Published:Updated:

`ஆறாதே `டீ`யினால் சுட்ட வடு..!’ - லாக்டௌனும் திருட்டுத்தனமும் #MyVikatan

Representational Image
Representational Image ( Aaron Thomas / Unsplash )

வாசகர் தன் மனைவிக்குத் தெரியாமல் டீ போட்டு குடிக்கும்போதெல்லாம் எப்படி மாட்டிக்கொண்டு விழித்தார் என்பதை காமெடி டோனில் பகிர்ந்திருக்கிறார்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மாடியில் துணி காயப்போடுவதற்காகச் சென்றிருக்கும் கயல்விழி வந்து கேட்டால் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை... இப்படி நடக்கும் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை... நடந்து விட்டது... எப்படியாவது சமாளித்தாக வேண்டும்... ஆனால், அதுதான் எப்படி... ஒன்றும் புரியவில்லை.

கல்யாணமான இத்தனை வருடங்களாக பெரிதாக ஒன்றும் பிரச்னை இல்லை. எனக்காக எவ்வளவோ கஷ்டநஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டவள்தான். எப்போதும் தன்னுடைய சிரமத்தைப் பாராமல் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சியடைகிறவள்தான்.

Representational image
Representational image
Loverna Journey / Unsplash

சென்ற மாதத்தில் ஒருநாள், அடிக்கடி லேசாக மயக்கம் வருகிறதே என்பதற்காக எனக்கு ரத்தப் பரிசோதனை செய்ததில் இருந்துதான் வந்தது வினை. டாக்டர் எனக்கு உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாகக் கூறி, மாத்திரை மருந்தெல்லாம் எழுதிக் கொடுத்ததோடு இனி சர்க்கரை சேர்த்த பொருள் எதையும் உட்கொள்ளக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். கூடவே ரத்த அழுத்தத்துக்கும் சேர்த்து மாத்திரை எழுதிக் கொடுத்துவிட்டார். அதிலிருந்து நான் டீ குடிப்பது கயல்விழிக்கு அறவே பிடிப்பதில்லை.

இத்தனைக்கும் பிளாக் டீதான். டாக்டர் கொடுத்திருந்த அறிவுரைகளில் கொஞ்சம் நாள்களுக்கு பால் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்பதும் ஒன்று. ஒருநாளைக்கு நான்குமுறை டீ குடித்துக் கொண்டிருந்தவனால், இனி டீயே குடிக்கக் கூடாது என்றால் எப்படி முடியும். டாக்டர் கூட அப்படிச் சொல்லவில்லை எல்லாம் கயல்விழியின் கட்டளை.

Representational image
Representational image
Clay Banks / Unsplash

காலையில் ஒன்று மாலையில் ஒன்று. பிறகு படிப்படியாக நிறுத்திக்கொள்கிறேன் என்று அவளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தேன். ஒருநாள், `டீ முக்கியமா பொண்டாட்டி முக்கியமா’ என்கிற ரீதியில் அவள் ருத்ரதாண்டவமே ஆடிவிட்டாள். அன்றிலிருந்து, வீக் எண்டில் வீட்டிலிருக்க நேரும் பட்சத்தில் அவள் இல்லாத சமயத்தைப் பயன்படுத்தி அவளுக்குத் தெரியாமல் அவசர அவசரமாக நானே ஸ்டவ்வைப் பற்ற வைத்து, நம் உடல்நலத்தில் நமக்கே அக்கறை இல்லையென்றால் எப்படியென்று கொஞ்சமாக சர்க்கரை போட்டு டீ வைத்துக் குடித்து விடுவேன். அதுவும், டீ போட்ட சுவடே தெரியக் கூடாது என்பதற்காக அவள் வருவதற்குள் அந்த டீயை ஆவி பறக்கப் பறக்க அவசர அவசரமாகக் குடித்து முடிப்பேன் பாருங்கள்.

இரண்டொருமுறை நாக்கை நன்றாகச் சுட்டுக் கொண்டு படாதபாடு பட்டிருக்கிறேன். நீங்கள் அந்தக் காட்சியை நேரில் பார்த்திருந்தால் `இந்த இழவு டீயை அப்படிக் குடித்தாக வேண்டிய அவசியம் என்ன' என்று காறித் துப்பியிருப்பீர்கள். மானங்கெட்ட வேலைதான்... என்ன செய்வது. அதுவும் கொரோனாவால் வீட்டைவிட்டு வெளியில் போக முடியாமல் ஊரே அடங்கிக் கிடக்கும் நிலையில் வேறு என்னதான் செய்வது... குழந்தைகளும் லீவுக்கு பாட்டி ஊருக்குப் போனவர்கள் லாக்டெளனில் அங்கேயே மாட்டிக்கொண்டார்கள். ஒரே போராக இருந்தது. நேற்று டீ போடலாமெனப் போய், உண்மையிலேயே மானம் போய்விட்டது... அதைச் சொல்லாமல் போனேனே...

Representational image
Representational image
Joanna Boj / Unsplash

வாசலில் தள்ளுவண்டிக்காரன் காய்கறி கொண்டு வந்திருக்கிறான் என்று கயல்விழி பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள். காய்களைத் தேர்வு செய்வதில் அவள் நிறைய டெக்னிக்குகள் வைத்திருக்கிறாள். வெண்டைக்காயை உடைத்துப் பார்த்து, முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து, முள்ளங்கியைக் கிள்ளிப் பார்த்து, தக்காளியென்றால் ஒவ்வொன்றையும் நசுக்கிப் பார்த்து... இப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து அதன்பிறகு எல்லாவற்றிற்கும் பேரம்பேசி அவள் வாங்கி முடிப்பதற்கு எப்படியும் அரைமணி நேரமாவது ஆகும் என்பது என் கணிப்பு.

அவள் வாசல் கதவைத் தாண்டியதும் நான் வழக்கம்போல அடுப்படிக்கு ஓடிச் சென்று, அவசர அவசரமாக ஸ்டவ்வைப் பற்ற வைத்து டீ போட ஆரம்பித்தேன்... கொஞ்சம் இஞ்சி தட்டிப் போடலாமென்று தோன்றியது, போட்டேன்... வழக்கம் போலவே டீ குடிக்க அவசரம். டீ கொதிக்கும் முன்பே நான் கொதித்தேன். அவசரப்பட்டதன் காரணமாக ஒன் பாத்ரூம் வேறு என்னை அவதிப்படுத்தியது...

டீ கொதி வருவதற்குள் ஓடிவிட்டு வந்துவிடலாம் என்று ஓடினேன். ஆனால், பாத்ரூம் லாக்கை மட்டும் என்னால் திறக்க முடியவில்லை. எவ்வளவோ தகிடுதித்தம் செய்தும் லாக் ஓபனாகவில்லை. பிறகென்ன. அடுப்பில் வைக்கப்பட்டிருந்த டீ முழுக்க ஆவியாகி பாத்திரம் முழுக்கக் கரிப்பிடித்து வீடெங்கும் புகை நிரம்பிக் காட்சியளிக்க, என் மனைவி வீட்டுக்குள் நுழைய. அவளுக்கு எப்படியிருந்திருக்கும், அடுத்து என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. இருந்தாலும் என் பங்குக்கு நான் சொல்லத்தான் வேண்டும்.

Representational image
Representational image
Craig Whitehead / Unsplash

``ஏற்கெனவே பொலங்கறதுக்கு வீட்ல பாத்திரம் கம்மியா இருக்குன்னு பொலம்பிக்கிட்டிருக்கேன். இதுல இப்பிடி வேற... இந்தத் திருட்டுத்தனம் எதுக்கு உங்களுக்கு... எத்தனை நாளா இது நடக்குது... அநியாயம், காய்கறி வாங்கிட்டு வர்றதுக்குள்ள இப்பிடி ஒரு கள்ளாட்டம் ஆடி வச்சிருக்கீங்களே...”

என்று தலையிலடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.

பிறகு, ``இனிமே கிச்சனுக்குள்ள கால எடுத்து வச்சுப் பாருங்க...”

என்று பத்ரகாளிபோல முறைத்துப் பார்த்துவிட்டு எழுந்து போனாள். இவ்வளவு நடந்த பிறகாவது இந்த நாக்கு என்னைச் சும்மா விட்டதா? இன்றும், அவள் மாடிக்கு துணி காயப் போடப் போனதை சாக்காக வைத்து அதேபோல கிச்சனுக்குள் ஒரே ஓட்டமாக நுழைந்து அவசர அவசரமாக டீ போட ஆரம்பித்தேன்...

கயல்விழியைப் பின் தொடர்ந்து பக்கத்து ஃப்ளாட் கஸ்தூரி மாமியும் ஒரு பக்கெட் நிறைய ஈரத் துணியை மூச்சுவாங்க தூக்கிச் சென்றதைக் கவனித்தேன். மற்ற ஃப்ளாட்காரர்களைப் பற்றி இருவரும் குசலம் விசாரித்து, கோள்சொல்லி ஒவ்வொரு துணியாகக் குனிந்து நிமிர்ந்து காயப் போட்டு முடித்து படியிறங்கி வருவதற்குள் நாம் நமது வேலையைச் சுலபமாக முடித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு...

வாசல் கதவைப் பிடித்துக்கொண்டு மேலே படிக்கட்டை எட்டிப் பார்த்தேன். இன்னும் கயல்விழி கீழே இறங்க ஆரம்பிக்கவில்லை. சரி, கயல்விழிதான் இன்னும் வரவில்லையே, பிறகென்ன பிரச்னை என்று நீங்கள் கேட்பது புரிகிறது.... இப்போது என்னுடைய பயமெல்லாம் இன்றும் நான் டீ போட்டுக் குடித்ததை என் மனைவி கண்டுபிடித்துவிடுவாள் என்பதல்ல... இன்றும் நேற்றைப் போலவே பாத்திரத்தில் இருந்த டீ ஆவியாகி, அடிப்பிடித்து, புகை கிளம்பி.... இன்னும் அந்தப் புகையும் அதன் கருகல் வாசனையும் வெளியே போகாமல் வீட்டுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறது... அந்த பயம் தான்... எல்லாம் பாழாய்ப்போன ஒரு போன் காலால் வந்த வினை... ஏதோ ஒரு படத்தில் சந்தானம், ``ஊர்ல பத்துப் பதினைஞ்சு ஃபிரண்ட வச்சுகிட்டுருக்கிறவன்லாம் சந்தோசமா இருக்கறான்... ஒரே ஒரு ஃபிரண்ட வச்சுகிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே... அய்யய்யோ...” என்று புலம்புவது மாதிரிதான் என் நிலைமையும் ஆயிற்று.

Representational image
Representational image
Klara Avsenik / Unsplash

கயல்விழி படியிறங்கும் சத்தம் கேட்கிறது... அவளாகக் கண்டுபிடித்துக் கேவலமாகத் திட்டுவதற்கு முன் நாமாகவே அவளிடம் விஷயத்தைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிடலாமா... நேற்று காறித் துப்பாத குறையாக அவ்வளவு திட்டிய பிறகும் இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டு எப்படி அவள் முகத்தை நிமிர்ந்து பார்ப்பது... பேசாமல் பெட்ரூமுக்குச் சென்று பெட்ஷீட்டைப் போர்த்திக்கொண்டு படுத்துவிடலாமா... என்ன செய்வதென்று புரியாமல் நின்றுகொண்டிருந்தபோதே கயல்விழி வந்துவிட்டாள்... அவளைப் பார்க்க தைரியம் இல்லாமல் தலையைக் குனிந்துகொண்டே பெட்ரூமுக்குச் சென்றுவிட்டேன்... நேற்று அவ்வளவு சொல்லியும் இன்று மீண்டும் அதே தவறு...

ஒரு பாத்திரம் வீணானதற்கே தலையிலடித்துக் கொண்டவளுக்கு இன்று இன்னொரு பாத்திரமும் வீணாயிற்று. அதையெல்லாம் தாண்டி அவள் என்மீது கொண்டிருக்கும் அக்கறையை நான் துளிகூட மதிக்கவில்லை என்பதை நினைத்து அவள் மனம் எவ்வளவு கொதிப்படைந்திருக்கும் என்பதை எண்ணும்போது எனக்குள் குற்றவுணர்ச்சி மேலோங்குவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால், அவளிடமிருந்து இன்னும் எந்த எதிர்வினையும் கிளம்பாமலிருந்தது, எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

Representational image
Representational image
Charles Deluvio / Unsplash

வெளியே போய் கயல்விழி என்ன செய்கிறாளெனப் பார்க்கலாமா என்று நினைத்தேன். கொஞ்சநேரத்தில் அவளே என் அறைக்குள் வந்தாள். நான் அவளை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்துகொண்டேன். கொஞ்சம் வெட்கமாகக் கூட இருந்தது. வந்தவள் எதுவும் பேசாமல், என் முன்னே ஒரு டம்ளரை நீட்டினாள். ஆச்சர்யத்தோடு அவளை நிமிர்ந்து பார்த்தேன். ``இனிமே எப்பல்லாம் உங்களுக்கு டீ வேணுமோ சொல்லுங்க, நானே போட்டுத் தர்றேன்...

சாப்பாடு வைக்கிற குக்கர் மட்டும்தான் இப்ப மிச்சம் இருக்கு... அதையும் அடுப்புல வச்சு புகைச்சுடாதீங்க...” என்று என் அருகே டம்ளரை வைத்துவிட்டுப் போனாள்... அவளது மாற்றத்தை எண்ணி மகிழ்ந்தவாறு டம்ளரையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், ஆறிப் போவதற்குள் குடிக்கவில்லையென்றால் அதற்கும் திட்டுவாளே என்கிற அச்சத்தில் குடிக்க ஆரம்பித்தேன். அது டீ அல்ல கபசுரக் குடிநீர் என்பது பிறகுதான் தெரிந்தது.

-ந.அன்பரசு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு