Published:Updated:

உணர்வு ரீதியா அணுகணும்! - பொருளாதாரத்தை மீட்டெடுக்க மன்மோகன் சிங் கூறும் 3 யோசனைகள் #MyVikatan

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங் ( Vikatan Library )

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகளாவிய வர்த்தகத்தின் பங்கு கடந்த 30 ஆண்டு காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்திய பொருளாதார மேதைகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் டாக்டர்.மன்மோகன் சிங். ரிசர்வ் வங்கி ஆளுநர், பாரதப் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்த இவர், தற்போது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவராக உள்ளார்.

பொருளாதாரம் சார்ந்து பல்வேறு ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து வழங்கிவரும் மன்மோகன் சிங், இந்த வாரம் பி.பி.சி யுடனான மின்னஞ்சல் தொடர்பில் (email exchange with BBC) தற்போதைய கொரோனா கால இந்தியப் பொருளாதாரம் குறித்த பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்
Vikatan Library

இந்தியாவின் தற்போதைய பொருளாதாரம் குறித்து டாக்டர்.மன்மோகன் சிங்கின் கருத்துகள்:

* ஆழமான மற்றும் நீடித்த பொருளாதார மந்தநிலை தவிர்க்க முடியாதது. மேலும், கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்போது, எதிர்காலம் நிச்சயமற்றதாகத் தெரிகிறது.

* இந்தத் தொற்று நோயினால் உலகப் பொருளாதாரமே கடுமையாக நொறுங்கிப் போய் கிடக்கிறது. உலகப் பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது என்பது இந்தியப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

* லாக்டௌன் காலத்தில் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் தம் வாழ்வாதாரத்தை இழந்தனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசின் உடனடி உதவிகள் அவசியம்.

* இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி ( Gross domestic Product-GDP )1990-ல் இருந்ததை விட 10 மடங்கு வலிமையானது. அன்றிலிருந்து இந்தியா 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது. எனவே, இந்தியப் பொருளாதாரம் தற்போது உள்ளார்ந்த முறையில் மிகவும் வலுவாக உள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள்

* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகளாவிய வர்த்தகத்தின் பங்கு கடந்த 30 ஆண்டு காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

* ஆனால், 2020-21 நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று உலக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது கூட தற்போது ஏற்பட்டுள்ளதை போல உலகம் பொருளாதார ரீதியில் முடங்கவில்லை.
டாக்டர் மன்மோகன் சிங்

* பல நாடுகள் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைத் தடுக்க அரசாங்க செலவினங்களுக்கு நிதியளிக்க பணத்தை அச்சிட (Helicopter Money) முடிவு செய்துள்ளன. சில முக்கியப் பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவுக்கும் இந்த திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளனர். ஆனால், பல பொருளாதார வல்லுநர்கள் இந்நடவடிக்கை பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று அச்சத்தை எழுப்பியுள்ளனர். இதுகுறித்த பல அம்சங்களையும் தீர்க்கமாக ஆலோசித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

விநியோக சங்கிலியை மாற்றி அமைக்கும் நாடுகள்! சீனப் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா?  #DoubtOfCommonMan

* இந்தியாவில் பொருளாதார நெருக்கடியைத் தடுக்கவும், வரும் ஆண்டுகளில் பொருளாதார இயல்புநிலையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

* 1991ஆம் ஆண்டில் இந்தியா சந்தித்த பொருளாதார நெருக்கடி சர்வதேசக் காரணிகளால் ஏற்பட்டது. ஆனால், தற்போதைய நெருக்கடி, இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டிருக்காத அளவு பெரியது மற்றும் முற்றிலும் எதிர்பாராதது.

* இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது கூட தற்போது ஏற்பட்டுள்ளதை போல உலகம் பொருளாதார ரீதியில் முடங்கவில்லை.

லாக்டெளன்
லாக்டெளன்

* தற்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவு எப்போது சீரடையும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

* கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் உண்டாகியிருக்கும் முழு பொருளாதாரத் தாக்கமும், அதிலிருந்து மீள இந்தியாவுக்கும், உலக நாடுகளுக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதும் இதுவரை யாருக்கும் தெரியாது.

கொரோனா பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மன்மோகன் சிங்கின் மூன்று ஆலோசனைகள்:

1) மக்களுக்கு நேரடிப் பண உதவி:

(Direct Cash Assistance)

மக்கள் தங்கள் அனைத்து விதமான அடிப்படைத் தேவைகளையும் எளிதில் அணுகக்கூடிய பணம் (Liquid Cash) மூலமாகவே நிறைவேற்றிக் கொள்கிறார்கள். எனவே, ஒரு குறிப்பிடத்தக்க நேரடி பண உதவி அரசாங்கத்திடம் இருந்து மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இதற்காகப் பல்வேறு மூலங்களில் இருந்தும் அரசு கடன் வாங்குவது தவிர்க்க முடியாத ஒன்று. இதுபோன்ற சூழ்நிலையில் கடன் வாங்குவது தவறு இல்லை. அரசு கடன் வாங்கத் தயங்குவதற்குப் பதிலாக, வாங்கும் கடனை முறையாகத் திட்டமிட்டு செலவழிக்க முன்வர வேண்டும்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

2)அரசின் கடன் உத்தரவாதத் திட்டம்:

(Government-Backed Credit Guarantee Programmes)

இரண்டாவதாக அரசாங்க ஆதரவுடைய கடன் உத்தரவாதத் திட்டங்கள் மூலம் வணிகங்களுக்கு போதுமான மூலதனத்தைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

தொழில் நிறுவனங்களுக்கும் மற்றும் அனைத்துவித வியாபாரிகளுக்கும் அரசின் உத்தரவாதக் கடன் உதவிகள் கிடைக்க வேண்டும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன்களின் அளவு அதிகரித்துவிடுமோ என்று அஞ்சாமல், கடன் தொகையைத் தேவையானவற்றுக்குப் பயன்படுத்தி வளர்ச்சியை மீட்டெடுக்க வேண்டும்.

இந்தப் பொருளாதார மந்தநிலை மனிதாபிமான நெருக்கடியால் ஏற்படுகிறது. வெறும் பொருளாதார எண்கள் மற்றும் முறைகளை விட, நமது சமூகத்தில் உள்ள உணர்வுகளின் பிரதிபலிப்பிலிருந்து இதை அணுகுவது முக்கியம்.
டாக்டர் மன்மோகன் சிங்

3) நிறுவன சுயாட்சி மற்றும் செயல்முறைகள்:

(Institutional Autonomy and Processes)

மூன்றாவதாக, நிறுவன சுயாட்சி மற்றும் செயல்முறைகள் மூலம் நிதித்துறையை சரிசெய்ய வேண்டும்.

நிதி மற்றும் நிதிசார்ந்த நிறுவனங்களுக்கு உரிய முறையில் முக்கியத்துவம் அளித்து, தன்னாட்சி அதிகாரங்கள் வழங்குவதன் மூலம் அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும். இதன்மூலம் நிதித்துறையையும், இந்தியப் பொருளாதாரத்தையும் சிறப்பாக மறு கட்டமைக்க முடியும்.

Lock down Situation
Lock down Situation
Pixabay

இந்தியப் பொருளாதாரத்தை கொரோனா பொருளாதார மந்தநிலையில் இருந்து மீட்டெடுக்க, மன்மோகன் சிங் என்னும் அறிவார்ந்த - தேர்ந்த பொருளாதார மேதையின் மேற்காணும் 3 யோசனைகள் இந்தியாவுக்கு நிச்சயம் வழிகாட்டக்கூடிய ஒன்றாகவே அமைந்துள்ளன.

இறுதியாக ``இந்தப் பொருளாதார மந்தநிலை மனிதாபிமான நெருக்கடியால் ஏற்படுகிறது. வெறும், பொருளாதார எண்கள் மற்றும் முறைகளை விட, நமது சமூகத்தில் உள்ள உணர்வுகளின் பிரதிபலிப்பிலிருந்து இதை அணுகுவது முக்கியம்" என்கிறார் டாக்டர். மன்மோகன் சிங். மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணர்வுகள் சார்ந்த அவரின் இந்தக் கருத்து நிச்சயமாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு