Published:Updated:

வெள்ளைக்காரரும், மசால் வடையும்..! - சொக்கலிங்கம் பலகாரக் கடை நெகிழ்ச்சி நினைவுகள் #MyVikatan

Representational Image ( Craig Whitehead on Unsplash )

`நான் வெளிய வேடிக்கை பார்த்து சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது வெள்ளைகாரர் ஒருவர் கையில கேமராவும், கழுத்தில் ஒரு கேமராவும் வைத்துக் கொண்டு அண்ணன் கடைக்கு வந்தார்...'

வெள்ளைக்காரரும், மசால் வடையும்..! - சொக்கலிங்கம் பலகாரக் கடை நெகிழ்ச்சி நினைவுகள் #MyVikatan

`நான் வெளிய வேடிக்கை பார்த்து சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது வெள்ளைகாரர் ஒருவர் கையில கேமராவும், கழுத்தில் ஒரு கேமராவும் வைத்துக் கொண்டு அண்ணன் கடைக்கு வந்தார்...'

Published:Updated:
Representational Image ( Craig Whitehead on Unsplash )

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அமெரிக்காவிலிருந்து விளாங்குடிக்கு அப்பா, அம்மாவை காணவந்து நான்கு நாள் ஆகிவிட்டது. ஊர் சுற்ற அப்பாவின் பழைய பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரில் கிளம்பினேன். விளாங்குடி நிறைய மாறி இருந்தது. நிறைய தெருவோர உணவகங்கள். வழியில் ஏதாவது சாப்பிடலாம் என நினைத்தபோது தான் சொக்கலிங்கம் அண்ணன் நினைவில் வந்தார்.

சொக்கலிங்கம் அண்ணன் எப்போதுமே சட்டை போட மாட்டார். வெத்து உடம்பும், காவி வேட்டியும், தலையில்
முண்டாசு கட்டிய துண்டும், முறுக்கிவிட்ட மீசையும், நெத்தியில் விபூதி பட்டையும்தான் அவரின் அடையாளம்.

வைகை ஆறு
வைகை ஆறு

பழைய விளாங்குடி அருகே வைகை ஆற்றை ஒட்டி இருந்தது அவரின் பலகாரக்கடை. சரப்பலகை போட்ட ஓடு வேய்ந்த கூரை. என் பள்ளி வயதில் மிக பிரபலம். அவர் கடையில இருந்து பின்புறம் பார்த்தால், வைகை நதி பரந்து விசாலமாக நன்றாகத் தெரியும். ஆனால் ஒரு சில வருடம் தவிர தண்ணி இல்லாமல் எப்போதும் வறண்டே இருக்கும்.

கடையின் பின்புறம் கொல்லையை ஒட்டி சிறிய சமையல் கூடம் இருக்கும். மரப்பொடி அடுப்பு, விறகு அடுப்பில் செஞ்ச இட்லி, ஆப்பம், கல் தோசை, மசால் வடை, உளுந்து வடை தினப் பலகாரம். டீ நல்லா போகும். அண்ணன் கடையில் காபி கிடையாது. சமையல் வேலை முழுவதும் அவர் சம்சாரம் சிந்தாமணி அக்காதான்.

நான் பத்தாம் வகுப்புப் படிக்கும் போது சித்திரைத் திருவிழாவுக்கு ரெண்டு நாள் இருக்கும். அப்பா, அம்மாவோடு அண்ணன் கடையில் பலகாரம் சாப்பிட போனோம்.

நான் வெளிய வேடிக்கை பார்த்து சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது வெள்ளைக்காரர் ஒருவர் கையில கேமராவும், கழுத்தில் ஒரு கேமராவும் வைத்துக் கொண்டு அண்ணன் கடைக்கு வந்தார். 45 வயசு இருக்கும். கருப்பு கண்ணாடியும், பழுப்பு நிற கால் சட்டையும், வெளிர் நீல பனியனும், தொப்பி வெச்சு பார்க்க அம்சமாக இருந்தார்.

நேராக அண்ணனிடம் போய் கேமராவை காட்டி கேட்டார் - "Excuse me… Can I take few pictures behind your shop?". அண்ணனுக்கு ஒன்னும் புரியாமம் வெள்ளைக்காரரை வெறித்துப் பார்க்க.. சாப்பிட்டு கொண்டு இருந்த நான்தான் என் பத்தாப்பு அரைகுறை ஆங்கில அறிவில் சொன்னேன். "அண்ணே ..அவரு பின்னாடி போய் போட்டோ புடிக்கணும்னு சொல்லுறார்ரு". சொக்கலிங்கம் அண்ணன் சிரிச்சிட்டு உடனே பலமாகத் தலையை ஆட்டினார்.

Representational Image
Representational Image

நானும் ஒரு ஆர்வத்தில் வேகமாகப் போய் கைகழுவி விட்டு கொல்லைப்பக்கம் ஓடினேன். கூடவே இன்னும் ரெண்டு சிறுவர்களும் அண்ணன் கடையில இருக்கிற நாயும் வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. வெயில் உக்கிரத்தில் வைகை தண்ணீரற்று வறண்டு போய் இருந்தது. தேங்கிய குட்டையில் மட்டும் சிறிது நீரோட்டம் இருக்க, மற்ற இடங்களில் வெறும் மணலும் குப்பையும் அண்டிக் கிடந்தது.

சில நிமிடம் ஆற்று பரப்பை அமைதியாக ரசித்தவர், ``Wow…Wonderful” - என்று சொல்லிட்டு ரெண்டு, மூணு போட்டோ எடுத்துக் கொண்டார். அவர் வைத்திருந்த கேமரா வியப்பாக இருந்தது. போட்டோ எடுத்த உடனே படம் வெளியே வந்தது. பசங்க எல்லாரும் உரக்க சத்தம் போட்டு கை தட்டினோம். நாய் குரைத்தது.

கேமரா பேரு என்னவென்று எழுத்து கூட்டிப் படித்தேன். "Polaroid" என்று பெயராம். தோளில் இருந்த இன்னொரு கேமராவிலும் படம் எடுத்தார். ஆனால், அதில் படம் எதுவும் வரவில்லை. அப்பறம் ஒரு 5 நிமிஷம் நதியை ரசித்துப் பார்த்துவிட்டு நடந்து கடைக்கு முன் வந்தார்.

உச்சி வெயில் மண்டைய பொளக்க, நேராகப் போய் பெஞ்சில் உட்கார்ந்தார். அண்ணன், டவரா டம்ளர்ல டீ போட்டு வெள்ளைக்காரருக்குக் கொடுத்தார். அப்பறம் சூடாக இருந்த ரெண்டு பருப்பு வடையை தட்டில் வைத்து சிரித்துக் கொண்டே கொடுத்தார்.

வெள்ளைக்காரர் டீயை குடித்துவிட்டு, வடைய எடுத்து உருட்டி பார்த்தார். அப்பறம் என்னை பார்த்து

"Is It Spicy?" என்று கேட்டார். நான் "little" என்று சொல்லிவிட்டு வெட்கமாகச் சிரித்தேன். அவர் மெலிதாகச் சிரித்தார். அப்பறம் ரெண்டு வடையும் முழுசாக சாப்பிட்டார்.

Representational Image
Representational Image

பத்து நிமிடம் இருக்கும். நான் சாப்பிட்டு முடிக்க..அவரும் எழுந்தார். வெள்ளைக்காரர் ஒரு இருபது ரூபா நோட்டு அண்ணனிடம் கொடுக்க..

அண்ணன் ரெண்டு கையும் வேகமா ஆட்டி மறுத்து ..."free".."free" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

வெள்ளைகாரர் சிரித்துவிட்டு மீண்டும் பெஞ்சில் வந்து அமர்ந்தார். ஏனோ தெரியவில்லை. அவரின் முகம் கொஞ்சம் சோர்வாக இருந்தது. நான் அப்பா அம்மாவோடு புறப்படத் தயாராக...

ஒரு நிமிஷம் கூட இல்லை...தீடீரென வெள்ளைகாரர் மெதுவாக அப்படியே கண்ணை மூடி ஓரமாக சரிஞ்சது போல் பெஞ்சில் விழுந்தார். மொத்த கடையும் பதறிப் போனது. சொக்கலிங்கம் அண்ணன் பயத்தில் வெலவெலத்து போனார். ஓடி போய் செம்பில் தண்ணி கொண்டு வந்து முகத்தில் தெளிக்க ஒரு அசைவும் இல்லை.

அதற்குள் யாரோ ஒருத்தர் ரோட்டில் சென்ற ஆட்டோவை அழைக்க.. எல்லாம் மட மட வென நடந்தது.

சொக்கலிங்கம் அண்ணன் ரெண்டு கேமெராவையும் கையில் எடுத்து கொள்ள ஆட்கள் அவரை, ஆட்டோவில் கிடத்தினார்கள். ஆட்டோவில் ஏறிய அண்ணன் எதோ நினைவில், நீங்களும் தம்பிய கூட்டிட்டு ஆஸ்பத்திரி வரை துணைக்கு வாரீங்களா? என அப்பாவை கேட்க...

அப்பா, அம்மாவுடன் ``நீ கடையில இரு" கொஞ்ச நேரத்துல வரோம்" என சொல்லி கிளம்பினோம்.

அப்பாவும் அண்ணனும் பின்புறம் வெள்ளைகாரரோடு வர, நான் ஆட்டோ டிரைவர் சீட் ஓரம் அமர்ந்தேன். நேராக தத்தனேரி ESI ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனோம்.

சொக்கலிங்கம் அண்ணன் வழிநெடுக, `நம்ம கடை வடையச் சாப்பிட்டுதான், எதோ ஆயிடுச்சு போல’னு ஒரே சோகமா புலம்பிட்டே இருந்தார். எனக்கு எதுவும் புரியவில்லை.

ஒரு வழியாக அட்மிட் செய்ய முன் வராண்டாவில் போய் இருக்க சொன்னார்கள். இந்த கலவரத்திலும் என் மனசு அண்ணன் கையில இருந்த கேமராவத்தான் ரசிச்சிட்டு இருந்துச்சு.
ஒரு மணி நேரம் இருக்கும். டாக்டர் கூப்பிட்டதாக நர்ஸ் அழைக்க, உள்ளே சென்றோம். வெள்ளைகாரர் படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்தார். கையில் க்ளுகோஸ் குழாய் சொருகி இருந்தது.

மசால் வடை
மசால் வடை

அவரை பார்த்ததும் தான் சொக்கலிங்கம் அண்ணனுக்கு உசுரு வந்துச்சு. நேரா ஓடி போய்.. ``நல்லா இருக்கீயளா சாமீ? பயந்துட்டோம்’’ - அண்ணன் சொன்னார்.

``அவருக்கு சக்கரை வியாதி இருக்கு. காலைலே ஒன்னும் சாப்பிடாம நடுவுல ரோட்டோரம் - `ஜிகிர்தண்டா’ குடிச்சு இருக்கார். வயித்துக்குச் சேரல. சக்கரையும் கீழ போக மயங்கிட்டார்’’ - டாக்டர் சொன்னார்.

டாக்டர் - வெள்ளைகாரரிடம் நாங்கள் தான் அட்மிட் செய்ததாக சொல்ல, அவர் எங்களை அருகே வரச்சொன்னார். கட்டிக் கொண்டார். அவர் கண்கள் கலங்கி இருந்தது.

அண்னன் அவரிடம் ரெண்டு கேமராவையும் நீட்டி, ``பத்திரமாக வெச்சு இருந்தேன் ஐயா" என்று சொன்னார். வெள்ளைக்காரர் வாங்கி கொண்டார். பின் அவர் ஒரு நூறு ருபாய் நோட்டை எடுத்து சொக்கலிங்கம் அண்ணனிடம் நீட்டினார். அண்ணன் வேகமா மறுத்து,``ஐயோ..அதெல்லாம் வேண்டாம் சாமி" என்றார்.

வெள்ளைகாரர் என்ன நினைத்தாரோ, டாக்டரை அருகே அழைத்து கேமராவை கையில் கொடுத்து எப்படி படம் எடுப்பது என்று சொல்லிக் கொடுத்தார்.

பின் எங்கள் இருவரையும் அருகே அழைக்க, நாங்கள் சென்றோம். டாக்டர் எங்கள் மூவரையும் இரண்டு முறை படம் எடுத்தார். வெள்ளைக்காரர் ஒரு போட்டோவை சொக்கலிங்கம் அண்ணனிடம் நீட்ட 'அவருக்கு கண்ணில் நீர் கட்டியது. வாங்கி கொண்டு,``எங்க இருந்தாலும் நல்லா இருங்க சாமி" என கூறினார். ஒரு வழியாக எல்லாம் முடிந்து கிளம்ப, அவர் கையசைத்தார். நாங்கள் கிளம்பினோம்.

Representational Image
Representational Image

வந்த ஆட்டோவிலேயே கடை திரும்பி, அம்மாவை கூட்டிக்கொண்டு வீடு சேர்ந்தோம். இது நடந்து முப்பது வருடம் ஆகி விட்டது. இப்பவும் மனசோட தங்கி விட்டது.

நினைவில் மீண்டு, ஸ்கூட்டரை சொக்கலிங்கம் அண்ணன் கடை நோக்கி செலுத்தினேன். புதிய கட்டடங்களும், குடியிருப்புகளுமாக நிறைய மாறி விட்டதால் கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஒரு வழியாகக் கண்டுபிடித்து வந்து சேர ஏமாற்றமாக இருந்தது. அங்கு, அவர் கடைக்கு பதில் அங்கு ஒரு கான்கிரீட் கட்டடம் இருந்தது. அருகே கேட்டு விசாரித்தேன். கான்கிரீட் கட்டடத்தைக் காட்டினார்கள்.

வண்டியை நிறுத்தி கதவை தட்ட, ஒரு பதினைந்து வயது பையன் திறந்தான். யாருன்னா வேணும்?! ..."சொக்கலிங்கம் அண்னன்?"
தாத்தாவா?!... தூங்கறாரு..! இருங்க எழுந்துட்டாரானு பார்க்கறேன். உங்க பேருனா?.. `கதிர்...!’ மெதுவாகச் சொன்னேன்.

உள்ளே இருந்து யாரோ ஒருவர் வேட்டியை சரி செய்து தொண்டையை கனைத்து கொண்டே வந்தார்?

`யார் சிவகுமார் அங்க?’

`அப்பா, தாத்தாவ கேட்டு ஒரு அண்ணன் வந்து இருக்கார்..!’

வந்தவரைப் பார்த்தவுடனே புரிந்தது. பெரிய பையன் - முத்துக்குமார். என்னைவிட ஐந்து வயது மூத்தவர். கொஞ்சம் நரைத்து தொப்பை போட்டு நடுத்தர மனிதராக இருந்தார்.

பார்த்து நாளாகி விட்டதால் அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.. நீங்க..?

``நான் தாமோதரன் வாத்தியார் மகன் ...கதிர்.’’

’’அட..நம்ம கதிரு..எப்படி தம்பி இருக்கீங்க?’’ கைகுலுக்கி சிரித்தார்..

சேரில் உக்கார சொல்லிவிட்டு, "அப்பாவை எப்போவாவது பார்க்கும் போது விசாரிப்பேன்."

``இன்னும் அமெரிக்காவுல தான் இருக்கீங்களா தம்பி?! ’’

``ஆமாங்க.’’

குடும்பம்..அப்பா அம்மா விசாரித்தார்..!

``இருங்க..அப்பா எழுந்துட்டார்..வரச் சொல்றேன். பேசிட்டு இருங்க. நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன்.’’

Representational Image
Representational Image

அவர் உள்ளே செல்ல.. குமார் சம்சாரம் வந்து வணக்கம் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

சேரில் அமர்ந்து சுற்றும் பார்த்தேன். அண்ணனின் பழைய கருப்பு வெள்ளை குடும்பப் புகைப்படங்கள், மகன்களின் பால்ய கால படங்கள், சுவாமி படங்கள் சுவர் எங்கும் அங்கங்கே நிறைந்து இருந்தது. சுவரின் மேல் கூரை ஓரம் நூலாம்படை படிந்து இருக்க.. அப்போது தான் அதை கவனித்தேன்.

30 வருடம் முன்பு நாங்கள் ESI ஆஸ்பத்தியில் வெள்ளைக்காரருடன் எடுத்த புகைப்படமும் ஒரு ஓரம் மாட்டி இருந்தது. இத்தனை நேரம் அதையே நினைத்து வர , போட்டோ பார்த்த ஆர்வத்தில் எழுந்து அருகே சென்றேன். அண்ணனும், நானும், அந்த வெள்ளைக்காரரும் சிரித்து நிற்க, என் முகமெங்கும் வெட்கம் பரவி இருப்பது கண்டேன்.

என் பால்ய புகைப்படமும் அந்த பழைய நிகழ்வும் ஒரு சில நொடிகள் வியப்பில் ஆழ்த்த, மனசு எங்கேயோ ஆணி அடித்தது போல் நகர மறுத்தது. பழைய தகரப் பெட்டிக்குள் அடைப்பட்ட ஆடையை நுகர்ந்தது போன்று ஒரு உணர்வு. அப்படியே நின்று விட்டேன். சில நிமிடம் இருக்கும். சொக்கலிங்கம் அண்ணன் மெதுவாக நடந்து வந்தார்.

’’கதிரு..! வா..வா..! குமாரு சொல்லிச்சு நீ வந்து இருக்கேனு. பாத்து எத்தனை வருஷம் ஆச்சு கண்ணு.!’’

முன் வழுக்கை நிறைய விழுந்து..கொஞ்சம் இளைத்து இருந்தார்.. எப்படியும் 75 வயது இருக்கும். நெற்றியில் அதே விபூதி பட்டை.

நான் போட்டோவிலிருந்து திரும்பி சிரிக்க.. அண்னன் நான் அந்த போட்டோவைப் பார்ப்பதைக் கண்டுவிட்டார்.

Representational Image
Representational Image

``ஓ...நம்ம பழைய போட்டோவ பார்த்திட்டு இருக்கியா?! வாய் விட்டு சிரித்தார்...! சரி...உக்காரு கதிரு..! ’’

``கடைசியா இருபது வருஷம் முன்ன உங்க அக்கா கல்யாணத்தில பார்த்த ஞாபகம்..சரியா?’’ சிரித்தார்.

மெலிதாகப் புன்னகைத்தேன்..!

மெதுவாக எல்லா விசாரிப்பும் முடிந்து. ``அக்கா எப்படி இருக்காங்க? டீக்கடை என்ன ஆச்சு அண்ணா?’’ கேட்டேன். என்னை நேராகப் பார்த்தார். ``கடைய மூடி எட்டு வருஷம் ஆச்சு கதிரு’’ அவர் பேச்சு பலவீனமா இருந்தது.

"இடையில அக்காவுக்கு உடம்புக்கு சொகமில்லாம படுத்து ஏழு வருஷம் முன்ன தவறிட்டா. தினம் புகையிலேயே இருந்து.. இருந்து ஒரே இருமல்..எழப்பு... ஆஸ்பத்திரி மருந்துனே பாதி வருஷம் போச்சு. கடைசில ஒரு நாள் தூக்கத்துலேயே எல்லாம் முடிஞ்சு போச்சு. அதுக்கு பிறகு கடை எனக்கு நடத்த மனசு இல்லை கதிரு.’’ சொல்லிவிட்டு அமைதியானார்.

நரைத்த தாடியை நீவி விட்டு.. விட்டத்தை எங்கேயோ வெறித்து பார்த்தார்.

நான் ஒன்னும் பேசாமல்... அமைதியாக இருந்தேன். வீட்டுக்கு வெளியே நாய் குரைத்தது. ஏதேதோ வண்டிகள் போகும் சப்தம் கேட்டது. அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை. மகன்களை பற்றி கேட்டேன்.

``பெரியவன் குமாருக்கு கோச்சடையில சொந்தமா லேத்து பட்டறை இருக்கு. ஒரே பையன். சின்னவனுக்கு கல்யாணம் முடிஞ்சுது. சம்சாரம் பழனி - ஒட்டன்சத்திரம் பக்கம். அவன் அங்கேயே காய்கறி கமிஷன் மண்டி சொந்தமா நடத்துறான். மாசம் 2 தடவ வந்து போவான். நமக்கு மதுரையை விட்டா வேறே என்ன தெரியும் கண்ணு? அதான் கடை இருந்த எடத்துல வீடு கட்டி பெரியவன் கூடவே இருந்துட்டேன்’’. சொல்லிவிட்டு லேசாகச் சிரித்தார்.

அவரின் இளைத்த குரலில், அக்கா இல்லாத வாழ்க்கையின் வெறுமை எதோ ஒரு மூலையில் பற்றி இருப்பது அப்பட்டமாக தெரிந்தது.

பிறகு அண்ணன் லேசாக இருமி விட்டு, ``அட..நா வேற எத எதையோ பேசிட்டு..’’

``சரி என்ன சாப்பிடற கதிர்..? கிருஷ்ணவேணி ..!’’ மருமகளை அழைத்தார்.!

``தம்பிக்கு சாப்பிட பலகாரம் கொண்டுவாம்மா..!"

இல்லனா..."சாப்பிட்டு தான் கிளம்பினேன்.’’

"அட இரு கதிரு..ஏதா சாப்பிட்டு தான் போகணும்."

அதற்குள் அவர் ஒரு தட்டில் கார பூந்தி, இன்னொரு தட்டில் பருப்பு வடை கொண்டு வந்து வைத்தார். கூடவே டீயும் வந்தது.

``சாப்பிடு கண்ணு..!’’

Representational Image
Representational Image
Pixabay

டீயை கொஞ்சம் குடித்துவிட்டு வடையை கையில் எடுத்தேன்.

அவர் எதுவும் சாப்பிடாமல் சுவரில் இருந்த எங்கள் புகைப்படத்தை பார்த்தவாறு இருந்தவர். என் கையில் வடையை பார்த்ததும் தீடீரென சிறு பதற்றதுடன், "கதிரு.. ஒரு நிமிஷம். இத்தனை வருஷம் வெளிநாட்டுலேயே இருக்க. உனக்கு வடை சாப்பிட்டா உடம்புக்கு ஒண்ணும் செய்யாது இல்ல கண்ணு?’’ எனக் கேட்டார்.

அந்த ஒரு நொடி..சொக்கலிங்கம் அண்ணன் கண்ணில், முப்பது வருடம் முன்பு கண்ட வெள்ளைகாரரும், ESI ஆஸ்பத்திரியும் மின்னல் வேகத்தில் வந்து போனதைக் கண்கூடாக கண்டேன்.

’’அப்படி ஒன்னும் இல்லைனா..!’’ சிரித்தேன். அவரும் சிரித்தார்.

சொன்னேனே தவிர.. ஒரு இனம் புரியா பயத்தோடு, என் முதல் கடி வடையில் இறங்கியது.

-மாணிக்கம் விஜயபானு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/