Published:Updated:

மாடியில ஹெலிகாப்டர் நிக்குதுடா! - நண்பனால் அம்மாவிடம் அடி வாங்கிய அந்தத் தருணம் #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan Team )

அந்த நாட்களில், ஹெலிகாப்டரில் இருந்து உணவுப் பொட்டலங்களை வீசுவார்கள், கையை ஆட்டினால் மேலிருந்து ஏதாவது போடுவார்கள் போன்ற வதந்தி கிராமங்களில் மிகப் பிரபலம்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நம்முடைய வாழ்நாளில் பல நிகழ்வுகளை நாம் கடந்து வந்திருப்போம். ஒரு சில நிகழ்வுகள் நம் மனத்தில் பசுமரத்தாணி (பச்சை மரத்தில் ஆணி அடித்தால் அது எவ்வளவு ஆழமாகப் பதியுமோ அது போல) போல பதிந்துவிடும். அது நல்ல அல்லது கெட்ட நிகழ்வாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நம்மால் அதை நாம் மறையும் வரை மறக்க முடியாது. அன்று அவமானகரமானதாக வருத்தப்படவைத்த பல நிகழ்வுகளை இன்று நினைத்துப் பார்த்தீர்களானால், இதற்காகவா வருத்தப்பட்டோம் என்று தோன்றும், அதை நினைத்து நிச்சயமாக உங்கள் உதடுகளில் புன்னகை அரும்பும்.

Representational Image
Representational Image

காலம் அனைத்தையும் மாற்றும். மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள், அவருடைய ஒரு நாவலில் இவ்வாறு எழுதியிருப்பார். “இன்று உன்னை வருத்தப்பட வைத்த விஷயம் எதுவோ, அதுவே 10 நாட்கள் கழித்து நகைச்சுவையான விஷயமாகத் தோன்றும்…” என்பது முற்றிலும் என்னுடைய அனுபவத்தில் நான் அறிந்துகொண்ட உண்மை.

உண்மை இல்லாத விஷயங்களை உண்மை போல சொல்பவர்களை "புருடா மன்னன் அல்லது கப்ஸா மன்னன் " என்று சொல்வார்கள். அதுபோன்ற ஒருவர் சம்பந்தப்பட்ட நிகழ்வே இது.

என்னுடைய சிறு வயதில், மிக மிக அரிதாக எங்கள் கிராமத்தின் மேலே ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறக்கும். அதைப் பார்க்கும் மகிழ்ச்சியுடன் வேறெதையும் ஒப்பிட முடியாது. நாங்களும் அதைப் பார்த்துக்கொண்டே சில அடி தூரம் மகிழ்ச்சியுடன் ஓடுவோம். ஏதோ, நாங்களே அந்த ஹெலிகாப்டரில் செல்வது போல ஒரு பெருமிதம். அதைப் பார்க்கும்போதே எங்களுக்கு ஏற்படும்.

Representational Image
Representational Image

அந்நாட்களில் ஹெலிகாப்டரில் இருந்து உணவுப் பொட்டலங்கள் வீசுவார்கள், கையை ஆட்டினால் மேலிருந்து ஏதாவது போடுவார்கள் போன்ற வதந்தி கிராமங்களில் மிகப் பிரபலம். நாங்களும் அதை உண்மை என்று நம்பி, இதுபோன்ற சமயங்களில் ஹெலிகாப்டரை நோக்கி கையைத் தவறாமல் ஆட்டுவோம். ஆனால், ஒருமுறை கூட எதுவும் கீழே விழுந்ததில்லை. அது உண்மையல்ல என்பது எங்களுக்குப் புரிய சில வருடங்கள் ஆனது.

உங்களுடைய ஆறு அல்லது ஏழு வயதில் யாராவது உங்களிடம் வந்து என் வீட்டு மாடியில் ஹெலிகாப்டர் (Helicopter) நின்று கொண்டிருக்கிறது, நீங்கள் உடனே வந்தால் பார்க்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா... நாங்கள் நம்பினோம், இது சுமார் 35 வருடங்களுக்கு முன்பு என் அண்ணாவின் பள்ளித்தோழன் எங்களிடம் அவ்வாறு சொல்லி, உடனே வந்தால் பார்க்கலாம் இல்லையென்றால் அது சென்றுவிடும் என்று சொன்னான்.

அவனுடைய பெரியப்பா ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றவர். அவருடைய வீட்டை பட்டாளத்தார் வீடு என்று சொல்வார்கள். அவன் சொன்னது உண்மை என்று நம்புவதற்கு இந்த ஒரு காரணமே எங்களுக்குப் போதுமானதாய் இருந்தது.

அன்றைய காலகட்டத்தில், ஹெலிகாப்டரின் கனபரிமாணம் (Dimension) பற்றிய போதிய கணித அறிவு இல்லாத காரணத்தால், ஒரு ஹெலிகாப்டரை வீட்டின் மாடியில் எப்படி நிறுத்திவைக்க முடியும்? என்ற கேள்வி எங்களுக்குள் எழவேயில்லை.

Representational Image
Representational Image

அதனால் அந்த நண்பனின் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்துவிடுவது என்று முடிவாயிற்று. ஒருவேளை அங்கு ஹெலிகாப்டர் (Helicopter) இருந்தால் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமே என்ற நப்பாசையும் ஒரு காரணம்.

அவனுடைய வீடு எங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவு (2 அல்லது 3 நிமிட தூரம்தான்). அந்நாட்களில் எங்களை எங்கள் அம்மா வெளியில் எங்கும் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். எங்கள் வீட்டின் அருகிலேயே உள்ள பள்ளி மைதானத்திற்கு சென்று விளையாட மட்டுமே அனுமதி உண்டு. அதனால் நாங்கள் எங்கள் அம்மாவிடம் பள்ளி மைதானத்திற்கு விளையாடப் போவதாகச் சொல்லிவிட்டு அந்த நண்பனின் வீட்டுக்குச் சென்றோம்.

அங்கு சென்றதும், உடனடியாக எங்களை ஹெலிகாப்டரை பார்க்க அழைத்து செல்லாமல் எங்களுடன் பேசியே காலம் தாழ்த்திக் கொண்டிருந்தான். நாங்கள் பொறுமை இழந்து கேட்டவுடன் மாடியில்தான் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்றும் மேலே சென்றால் பார்க்கலாம் என்றும் சொன்னான். நாங்கள் கீழிருந்து பார்க்க முயன்றோம். ஆனால் ஒன்றும் தெரியவில்லை.

இருந்தாலும், இவ்வளவு தூரம் வந்த பிறகு எதற்கும் ஒரு தடவை மேலே சென்று பார்த்துவிடுவது என்று முடிவுசெய்தோம்.

Representational Image
Representational Image

அவனுடைய பெரியப்பா வீட்டின் மாடிக்குச் செல்வதற்கு படிகள் உண்டு. ஆனால், பக்க கைப்பிடிச் சுவர் கிடையாது. நாங்களும் ஹெலிகாப்டர் (Helicopter) பார்க்கும் ஆவலில் நான்கு கால்களால் தவழ்ந்து மாடிக்கு ஏறி சென்றுவிட்டோம். மேலே சென்று பார்த்தால் அங்கு ஹெலிகாப்டர் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை.

எங்கடா ஹெலிகாப்டரை காணோம் என்ற கேள்வியுடன் அந்த நண்பனை திரும்பிப் பார்க்க, அவன் சொன்ன பதில்தான் இங்கு பெரிய ஹைலைட்டான (Highlight) விஷயம்.

"நீங்க வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அதனால பைலட் ஹெலிகாப்டரை எடுத்துக்கிட்டு போயிட்டார்னு நினைக்கிறன்…”

"அதனாலதான் நான் உங்கள சீக்கிரம் வரச் சொன்னேன். நீங்கதான் லேட் பண்ணிட்டீங்க. அடுத்த தடவை வரும்போது நான் சொல்லி கட்டாயமா நிறுத்திவைக்கிறேன் சரியா ... " என்றானே பாருங்கள்.

அதைக் கேட்டு பெருத்த ஏமாற்றத்துடன் நாங்கள் நின்று கொண்டிருந்தபோதுதான், நாங்கள் வீட்டிலிருந்து வந்து வெகு நேரம் ஆனது எங்களுக்கு உரைக்க, பதறிப்போய் "அய்யயோ அம்மா தேடுவாங்களே... அவங்களுக்கு இங்க வந்தது தெரியறதுக்குள்ள திரும்பி வீட்டுக்குப் போய்டலாம்னு..." அவசர அவசரமாக மாடிப் படிக்கட்டிற்கு வந்து கீழே பார்க்கிறோம்... கையில் குச்சியுடன் அம்மா.

எங்களை நீண்ட நேரமாகத் தேடி, இறுதியாக அந்த நண்பனின் வீட்டுக்கே வந்து எங்களுக்கு நன்றாக பூசை போட்டு, வீட்டுக்கு எங்கள் அம்மா அழைத்துச் சென்றது இன்றும் நினைவிருக்கிறது. எங்கள் அம்மா எங்களை அடித்தது அதுவே முதலும் கடைசியும் என்று நினைக்கிறேன். அதற்கான முழு முதற் காரணம், அந்த நண்பனின் பேச்சை உண்மை என்று நம்பி, ஹெலிகாப்டர் பார்க்கும் ஆவலில் எங்கள் அம்மாவிடம் பொய் சொல்லியதே.

Representational Image
Representational Image

இங்கு எங்களால் ஹெலிகாப்டரை பார்க்க முடியாததோ அம்மாவிடம் அடி வாங்கியதோ முக்கியமல்ல, அந்த வயதில் இப்படி ஒரு விஷயத்தை அதீத கற்பனைத் திறனுடன் உண்மை போல சொல்லி எங்களை நம்பவைத்த அந்த நண்பனுடைய கற்பனைத் திறமையை நினைத்தால், எனக்கு இன்றும் வியப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. பிற்காலத்தில் சட்டம் படித்து அவர் ஒரு வழக்கறிஞர் ஆனது வேறு விஷயம்.

அன்று ஏமாற்றத்துடன் எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய அந்த நிகழ்வை எப்பொழுது நினைத்தாலும் என் உதடுகளில் புன்னகை அரும்பும்.

-ஆனந்தகுமார் முத்துசாமி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு