Published:Updated:

`என் தாத்தா அந்தக் காலத்து ஆளா... இந்தக் காலத்து ஆளா?' - வாசகர் ஷேரிங்ஸ் #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan Team )

`எனக்குக் கொஞ்ச நாளாவே ஒரு சந்தேகம். தாத்தா அந்தக் காலத்து ஆளா? இல்ல, இந்தக் காலத்து மனிதரான்னு. அதை நிரூபிக்கிற மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு.’

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

என்னோட தாத்தாவைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. 'ஓ! உன்னைப் பற்றியே ஒண்ணும் தெரியாது தாத்தாவுக்குப் போயிட்டியா'ன்னுதானே கேக்கறீங்க?

நான் தமிழ் நாட்டின் கிராமத்தில வாழற ஒரு சராசரி இளைஞன். ப்ளஸ் டூ வரை படிச்சிட்டு, பாதி நாள் ஏதோ வேலைக்குப் போயிட்டு, மீதி நாளை நண்பர்களோட ஊர் சுத்திட்டு, அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிக்கிட்டு, செல்லுக்கு 'டாப் அப்'பண்ணக்கூட காசில்லாம கஷ்டப்படற ஒரு ஜீவன். தேர்தல் சமயத்தில ஏதோ கொஞ்சம் காசு பார்க்க முடிஞ்சுது. அதை வெச்சுத்தான் இன்னும் வண்டி ஓடிக்கிட்டு இருக்கு.

Representational Image
Representational Image
Pixabay

எப்படீன்னெல்லாம் கேட்டு மனசாட்சியை உசுப்பி விட்டுத் தூக்கத்தைக் கெடுத்திடாதீங்க. நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாதுங்கற கணக்குல இதையும் சேர்த்துக்கிடுங்களேன். பார்த்தீங்களா? தாத்தாவைப் பற்றிப் பேச வந்துட்டு, என்னைப் பற்றியே பேசிக்கிட்டிருக்கிறேன். எங்க தலைமுறையே இப்படித் தாங்க. பேசிப் பேசியே பொழுதைப் போக்கிடுறோம். தாத்தாதான் இந்தக் கதையோட நாயகன். அவரைப் பற்றிச் சொல்றேன். கேளுங்க.

எனக்குக் கொஞ்ச நாளாவே ஒரு சந்தேகம். தாத்தா அந்தக் காலத்து ஆளா, இல்ல இந்தக் காலத்து மனிதரான்னு. ஒரு சம்பவம் நடந்துச்சு. அதிலேருந்துதான் என் சந்தேகத்துக்கு விடையும் கெடைச்சிது.

தாத்தாவுக்கு 80 வயசுன்னு சொன்னா என்னோட நண்பர்களே நம்ப மாட்டேங்கறாங்க. "போடா... பொய் சொல்றே"அப்படிங்கறாங்க! ஏன்னா தாத்தோவோட நடவடிக்கை அப்படி. நேத்து தெருமுனையில ஒருத்தன் பைக்கில இருந்து கீழே விழுந்ததும், வாசல்ல நின்னுக்கிட்டிருந்த தாத்தா 'கில்லி' மாதிரி பாய்ஞ்சு போயி அவனைத் தூக்கி இருக்காரு. தெருவே இன்னும் அந்த ஆனந்த அதிர்ச்சியில இருந்து மீளலே. ஓடும்போதே '108' ஆம்புலன்சுக்குப் போன் பண்ணிக்கிட்டே ஓடியிருக்காரு.

'போன மாசம் எதிர்த்த வீட்டுப் பையன் குளத்தில தவறி விழுந்து, நீச்சல் தெரியாம தத்தளிச்சப்போ, தாத்தாதான் நீந்திப் போயி, அவனைக் கரைக்கு இழுத்துக்கிட்டு வந்திருக்காரு. அந்தப் பையனோட அம்மா தாத்தா கால்ல சாஷ்டாங்கமா விழுந்தவங்க, 5 நிமிடமாகியும் எழும்பல. 'என்னோட கண்கண்ட தெய்வம் நீங்கதா'ன்னு புலம்பறாங்க. தாத்தாவோ சர்வ சாதாரணமா, ``அட விடும்மா. ஒன் புள்ளயும் என்னோட பேரன்தாம்மா. இதுக்குப் போயி"ன்னு சொல்லிட்டுக் கெளம்பிட்டாரு.

Representational Image
Representational Image
Pixabay

தாத்தா கையில இருக்கிற செல்போன் எப்பொழுதும் சிணுங்கிக்கிட்டேதான் இருக்கும். மெசேஜ் வர்றதும் சிலதை அவர் 'ஃபார்வர்ட்' பண்றதும் நடந்துக்கிட்டே இருக்கும். சமயங்கள்ல என்னோட நண்பர்கள் சிலர், தங்கள் செல்போன் பங்க்‌ஷன்கள் சிலவற்றை அவரிடம் கேட்டுத்தான் பண்ணுவாங்க. அந்த அளவுக்கு அவருக்குச் 'செல்'ல பரிச்சயம். இதையெல்லாம் வெச்சுத்தான் நான் தாத்தா இந்தக் காலத்து ஆளுன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, அந்த எண்ணத்தில மண்ணைப் போடுற மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்துச்சு.

ராமு தாத்தா: `காசு இல்லைனாலும் உட்காரவைச்சு சோறு போடுவாரு!’ - மரணத்தால் கலங்கும் மதுரை

நாங்க இருக்கிறது நகரை விட்டு ரொம்பத் தள்ளி இருக்கிற ஒரு வளரும் ஏரியா. எங்க ஏரியாவுல 'பூங்கா'வுக்குன்னு ஒதுக்கப்பட்ட இடம் ரொம்ப நாளா காலியாவே கெடந்திச்சு. ஆனா சுத்தமா இருந்திச்சு. இப்ப கொஞ்ச நாளா வீடுகள் பெருக ஆரம்பிச்சதும், குப்பையை அங்க ஒருத்தர் ரெண்டு பேருன்னு போட ஆரம்பிச்சு, அப்புறம் எல்லோரும் அந்த இடத்தைக் குப்பைக் காடா ஆக்கிட்டாங்க.

Representational Image
Representational Image
Pixabay

தாத்தா தன்னோட சைக்கிள்ல கவுன்சிலர், பஞ்சாயத்துத் தலைவர்னு ஆரம்பிச்சு, கலெக்டர் வரைக்கும் மனுக் கொடுத்தார். அந்த இடத்தில் பூங்கா ஏற்படுத்தச் சொல்லி! முதல்ல யோசிச்ச மாவட்ட நிர்வாகம், தாத்தாவோட தளராத அணுகுமுறையைப் புறக்கணிக்க முடியாம கொஞ்சம் எறங்கி வந்திச்சு.

இந்த நேரத்ல தாத்தாவோட ராசியோ என்னமோ, அந்தப் புது கலெக்டர் அம்மா மாறுதலாகி வந்தாங்க. அவங்க பதவியேற்க வந்த அன்னிக்கே தாத்தா சைக்கிள்ல போறதைக் கவனிச்சிருக்காங்க. அடுத்த குறைதீர் கூட்டத்ல தாத்தா பூங்கா கேட்டு மனு கொடுத்தப்போ, அவங்களே தாத்தாவைக் கூப்பிட்டுப் பேசியிருக்காங்க. தாத்தா 40 கிலோமீட்டர் தூரம் சைக்கிள்ல வந்தார்ங்கிறதைக் கேள்விப்பட்டதும் அவங்க கண்களே கலங்கிடுச்சாம். உடனேயே உத்தரவு போட்டாங்களாம் பூங்கா ஆரம்பிக்க.

கலெக்டர் உத்தரவு என்றால் சும்மாவா? வேலைகள் மளமளவென்று நடந்துச்சு. முள் வேலிகள் போடப்பட்டன. உள்ளே மேடு பள்ளங்கள் நிரவப்பட்டன. சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருள்கள் இறக்கப்பட்டு, உரிய முறையில் நிறுவப்பட்டன. ஆங்காங்கே மரக் கன்றுகள் நடப் பட்டன. ஒரு நல்ல நாளில் கலெக்டரே வந்து பூங்காவைத் திறந்து வைத்தார். கலெக்டர் பேசும்போது தாத்தாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். தாத்தாவைப் பாராட்டியதும் எனக்கே தலை, கால் புரியவில்லை. ஆனால், தாத்தா அதற்காக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை.

Representational Image
Representational Image
Pixabay

பூங்காவின் திறப்பு விழாவுக்குப் பிறகு, தாத்தாவின் பெயர் அந்த ஏரியாவில் பிரபலமாயிற்று. சுற்றுப் புறத்திலுள்ளவர்கள் தினமும் பூங்காவுக்கு வர ஆரம்பித்தார்கள். சனி, ஞாயிறென்றால் கூட்டம் அலை மோதியது. சில திடீர்க் கடைகளும் தோன்ற ஆரம்பித்தன. செடியை வைத்தவர்கள் தண்ணீர் ஊற்ற ஆள் போடவில்லை. பஞ்சாயத்தில் தாத்தா போய்க் கேட்டபோது 'பணப் பற்றாக்குறை' என்றார்கள்.

விஷயம் அறிந்த சிலர் தாத்தாவை உசுப்பிவிட்டார்கள். ``நீங்க நேராப் போயி கலெக்டரம்மாவைப் பார்த்தா, அவங்க ஏதாவது ஏற்பாடு பண்ணுவாங்க" என்றார்கள். ஆனால், தாத்தாவுக்கு அதில் விருப்பமில்லை. எவ்வளவு பிரச்னைகளுக்கு இடையே கலெக்டர் பூங்கா திறக்க ஏற்பாடு செய்தார்கள் என்பதை அவர் அறிவார். எனவே, எக்காரணங்கொண்டும் அவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று மனதில் சங்கல்பம் செய்துகொண்டார். அதே சமயம் அந்த மரக்கன்றுகளும் வாடக் கூடாது. சிந்தித்தார்.

Representational Image
Representational Image
Pixabay

இரண்டு எண்ணை டின்களை வாங்கி நீளக்கம்பில்கட்டி தோள்களில் சுமந்து, தன் வீட்டுக் கிணற்றிலிருந்து நீர் எடுத்துக் கொண்டு போய் அந்தக் கன்றுகளுக்கு ஊற்ற ஆரம்பித்தார். காய்ந்து... சோர்ந்து... பூமி பார்த்துக் கிடந்த செடிகளெல்லாம், சில நாள்களில் நன்றியுடன் தாத்தாவின் முகம் பார்க்க நிமிர்ந்தன.

தாத்தாவுக்கோ அளவு கடந்த சந்தோஷம். இரண்டு மூன்று மாதங்கள் ஓடி விட்டன. பூங்கா பசுமையைத் தழுவிக்கொண்டது. இதற்குள் என்னுடைய நண்பன் ஒருவன், பஞ்சாயத்து அலுவலகத்திலேயே ஒரு வேலையை வாங்கிக் கொண்டான். அன்று அவன் சொன்ன செய்திதான் என்னை உலுக்கிப் போட்டது.

Representational Image
Representational Image
Pixabay

தாத்தா, வயதான காலத்தில் தன் ரத்தத்தைச் சிந்தித் தண்ணீர் ஊற்ற, அந்த வார்டு கவுன்சிலரோ தன் ஆட்கள் தண்ணீர் ஊற்றியதாகக் கணக்கெழுதிப் பணம் பார்த்துக் கொண்டுள்ளார். எனக்கு ரத்தமெல்லாம் கொதிக்க ஆரம்பித்தது. அந்தக் கவுன்சிலரை உண்டு இல்லை என்று ஆக்க வேண்டுமென்ற ஆவேசம் என்னுள்ளே எழுந்தது. முதலில் தாத்தாவுக்கு விஷயத்தைச் சொல்ல வேண்டுமென்று, பூங்காவில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த தாத்தாவைத் தேடிப் போய் விஷயத்தைச் சொன்னேன். தாத்தா வெடிப்பார் என்று எதிர்பார்த்த என்னை அதிர்ச்சிக் கடலில் ஆழ்த்தினார் அவர்.

``அப்படியா! நான் தண்ணீர் ஊத்துனது மரங்களுக்கு. அவை வளர்வதற்கு. ஆண்டவன் புண்ணியத்தில அவையெல்லாம் நல்லா வளர்ந்திடுச்சு. இனிமே பொழைச்சுக்கிடும். என்னோட உழைப்புக்குப் பலன் கெடைச்சிடுச்சு. இப்ப நீ சொல்றதைக் கேட்டா இன்னொரு பலனும் இருக்குங்கறே. இதே ஒழைப்பில இன்னொரு குடும்பமும் வாழுதுன்னா... எனக்கு ரெட்டைச் சந்தோஷம்தான். அவங்கல்லாம் நல்லா இருக்கட்டும். என்னோட ஒழைப்புக்கு ஆண்டவன் ரெட்டை பலன் கொடுத்துட்டான்!"

இப்பொழுது சொல்லுங்கள். தாத்தா அந்தக் காலத்து ஆளுதானே.

கவுன்சிலர்தானே இந்தக் காலத்து மனிதர்!

- ரெ.ஆத்மநாதன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு