Published:Updated:

அழியாத புயலின் சுவடுகளும் இடைவிடாது ஒலிக்கும் அழுகுரல்களும்! -வாசகர் பகிர்வு #தனுஷ்கோடி #MyVikatan

தனுஷ்கோடி
News
தனுஷ்கோடி

வழக்கத்துக்கு மாறாக ஒரு வித நிசப்தம் அன்று கடலை சூழ்ந்திருந்தது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அம்பன் புயல் மேற்கு வங்காளத்தை ஒரு புரட்டு புரட்டியுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக புயலின் கொடூர முகத்தை வாட்ஸ்ஆப்பிலும் செய்தி தொலைக்காட்சியிலும் பார்த்து வருகிறோம். இதேபோல 1964-ம் ஆண்டின் இறுதியில் ஒரு புயல் தமிழகத்தை புரட்டிப்போட்டது. அதைப் பற்றி இங்கே பகிர்கிறேன்..

1964 டிசம்பர் 23.

காலை 8 மணி.

வழக்கத்துக்கு மாறாக ஒரு வித நிசப்தம் அன்று கடலை சூழ்ந்திருந்தது. கருமை நிற மேகங்கள், தனுஷ்கோடி முழுவதிலும் பரவியிருந்தன. முந்தைய நாள் கடல் சற்று கொந்தளிப்பாக காணப்படவே மீனவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்தனர்.

'இலங்கையில் சில பகுதிகளைத் தாக்கிய புயல் ஒன்று, தனுஷ்கோடியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது' என ரேடியோவின் எச்சரிக்கையை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

தனுஷ்கோடி
தனுஷ்கோடி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரவு 8 மணி.

கடலோர குடிசைகளின் முன் இருந்த ஞமலிகள் (ஒரு வகை நாய் இனம்) கூட்டம் , இடைவிடாமல் கத்திக்கொண்டிருப்பதை அச்சத்துடன் பார்த்தனர் ஊர் மக்கள்.

ஆர்ப்பரிக்கும் கடலின் ஓசையைத் தாண்டி, காதைப் பிளக்கும் அளவுக்கு பெருஞ் சத்தம் ஒன்று எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தது.

என்னவென்று காண குடிசையினுள் இருந்த மக்கள் வெளியே வர, நொடிப் பொழுதில் வானுயர எழும்பிய கடல் அலைகள், அவர்களை சுருட்டி வாறிக்கொண்டு முன்னோக்கி நகர்ந்தது.

தென்னை மரங்களும் பனை மரங்களும் ஆகாயத்தில் அலைந்தன. மரண ஒலங்கள் இடைவிடாது ஒலித்தன. தனுஷ்கோடி தீவு சற்று நேரம், இந்திய வரைபடத்தில் இருந்தே காணாமல் போய் இருந்தது.

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்குச் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று, அப்படியே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மறைந்து போனது. அதில் பயணம் செய்த குஜராத் மருத்துவ மாணவர்கள் உட்பட 150 பேர் கடலுக்குள் தொலைந்து போனார்கள்.

புயலின் கோரத்தாண்டவத்தால் 3000-க்கும் அதிகமாக மக்கள் காவு வாங்கப்பட்டனர்.

தனுஷ்கோடி
தனுஷ்கோடி

ஒரே நாளில் தன் மொத்தப் பசியையும் தீர்த்துக்கொண்டது கடல்.

புயல் ஏற்படுத்திய பாதிப்பு தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்குத் தெரியவே இரண்டு நாள்கள் பிடித்தன. அந்த அளவுக்குத் தகவல் தொடர்பு முழுவதும் துண்டாகியிருந்தன.

புகழ்பெற்ற பாம்பன் பாலம் தனித்துவமான தன் அடையாளத்தை இழந்திருந்தது. அதன் தூண்கள் மட்டுமே நின்றுகொண்டிருந்தன.

ராமேஸ்வரத்தின் கோயிலினுள் வெள்ளம் புகுந்ததால், பக்தர்கள் பலர் அங்கே பிணமாகக் கிடந்தனர்.

காமராஜர் அப்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து இருந்த நேரம். விஷயத்தைக் கேள்விப்பட்ட அவர், அடுத்த நாள் டெல்லியிலிருந்து புறப்பட்டு அவசர அவசரமாக சென்னை வந்து சேர்ந்தார். அப்போதைய முதல்வர் பக்தவத்சலத்தோடு விமானம் மூலம் தனுஷ்கோடியைப் பார்வையிட்டபோதுதான் புயலின் உண்மையான முகம் தெரிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்பு எஞ்சியிருந்த மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் காமராஜர் செய்து கொடுத்தார். எதிர்க்கட்சியின் சார்பாக எம்.ஜி.ஆரும் பல உதவிகளை செய்து உதவினார்.

தனுஷ்கோடி 1500-ம் ஆண்டிலேயே ஒரு பெரிய பேரழிவை சந்தித்து தனித் தீவாக மாறியதாகவும், அதற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தின் தொடர் நிலப்பரப்பைத்தான் கொண்டிருந்ததாகவும், வரலாற்று செய்திகள் உள்ளன. அதன் பிறகு நடந்தேறிய இந்தப் பேரழிவு தனுஷ்கோடியை முற்றிலும் மாற்றி அமைத்தது.

ஆம். இயற்கை அன்னையின் கொடூர முகத்தின் அடையாளமாகவே இன்று தனுஷ்கோடி காட்சியளிக்கிறது.

தனுஷ்கோடி
தனுஷ்கோடி

`தமிழ்நாட்டின் கொடிய இயற்கைப் பேரழிவு' என வர்ணிக்கப்படும் இது முடிந்து, ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அன்று தன் அழகிய உருவத்தை இழந்த தனுஷ்கோடி, இன்று வரை மீண்டு வரவே இல்லை.

மனிதர்கள் வாழ தகுதியற்ற இடம் என்று தமிழக அரசு தனுஷ்கோடியை அறிவித்தது.

சில மாதங்களுக்கு முன்பு நண்பர்களுடன் தனுஷ்கோடி சென்று வந்தேன். கடலால் இழுத்துச் செல்லப்பட்ட ரயிலின் பாகங்கள் சில, இன்றும் சாலையோர மணல் மேடுகளில் காணக்கிடக்கிறன.

உடைந்து போய் பாதி அளவில் காட்சியளிக்கும் கட்டடங்களும், தேவாலயம் ஒன்றும் இன்று சுற்றுலாப் பயணிகளின் செல்போனுக்கு போஸ் கொடுக்கின்றன.

`இதுதான் அப்போதைய ரயில் நிலையம்' என என்னோடு வந்திருந்த நண்பன் ஒருவன், அழுக்குப் படிந்த செங்கற்கள் குவியல் ஒன்றைக் காண்பித்தான்.

உற்று அதை நோக்கியபோது, இடைவிடாது ஒலிக்கும் அழுகுரல்கள் போல ஏதோ ஒன்று என் காதருகில் வந்து என்னைத் தீண்டிச் சென்றது.

-மருத்துவர். சரத், கடலூர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/