Published:Updated:

ஒரு இந்தி காதல்! - வாசகர் பகிர்வு #MyVikatan

முதல் காதல் போலவே முதல் வேலையின் நினைவுகளும் நெஞ்சைவிட்டு நீங்காமல் என்றென்றும் நிலைத்திருக்கும்.

Representational Image
Representational Image ( Pixabay )

இந்த நேரத்தில் அவள் புத்தகம் படித்துக்கொண்டோ, டிவியை மாற்றிக்கொண்டோ, அவள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டோ, அவள் கணவனின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டோ இருக்கலாம். ஆனால், எனது வாழ்க்கையின் சுவை இனிப்பாகியது அவளது வருகைக்குப் பிறகுதான். முதல் காதல் போலவே முதல் வேலையின் நினைவுகளும் நெஞ்சைவிட்டு நீங்காமல் என்றென்றும் நிலைத்திருக்கும்.

Representational Image
Representational Image

அந்த நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. எனது எதிரிலேயே ஒரு இளம்பெண் வந்து உட்கார்ந்தாள். அவளது முகம் எனக்குப் பிடித்த இந்தி நடிகை ஆஷா பரேக்கின் முகத்தை ஒத்திருந்தது. நீண்ட நேரம் எனது எதிரிலேயே உட்கார்ந்திருந்தாள். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகியதால் அவள் எங்கோ இடம் மாறிப்போனாள்.

அதன்பின், இரண்டு வாரங்கள் கழித்து எனக்கு வேலையில் சேர்வதற்கான அழைப்பு வந்தது. நான் வேலையில் சேர்ந்தேன். எனது இருக்கை ஜன்னலுக்குப் பக்கத்திலேயே இருந்ததால் அடிக்கடி வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பேன். கணக்கில்லாத மனிதர்கள், கணக்கில்லாத உணர்வுகளோடு சாலையைக் கடப்பதைப் பார்ப்பதே புது அனுபவமாக இருக்கும்.

நான் சேர்ந்த 2 வாரம் கழித்து அந்தப் பெண்ணும் வேலைக்குச் சேர்ந்தாள். அதிர்ஷ்டவசமாக எனது இருக்கையின் பக்கத்திலேயே அவளும் அமர்ந்தாள். வேலை செய்யும்போது அடிக்கடி அவளைப் பார்ப்பேன். அவள் எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் அவளது வேலையிலேயே குறியாயிருப்பாள்.

Representational Image
Representational Image

இரண்டு மூன்று வாரம் கழித்து பக்கத்தில் உள்ளவர்களிடம் ஒரு சில வார்த்தைகள் பேச ஆரம்பித்தாள். ஆனால், காலையில் சாப்பிடப்போகும்போதோ மத்தியானம் சாப்பிடப்போகும்போதோ யாருடனும் சேர்ந்து போகமாட்டாள். தனியாகவே போனாள், தனியாகவே வந்தாள். எல்லோரும் வருவதற்கு முன்னரே அவளது இடத்துக்கு வந்து உட்கார்ந்து, அவளுக்குப் பிடித்த பாடல்களை மெலிதான குரலில் பாடிக்கொண்டிருந்தாள்.

`ந கோயி உமங் ஹை' பாடலையும், `ஆப் கீ நஸரோன் மேன் ஸம்ஜா பாடலையும் மட்டுமே பல முறை கேட்டிருக்கிறேன். யாருமே தன்னருகே இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகச் சத்தத்தைக் கூட்டுவாள்.

Representational Image
Representational Image

சந்தா ஹை தூ, யே ஷாம் மஸ்தானி, தஸ்வீர் தேரே தில் மே, லஹ் ஜா ஹலே, அபி ந ஜாவோ சோட்கர், துமாரி மெஹஃபில் மேன் ஆகயி ஹை என்று பல பாடல்கள் அவள் பாடிக் கேட்டிருக்கிறேன். பாடும்போது மட்டுமே, அவள் கொஞ்சமாய் சிரிப்பாள். மற்ற நேரங்கள் எல்லாம் அமைதியாகவே இருப்பாள்.

நாளடைவில் நானும் அவளிடம் கொஞ்சம் கொஞ்சம் பேசத்தொடங்கினேன். அவளது சொந்த ஊர் பீகார் என்றும் வேலை கிடைத்ததால் பெங்களுருக்கு வந்ததாகவும் சொன்னாள். இன்னும் கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் தனது சொந்த ஊருக்குப் போகப்போவதாகவும் சொன்னாள்.

வேலைகுறைவாக இருக்கும் நேரங்களில் அல்லது உணவு இடைவேளையின்போது அவளது இடத்துக்கே போய்விடுவேன். எனக்குப் பிடித்த இந்திப் பாடல்களைப் பாடச் சொல்வேன். குறிப்பாக, கபி அல்விதா ந கஹனா படத்தில் வரும் துமி தேகோனா பாடலைத் திரும்ப திரும்ப பாடச் சொல்லி கேட்டிருக்கிறேன். அந்தப் பாடலைக் கேட்கும்போது பனிக்கட்டிக்குள் படுத்தது போல் சில்லென்று இருக்கும். அந்தப் பாடலை அனுபவித்துப் பாடுவாள். அல்கா யானிக்கே நேரில் வந்துவிட்டாளோ என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

Representational Image
Representational Image

ஒரு நாள் திடீரென பெண்களுக்கு மட்டுமே டே ஷிப்ட் என்றும் ஆண்களுக்கெல்லாம் நிரந்தர நைட் ஷிப்ட் என்றும் அறிவிக்கப்பட்டது. அதைக்கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் நைட் ஷிப்ட் பண்ண வேண்டும் என்பதைக் காட்டிலும் அவளது பாடல்களைக் கேட்க முடியாதே என்ற துக்கம் தொண்டையை அடைத்தது. இனிமேல் அவளை சந்திக்க முடியாது என்பதை ஜீரணிக்கவே முடியலை.

அது நாள் வரைக்கும் இருந்த உற்சாகம், சந்தோஷம் இல்லாமல் ஏனோதானோவென்று ஆபீஸுக்குப் போகத்தொடங்கினேன். ஆயிரம் விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருந்த வீட்டில் திடீரென மின்சாரம் போனதுபோல் இருந்தது.

Representational Image
Representational Image

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வெறிச்சோடிப் போய்க்கொண்டிருந்தது. அவள் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. அவள் எங்கள் அலுவலகத்தில்தான் இருக்காளா என்றும் தெரியவில்லை. எனக்கு யாரிடமும் பேசத் தோன்றவில்லை. வாழ்க்கை எந்தப் பிடிப்பும் இல்லாமல் கசக்கத் தோன்றியது.

ஒரு நாள் ஆபீஸுக்குள் நுழையும்போது எதிர்பாராதவிதமாக அவள் எனக்கெதிரே வந்தாள்.

"How are you?" என்றாள்.

"All good"? என்றாள்.

அந்த நாள்களில் நானும் தனிமையை விரும்பத் தொடங்கினேன். வீட்டு மாடியில் உட்கார்ந்து பாடல்கள் கேட்டேன். ஏதோ ஒன்றை இழந்ததுபோல் இருந்தது. வேறு வேலையைத் தேடலாம் என்று முடிவெடுத்தேன். வேறு இடம், வேறு மனிதர்களைப் பார்க்கும்போது மனம் எல்லாவற்றையும் மறக்கும் என்று தோன்றியது. உடன் பணிபுரிந்த நண்பர் மூலமாக அவளுடைய மொபைல் நம்பர் கிடைத்தது.

Representational Image
Representational Image

அவளது மொபைலுக்கு அடிக்கடி கால் பண்ணத் தொடங்கினேன். சிலசமயம் மட்டும்தான் பேசுவாள். பெரும்பாலான நேரம் எந்தப் பதிலுமே இருக்காது.

அலுவலகத்தின் கடைசி நாள் அது. எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு வந்தேன். அவள் எனக்கு முன்பே வேலையை விட்டுப் போயிருந்தாள் என்று கேள்விப்பட்டேன். நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக Reception-ல் காத்திருந்தேன். அங்கிருந்த TV-யில் கபி அல்விதா ந கஹனா (ஒரு போதும் குட்பை சொல்லாதே) பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தப் பாடல்தான் நான் கேட்டு அவள் பாடிய கடைசி பாடல். அந்தப் பாடலை முழுதும் பார்க்க மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பினேன்.

இப்போதும் அந்தப் பாடல் டிவியில் வரும்போது என்னையறியாமலே எனது கைகள் வேறு சேனலை மாற்றிவிடுகிறது. என் மனதில் என்றுமே அவள் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

- அருண்குமார் செல்லப்பன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/