Election bannerElection banner
Published:Updated:

`மழை நின்னு போச்சு..!' - மைக்ரோ கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

கையில் இருந்த உளுந்து வடை அதைச்சுற்றி இருந்த சட்னி.. மழையின் குளிர்ச்சி பொறிக்கப்பட்ட உளுந்தின் மொறுமொறு வாசம் ..... ம்ம்ம்ஹூம் அடடா என்ன ஒரு மகிழ்ச்சி.....

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பெருமழை பெய்துகொண்டிருந்தது​. மழையில் நனைந்தால் கரைந்து விடுவதாய் எண்ணிய பலரும் சாலையோர மரங்களுக்கடியில் நின்றுகொண்டிருந்தனர்.

மழையில் நனைந்தபடி செல்லும் வெகு சிலரை வியப்பாகவும் பரிதாபமாகவும் பார்த்தபடி கூட்டமாய் இருந்தவர்களை அலட்சியம் செய்தவனாய் மழையை மகிழ்ந்துகொண்டே நடந்தேன்.

நான் எப்போதும் வரும் அந்த புளியமரத்தடி தேநீர் கடையில் நின்று காபி ஒன்றை சொல்லும்போதே சூடாகப் பொறித்தெடுத்த வடைகளின் வாசம் இரண்டு உளுந்து வடை எனச் சொல்ல வைத்தது.

Representational Image
Representational Image
Pixabay

கையில் இருந்த உளுந்து வடை அதைச்சுற்றி இருந்த சட்னி மழையின் குளிர்ச்சி பொறிக்கப்பட்ட உளுந்தின் மொறுமொறு வாசம்..... ம்ம்ம்ஹூம் அடடா என்ன ஒரு மகிழ்ச்சி..... ரசித்து ருசித்தேன்....

வடை இன்னும் இரண்டு.... வாய் தானாய் பேசியது... மீண்டும் அதே ரசிப்பும் ருசிப்பும்.... மீண்டும் கேட்க முயன்றபோது கையில் காபியை திணித்தார் ...

காபியை அங்கிருந்த திண்டில் வைத்துவிட்டு கை கழுவ எழுந்தேன். கையில் இருந்த பிளாஸ்டிக் தட்டும் அதன்மேல் இருந்த பிளாஸ்டிக் பேப்பரைத் தொட்டியில் போட்டுவிட்டு கையை கழுவிவிட்டு கையை துடைக்க தொங்கிக் கொண்டிருக்கும் பழைய பேப்பரை எடுத்தேன்.

``பருவமழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்... விவசாயிகள் மகிழ்ச்சி"

கசக்கி குப்பையில் போட்டுவிட்டு, காபியை குடித்துவிட்டு பதினைந்து ரூபாயைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன்.

இது நிகழ்ந்து​ இரண்டு ஆண்டுகள் ஓடியிருக்கும். இன்று பலமாதங்களுக்கு பிறகு சற்றே சாரல் மழை. பழைய ஞாபகங்கள் வரவே தெருவில் இறங்கி நடக்கலானேன்... தெரு ரோடாகி இருந்தது... அங்கு என்னைத்தவிர யாருமே நடப்பதாய் தெரியவில்லை...

முன்பு இருந்த தேநீர் கடையும் பெரிய புளிய மரமும் இப்போது கோழிகளை வறுத்துக் கொடுக்கும் பன்னாட்டுக் கடையும் அருகிலேயே காபியை சில நூறு ரூபாய்களுக்கு விற்கும் வேறொரு பன்னாட்டுக் கடை.

காபியைக் குடிக்க அதனுள் நுழைந்தேன். ஆங்காங்கே நனைந்திருந்த என்னை எல்லோரும் வழக்கம்போல பரிதாபமாக பார்த்துவிட்டு அவர்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

தாய்மொழி என்ற ஒன்று இருப்பதை அறிந்தே இருக்கமாட்டார்கள் என்றே தோன்றியது... காபி என்றேன் ... விச் ஒன் சார்.... மேலே பார்த்தேன் .... ரெகுலர்.... என்றேன் .... தேங்க்யூ சார் என்றுவிட்டு போய்விட்டார்.

சுற்றிலும் பார்த்துக்கொண்டு இருந்தேன் கறுப்பு நிற கேக்குகளும் வகைவகையான அளவுகளில் கப்புகளுமாக பேசிக் கொண்டார்கள். உள்ளே ஏசி வேறு.. நனைந்தும் இருந்ததால் குளிர் ஆட்ட ஆரம்பித்தது.

டி.வி-யில் நான்கு பேர் அமர்ந்து கத்திக்கொண்டு இருந்தனர்...

``பருவமழை பொய்த்துவிட்டது. விவசாயிகள் பலர் தற்கொலை. காரணம் அரசியல்தான்" என்பதாய் இருந்தது. அங்கிருந்த வேறுயாரும் என்னைத்தவிர அதைக் கவனித்ததாகக்கூட தோன்றவில்லை

Representational Image
Representational Image
Rod Long / Unsplash

பத்து நிமிட காத்திருத்தல் அண்டார்டிகாவில் மாட்டிக்கொண்டதாய்பட்டது.

எனக்கும் வாயகன்ற கப் ஒன்றில் ஆர்ட்டின் வரைந்த ஒன்றை வைத்துவிட்டு நகர்ந்தார். சர்க்கரைப் பைகளை கிழிக்க சற்றே மெனக்கெட்டு கப்பில் கொட்டி கொடுக்கப்பட்ட பிளாஸ்டிக் குச்சியால் கலக்கிக்கொண்டேன் குடித்தேன் நூற்றம்பது ரூபாயை அவர் நீட்டிய அட்டைக்குள் வைத்துவிட்டு வெளியில் வந்தேன்.

மழை நின்றேயிருந்தது!

- சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு