Published:Updated:

லைக், ஷேர்லாம் பப்ளிக்கா இருக்காது, உள்ளுணர்வு அடிப்படையில்தான்! - நெகிழும் மதுரைக்காரர் #MyVikatan

நான் என்ன துபாயாடா போய்ட்டு வரேன்? என்னை வீட்டில் விடுங்கள் என்று கேட்டால் பஸ்ஸூ போகட்டும் பொறுமையாகப் போகலாம் என்று பதில்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

செமஸ்டரின் கடைசி தேர்வில் இருக்கும் பயத்தைவிட சொந்த ஊருக்குச் செல்கிறோம் என்ற சந்தோஷமே அதிகமாக இருக்கும். ரிசல்ட் வரும் வரை.

கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்தில் பெரும்பாலான பேருந்துகளில் வெளிநாட்டு வாகன நிறுவனங்களின் சிம்பள் இருக்கும். ஆனால், நம்ம ஊருக்கு போகும் பேருந்தில் மட்டும் ஜல்லிக்கட்டு சிம்பள் இருக்கும். அதைப் பார்க்கும்போது உற்சாகம் பிறக்கும், ஏன்னா, நான் மதுரக்காரன்.

பேருந்து நிலையம்
பேருந்து நிலையம்
சுபி தாஸ்

சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்ல ஒரு இரவு செலவாகும். ஊரை அடைய 10 நிமிடத்துக்கு முன் போன் செய்ய சொல்லி 100 தடவை போன் வரும். அப்போதுதான் அண்ணன் பைக்கில் வந்து அழைத்துச் செல்ல சரியாக இருக்கும். என் போனிலோ அவ்வளவு பேட்டரி கெபாசிட்டி இல்லை. ஸ்விட்ச் ஆஃப். ஊருக்கு போன பிறகும் உபயோகம் இல்லாததால் பெரும்பாலும் ஸ்விட்ச் ஆஃப்லதான் இருக்கும். ``செல்போனின் நச்சரிப்பை மறந்து. கொஞ்சம் செல் மண்ணின் உச்சரிப்பைக் கேட்போமா..?”

ஊர் வந்து இறங்கியவுடன் 8.10 பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் வருத்தப்படாத வாலிபர்களான என் நண்பர்களையே முதலில் சந்திப்பேன். ஒவ்வொருத்தனும் 'கலராகிட்டியே மாப்ள.', 'முன்ன இருந்துக்கு இப்ப மெலிஞ்சுட்டியே.' என்ற விசாரிப்புகளுடன் 'சென்னையில இருந்து வந்ததுக்கு ட்ரீட் இல்லையா..?' என்று பிட்டை போடுவார்கள்.

மதுரை
மதுரை
சுபி தாஸ்

'நான் என்ன துபாயாடா போய்ட்டு வரேன்..? என்னை வீட்டில் விடுங்கள்' என்று கேட்டால், 'பஸ்ஸூ போகட்டும் பொறுமையாகப் போகலாம்' என்று பதில் வரும். பக்கத்திலே பெரியப்பா செய்தித்தாள் படித்துக்கொண்டு இருப்பார். அவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். எங்கள் ஊர் பேருந்து நிலையம் அவர் பீரியடில் கட்டப்பட்டது. இன்றும் அது நிலைத்து நிற்கிறது. அங்கு அமர்ந்து செய்தித்தாள் படிப்பதை வழக்கமாக வைத்திருப்பார். அவரிடம் சென்றவுடன், 'வாடா..!' என்ற ஒற்றைச் சொல்தான்.

''வா வீட்ல விட்ரேன்'' என்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவருடைய பைக்கில் புல்லட் போல சத்தம் வரும். சிறு வயதில் புள்ளபூச்சி என்று ஒரு விளையாட்டு. மரத்தில் ஏறி விளையாடி கீழே விழுந்து கை கால்களை உடைத்திருக்கிறோம். விளையாடும்போது அவரிடம் மாட்டிக் கொண்டால் தோப்புக்கரணம் போடச் சொல்வார். எனவே, அவருடைய வண்டியின் சத்தம் கேட்டால் ஓடி ஒளிந்துகொள்வோம்.

மதுரை
மதுரை
சுபி தாஸ்

ஒரு வழியாக வீட்டுக்கு வந்த பிறகு, என் பாட்டி ஏதோ நான்தான் உலக அழகன் போல பாவித்து எனக்கு மஞ்சள் நீரில் ஆரத்தி எடுப்பார். இப்போது நகைக் கடைகளிலும் மால்களிலும் உள்ளே செல்லும் முன் கிருமிநாசினி தெளிக்கும் போதுதான் மஞ்சளின் மகத்துவம் புரிகிறது. எவ்வளவு அறிவுடையோர் நம் முன்னோர்கள்.

உள்ளே சென்றவுடன் அப்பா, “ஏன்டா போன் செய்யச் சொல்லி உங்க அம்மா 100 தடவை போன் பண்ணாங்களே ஏன் பதிலுக்கு பண்ணல..?”

''100 தடவை போன் பேசுனா எப்படி சார்ஜ் இருக்கும்..?' என்பேன் குதர்க்கமாக.

பிறகுதான் ஒரு விசயம் தெரிந்தது, அன்றிரவு விழுப்புரம் சென்னை நெடுஞ்சாலையில் நடந்த விபத்தை செய்தியில் கேட்டு பதறிப் போய் அழுதுள்ளார். அந்த பயத்திலேயே அடிக்கடி போன் செய்துள்ளார். அன்றிலிருந்து அம்மா போன் செய்தால் கண்டிப்பாக எடுத்து பேசிவிடுவேன்.

மதுரை
மதுரை
சுபி தாஸ்

எங்கள் ஊருக்கென பொது ஊரணி உள்ளது. அதில் நண்பர்களுடன் ஆட்டம் பாட்டத்தோடு குளிப்போம். பொதுவாக ஊர்களில் குளம் இருந்தால் அதைச் சுற்றி மரம் இருக்கும். அந்த மரத்திலிருந்து விழும் இலைகளில் வேப்பிலையோ கிருமிநாசினி, புளிய மர இலையோ உடல் வலியை போக்கும். மண் சிறந்த சுத்திகரிப்பானாக உள்ளது. குளித்து முடித்துவிட்டு வந்தால் ஹெர்பல் மசாஜ் செய்த மாறி இருக்கும். இயற்கை நம் முன்னோர்களுக்கு இயல்பாகவே சிறப்புடன் வாழக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

அன்றைய தினம் எனக்கு விருப்பமான சாப்பாடே சமைக்கப்படும். காலையில் இடியாப்பம் தேங்காய் பாலுடன் வாழைப்பழம் மில்க் ஷேக் போல. ஆனால் அதுதான் எனக்கு பிடிக்கும் என்று ஒருமுறை கூட சொன்னதில்லை. அங்கு லைக் ஷேர்லாம் பப்ளிக்காக இருக்காது. உள்ளுணர்வு அடிப்படையிலேயேதான். வீட்டில் வளரும் கோழிகளில் என் பெயரில் எனக்கென்று ஒரு கோழி வளர்ப்பார்கள். அன்றைக்கு மதியத்துக்குப்பின் அந்தக் கோழியைக் காண முடியாது...

மதுரை
மதுரை
சுபி தாஸ்

சாப்பிட்டவுடன் மத்தியானம் தூங்கும் சுகம் இருக்கே... அப்டித்தான் இருக்கும். அந்நேரம் ஊரில் எல்லாரும் குட்டி உறக்கத்தில் இருப்பர். அந்த நேரத்தில் சிறுவயதில் மதிய வேளையில் யாருக்கும் தெரியாமல் வீட்டில் உள்ள காய்கறி அரிசியை எடுத்து கூட்டாஞ்சோறு ஆக்கியது ஞாபகம் வரும். எல்லாமே திட்டப்படிதான் நடக்கும். கடைசி நேரத்தில் எடுத்துச் சென்ற சட்டியை தீய வைத்து கருக்கியதை கழுவ முடியாமல் மாட்டிக் கொள்வோம். அடிவாங்கியும் திருந்தவில்லையே... வீரப் பரம்பரை சார்.

சாயங்காலம் வீரர்கள் அனைவரும் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றுவிடுவோம். போட்டிக்கு 5 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை பெட் வைத்து விளையாடுவோம். இது நாள் வரை சொன்ன பணத்தைக் கொடுத்ததே இல்லை. பக்கத்தில் குளத்தில் ஆடு மாடுகள் தண்ணீர் குடிப்பதற்காக அந்த வழியே ஓட்டிக்கொண்டு வருவார்கள்.

மதுரை
மதுரை
சுபி தாஸ்

கால்நடைகள் நீர் அருந்தும் அழகை ரசிப்போம். பல வழிகளிலிருந்து நீரூற்றுகள் ஓடிவந்து நிறைந்த அந்த குளம் மனித குலத்திற்கு மட்டுமல்ல எல்லா குலத்தவர்களும் சமத்துவத்துடன் பயன்படுத்துவர்.

இரவு உணவிற்கு பிறகு இளைஞர்கள் அனைவரும் சங்கத்திற்கென்று இருக்கும் கட்டடத்தின் மாடியில் தூங்க செல்வோம். வானமே கூரையாய் நட்சத்திரம் நிலா என ரொமேன்டிக்காக காட்சி தரும்.

அந்நேரம் கடலை போடுவது போன்ற தனித்த விருப்பங்களுக்கு வீடுகளை விட அவ்விடம் வசதியாக இருக்கும். நற்பணி மன்றம் என்ற பெயருக்கேற்ப யாருக்கும் அவசர தேவை ஏற்பட்டால் சங்கமே முதலில் நிற்கும். அலப்பறைகளுக்கும் அளவிருக்காது.

மதுரை
மதுரை
சுபி தாஸ்

இவையெல்லாம் சாதாரண விடுமுறை நாள்களின் அனுபவங்கள். கல்யாணம், காது குத்து விழாப் பொழுதுகளுக்கு ஊருக்கு அழைப்பு விடுத்து அதற்கு செல்லும்போது நீங்கள் கொண்டாடப்படுவீர்கள். அதுபோன்ற அழைப்புகளை புறக்கணித்து விடாதீர்கள். அப்படி புறக்கணிப்பது விழாக்களை மட்டுமல்ல உங்கள் உறவுகளையும் அழகிய தருணங்களையும் தான். சொந்த மண் மீது ஆசைப்படுவதை விட அதன் மீது காதல் கொள்வதே மேலானது.

- சுபி தாஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு