Published:Updated:

`அவர் முட்டைகோஸ் நறுக்கினாக் கூட அழகியல்தான்!’ - மகன் பகிரும் அப்பா புராணம் #MyVikatan

அப்பா பிரட் ஸ்லைசுகளை நெய்யில் சுட்டு, அதில் ஒருபக்கம் வெண்ணெய், மறுபக்கம் ஜாம் தடவி சுடச்சுட காலை உணவுக்களிப்பார். அமிர்தம் போல் இருக்கும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

எங்கள் குடும்பத்தில் சமையறையிலோ மற்ற வீட்டு வேலைகளிலோ ஆண்கள் பெண்களுக்கு உதவி செய்வது என்பது பொதுவாகக் காணப்படுவது என்பதால் அதை அதிசயமாகக் கருதியதில்லை. நண்பர்கள் வீடுகளில் அவர்கள் அப்பாக்கள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தண்ணீருக்கும், காபிக்கும் மனைவியரை "ஏண்டி" என்று ஏவுவதைக் கேட்டபின்தான், எங்கள் வீட்டில் காண்பது அவ்வளவு இயல்பான விஷயம் இல்லை என்பதை உணர்ந்தேன்.

Representational Image
Representational Image
Craig Whitehead on Unsplash

அதன் தனித்துவம் மற்றும் மகத்துவம் புரிய நீண்ட வருடங்கள் ஆயின. அப்பாவின் தினசரி அலுவல் காய்கறி நறுக்கி கொடுப்பது. அவர் குளித்துவிட்டு ஸஹாஸ்ரநாமம், கந்தசஷ்டி கவசம் என்று ஏதோவொரு சுலோகத்தை உரக்கச் சொல்லிக் கொண்டு முட்டைகோஸ் நறுக்கும் விதம் சிறப்பாக இருக்கும். இதழ்களைத் தனித்தனியாகப் பிரித்து தண்டு வடத்தை நீக்கி, இரண்டு மூன்று இதழ்களை அடுக்கி, நான்காக மடக்கி ஒரு சமையல் கலைஞனின் லாகவத்தோடு சரக், சரக் என்று அநாயசமாக நறுக்குவார்.

மெல்லிசான வளையங்களில் ஒரு பூக்குவியல் போல் விழும். நறுக்கிக் குவித்த பின் மேடை துடைத்து சுத்தமாக, நறுக்கிய தடயமே தெரியாமல் வைப்பார். நான் அவரைப்போல் முயற்சி செய்தால் கீழேயும் மேலேயும் இறைத்து விடுவேன்.

வீட்டில் வெங்காயம், பூண்டு இவற்றை அதிகம் சேர்ப்பதில்லை என்பதால் அவற்றின் மேல் ஆசை வந்தால், அப்பா களம் இறங்குவார். அவர் வைக்கும் வெங்காய சாம்பார் பிரசித்தம். மாதவிடாய் நாள்கள் வந்தால் அம்மாவுக்கு முழு ஓய்வுதான். அறியாத வயது எங்களுக்கு. அப்பா புதிது புதிதாய் சமைத்து தருவார் என்பதால் அந்த மூன்று நாள்களும் எங்களுக்கு ஒரே குஷி.

Representational Image
Representational Image
Aaron Thomas on Unsplash

"பிரட் என்பது வியாதிக்காரன் சாப்பிடுவதற்கில்லை. இங்கிலீஷ்காரன் தினம் உண்கிறான். நம்மூரில் காய்ச்சல் வந்தால் சாப்பிடும் உணவாக ஆக்கிவிட்டார்கள்'' என்று கிண்டல் செய்யும் அப்பா, பிரட் ஸ்லைஸ்களை நெய்யில் சுட்டு, அதில் ஒருபக்கம் வெண்ணெய் மறுபக்கம் ஜாம் தடவி காலையில் சுடச்சுட சாப்பிடத் தருவார். அது அப்படியே அமிர்தம் போல் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளிக்கு எடுத்துச் செல்ல சின்னச் சின்ன தோசைகளைப் பல வடிவங்களில் வார்த்து தருவார். மதிய உணவு வேளையில் தோசை அட்டை போல வறண்டு இருந்தாலும், பல்வேறு வடிவங்களில் இருக்கும் அவற்றை உண்பதில் ஒரு ஆனந்தம். சிறு கிண்ணிகளில் தயிர் தோய்த்து, அதே கிண்ணத்தை மூடி கொடுத்திருப்பார். அதைக் கவிழ்த்தால் அது வடிவம் மாறாமல் தளும்பி நிற்கும். அதைப் பார்த்து நண்பர்கள் கொஞ்சம் பொறாமைப் படுவதுபோல் தோன்றும்.

Representational Image
Representational Image
Ash Edmonds on Unsplash

வெஜிடபிள் பிரியாணி செய்வதில் அவரை மிஞ்ச முடியாது. "சாதம் ஒட்டக் கூடாது. வட நாட்டில் பாசுமதியில் பிரியாணி செய்வார்கள். அது நமக்கு ஒத்துக்கொள்வதில்லை. அதனால் நம் அரிசியைக் கொஞ்சம் குறைவாக, விரை விரையாக வேக வைக்க வேண்டும்" என்பார். பிரியாணியில் பிரட் துண்டுகளை நெய்யில் பொரித்து சேர்ப்பார். இதெல்லாம் அப்போது எங்களுக்கு நவீனமான விஷயங்கள். ஒவ்வொன்றுக்கும் அதற்கான விளக்கங்கள் சொல்வது அவ்வளவு அழகாக இருக்கும்.

அப்பா மீதான பயம் மரியாதையாக மாறிய அந்தத் தருணம்..! - மகனின் குட்டி ஸ்டோரி #MyVikatan

வெஜிடபிள் கட்லெட், மஞ்சூரியன், மொச்சை கொட்டை சுண்டல் என்று வித விதமாய் சமைப்பார். அவருடைய புதிய பரிசோதனைகள் எதுவும் சோடை போகாது. டீ போடுவதில் பல விதிகளைக் கூறுவார். டீத்தூள், பால், சக்கரை மூன்றும் சேர்த்து கொதிக்க வைக்கக் கூடாது. டிகாக்ஷன் தனியாக தயாரானபின், சூடான பாலை கலந்து ஆற்றி சாப்பிடவேண்டும்.

Representational Image
Representational Image
Pixabay

பொதுவாகப் பாத்திரங்களை சமையல் செய்யும்போதே அவ்வப்போது அப்பா அலம்பிவிடுவார். இந்த விதத்தில் அம்மாக்கள் கொஞ்சம் மோசம் என்பது என் அபிப்ராயம்.

அப்பாவை நினைத்தாலே தண்ணீர் கஷ்டம் ஞாபகத்துக்கு வந்து விடும். தண்ணியில்லாக் காடுகளில் வேலை செய்ததால், கஷ்டப் பட்டு தண்ணீர் சேகரிக்க வேண்டும். அவர் இரு குடங்களை சைக்கிளின் மாட்டிக்கொண்டு, இரண்டு மைல் சென்று தண்ணீர் பிடித்து வந்திருக்கிறார். முனிசிபாலிடி தண்ணீர் பல நாள்களுக்கு ஒருமுறை வரும். அது எப்போது வரும் என்று குத்து மதிப்பாகத்தான் தெரியவரும். நள்ளிரவிலும் வரலாம், நடுப் பகலிலும் வரலாம். ஒரு வீதியே வழி மேல் விழி வைத்து காத்திருக்கும். வந்தவுடன் வரிசைப்படி ஒவ்வொரு வீடாக ஒரு குடம் அடித்து நிரப்பி எடுத்துச் செல்வார்கள்.

Representational Image
Representational Image
Unsplash

பக்கத்துக்கு வீட்டு நம்பியார், எதிர்த்த வீட்டு ஜோசப், மரக்கடை முஹம்மத் என்று எல்லா மதம், மொழி குடும்பங்கள் கலந்து பாரத விலாஸ் படம் போல் இருக்கும். நாங்கள் அனைவரும் அவ்வளவு ஒற்றுமையாக இருந்தோம். மேலும், பக்கத்து வீட்டில் முட்டை பஜ்ஜி செய்தால் சைவர்களான எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு அவர்கள் மறைத்துக் கொடுத்ததும், குழாய்ப்புட்டு, கோங்குரா தொகையல் என்று வேறு மாநிலத்து உணவு வகைகள் எங்களுக்கு சுவைத்துப் பார்க்க கிடைத்ததும். அனைத்து குடும்பத்தினருடன் மாதம் ஒரு முறை சினிமாக்கு போய் வந்ததும் மகத்தான அனுபவங்கள்.

இவை ஒரு ஏழைப்பட்ட அமைப்பில்தான் சாத்தியம் என்று நினைக்கிறேன்.

வாழ்க்கைத்தரம் உயர உயர தனிமனிதத்துவம் ஓங்கி, பகிர்தல் போய்விடுகிறது. அந்தரங்கம் (privacy) முக்கியமாகிவிடுகிறது என்பது என் அபிப்பிராயம். குடும்பப் பொறுப்பில் சரிவிகிதம் பங்கெடுத்து ஆண், பெண் என்று பார்க்காமல் உழைத்ததில் அப்பா ஒரு முன் உதாரணம்.

Representational Image
Representational Image
Unsplash

அவரைப் போல் என் சகோதரன் ஒருவன் வாசல் தெளித்து கோலம் போடும் அளவுக்கு சமத்துவச் சாம்பியனாக உள்ளான் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

இப்படி ஒரு முற்போக்கான குடும்பத்தில் பிறந்தாலும், அப்பாவைப் பார்த்து வளர்ந்திருந்தாலும், இப்போது வீட்டிற்கு வந்தவுடன் எப்படி உதவலாம் என்று நினைக்காமல், தொலைக்காட்சி பார்க்கத்தான் மனம் செல்கிறது. அந்த வகையில் அம்மாவுக்கு அமைந்ததுபோல என் அகமுடையவளுக்கு அதிர்ஷ்டமில்லை.

- சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, சான் ஹோஸே , அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு