Published:Updated:

திருமதியின் எசப்பாட்டு! - வாக்கிங் டாக்கிங் 2 #MyVikatan

Kids Playing
Kids Playing

தொண்டையைக் கனைத்தார்.. கரகரக் குரல் மாறிய மர்மம் புரியவில்லை.. பாட ஆரம்பித்தார்..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

(வாக்கிங்.... இளமைக்கும் முதுமைக்கும் இடையேயான பலம்!! புதுமைக்கும் பழமைக்கும் இடையேயான பாலம் புத்தாண்டு சபதங்களில் ஒன்றான வாக்கிங் பற்றிய ஜாலியான தொடர்... புதுமையும் உண்டு.. நாஸ்டால்ஜியாவும் உண்டு)

முதல் பாகம் : ``தமிழய்யா சொன்ன ஆங்கில வார்த்தைப் புதிர்..!'' - வாக்கிங் டாக்கிங் - 1 #MyVikatan

ஞாயிறு அன்று மாலை வாக்கிங் போகும் போது பூங்காவில் சில சிறுமிகள் பாட்டுப்பாடி விளையாடிக் கொண்டிருந்தனர். திருமதி அவர்களின் கோரஸை உற்றுக்கேட்டு முகம் சுழித்தார். அவர்கள் கூட்டமாக நின்றுக்கொண்டு ”ரெயின் ரெயின் கோ அவே” என்ற பாட்டைப்பாடிக்கொண்டிருந்தார்கள். அதற்கேற்ப மழைவருவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்பட்டன.

”மாமா!” என அழைத்தார்.

பொது இடத்தில் நாகரீகம் கருதி அப்படிதான்அழைப்பார்.

’’நாங்கெல்லாம் இப்படியா வெளையாண்டோம்?’’

’’வேறு எப்படி?’’ என்ற எனது கேள்வியில் லேசான கிண்டல் இழைந்தோடியது.

”யோவ்!” என்பது போல முறைத்தார்..

’’அட சொன்னா நல்லாயிருக்குமே!’’ என்று அந்தர்பல்டி அடித்தேன்.

தொண்டையைக் கனைத்தார்.. கரகரக் குரல் மாறிய மர்மம் புரியவில்லை.. பாட ஆரம்பித்தார்..

’’அம்மா பொண்னே ராமக்கா

அரிசிக் காரன் வாறாண்டி

சின்ன வீட்ல ஒளிஞ்சுக்கோ

சிலுக்கு தாழ்ப்பாள் போட்டுக்கோ!’’

Kids Playing
Kids Playing

கொஞ்சம் சத்தமாக பாடவே, ஓரிரு குழந்தைகள் திருமதியை நோக்கி வந்துவிட்டார்கள்.

திருமதிக்கு ஆனந்தம் தாளவில்லை.

கொஞ்ச நேரத்தில் அவர்களின் கவனம் என் மீது திரும்பியது.

’’அங்கிள் நீங்க ஒரு பாட்டுப்பாடுங்க…’’

அங்கிள்… எனக்குப் பிடிக்காத வார்த்தை..

அங்கிள் என்ற வார்த்தைக்கு அடிமையாகி விட்டால் நமக்கு தானாகவே வயதான முகப்பு வந்து தொலைகிறது.

அங்கிள் – பெரியவர் – தாத்தா என்ற முப்பரிமாணத்தின் அடிநாதம் தான் அங்கிள் என்பது.

சமீபத்தில் எனது பிறந்தத் தேதியை மறைக்கத் தெரியாமல் சகலமானவர்களுக்கும் அறிமுகமான முகநூல் கணக்கை முடிவுக்குக் கொண்டு வந்த ரகசியம் நான் மட்டுமே அறிந்தது.

புதிய கணக்குத்தொடங்குகையில் முகநூல் எனது பிறந்த நாளைக்கேட்டு அடம்பிடித்து அதிர்ச்சிக்கொடுத்தது.

மனதைத் தேற்றியப்பிறகு பிறந்த தேதியையும் மாதத்தையும் உள்ளீடு செய்தபின் வருடத்தைக் கொடுக்கும் முன் பல்வேறு யோசனைகள். ஒருவழியாக அரை நூற்றாண்டு காலத்தை மேலும்கீழுமாக மேய்ந்து எனக்குப் பிடித்த வருடத்தை இழுத்துப் பிடித்தேன்.

கஷ்டப்பட்டு பிறந்த வருடம் மறைக்கப்பட்டது. அதற்குப்பின் அதற்கேற்ப புரொஃபைல் போட்டோ தேடும்படலம் தொடங்கியது. இறுதிமுயற்சியாக அழகானபோட்டோ,.போட்டோ ஷாப் செய்யாதது,. கிடைக்கப்பெற்றது. அது திருமதியோடு காட்சியளித்தது (சாட்சியளித்தது)..

அம்மணியை அலாக்காக அப்புறப்படுத்தி அழகான போட்டோ தயார்படுத்திய பின் தூங்கும்போது பேய்கள் நடமாடும் நேரமாகிவிட்டது.

விடிந்ததும்..

லைக்குகளை நாடி மனம் ஓடியது..

படித்துப்பார்த்தேன்.. முதல் கமெண்டே வயிற்றைக்கலக்கியது..

முதல் கமெண்ட்: போட்டோ சூப்பர் அங்கிள்!

அன்றைக்குப்பிறகு இன்றைக்கு தான் அங்கிள் என்ற வார்த்தையைக் கேட்கிறேன். ஏமாற்றத்தை மறைத்து பாட ஆரம்பித்தேன்.

”லலலல்லல லலலல்லலா!” என எனது வசந்த கால நினைவுகளுக்கு திரும்பினேன். திருமதியின் கண்களில் புகைக்கக்கவே அதை நிறுத்தி நடக்க ஆரம்பித்தேன்.

கொஞ்ச தூரத்தில் சிறுவர்கள் கபடி ஆடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு கபடி என்றால் உயிர்! காரணம் விளையாட்டுமல்ல, நமக்கு பிடிக்காதவர்களை பலவிதமாக கவனிக்கும் களம் அது.

சிறுமிகள் விளையாடும் போது திருமதி பாடிய பாடல் ஞாபகம் வந்தது. எனக்கும் எசப்பாட்டு பாட ஆசை வந்தது.

நான் இப்படியாக ஆரம்பித்தேன்.

’’இந்த பசங்க வெறும் கபடி கபடின்னு பாடறாங்க நானெல்லாம் பாடி போவதே அழகாக இருக்கும் தெரியுமா?’’

’’எங்கேப் பாடி காமிங்க?’’

எனக்கு உற்சாகம் பீறிட்டது. சுற்றுமுற்றும் பார்த்தேன்.

Walking
Walking

’’நாந்தாண்டா உங்கொப்பன்

நல்ல முத்துப்பேரன்

வெள்ளிச் சிலம்பெடுத்து

விளையாட வாரேன்

தங்கச் சிலம்பெடுத்து

தாலிகட்ட வாரேன்

வாரேன்…. வாரேன்… வாரேன்.’’

சிறுவர்கள் எல்லோரும் கைக்கொட்டி சிரித்தனர். திருமதியின் கண்களில் சந்தோசம்.

அந்த சந்தோசத்தைப் பயன்படுத்தி நிலக்கடலை சாப்பிட ஆசை. உணவு கட்டுப்பாடு என நானாக தானாக சொல்லிக்கொள்வதால் உடனடியாக அதைக் கேட்கவில்லை. காரணம், வயிறு பல சுற்று பெருக நொறுக்கு தீனியே காரணம்.

ஒரு சுற்று முடிந்த பின்.. நிலக்கடலைப் பருப்பு வறுத்து விற்கும் தள்ளுவண்டியை நோக்கி கால்கள் தள்ளிச் சென்றன.

அந்தத் தள்ளுவண்டியில் இருப்புச்சட்டியின் முக்கால்பகுதி மணல் நிரப்பியிருந்தது. அந்த சட்டி சூடாகி, மணல் சூடாகி, கடலை சூடாகி, இறுதியில் என் நாக்கு சூடானது.

கொறிக்க கொறிக்க ஆனந்த சுகம்!

அதுவும் சின்னக் காகிதத்தை சுருட்டி கூம்பு மாதிரி செய்து அதில் லாவகமாக நிறைத்து நிரம்பக் கொடுத்தார். அது வாடிக்கையாளர்களை கவரும் தந்திரம். தாரக மந்திரம்.. கொடுத்த காசுக்கு அளவாக கடலைகள் சிரித்தன.

நம்ம பட்டினத்தில ”இப்படியொரு ஆளா?” என ஆச்சரியமாக ஒருமுறை இதை தமிழய்யாவிடம் சுட்டிக்காட்டினேன்.

”அட போங்க சார்! இதெல்லாம் அந்தகாலத்திலேயே இருந்திருக்கு!” என ஒரு பட்டினப்பாலைப் பாட்டை ராகமாகப் பாடிக்காட்டினார்.

நடுவு நின்ற நன்னெஞ்சினோர்

வடு அஞ்சி வாய் மொழிந்து

தமவும் பிறவும் ஒப்ப நாடிக்

கொள்வதூஉம் மிகை கொளாது

கொடுப்பதூஉம் குறை கொடாது (வரி 207-211)

அதாவது காவிரிப்பூம்பட்டினத்தில் கடைவிரித்த சாலையோர வியாபாரிகள் மனதார நடுநிலை தவறாமல் நடந்துகொண்டார்களாம். டேக் அண்ட் கிவ் பாலிசி.. அதாவது கொடுக்கிறதும் அளவு குறையாம கொடுத்தாங்களாம். வாங்கும் போதும் அளவு குறையாம வாங்கினாங்களாம்.

பழைய அங்காடியில் வணிகர்களின் நாணயத்தைக் கண்டு நான் பெரிதும் ஆச்சரியப்பட்டேன். அன்றிலிருந்து இந்த கடைக்கு தவறாமல் வரும் அன்றில் பறவையானேன்.

நான் கடலையைக் கொறிக்க ஆரம்பிக்கும் அந்த ஆசையான நொடியில் ஒரு தட்டான் வந்து திருமதியின் தலையில் மோதியது. அதன் சிறிய உருண்டை கண்கள், விரிந்து சுருங்கும் உடல், படபட என அடிக்கும் இறக்கைகள் எல்லாம் குட்டி ஹெலிகாப்டரை ஞாபகப்படுத்தியது. ஒரு வேளை தட்டானைப்பார்த்து தான் ஹெலிகாப்டரை கண்டுபிடித்திருப்பார்களோ.

கடைக்காரர் ஒட்டுமொத்தமாக பாலித்தீன் கவரைப் போட்டு, தள்ளு வண்டியைப் போர்த்த ஆரம்பித்தார். வீசியக்காற்றுக்கு அது பரபரப்பாக பறந்து கயிற்றுக்கு ஆடி அடங்கியது. அதற்குள் வண்டி நடுங்கியது.

Groundnut
Groundnut

’’ஏங்க தம்பி கடையை மூடறீங்களா?’’

’’ஆமாங்க சார் மழை வரப்போகுது’’

’’எப்படி தம்பி கண்டுப்பிடிச்சீங்க?’’

எதாவது கேட்போம் எனக் கேட்டேன்!


’’அந்தி ஈசல் பறக்க, அப்போதே மழை

தட்டான் தாழப்பறந்தால், தப்பாது மழை

தும்பி பறக்க, தூரத்தில் மழை’

மண்ணிலே கரையான, கூட மழை

தவளை, இரவில் கத்த தானே மழை

மாடு மயங்கி, மானம் பார்க்க மழை

கொக்கு மேடேற,கூடவே மழை

கோழி கூட்டுக்கு, ஓட கூடுதல் மழை

மயில்,இரவில் கத்த மழை தப்பாது

மயில், தோகை விரித்து ஆட மழை’’


என அந்த தங்க தம்பி வர்ணனை மழை பொழிந்தான்!


இன்று ஆளாளுக்கு கெத்துக் காட்டியதை பொறுக்காமல் காகிதத்தை சுருட்டி வீசினேன்.

பக்கத்தில் உள்ள குப்பைக்கூடையில் போட வேண்டியது தானே என திருமதி முணுமுணுத்தார்.

திரும்பிப்பார்த்தேன்.. குரங்கு குப்பைத்தொட்டியைப் பிடித்திருப்பது போல் அமைத்திருந்திருந்தார்கள்!

’’பொதுஇடங்களில் “USE ME” ன்னு குப்பைத்தொட்டியை குரங்கு பிடிச்சிட்டிருக்கும்!’’ என்றார் திருமதி.

’’இப்ப அதுக்கு என்ன?’’ என்றேன். தேவையில்லா எரிச்சல்.

’’என்னவா? குப்பைப் போடற எந்த குரங்கும் அதைக் கண்டுக்கிறது இல்லை’’

நான் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்!


(தொடரும்)

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு