
மழை வரும்போல இருந்த அந்த மாலை வேளையில், வானில் அடர்ந்த கருமேகங்கள் கூடிக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தன...
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
அந்த நெடுஞ்சாலையின் மத்தியில் இருந்த சிறு பிளவில் முளைத்திருந்த செடியை அந்தச் சிறுமி யதேச்சையாகப் பார்த்தாள். எப்போதோ சென்ற, ஏதோ ஒரு வாகனத்திலிருந்து செடிக்கான விதை விழுந்திருக்க வேண்டும். நோய்த் தொற்று காரணமாக அந்த நெடுஞ்சாலை முழுவதுமாக மூடப்பட்டிருந்தது. அவளது குடும்பம் அந்தச் சாலையின் ஓரம் குடிசை போட்டுத் தங்கியிருந்தது.
நடுரோட்டில் இருந்த அந்தச் செடி அவளுக்கு மிகுந்த ஆச்சர்யம் அளித்தது. செடி அவளுடைய சுண்டு விரல் அளவு உயரம் மட்டுமே இருந்தது.
மழை வரும்போல இருந்த அந்த மாலை வேளையில், வானில் அடர்ந்த கருமேகங்கள் கூடிக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தன. அவள் செடியின் அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்து மெல்ல அந்தச் செடியைத் தடவிக் கொடுத்தாள்.

அதனுடைய இலைகள் மென்மையாக இருந்தன. அவளுடைய பொம்மையைத் தடவிக்கொடுப்பது போலவே இருந்தது.
சிறிதுநேரம் செடியின் அருகில் அமர்ந்திருந்தவள், மழைத்துளிகள் விழ ஆரம்பிக்கவே வேகமாகத் தன்னுடைய வீட்டுக்கு ஓடினாள்.
கதவின் அருகே நின்றவாறு சாலையையே பார்த்துக் கொண்டிருந்தாள். ``என்ன பாப்பா வெளியிலேயே பார்த்துட்டு நிக்கற?" என்ற அம்மாவின் கேள்விக்கு,
``அம்மா மழை பெருசா வருது. நான் ரோட்டில் ஒரு செடியைப் பார்த்தேன். குட்டியூண்டு செடிம்மா அது. இந்த மழையில அது எப்படி கஷ்டப்படுமோ தெரியல!" என்று கவலையுடன் கூறினாள்.
இதைக்கேட்ட அம்மா சிரித்துக்கொண்டே, ``பாப்பா மனுஷங்கதான் மழைபெய்ஞ்சா ஓடி வந்து வீட்டுக்குள்ள பதுங்கிக்குவோம். பறவைகளுக்கும் விலங்குகளுக்கும், மரம், செடி கொடிகளுக்கும் மழை என்பது மகிழ்ச்சியான ஒரு திருவிழாதான்.
உன்னுடைய அந்தக் குட்டிச் செடியும் மழையைச் சந்தோஷமாக அனுபவித்துக் கும்மாளம் போட்டுக்கொண்டுதான் இருக்கும். அதனால் நீ கவலைப்படாம உள்ள வா" என்றவாறு உள்ளே சென்றார்.
தனது செடி, மழையை விரும்பும் என்ற நினைவே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. `மழையை செடி அனுபவிக்கிற மாதிரியே மனிதர்களும் அனுபவித்தால் எத்தனை சந்தோஷமா இருக்கும்' என்று நினைத்தபடி வீட்டுக்குள் வந்தாள்.
சிறிது நேரத்தில் மழை நின்றது. அவள் வேகமாக ஓடிச்சென்று செடியைப் பார்த்தாள். அதனுடைய இலைகளில் நீர்த்துளிகள் நீந்திக் கொண்டிருந்தன.
மழைக்குப் பிறகு செடி மிகுந்த சந்தோஷமாக இருப்பதாக அவளுக்குப் பட்டது. ``என்ன மழையில கும்மாளம் போட்டியா?" என்றபடி செடியை மெல்லத் தடவிக்கொடுத்தாள்.

அதற்குப்பின் அவள் செடியுடனே இருக்க ஆரம்பித்தாள். அவளுடைய விளையாட்டுகளை அந்தச் செடியைச் சுற்றியே வைத்துக்கொண்டாள்.
செடி நாளுக்குநாள் வளர ஆரம்பித்தது.
ஆனால், அது என்ன வகையான செடி என்று அவளுக்குத் தெரியவில்லை. சிறிது நாள்களில் அந்தச் செடி ஒரு சிறு மொக்கு விட்டது.
`ஓ இது பூச்செடி' என்று மனதுக்குள் மகிழ்ந்தாள். அந்த மொக்கைப் பார்க்கும்போதெல்லாம் அவளது மகிழ்ச்சி எல்லை இல்லாமல் போகும். அவ்வப்போது அந்த மொக்கு போலவே தன் வாயைக் குவித்துப் பார்ப்பாள். தொடர்ந்து செடிக்கு நீர் ஊற்ற ஆரம்பித்தாள்.
மேலும் சில நாள்கள் கடந்தன. அந்த சிறு மொக்கிலிருந்து மஞ்சள் நிறத்தில் அழகான ஒரு சிறு பூ பூத்தது. அவளது புன்னகை போல அழகாக இருந்தது அந்த மஞ்சள் நிறப் பூ.
அவள் தன் தோழிகளைக் கூட்டிவந்து செடியை மகிழ்ச்சியுடன்
காண்பித்தாள். ``ஏய்! இது செவ்வந்தி பூச்செடி" என்று அவளுடைய பக்கத்து வீட்டுத்தோழி கூறினாள்.
``பூவைத் தேடி வண்டுகளும், தேனீக்களும் வந்து தேன் குடிக்கும். ஆனால் உன் பூவைத் தேடி எதுவுமே வரவில்லையே" என்றாள் பத்தாம் வகுப்பு அக்கா. அதைக் கேட்ட சிறுமி கவலையில் ஆழ்ந்தாள். அவளுடைய அம்மாவிடம் கவலையுடன் இந்த சந்தேகத்தை கேட்டாள்.
அதற்கு அம்மா ``பாப்பா நிறைய பூச்செடிகள் இருக்கிற இடத்தில்தான் தேனீ, வண்டு, பட்டாம்பூச்சி எல்லாம் தேன் குடிக்க வரும். உன் செடி ஒத்தையா இருக்கறதால அதுகளுக்குத் தெரியல போல. கொஞ்ச நாள்ள தேடிட்டு வந்துடும், நீ கவலைப்படாத" என்றார்.

அவளும் தன் செடியில் ஏதேனும் பூச்சி தேனை எடுக்க வராதா என்ற ஏக்கத்துடன் காத்திருந்தாள். அன்று மாலை அவளுடைய அப்பா ``லாக்டௌன் எல்லாம் முழுசா கேன்சல் பண்ணிட்டாங்க. நம்ம ரோட்டையும் திறந்துட்டு இருக்காங்க" என்றபடி வந்தார்.
இதைக் கேட்டவள் பதற்றத்துடன் ஓடிச்சென்று சாலையைப் பார்த்தாள்.
சாலையில் வாகனப் போக்குவரத்து துவங்கியிருந்தது. தூரத்தில் இருந்த அவளுடைய செடியைக் கண்ணீருடன் பார்த்தாள். அங்கு அவளது பூச்செடியின் முதலும் இறுதியுமான விருந்தை ஒரு பட்டாம்பூச்சி பதற்றத்துடன் ஏற்றுக்கொண்டிருந்தது!
அங்கேயே மண்டியிட்டு உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்!
-அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.