Published:Updated:

93 வயதில் ஒரு லட்சியம்!

டி.கே.ராமசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
டி.கே.ராமசாமி

கடைசியாக புதுக் கோட்டையில மேனேஜராக இருக்கும்போது 1986-ல் ஓய்வுபெற்றேன்.

மூக்குக் கண்ணாடி போடாமல் இரவு நேரத்திலும் பேப்பர் படிக்கிறார், பள பள பற்களால் அரிசி முறுக்கை அநாயசமாகக் கடித்துச் சாப்பிடுகிறார், கைத்தடி இல்லாமல் சாதாரணமாகத் தெருவைச் சுற்றிவருகிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த டி.கே.ராமசாமி. ‘அதனால் என்ன?’ என்கிறீர்களா? அவருக்கு வயது 93 என்பதுதான் நாம் நம்பியே ஆக வேண்டிய ஆச்சர்யம். இந்த வயதிலும் அவருக்கு ஒரு லட்சியம் இருக்கிறது. அதை அந்த ‘இளைஞர்’ வாயாலேயே கேட்போம்.

“நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே திருவட்டாறில். தண்ணீர் செழிப்பான ஊரு, எப்பவும் பச்சை பசேல்னு இருக்கும். மழை பெய்தால் வீட்டுல இருக்க முடியாத அளவுக்குத் தண்ணீர் ஓடும். 26.05.1928-ல பிறந்த நான், பள்ளிப்படிப்புக்காக நாகர்கோவில் எஸ்.எல்.பி ஸ்கூல்ல சேர்ந்தேன். தமிழ் தாய்மொழி என்றாலும் மலையாள மீடியத்தில் படித்தேன். 1944-ம் வருஷம் எஸ்.எஸ்.எல்.சி முடித்தேன். அப்போது எஸ்.எஸ்.எல்.சி-ன்னு சொல்லமாட்டாங்க. இ.எஸ்.எல்.சி அதாவது இங்கிலீஸ் ஸ்கூல் லிவிங் சர்ட்டிபிகேட்னு சொல்லுவாங்க. எஸ்.எல்.பி ஸ்கூல்ல படிக்கும்போது முன்னாள் எம்.பி சங்கரலிங்கம், முன்னாள் அமைச்சர் மனோகரன் ஆகியோர் அந்தப் பள்ளியில் எனக்கு ஒரு வருட ஜூனியராகப் படித்தார்கள். என் தாய் மாமாவுக்கு ஒன்பது பிள்ளைகள். அதில் மூத்த மகளான கஸ்தூரியை எனது 21-ம் வயதில் திருமணம் செய்துகொண்டேன். மனைவி கஸ்தூரி போன வருஷம் இறந்துட்டா. ஒரு மகள், இரண்டு மகன்கள். ஏழு பேரப்பிள்ளைகள் என மகிழ்ச்சியான குடும்பம்” என்று தனது குடும்பம் குறித்துச் சொன்னவர். நகராட்சியில் வேலைக்குச் சேர்ந்தது முதல் ஓய்வுபெற்றது வரை பேசும்போதே முகத்தில் நினைவலைகள் மோதுகின்றன.

டி.கே.ராமசாமி
டி.கே.ராமசாமி

“திருமணத்துக்கு முன்பே 1946-ம் ஆண்டு என்.எம்.ஆர். மஸ்தூர் என்ற சாலைப்பணியாளர் பிரிவில் நாகர்கோவில் நகராட்சியில் வேலையில சேர்ந்தேன். சாலைப்பணின்னு சொன்னாலும் மாற்றுப்பணி என்ற கணக்கில் அலுவலக வேலையில் அமர்த்தினாங்க. தினக்கூலி அடிப்படையில ஒரு நாள் ஒரு ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. நாகர்கோவில் நகராட்சியில தொடர்ச்சியா 25 வருஷம் வேலைபார்த்தேன். எமர்ஜென்சி காலத்தில் எல்லாரையும் பணிமாற்றம் செய்தே ஆகணும்கிறதனால, என்னை பத்மநாபபுரம் நகராட்சிக்கு பணி மாற்றி னாங்க. அதுக்கப்புறம் திருநெல்வேலி, சிவகாசி, கும்பகோணம்னு மொத்தம் 14 முறை பணிமாறுதலில் ஊர் ஊராகப் போனேன். கடைசியாக புதுக் கோட்டையில மேனேஜராக இருக்கும்போது 1986-ல் ஓய்வுபெற்றேன்.

எனக்கு எந்த நோய் நொடியும் கிடையாது. இது வரை உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரிக்குப்போய்ப் படுத்தது இல்ல. அரிசிச் சோற்றைக் குறைத்துவிட்டு, காய்கறிகளும் பழங்களும் அதிகமாகச் சாப்பிடுவேன். தினமும் காலையில 6 மணிக்கு எழும்பிடுவேன். பல் விளக்கி விட்டு ஒரு டீயும், கூடவே பிஸ்கட் அல்லது சிப்ஸ் சாப்பிடுவேன். தினமும் கண்ணாடியைப் பார்த்து செல்ப் ஷேவிங் செய்து கொள்வேன். காலை 9 மணிக்கு ஒரு தோசை அல்லது ரெண்டு இட்லி, இல்லைன்ன ஒரு சப்பாத்தி மட்டும் சாப்பிடு வேன். கூடவே ஒரு புரூ காபியும் குடிப்பேன். நான் சுகர் ரொம்ப யூஸ் பண்ணுவேன். ஒரு கப் காபிக்கு நாலு கரண்டி சுகர் போடு வேன்னா பாத்துக் கோங்க. காலையில 11 மணிக்கு ஒரு டீயுடன் எதாவது பலகாரம் சாப்பிடுவேன். மதியம் ஒரு மணிக்கு ஒரு சீப் வாழைப்பழம் சாப்பிடுவேன். அதன் பிறகு தலைக்கு நல்லெண்ணெய் தேச்சுக் குளிப்பேன். மாலை 3 மணிக்கு ஒரு கைப்பிடி அளவு சோறு சாப்பிடுவேன். கூட பருப்பு சேர்த்துப்பேன். இல்லைன்ன எதாவது கூட்டு வச்சு சாப்பிடுவேன். சாயங்காலம் 5.30 மணிக்கு ஒரு டீயும் வடையும் சாப்பிடுவேன். டெய்லி ரசவடை அல்லது மெதுவடை, பருப்பு வடை எதாவது ஒரு வடை சாப்பிடுவேன். எனக்கு வடைக்கு மட்டும் மாசம் ஆயிரம் ரூபாய் ஆகும்னா பாத்துக்கோங்க. இதுவரை கண்ணாடி போட்டதில்லை. தமிழ், மலையாளம், இங்கிலீஸ் பேப்பர்கள் தினமும் படிப்பேன். இரவு நேரத்திலயும் பேப்பர் படிக்கும் அளவுக்குக் கண் தெளிவா இருக்கு. சாயங்காலம் 6 மணிக்கு கிருஷ்ணன் கோயில் தேர் மூட்டில் நண்பர்கள் ஒன்றாகக் கூடுவோம். அதுக்காக தெருவில நடந்துபோறது மட்டும்தான் என் ஒரே உடற்பயிற்சி. அங்க இருந்து ராத்திரி 9 மணிக்கு வீட்டுக்கு வந்து குளிப்பேன். ராத்திரிக்கு ஒரு சப்பாத்தியும், ஒரு கப் பாலும் சாப்பிடுவேன். ராத்திரி 11 மணிக்கு முன்னாடியே தூங்கிருவேன்” என்று தன் அன்றாட வாழ்க்கையை விவரிப்பவருக்கு ஒரு லட்சியம் இருக்கிறது.

டி.கே.ராமசாமி
டி.கே.ராமசாமி

“நாற்பது வருஷம் வேலை செய்து ஓய்வுபெறும் சமயத்துல மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினேன். அதன்பிறகு பென்சன் பணம் கிடைத்து. ரிட்டையர்டு ஆகி 80 வயசு தாண்டினப்ப பென்சன் தொகையை 20 சதவிகிதம் அதிகரிச்சாங்க. 85 வயதில் 30 சதவிகிதம், 90 வயதில 40 சதவிகிதம் அதிகரிச்சாங்க. இந்த மூணும் சேர்ந்து எனக்கு இப்ப மாசம் அறுபதாயிரம் ரூபாய் பென்சன் வருது. இன்னும் இரண்டு வருஷத்தில் எனக்கு 95 வயது ஆகும். அப்போது பென்சன் 50 சதவிகிதம் அதிகரிக்கும். அப்போது மாசம் தொண்ணூறு ஆயிரம் ரூபாய் பென்சன் வரும். நூறாவது வயதில் இரட்டிப்பு ஆகி ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் பென்சன் வரும். ஒரு ரூபாய் சம்பளத்துல வேலைக்குச் சேர்ந்த நான் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல பென்சன் வாங்குனா அது பெருமையான விஷயம்தானே” என்று சிரிக்கிறார்.

கண்டிப்பா வாங்குவீங்க!