Published:Updated:

``முட்டாள் நண்டு என்று நினைத்துவிட்டேனே..!’’ - ஒரு வளர்பிறை இரவு உணர்த்திய பாடம் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

மீண்டும் ஒரு பெரிய அலை நனையாத கரையையும் நனைத்துச் சென்றது. ஏராளமான நீர்க்குமிழிகள்... நண்டு வளையாக இருக்கும்... என் அறிவு புரியவைத்தது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இளஞ்சிவப்பாய் வானத்தை மாற்றிக்கொண்டிருந்தது பணி முடித்து திரும்பும் சூரியன். பௌர்ணமிக்கு பல நாட்கள் இருக்கும் போலும். அதிக ஆரவாரமில்லாமல் கரையைத் தொட்டுக் கொண்டு​ம் என் காலை நனைத்துக்கொண்டும் இருக்கும் அலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

Representational Image
Representational Image

ஹோவென... என்னிடம் ஏதோ சொல்லும் இந்தக் கடலும் என்னுள் ஓடும் எண்ணங்களும் புதிதல்ல. இந்தக் கரை மட்டுமே புதிது. கப்பலில் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு,​ ஏதேதோ தோன்றியபடியெல்லாம் விரைவாய் முன்னேற வேண்டும் என்று எல்லோரையும் நம்பியதால்... இருந்த, இருந்திருக்கவேண்டிய எல்லாவற்றையும் தொலைத்தாயிற்று. செய்யக்கூடாதவைகளை நன்றாக அறிந்துகொண்டேன். தற்போது, ஒருவேளை அதுவும் கடலுக்கு அருகில். "எல்லாத் துறைமுகங்களிலும் அதற்கேற்ற திருடர்கள் இருப்பார்கள் என்பார்களே அதுபோல் என்னைப்போன்ற முட்டாள்களும் இருக்கவே செய்கிறார்கள்.

தன்னைப் போல் பிறரையும் நினை என்ற பாடமெல்லாம் என்னைப்போன்ற வெகுசில முட்டாள்களுக்கு மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டது என்பதை நான் புரிந்துகொள்ள சில ஆண்டுகளும், பல அவமானங்களும் தேவைப்பட்டன.

மருத நிலத்தைச் சார்ந்த எனக்கு, நெய்தல் நிலம்தான் சரிவரும் போல என்று யோசிக்கும்போதே... முட்டிவரை நனைத்த அந்த அலை, நானிருக்கிறேன்... நான் பார்த்துக்கொள்கிறேன் என ஆசுவாசப்படுத்தியதாய் தோன்றியது. சற்றே ஆறுதலாய் உணர்ந்தேன். சற்று தள்ளி​ப்போய் கரையில் அமர்ந்துகொண்டு அலை செய்யும் குறும்புகளை ரசிக்கலானேன். ஒன்று வருவதும் பின்பு போகும்போதே பின்னால் வரும் அலையை மோதி சிதறுவதுமாய் அழகு மிக அழகு அந்தச் சிதறல்கள்.

Representational Image
Representational Image

மீண்டும் ஒரு பெரிய அலை நனையாத கரையையும் நனைத்துச் சென்றது. ஏராளமான நீர்க்குமிழிகள். நண்டு வளையாக இருக்கும்... என் அறிவு புரியவைத்தது.

அப்போதுதான் பார்த்தேன் ஒரு அடர்சிவப்பு நிற நண்டு ஒன்று அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தது. அந்த அழகான சிவப்பு நிறமும் இங்கு இதுவரை பார்த்திராத வகையில் சற்றே பெரியதாகவும் இருந்ததால் கவனத்தை ஈர்த்தது.

ஒரு சிறிய பொந்துக்குள் போவதும் வருவதுமாய் இருந்தது. ஓகோ வளை அமைக்கிறது! இது என் அறிவு மீண்டும்.

அட, வெளியில் வந்து மணலைப் போடுகின்றதே... "எப்படி எடுத்துவரும்... அதற்குமா கை இருக்கும்?" மனம் சற்று அமைதியானதில் ஆணவம் சற்றே தலைதூக்கியது. இரண்டு கால்களில் ஒன்றில் மட்டும் எடுத்து வந்து பொந்திலிருந்து சற்று தள்ளிப் போடும். பிறகு, மீண்டும் மீண்டும் இதே வேலைதான் நடுநடுவே ஒரு நடனம் வேறு. முட்டாள் நண்டு. இரண்டு கால்களிலும் மணலை எடுத்து வந்தால் சீக்கிரத்தில் தோண்டி விடலாமே. மீண்டும் என் ஆணவம் நண்டைப் பரிகசித்தது.

Representational Image
Representational Image
Pixabay

சரி என்னதான் செய்கிறது என்று உற்றுப் பார்க்க ஆரம்பித்தேன். பொந்தின் பக்கம் உள்ள கொடுக்கில் மட்டுமே மணல் உள்ளது. வெளிப்புற கால் மடிந்தவாறே இருந்தது. பரிகாசம் சற்றே அதிகமானது. ஒரு சிறிய நண்டு, அந்தப் பொந்தின் அருகே வரவே நான் சும்மா மடித்து வைத்ததாக நினைத்த அந்த வெளிப்புற கால் நீண்டு, அதை விரட்டியது. பாய்ந்து ஓடியது அந்தச் சிறிய நண்டு மட்டுமல்ல என் ஆணவமும் தான்.

உள்ளிருந்து வெளியே எடுத்துவந்த மணலை போட்ட இடத்தில்தான் அதன் நடனமும். மணல் குவியல் சரிந்து, தன் பொந்திற்கு ஆபத்து வராதிருக்க குவியலை சமப்படுத்தத்தான் இடையிடையே அந்த அழகிய நடனம்.

ஏதோ ஒன்று என் மரமண்டைக்கு எட்டியதாய் அந்த நண்டுக்கும் கடலுக்கும் நன்றியைக் கூறிக்கொண்டே வளர்பிறையாய் பிரகாசித்த நிலவைப் பார்த்துக்கொண்டே கரையைக் கடந்தேன்.- சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு