
அஸ்வின் முறைத்தபடியே படிப்பதற்கு அறைக்குள் சென்றான். கொஞ்ச நேரத்தில் "அம்மா..." என அலறியபடியே ஓடி வந்தான்...
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
"டேய் தம்பி... அங்கிட்டுப் போகாத... பக்கத்துத் தெருவுல செத்துப்போன சுப்ரமணி தாத்தா பேயா வந்திருக்காராம். சொல்லுறத சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்" என ராதிகா சொல்ல கொல்லைப்புறம் விளையாடச் சென்ற அவளின் 8 வயது மகன் அஸ்வின் "அம்மா... பயமுறுத்தாத" எனத் திரும்பி வந்தான்.
"நான் ஏன் பயமுறுத்துறேன். அவருக்குச் சின்ன பசங்கனா ரொம்ப பிடிக்கும். எப்போதும் யாராயாவது கூப்பிட்டுப் பேசிட்ருப்பாரு. நீயும்தான் பார்த்திருக்கியே?"
"ஆமாம். ஆமாம். என்னயக்கூட ஒருமுறை கூப்பிட்டுக் கதை சொல்லட்டும்மான்னாரு."

"இதுக்குதான் சொல்றது. விளையாண்டது போதும். ரொம்ப நாள் லீவு கழிச்சி நாளைக்குப் பள்ளிக்கூடம் திறக்குது. கொஞ்சமாச்சும் போய்ப் படி."
"உன் போனைக் கொடேன். பப்ஜி விளையாடிக்கிறேன்."
"எதையாவது படிக்கிறியா? போய்ப் படிடா... போனும் கிடையாது. ஒண்ணும் கிடையாது."
அஸ்வின் முறைத்தபடியே படிப்பதற்கு அறைக்குள் சென்றான். கொஞ்ச நேரத்தில் "அம்மா..." என அலறியபடியே ஓடி வந்தான்.
அவன் முகம் பதட்டமாக இருப்பதைப் பார்த்த ராதிகா "ஏன்டா? என்னாச்சு??" என்றாள்.
"செத்துப்போன அந்தத் தாத்தா ரூமுக்குள்ள இருக்காரும்மா... என்கிட்ட கதை சொல்லாம விட மாட்டாரு போல. பயமா இருக்கும்மா" என்றான்
"என்னடா சொல்ற?" வடிவேலு பாணியில் கேட்டவள் "எதை பார்த்துப் பயந்தானு தெரியலியே... தூங்கப்போறப்ப பேய்னு சொன்னதை நினைச்சிப் பயப்படுறானானு தெரியலயே" என்றபடியே ரூமுக்குள் சென்றாள். அறையின் கதவு சத்தம் "சரக் சரக்" எனச் சத்தமிட்டுத் திறந்தது. அவளின் கொலுசு சத்தம் அவளுக்கே கொஞ்சம் பயத்தைத் தந்தது.

மெதுவாக அறையினுள்ளே எட்டிப் பார்த்தாள். சுழன்று கொண்டிருந்த மின் விசிறியை அணைத்தவள் கட்டிலின் கீழே குனிந்து பார்த்தாள். எதுவுமில்லை. மெதுவாக எழுந்தாள். மின் விசிறி தனது கடைசி சுற்றை "லொய்ங்" எனச் சுற்றி முடித்தது. மேலே மின் விசிறி நின்றதைப் பார்த்தாள். பிறகு கட்டில் மீதான போர்வையை உதறினாள். அப்புறம் பீரோவை வேகமாகத் திறந்தாள். பிறகு மெதுவாக மூடினாள். பீரோவின் சத்தம் சற்று வித்தியாசமாகக் கேட்டது. மறுபடியும் திறந்து மூடினாள். கதவின் பின் பக்கம் பார்த்தாள். ஒன்றுமில்லை என்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவளின் மூச்சு சத்தம் மட்டும் அந்த அமைதியில் அவளுக்கே தெளிவாகக் கேட்டது.
பிறகு அவள் தன்னைத் தைரியப்படுத்தியப்படியே "அவரு வீட்டுக்குள்ளலாம் வரமாட்டாருடா. இங்க வந்து பாரு. யாருமே இல்ல. பயப்படாத" என்றாள்.
"இல்லை... எனக்குப் பயமா இருக்கும்மா. லைட் ஆஃப் பண்ணிட்டுக் கொஞ்ச நேரம் இருந்தினா அந்தத் தாத்தா வருவாரு" என்றான்.
அவளுக்கும் பயம் தொற்றியது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு "கண்ட கண்ட பேய்ப்படத்தை எல்லாம் பார்க்க வேண்டியது. பேய்லாம் கிடையாதுடா."
"நீதானே சொன்ன. இப்ப ஏன் மாத்திப் பேசுற. உனக்கு என்னாச்சி" என்றான்.
அவளுக்கே ஒரு கணம் அந்தத் தாத்தா தனக்குள்ளே வந்துட்டாரோ என்ற எண்ணம் வந்து போனது.

"அய்யயோ... அவருக்குத் தெரிஞ்சா என்னய தொலைச்சி எடுத்துடுவாரு. இவனைச் சமாளிக்க முடியாம சொன்ன ஒரு பொய்க்கு இப்படிப் பண்றானே.." என நினைத்தவள் "எப்படி சமாளிக்கிறது?" என யோசித்தவாறே "சரி செல்லம். அம்மா போன் தாரேன். பப்ஜி விளையாடுறியா?" என்றாள்.
"ஐ.. தாம்மா..." என்றபடியே அவள் போனைப் போய் வெளியில் எடுத்தவன் திரும்ப அறைக்குள்ளே ஓடி வந்தான்.
"நான் இங்கயே விளையாடுறேன்.." எனச் சொல்லியவாறே அதே அறையில் விளையாட ஆரம்பித்தான்.
"நல்லவேளை பயந்தவனை எப்படிச் சமாளிக்கிறதுனு நெனச்சேன். தேங்ஸ் டு பப்ஜி" என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
"கொஞ்ச நேரம் போன் கேட்டா தரவா மாட்ற... செத்துப்போன தாத்தா வர்றாருனு சொல்லி வேண்டியப்பலாம் விளையாடிக்கிலாம்" என நினைத்தவாறே பப்ஜியைத் தட்டினான் அஸ்வின்.
- செ.ஆனந்த ராஜா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.