Election bannerElection banner
Published:Updated:

மினி வனவாசம்! - வெளிநாடுவாழ் கணவன், தன் மனைவிக்கு எழுதும் லாக்டெளன் கடிதம் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

எங்கள் கிராமத்தில் தொலைபேசியே கிடையாது. அம்மா அப்பாவிடம் பேசவேண்டும் என்றால் அருகில் உள்ள நகரம் ...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு நாள் இரவில் நானும் என் மனைவியும் பேசிக்கொண்டு இருக்கும்போது, நாம் 80 அல்லது 90 களில் வாழ்ந்துகொண்டிருந்தால், இப்போது முகம்பார்த்து வாட்ஸப்பில் பேசுவதுபோல் பேசியிருக்க வாய்ப்பல்லை. அந்த காலத்தில் தொலைபேசியே சிலர் வீட்டில்தான் இருக்கும். அப்போது எல்லாம் கடிதம் தான். எனக்கு நினைவிருக்கிறது நான் சிறியவனாக இருக்கும்போது என் அப்பா தொலைத்தொடர்பு துறையில் பணியில் இருக்கும்போது, பயிற்சிகாக சேலம் சென்றிருந்தார். ஒரு 6 மாதகாலம் அடிக்கடி கடிதம் எழுதுவார்.

Representational Image
Representational Image

அந்த நாள்களில் எங்கள் கிராமத்தில் தொலைபேசியே கிடையாது அம்மா அப்பாவிடம் பேசவேண்டும் என்றால் அருகில் உள்ள நகரம் அரக்கோணம்தான் செல்லவேண்டும். அங்குள்ள உறவினர் வீட்டில்தான் தொலைபேசி இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அங்குசென்று அப்பாவிடம் பேசுவாள் அம்மா. அப்பா மாதம் இருமுறை கடிதம் எழுதுவார். இப்போதுகூட நாங்கள் ஒன்றாக வீட்டில் இருக்கும் நேரங்களில், ``இங்கே இருக்குற சேலத்துக்கு போயிட்டு என்னா பில்டப் பண்ணியிருக்கிங்க நீங்க" என அப்பாவைக் கலாய்போம்.

இந்த உரையாடலின்போது, நான் உன்னிடம் சொன்னேன் எனக்கு ஒரு கடிதம் நீ எழுது என்று. நீ சொன்னாய் எனக்கும் நீங்கள் எழுத வேண்டும் என்று. எனக்கும் இது புதிதாக உள்ளது. நானும் யாருக்கும் கடிதம் எழுதியது கிடையாது உறவுகளுக்கு. கைபேசியில் பேசிவிடுவேன் அல்லது குறுந்தகவல் அனுப்பிடுவேன்.

எழுதுகிறேன் என் இணையவளுக்காக...

Representational Image
Representational Image
Pixabay

பொதுவாக நான் வேலைக்கு மலேசியா வந்தால் 6 மாதத்திற்குள் வீட்டுக்கு வந்துவிடுவேன் அல்லது ஒரு வாரம் விடுப்பு எடுத்தாவது வந்து பார்த்துவிட்டு பணிக்குத் திரும்பிவிடுவேன். ஆனால், இந்த இக்கட்டான லாக்டெளன் சூழலில் என்னால் வரமுடியவில்லை. எனக்கும் ஒரு சின்ன வனவாசம்தான்.

நான் காட்டில் இருக்கிறேன் நீ வீட்டில் இருக்கிறாய், இருவருக்கும் அதே கஷ்டம் தான். என்ன வாழ்கை இது என சில சமயங்களில் யோசிப்பதுண்டு.

அதை நினைத்து நான் WhatsApp-ல் status வைத்த பாடல்

"பக்கத்தில் நீயும் இல்லை

பார்வையில் ஈரம் இல்லை

சொந்தத்தில் பாஷை இல்லை

சுவாசிக்க ஆசை இல்லை

கண்டு வந்து சொல்வதற்கு

காற்றுக்கு ஞானம் இல்லை

நீளத்தை பிரித்துவிட்டால்

வானத்தில் ஏதுமில்லை

தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள

வாழ்க்கை இல்லை." (நன்றி வைரமுத்து)

Representational Image
Representational Image
Pixabay

நாம் தினமும் பேசுவோம். அங்கே என்ன நடக்கிறது என்று நீ சொல்லுவாய், இங்கே எதாவது சுவாரசியமான விசயம் நடந்தால் நான் சொல்லுவேன். ஆனால், ஒரு சில நாள்களில் நான் தொலைபேசியில் காணொலியில் பேசும்போது நீ சிரித்து பேசினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சிலசமயம் மகிழ்ச்சியாய் பேசுவாய்; சிறிது நேரத்தில் எனக்கு மனசு சரியில்லை என்று குறுந்தகவல் அனுப்புவாய். எனக்கு வருத்தமாக இருக்கும். நான் யோசித்துப் பார்ப்பேன்.

நிலைவாழ்வைத் தேடி..! - லாக் டெளன் துயரக்கதை #MyVikatan

மற்றவர்களுக்கு நீ கஷ்டப்படுவது தெரியக்கூடாது என்று மகிழ்ச்சியாக பேசுவாய். பிறகு, என்னிடம் சேதியைச் சொல்வாய், என்னிடம் சொன்ன பிறகுதான், உனக்கு மனது இலகுவாகும். கொஞ்சம் நிம்மதியாகத் தூங்குவாய் என்று நான் நினைக்கிறேன். பின்பு, அதை நினைத்து நான் தூங்காத நாள்களும் உண்டு. இந்த கஷ்டம் எனக்கு மட்டும் அல்ல, குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் பணிபுரியும் பல பேருக்கு இதே கஷ்டம்தான். `அவனுக்கு என்ன, நன்றாக சம்பாதிக்கிறான். சந்தோஷமாக இருக்கிறான்’ என்று சிலர் கூறலாம். அவர்களுக்கு எங்கள் மனக்கஷ்டம் புரியாது. என்ன செய்வது, ஒவ்வொருவருக்கும் வேறு வேறு கஷ்டங்கள் இருக்கத்தானே செய்கிறது.

'எல்லாம் கடந்து போகும்' என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.

Representational Image
Representational Image
Pixabay

மறுபக்கம் நமது மகள் அவளுடைய வளர்ச்சி, சுட்டித்தனம் மற்றும் நினைவாற்றல் என்னை பிரமிக்க வைக்கிறது மகிழ்ச்சியாகவும் உள்ளது. தொலைபேசியில் அவள் பேசும்போது, ``அப்பா எப்போ வருவிங்க Flight ல" என்று அவள் கேட்கும்போது, 'என்னடா வாழ்க்கை இது!' குடும்பத்தைப் பிரிந்து என்று நினைக்க தோன்றும். என்ன செய்வது, என் வேலை அப்படி என்று மனதை தேற்றிக்கொள்வேன். அவளது எதிர்காலத்தை எப்படித் திட்டமிடுவது, எந்தப் பள்ளியில் சேர்ப்பதென்று தினமும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

அவளுடைய நடனத்திற்கு நான்தான் முதல் ரசிகன். தினமும் அவளுடைய அனைத்து நடன காணொலியும் பார்த்துவிடுவேன். அது எனக்கு புத்துணர்வு தரும். மகிழ்ச்சியாகவும் இருக்கும். அதை பல நேரங்களில் நினைத்து நான் தனியாக சிரித்துக் கொண்டிருப்பேன்.

Representational Image
Representational Image
Pixabay

உடன் பணிபுரியும் நண்பர்கள் சொல்லுவார்கள். `இவன் இந்த லோகத்தில் இல்லை என்று...' என்ன செய்வது மகளை நினைக்கும்போது இந்த உலகத்தையே மறந்துவிடுகிறேன்.

இப்படி மகளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்...

இப்போதைக்கு இவைதான் நினைவில் வந்தவை. மற்றதை வரும் காலத்தில் எழுதுவோம்...

-அன்பன்,

பாலாஜி கோதண்டன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு