Published:Updated:

பார்வதி பாட்டியின் அந்தச் சிரிப்பு! - மருத்துவரின் நெகிழ்ச்சிப் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

மெடிசின்தான் எங்களின் முதல் போஸ்டிங் என்பதால் எல்லா நோயாளிகளையும், சலிக்கும் வரை ஆர்வமுடன் பார்ப்போம்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

2014-ம் ஆண்டின் முற்பகுதி. MBBS Final year முடித்துவிட்டு, பயிற்சி மாணவனாக சேர்ந்து இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது.

மெடிசின் போஸ்டிங்கிலிருந்து சர்ஜரிக்கு உற்சாகமாகத் தாவினேன். அப்போது சர்ஜரி டிபார்ட்மென்டில் மேற்படிப்பு பயிலும் PG மாணவர்கள் யாருமில்லை. எனவே, நாங்கள்தான் அங்கு ராஜாக்கள்.

காலையில் வந்து நோட்ஸ் போடுவது முதல், மாலை நீரிழிவு நோயாளிகளின் பாதத்தில் வழியும் சீழை அகற்றுவது வரை எல்லாமே நாங்கள்தான்.

சில நோயாளிகள் எங்களை, `பெரிய டாக்டர் இன்னிக்கு வரலயா ?' என எங்கள் அசிஸ்டன்ட் புரொபசரிடமே கேட்டு அவர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அந்த அளவுக்கு அங்கு எங்கள் ராஜ்ஜியம்தான்.

Representational Image
Representational Image

ஒருநாள் காலை வழக்கம்போல வார்டு ரவுண்ட்ஸ் சென்றபோது, இரண்டாவது எண் கட்டிலில் ஒரு பக்கமாக சாய்ந்து படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள் அந்தப் பாட்டி.

தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்ப வேண்டாமென அவரைக் கடந்து நடந்து சென்றேன். திடீரென என் ஒயிட் கோட்டை யாரோ இழுப்பதைப் போன்று இருந்தது.

`கண்ணு. இந்தப் பாட்டிய பாக்க இங்கயும் வந்துட்டயா?'

அது பார்வதி பாட்டி.

நான் இதற்குமுன் இருந்த மெடிசின் போஸ்டிங்கில், மஞ்சள்காமாலை நோய்க்காக அட்மிட் ஆகியிருந்தார்.

மெடிசின்தான் எங்களின் முதல் போஸ்டிங் என்பதால் எல்லா நோயாளிகளையும் சலிக்கும் வரை ஆர்வமுடன் பார்ப்போம்.

நோயாளிகளுக்கு நரம்பு ஊசி போடப் பழகினோம். மூத்திரப் பையின் நுணியை எப்படி வலிக்காமல் பிறப்புறுப்பின் உள்ளே நுழைப்பது என கற்றுக்கொண்டோம். நீண்ட கால நோயால் அவதிப்படுபவர்களுக்கு மனநலம் சீராக இருக்க, அவர்களிடம் எப்படி பேச வேண்டும் என பயிற்சி செய்தோம். இப்படிப் பல.

இப்படித்தான் பார்வதி பாட்டியுடனும் நான் பேசினேன். அவருக்குத் தேவையாக மருந்துகளை எடுத்துக்கொடுத்து உட்கொள்ளச் செய்தேன். ரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் அதை உடனடியாக அவரிடம் படித்துக் காண்பித்தேன்.

`ஒன்றுமில்லை பாட்டி. சரியாகிடும். நல்லா சாப்பிடுங்க' என்று ஆறுதலாகப் பேசினேன். அதற்கு, `சரி கண்ணு' என்பார் அவர்.

வார்டில் உள்ள மற்ற நோயாளிகள், நான் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் பார்வதி பாட்டியிடம், `உங்க டாக்டர் வந்துட்டாரு பாரு' என்பார்கள்.

Representational Image
Representational Image

மதிய வேளைகளில் மெடிசின் போஸ்டிங்கில் பெரும்பாலும் வேலை இருக்காது.

காலை வார்டு ரவுண்ட்ஸில் நோயாளிகள் யாராவது சிறிதாக காது வலி என்று சொன்னால் போதும், உடனே ENT ஒப்பீனியன் வாங்கிடு என சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள் அசிஸ்டன்ட் புரொபசர்கள். காதில் டார்ச் கூட அடித்துப் பார்க்க அவர்களுக்கு நேரம் இருக்காது. இம்மாதிரியான ஒப்பீனியன்கள் வேலைகளை மதிய நேரத்தில்தான் செய்வோம்.

ENT புரொபசர் நாங்கள் போகும் நேரத்தில், மதிய உணவு உண்ட மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருப்பார். எரிச்சலுடன் என்ன பண்ணுது என்று நோயாளியிடம் கேட்பார். ஒன்றும் இல்லை சார் என்று நோயாளி பதில் சொல்ல, அருகில் நிற்கும் என்னை அண்ணாந்து பார்த்து முறைப்பார் ENT புரொபசர்.

பதற்றத்துடன், `காலை வார்டு ரவுண்ட்ஸ்ல காது வலி இருக்குனு சொன்னையே' என்று நோயாளியிடம் நான் கேட்பேன். சிம்பிளாக,

`இப்போ இல்லையே' என்பார். இப்படி பல கூத்துக்கள் மதிய வேளையில்தான் அறங்கேறும்.

அப்படி ஒரு மதிய வேளையில் பார்வதி பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, தன் குடும்பக் கதைகளை எல்லாம் ஒப்புவித்தார் பார்வதி பாட்டி.

பார்வதி பாட்டியின் சொந்த ஊர் விழுப்புரம் பக்கம் உள்ள ஒரு சிறிய கிராமம். கணவர் விவசாயம் பொய்த்துப் போனதில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். ஒரே மகன். அவனும் கூலி வேலை செய்து பிழைப்பவன். வேறு யாரும் சொந்தம் என்று இல்லை.

அறுபது வயதாகும் பார்வதி பாட்டி, `நான் இதுவர ஆஸ்பத்திரிக்கு வந்ததே இல்ல கண்ணு. உன்னையெல்லாம் பாக்கணும்னு ஆண்டவன் அனுப்பியிருக்கான் போல' என்று சிரித்தபடியே என் கன்னங்களைத் தடவினார். அன்றோடு என் மெடிசின் போஸ்டிங்கும் நிறைவு பெற்றிருந்தது.

அடுத்த போஸ்டிங் சர்ஜரியில் சேர்ந்தேன். ஒரு வாரம் சென்றிருக்கும். அப்போதுதான் வார்டு ரவுண்ட்ஸில் பார்வதி பாட்டி என்னை இழுத்து,

`கண்ணு. இந்தப் பாட்டிய பாக்க இங்கயும் வந்துட்டயா?' என்றார். (மேலே நான் குறிப்பிட்டது)

Representational Image
Representational Image

`என்ன பாட்டி நீங்க இன்னும் டிஸ்சார்ஜ் ஆகலயா?' என்றேன் நான்.

`இல்ல கண்ணு. என் வயித்துல ஏதோ கட்டி இருக்காம். அத ஆப்ரேஷன் பண்ணி எடுக்கணுமாம். அதனால அங்க இருந்து இங்க மாத்திட்டாங்க கண்ணு' என்றார் பார்வதி பாட்டி.

உடனே பார்வதி பாட்டியின் case sheetஐ எடுத்து வாசித்தேன். அதில் periampulary carcinoma என்று எழுதி இருந்தது. அதாவது கணையம் மற்றும் குடல் பகுதிகளைச் தாக்கும் புற்றுநோய்.

`ஒன்னுமில்ல பாட்டி. சரியாகிடும். நல்லா சாப்பிடுங்க' என்று இரண்டு மாதத்துக்கு முன்பு நான் சொன்னது நியாபகம் வந்தது. சற்று மனமுடைந்தேன். அதே வரியை உச்சரிப்பு மாறாமல் அன்றும் திரும்பச் சொன்னேன்.

`ஒன்றுமில்லை பாட்டி. சரியாகிடும். நல்லா சாப்பிடுங்க'.

தன்னிலை என்னவென்று தெரிந்தும், மருத்துவர்கள் ஆறுதலாகப் பேசும் நாலு வார்த்தைகளுக்காக ஏங்கும் நோயாளிகள் இங்கு அதிகம்தானே.

பார்வதி பாட்டியும் அப்படித்தான். `நமக்கு ஏதோ ஒரு பெரிய வியாதி இருக்கிறது. நாம் வாழும் காலம் இனி குறைவுதான்', என்று முடிவு செய்துவிட்டுதான் அன்று அந்தக் கட்டிலில் அப்படி உறங்கிக் கிடந்திருக்கிறார். ஆனாலும் அதே அன்புடன், அதே சிரிப்புடன் என்னைப் பார்த்ததும் குழந்தையைப் போல துள்ளிக் குதித்தார்.

பார்வதி பாட்டிக்கு சனிக்கிழமை ஆபரேஷன் என்று முடிவாகியிருந்தது. ஆனால், ட்யூட்டி ரோஸ்டரின்படி எனக்கு, அதற்கு முந்தைய தினமாக வெள்ளிக்கிழமை ஆபரேஷன் தியேட்டர் போக வேண்டிய சூழல். உடனே என் நண்பனிடம் எனக்கு சனிக்கிழமையும், அவனுக்கு வெள்ளிக்கிழமையும் ஆபரேஷன் தியேட்டர் ட்யூட்டி வருமாறு மாற்றிக்கொண்டேன்.

Representational Image
Representational Image

உண்மையில் பார்வதி பாட்டிக்கு செய்யப் போகும் சர்ஜரியை நிறைவு செய்ய ஒரு முழு நாள் தேவைப்படும். Whipples procedure எனப்படும் அது கணையத்தின் தலைப்பகுதி, டியோடினத்தின் முன்பகுதி மற்றும் பித்தப்பையை அகற்றி வயிற்றுடன் வைத்து தைப்பது. சர்ஜரியை எங்கள் புரொபசர்கள் ஐந்து பேர் மாறி மாறி செய்வார்கள். அவர்களுக்கு கத்தி எடுத்து கொடுப்பதில் ஆரம்பித்து, அவர்களின் மேல் கோட்டில் போடப்பட்ட முடிச்சுகளை அவிழ்ப்பது வரை நாங்கள்தான் செய்திட வேண்டும். ஒருநாள் முழுக்க அவர்கள் அருகிலேயே நின்று அசிஸ்ட் செய்திட வேண்டும். இதையெல்லாம் மனதில் கொண்டே சனிக்கிழமைக்கு மாற்றித் தர உடனே சம்மதம் சொல்லியிருக்கிறான் என் நண்பன்.

சனிக்கிழமையும் வந்தது. காலை பத்து மணிக்கு சர்ஜரி ஆர்மபமாக இருந்தது. நான் ஏழு மணிக்கே ஆபரேஷன் தியேட்டர் சென்றுவிட்டேன். பார்வதி பாட்டிக்கு வென்ஃப்ளான் போடுவதிலிருந்து, அவரை உள்ளே அழைத்து வந்து மயக்கமருந்து மருத்துவரிடம் ஒப்படைக்கும் வரை சகல வேலைகளையும் நானே செய்தேன்.

சரியாக பத்து மணிக்கு ஆரம்பித்த சர்ஜரி மாலை 6 மணிக்கே முடிந்தது. அதுவரை யாரும் தேநீர் கூட அருந்தவில்லை. தண்ணீர் மட்டும் குடித்தோம். அதுவும் யாராவது வாயில் ஊற்றி விடுவார்கள்.

ஏழு மணி அளவில் வெளியே வந்த நான் பார்வதி பாட்டியின் மகனை அழைத்து, `சர்ஜரி நல்லபடியாக முடிந்தது. ரத்தம் மட்டும் தேவைப்படும். உடனே ரத்தம் கொடுக்க யாரையாவது அழைத்து வாருங்கள்' என்றேன். நன்றி சொல்லிவிட்டு மயக்கத்தில் இருக்கும் பார்வதி பாட்டியைப் பார்க்கச் சென்றார் அவர்.

Representational Image
Representational Image

அடுத்த நாள் எனக்கு விடுமுறை. திங்கட்கிழமை காலை வழக்கம் போல சர்ஜரி வார்டில் நோட்ஸ் போட்ட பின்பு, பார்வதி பாட்டியைப் பார்க்க Surgical ICU வார்டுக்குச் சென்றேன். ஆனால், அவர் அங்கு இல்லை. வார்டின் ஓரமாக பார்வதி பாட்டியின் மகன் நின்றுகொண்டிருந்தார்.

அருகில் சென்று, `பாட்டி எங்கே? வேற வார்டு ஷிப்ட் பண்ணிட்டாங்களா? என்று சிரித்தவாறே கேட்டேன்.

`நேத்தே இறுதிச் சடங்குலாம் முடிச்சாச்சு சார்' என்றார் அவர்.

தூக்கிவாரிப்போட்டது எனக்கு.

`என்ன சார் ஆச்சு? என்றேன்.

`ஆபரேஷன் முடிஞ்ச இரண்டு மணிநேரம் அப்பறம் கண் முழிச்சாங்க சார். நல்லாதான் பேசுனாங்க. ஆனா அன்னிக்கு நைட்டே BP கம்மி ஆகிடுச்சு. இதயத் துடிப்பும் சீராக இல்ல. ரத்தம் அதிகமா போனதால வயசான உடம்பு தாங்கலனு உங்க கூட இருப்பாரே ஒரு டாக்டர், அவரு சொன்னாரு சார்' என்றார் கலங்கியபடி.

என்ன பேசுவது என்று தெரியாமல் உறைந்து போய் நின்றிருந்தேன் நான்.

'அம்மாவோட பொருள்கள் சிலது இங்கியே இருக்கு. அத கொண்டு போக வந்தேன். அப்படியே உங்கள பாத்துட்டு போக நின்னுட்டு இருந்தேன் சார்' என்றார் அவர்.

என்னிடம் எந்தப் பதிலும் இல்லை.

விடைபெற்று அங்கிருந்து நகர்ந்து சென்ற அவர், சிறிது தூரம் சென்றுவிட்டு திரும்பவும் என்னருகில் வந்தார்.

`சார். ஆபரேஷன் முடிஞ்ச அப்பறம் ஒரு 8 மணி நேரம்தான் அம்மா உயிரோட இருந்தாங்க. அந்த 8 மணி நேரத்துல உங்க பேர ஒரு எட்டு முறையாச்சும் சொல்லிருப்பாங்க. உங்கள பாக்கணும்னு ஆசப்பட்டாங்க சார். ஆனா முடியாம போச்சு' என்று சொல்லிவிட்டு நடந்துசென்றார் அவர்.

Representational Image
Representational Image

அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் என்னை அறியாமல் வழிந்துகொண்டிருந்தது.

எத்தனையோ நோயாளிகளை பின்பு நான் பார்த்திருந்தாலும், பார்வதி பாட்டியின் நினைவுகள் காற்றில் ஆடும் விளக்கொளியைப் போல உள்மனதில் இன்றும் ஆடிக்கொண்டே தான் இருக்கிறது.

`கண்ணு. இந்தப் பாட்டிய பாக்க இங்கயும் வந்துட்டயா?' என்று புருவங்களை உயர்த்தி, கண்களை விரித்துக் கேட்ட அந்த இரண்டாம் எண் கட்டிலில் இருந்த பார்வதி பாட்டியை எப்படி என்னால் மறக்க முடியும்?

-சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு