Published:Updated:

அப்பா மீதான பயம் மரியாதையாக மாறிய அந்தத் தருணம்..! - மகனின் குட்டி ஸ்டோரி #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

அப்பா கோபக்காரர் எனக் கேட்டதுண்டு. ஆனால், அவர் எங்களிடம் கோபப்பட்டதில்லை. பின் ஏன் பயம்?

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

பள்ளிப் பருவம் முதல் கல்லூரிப் பருவம் வரையில் அப்பாவிடம் ஏதும் நேரிடையாகக் கேட்டு பெற்றதில்லை, நான் மட்டுமல்ல என் உடன் பிறப்புகளும்கூட. புத்தகம் வாங்க கல்விக்கட்டணம் கட்ட ஏன் ஒரு பென்சில் வாங்க வேண்டும் என்றாலும் அது அம்மாவின் மூலமாக மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு பெறப்படும். அப்பாவிடம் அவ்வளவு பயமா அல்லது அளவு கடந்த மரியாதையா ? புரியவில்லை...

Representational Image
Representational Image
Pixabay

அப்பா கோபக்காரர் எனக் கேட்டதுண்டு. ஆனால், அவர் எங்களிடம் கோபப்பட்டதில்லை. பின் ஏன் பயம்? தெரியவில்லை! நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன், தேர்வுகள் நெருங்கிக்கொண்ண்டிருந்தது, தேர்வுக்காகப் படிப்பு விடுமுறை விட்டாச்சு. நானும் என் நண்பர்களும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஊருக்கு வெளியில் இருந்த தோப்பில் படிக்கச் செல்வது வழக்கம். என் கல்லூரித் தோழர்கள் நான்கு பேர். அதில் ஒருவன் குறும்புக்காரன் மற்றவர்களை எரிச்சலூட்டி பார்ப்பதில் அவனுக்கொரு மகிழ்வு... வயது வித்தியாசம் பார்க்காமல் வம்பு செய்வான். நாங்கள் அவனது செயலை சில சமயம் ரசிப்பதுண்டு , சில சமயம் கண்டிப்பதுண்டு.

எல்லாமே விளையாட்டுத்தனமாக இருந்தது. அவன் வம்பு செய்ததில் எரிச்சலடைந்த ஒருவர் அவனது உறவுக்காரர், அப்பாவின் நண்பரும்கூட. என்னை அவனோடு சேராதே என்று அவ்வப்போது கண்டிப்பார். ஒருநாள் வழக்கம்போல படிக்கச்சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது அப்பாவின் நண்பர் அப்பாவோடு பேசிக்கொண்டிருந்தார். இவரா..? இங்கேயா..! என மனம் பதைபதைத்தது... என்னைப் பற்றி அப்பாவிடம் ஏதாவது தாறுமாறாகக் கூறிடுவாரோ... என மனதில் திக்திக் பயத்துடன் நைஸாக மறைந்திருந்து அவர்கள் பேச்சை ஒட்டுக்கேட்டேன்.

Representational Image
Representational Image
Pixabay

நான் பயந்தபடியே ஆயிற்று. அப்பாவிடம் அவர்,

"சார் உங்க பையன் நல்லவன். ஆனால், அவன் சேர்க்கை சரியில்லை. அந்த வம்புக்கார நண்பனோடு சேர்ந்து கெட்டுபோய்டுவான், அவனை கண்டித்து வைங்க" என்று ஆவேசமாகக் கூறிக்கொண்டிருந்தார்.

எனக்கு உடலெல்லாம் பதற ஆரம்பித்தது... அப்பா என்ன செய்வார்? கோபப்படுவாரோ என பயம் பிடித்துக்கொண்டது... ஆனால், அப்பா அவரின் நண்பரிடம்,

"சார் நீங்க கொஞ்சம் மாத்தி யோசிங்க... என் மகன் நல்லவன் என்கிறீர்கள்... இவனோடு அவன் சேர்ந்தால் அவன் திருந்தி நல்லவனாக மாறலாமே'' எனப் பதிலளித்தார். நண்பரின் முகத்தில் ஈயாடவில்லை. இதைக் கேட்டதும் எனக்கு அப்பாவின் மீது பயம் போய் மிகுந்த மரியாதை ஏற்பட்டது. அதன்பின் நான் அடக்கி வாசித்தது வேறுகதை.

- திருமால் பக்தன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு