Published:Updated:

`` `கிட்டப் போனா கடிச்சிடுவாரு'ன்னாங்க, ஆனா நான் தயங்கல!'' மனநலம் பாதித்தவரை மீட்ட காவலர்

மனநலம் பாதித்த மனிதருக்கு உணவு தந்து உடை தந்து மனநலசிகிச்சைக்கும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் ஒரு காவலர்.

மனநலம் பாதித்தவரை சாப்பிட வைக்கும் அருண்
மனநலம் பாதித்தவரை சாப்பிட வைக்கும் அருண்

காக்கிச்சட்டை போட்டவர்கள் கண்டிப்பானவர்கள் மட்டுமல்ல; கருணையும் மிக்கவர்கள் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறது காவலர் ஒருவரின் கருணைமிக்க செயல்.

கரூர் அருகே மனநலம் பாதித்து, குப்பைகளில் கிடக்கும் உணவை உண்டு வாழ்ந்த நபர் மீது அன்பு காட்டி, அவருக்கு உணவு தந்து அவருக்கான மனநலச் சிகிச்சைக்கும் ஏற்பாடுசெய்து கொடுத்திருக்கிறார் காவல்துறையில் பணியாற்றும் அருண்.

 மனநலம் பாதித்த நபர்
மனநலம் பாதித்த நபர்
`பரிதாபமாக சாலையில் அலைந்து கொண்டிருந்தார்!’- மனநலம் பாதித்தவரை மீட்டு நெகிழ வைத்த கரூர் அமைப்புகள்

கரூர்-திருச்சி சாலையில் உள்ள மாயனூர் டோல் பூத் அருகே கடந்த சில ஆண்டுகளாகச் சுற்றி வந்திருக்கிறார் அந்த மனநலம் பாதிப்படைந்த நபர். கசங்கிய அழுக்கு உடையும் வெட்டப்படாத பரட்டைத்தலையும் முணுமுணுக்கும் சொற்களுமாக அங்கிமிங்கும் சுற்றிவருவார். புதர்களுக்குள் தூங்கி குப்பைத்தொட்டிகளில் கிடக்கிற கெட்டுப்போன உணவை உண்டு பல ஆண்டுகளாகவே வாழ்ந்து வந்திருக்கிறார். அவரிடம் யாருமே நெருங்குவதில்லை. நெருங்குவோரைக் கடிக்க முயல்வதாகப் பரவலாகச் சொல்லப்பட்டதாலேயே யாரும் அவரைக் கண்டும்காணாமல் இருந்திருக்கிறார்கள்.

முடிவெட்டியபோது...
முடிவெட்டியபோது...

இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு குளித்தலை போக்குவரத்துக் காவல் பிரிவிலிருந்து பணிமாறுதலில் மாயனூர் டோல் பூத் பகுதிக்குத் தலைமை காவலராக வந்தார் அருண்.

டியூட்டிக்குச் சேர்ந்த முதல்நாளே அவர் கண்களில், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த மனிதர் தென்பட்டிருக்கிறார். அவர் குப்பையில் கிடந்த அசுத்த உணவை உண்பதைப் பார்த்து பதறிப்போன அருண், அங்கே இருந்த ஹோட்டலில் நல்ல உணவை வாங்கி, அவருக்குச் சாப்பிடக் கொடுத்திருக்கிறார். ஆனால், அதைத் தூக்கி முகத்தில் எறிந்திருக்கிறார் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த மனிதர். ஆனால், முயற்சியை விடாமல் தொடர்ந்து உணவை வாங்கிக் கொடுத்து, அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் அருண் அனுசரணையாக நடந்துகொள்ள, ஆச்சர்யம் ஏற்படுத்தும்விதமாக அந்த மனிதர் உணவை சாப்பிட்டிருக்கிறார்.

மனநலம் பாதித்தவரை சாப்பிட வைக்கும் அருண்
மனநலம் பாதித்தவரை சாப்பிட வைக்கும் அருண்

அன்றிலிருந்து அருணுக்கும் அந்த மனிதருக்கும் இடையே நல்ல நட்பு உருவாக... யாரிடமும் பேசாதவர், யார் தந்தாலும் எதையுமே பெற்றுக்கொள்ளாதவர் அருணோடு அன்பாக இருக்கத்தொடங்கி இருக்கிறார். கடந்த இரண்டு மாதகாலமாக அந்த மனிதருக்கு உணவு, டீ என்று வாங்கிக்கொடுத்து பசியாற்றி வந்திருக்கிறார், அருண். அதோடு, அந்த மனிதரைக் குளிக்கவைத்து முடிவெட்டி அவருக்குப் புதுஉடையும் அணிவித்து ஆளையே மாற்றியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மனநலக் காப்பகத்திற்குத் தகவல் கொடுத்து, அவரை பெரும்முயற்சி எடுத்து, சிகிச்சைக்கும் அனுப்பிவைத்திருக்கிறார்.

தலைமை காவலர் அருணின் இந்த நற்பணிக்குப் பலதரப்பிலும் பாராட்டு கிடைத்திருக்கிறது.

``பொதுவாக இதுபோன்ற மனநலம் பாதித்த மனிதர்களைக் கண்டால், எனக்கு மனசு கனத்துப்போயிரும். கவலைகளால் நிரம்பி நிரம்பி ஒருகட்டதில் இப்படி மனநலம் பாதிக்கப்பட்டு நிற்கும் அவர்களை நினைத்து, பெருங்கவலை எனக்குள் சூழும். அவர்களுக்கும் சொந்தபந்தங்கள் இருப்பார்களே, அவர்கள் கூட மனநலம் பாதித்தவரோடு ஏன் இவர்களை கண்டுகொள்ளவில்லை என்று நினைப்பேன். அப்படி நான் பயணிக்கும் இடங்களில் இப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தென்பட்டால், அவர்களை என் செல்போனில் போட்டோ எடுத்து வைத்துக்கொள்வேன். உடனே, அந்தப் பகுதிகளில் இருக்கும் மனநலக் காப்பகங்களைத் தொடர்புகொண்டு, இவர்களை பற்றிய தகவலைக் கொடுத்து, மனநலக் காப்பகத்துக்கு சிகிச்சைக்கு அனுப்ப முயற்சி எடுப்பேன்.

மனநலம் பாதித்தவரோடு அருண்
மனநலம் பாதித்தவரோடு அருண்

இந்நிலையில்தான், மாயனூர் டோல் பூத் பகுதி போலீஸ் பீட் பகுதிக்குத் தலைமை காவலராகப் பணிமாறுதலில் வந்தேன். வந்த முதல்நாளே இந்த மனநலம் பாதித்த நபரைப் பார்த்தேன். குப்பையில் கிடந்த சுகாதாரமற்ற உணவைச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தார். அதைப்பார்த்ததும், ஒருகணம் ஆடிப்போயிட்டேன்.

உடனே, அந்த நபருக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். முதல்ல சாப்பிடலை. போராடித்தான் சாப்பிட வைத்தேன். தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு என் சொந்தச் செலவில் உணவு வாங்கிக்கொடுத்துட்டு இருந்தேன். ஆனா, இந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும், 'அந்த ஆள்கிட்ட போகாதீங்க. கடிச்சு வச்சுருவார். பலபேரை அப்படி கடிச்சிருக்கார்'னு சொன்னாங்க. ஆனால், அதை நான் காதுல வாங்கிக்கலை. அன்போடு பழகினேன். அவரும் அதே அளவு அன்போட என்கிட்ட நடந்துகிட்டார்.

பத்து நாளைக்கு முன்னாடி, ஊட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நண்பரான நிசாத் சேட்டை அழைத்து வந்து, மனநலம் பாதிக்கப்பட்டவரின் முடியை வெட்டினோம்.

மனநலக் காப்பக ஊழியர்களோடு மனநலம் பாதித்தவர்
மனநலக் காப்பக ஊழியர்களோடு மனநலம் பாதித்தவர்

குளிக்க வைத்து, புதுஉடை அணிவித்தோம். நேற்று இந்தப் பகுதியில் உள்ள மனநலக் காப்பகத்துக்குத் தகவல் கொடுத்து, ரொம்ப போராடித்தான் அந்த மனிதரை சிகிச்சைக்கு அனுப்பினோம். மனதுக்கு நிறைவாக ஒரு காரியத்தைச் செய்துவிட்ட மகிழ்ச்சி, இப்போ மனசுல ஊஞ்சலாடுது. இதுபோன்ற மனிதர்களுக்கு என் வாழ்நாள் முழுக்க சேவை செஞ்சுக்கிட்டே இருப்பேன்" என்றார், நெக்குருகிப்போய்!

கருணை கொண்ட காவலருக்கு ஒரு பெரிய சல்யூட்!