எங்களைப் பொறுத்தவரையில் ஓர் ஆணும் பெண்ணும் விரும்பி திருமணம் செய்துகொள்வது இயல்பானது என்றும், அது ஒன்றும் இயற்கைக்கு மாறானது இல்லை என்கிறோம். இருவர் விரும்பி இணைந்து வாழ வேறு எந்தக் காரணம் சொன்னாலும் அதைப்பற்றி யோசிக்கலாம். ஆனால், சாதியைச் சொல்லும்போதுதான் ஆதிக்கமும் சாதிப்பெருமையும் தலை தூக்குகிறது. சாதியை ஆணவத்தைத் தகர்க்க காதல் திருமணம் அவசியமாகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு சட்டமே உதவும்போது நாம் உதவுவதில் தவறில்லை. நாங்கள் செய்து வைத்ததில் 90 சதவிகிதம் சாதி மறுப்புத் திருமணங்கள்தான்.''

''பொதுவாக. காதல் திருமணம் செய்தவர்களை விட்டுவிட்டு, அதற்கு உதவி செய்தவர்கள் மீதுதான் அவர்களின் பெற்றோர்களும் சார்ந்த சமூகத்தினரும் கோபப்படுவார்கள், அதை எதிர் கொண்டிருக்கிறீர்களா?''

மணி அமுதன்
மணி அமுதன்
ஈ.ஜெ.நந்தகுமார்

''அதெல்லாம் வரத்தான் செய்யும், நமக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளது. காதல் ஜோடிகள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து தேடி வந்துவிடுவார்கள். நாங்கள் அவர்களின் கண்ணுக்குப் படுவதற்குள் பதிவுத் திருமணம் செய்து வைத்து விட்டு, ரொம்ப பிரச்னையாக இருந்தால் காவல்துறையினரிடம் மணமக்களைச் சேர்த்துவிடுவோம். இன்னும் சிலரை வெளியூருக்கு அனுப்பி வைத்துவிடுவோம். தொடர்ந்து காதல் தம்பதியினருக்கு பிரச்னை ஏதும் உள்ளதா என்று தொடர் கண்காணிப்பில் இருப்போம். தைரியமான தம்பதிகளை மட்டும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வாழ்த்துவோம், அச்சப்படுகிறவர்களை வெளிப்படுத்த மாட்டோம்.''

''இதுபோன்ற ரிஸ்க் எடுப்பதை உங்கள் வீட்டில் எப்படிப் பார்க்கிறார்கள்?''

''எல்லோரையும் போலத்தான், தேவையில்லாத வேலையைப் பார்த்து மற்றவர்களின் பகையைச் சம்பதிக்காதே என்பார்கள். எனக்குப் பெரியார் இயக்கம் உட்பட பல்வேறு முற்போக்கு அமைப்பினர் துணையாக இருக்கிறார்கள். முகநூலில் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் உட்பட பல வகையிலும் டார்ச்சர் செய்வார்கள். அதைவிட, '' `மாமா' வேலை பார்க்கிறியா?' என்று இழிவுகூடப் படுத்துவார்கள். நான் இதில் உணர்ச்சிவசப்பட மாட்டேன். அறிவை மட்டும் பயன்படுத்துவேன்''

மணி அமுதன்
மணி அமுதன்

''சரி, நீங்கள் காதல் திருமணம் செய்வீர்களா?''

''ஆமாம், காதலித்துக்கொண்டிருக்கிறேன். அவர், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் படித்து முடித்ததும் எங்களது சாதி மறுப்பு இல்வாழ்க்கை தொடங்கும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு