Published:Updated:

`ஆறியது நாவினால் சுட்ட வடு!' - மைக்ரோ கதை #MyVikatan'

Representational Image
Representational Image ( Pixabay )

குணாவின் அப்பாவைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் தனக்கு ஏற்பட்ட முதல் காதலைக்கூட மருமகளிடம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நட்பு பாராட்டினார் அம்பிகை.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``ஹலோ இந்து, நான் குணா பேசறேன்..."

``சொல்லுங்க, வழக்கம்போல எதையாவது மறந்து வெச்சுட்டுப் போயிட்டீங்களா?"

``அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, ராமகிருஷ்ணால சேர்த்திருக்காங்க..."

``என்ன ஆச்சு? நல்லாதானே இருந்தாங்க?"

``நேத்து நைட்டு சுவாசிக்க முடியாம கஷ்டப்பட்டிருக்காங்க. ஜானகி அக்காவும், மச்சானும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போயிருக்காங்க."

``நமக்கு ஒரு தகவல்கூட சொல்லல..."

``சொல்லியிருந்தாதானே ஆச்சர்யம்..?"

`` உங்களுக்கு யார் சொன்னது?"

``யாரும் சொல்லல, மதன் வாட்ஸ்ஆப்பில கெட் வெல் சூன் அம்மாச்சின்னு ஸ்டேட்டஸ் போட்டிருந்தான். அவனுக்கு கால் பண்ணி கேட்டேன்.."

``இப்போ எப்படி இருக்காங்களாம்?"

``சாச்சுரேஷன் லெவல் குறைஞ்சிட்டே வருதாம், இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாராம்..."

``சரி நான் டாக்ஸி பிடிச்சு ஹாஸ்பிட்டல் வந்துடறேன், நீங்களும், கிளம்பி வந்துடுங்க!"

``இல்ல இந்து நீ வர வேணாம், நான் போய்ப் பார்த்துட்டு வந்து சொல்றேன்..."

``இல்ல குணா, எனக்கு மனசு கேக்கல, நானும் வர்றேனே?"

``வேண்டாம்‌பா... உன்னை ஏதாவது இன்சல்ட் பண்ணிட்டா..?'

``நான் பார்க்காத இன்சல்ட்டா..?"

``இந்து சொன்னா கேளு, நான் போய் பார்த்துட்டு என்னன்னு சொல்றேன், அப்புறமா வா."

இந்துவால் மறுவார்த்தை பேச இயலவில்லை.

Representational Image
Representational Image

குணாவுடன் பிறந்தவர் ஜானகி என்ற ஒரு சகோதரி மட்டுமே. மூத்தவர்.‌ கல்யாணத்துக்குப் பிறகு பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்டார்.

16 வருடங்களுக்கு முன்பு குணாவுக்கும் இந்துவுக்கும் கல்யாணம் நடந்தது. தனிக்குடித்தனம் எதுவும் போகாமல் தன் பெற்றோருடன் தங்கிவிட்டான்.

கிட்டத்தட்ட 10 வருடம் எந்த இடர்பாடுகளும் இன்றி, தெளிந்த நீரோடைபோல வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

நின்றால் குற்றம், நடந்தால் குற்றம் என்று சொல்லும் மாமியார் வகையைச் சேர்ந்தவர் அல்ல குணாவின் தாய் அம்பிகை.

பெண்களிடத்தில் இயல்பாகவே இருக்கும் உடைமை உணர்வு அம்பிகையிடமும் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் ஒவ்வொரு கட்டத்திலும் அம்பிகை சூழ்நிலையைக் கவனமாகக் கையாண்டு, அதனைப் பக்குவமாகக் கடந்து தனக்கும் தன் மருமகளுக்கும் இடையில் ஒரு பண்பட்ட உறவைப் பலப்படுத்தி வைத்திருந்தார்.

மருமகள், மகள் என்பதையும் தாண்டி, உற்ற தோழிகளாகப் பழகி வந்தனர்.

குணாவின் அப்பாவைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் தனக்கு ஏற்பட்ட முதல் காதலைக்கூட மருமகளிடம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நட்பு பாராட்டினார் அம்பிகை.

திருமணம் போன்ற விசேஷங்களுக்குச் செல்லும் பொழுது மருமகளிடம் உரிமையாக நகை மற்றும் புடவைகளைக் கேட்டு வாங்கி அணிந்து செல்வார் அம்பிகை.

இந்து தன் வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல விஷயங்களை அம்பிகையிடம் கற்றுக்கொண்டிருந்தாள். அம்பிகை செய்யும் ஒவ்வொரு வேலை நுணுக்கத்தையும் ரசிப்பாள். அவர் வாரக்கணக்கில் மெனக்கெட்டுச் செய்யும் தாளிப்பு வெங்காய வடகத்தில் ஆரம்பித்து, தினசரி நாளிதழ்களில் வரும் சமையல் குறிப்பு, மருத்துவ குறிப்பு, அழகுக் குறிப்பு என ஒன்று விடாமல் சேகரித்து தொகுப்பு போட்டு வைக்கும் பாங்கையும், அடுப்பு பற்றவைத்த உடன் தீக்குச்சியைக் குப்பையில் எறிந்து விடாமல், அதனைச் சேகரித்து பல் குத்துவதற்கு ஏதுவாக சீவி வைக்கும் பொறுமையையும், வீட்டுத்தோட்டத்தைப் பராமரிக்கும் நேர்த்தியையும், 40 வருடங்களாகப் பராமரித்துப் பயன்படுத்தி வரும் கோலப் புத்தகத்தையும், சமையல் குறிப்பு புத்தகத்தையும் , சமையல் நுணுக்கங்களையும், மட்டன் சாப்ஸும், மண்சட்டி மீன் குழம்பும், தனது உடைமைகளைத் தானே தைத்துக்கொள்ளும் திறமையையும் என... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

Representational Image
Representational Image

தனது கைப்பேசியில்கூட தனது அம்மாவின் தொலைபேசி எண்ணை அம்மா 1 என்றும், அம்பிகையின் எண்ணை அம்மா 2 என்றும்தான் சேமித்து வைத்திருந்தாள் இந்து.

அமைதியாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென்று புயல் வீசியது.

இந்துவின் தங்கை கல்யாணத்துக்குப் பண உதவி தேவைப்பட, இந்து தனது 30 பவுன் நகைகளை அடமானம் வைத்து உதவினாள். இது குணாவின் சம்மதத்துடன்தான்‌ நடந்தது.

இது பின்பு அம்பிகைக்குத் தெரியவர மனமொடிந்து போனார். ஏதோ ஒன்று மாற்றி ஒன்று பேச எல்லாமே சீக்கிரம் சீக்கிரமாக முடிந்துவிட்டது

`இதோ பாருடா குணா, எப்போ நீயும் உன் பொண்டாட்டியும் என்னை மூணாவது மனுஷியா நெனச்சு உண்மைய மறைச்சீங்களோ, அப்பவே நம்ம உறவு பொய்யின்னு ஆயிடுச்சு'.

`அம்மா என்னை மன்னிச்சுடுங்க' என்று இருவரும் கேட்டும் பயனில்லை.

`என்னை அம்மானு கூப்பிட உங்களுக்குத் தகுதி இல்ல. என்னை கேட்டிருந்தா நான் உதவி இருக்கமாட்டேனா?'

`அப்பறம் சொல்லிக்கலான்னு நான்தான் சொன்னேன்' என்றான் குணா.

`நீ ஆயிரம் காரணம் சொல்லு, என்னை பொறுத்தவரை இது நம்பிக்கை துரோகம் தான்.'

`அம்மா, உங்களை காயப்படுத்தணும்னு இப்படி செய்யல, சூழ்நிலை அப்படி, புரிஞ்சுக்குங்க'.

எவ்வளவு கெஞ்சியும் அம்பிகை ஆறுதல் அடைவதாய் இல்லாமல் மீண்டும் வாக்குவாதம் தொடர,

`அம்மா இந்து என்னோட மனைவிதானே தவிர, உங்களுக்கு அடிமை இல்லை. அவ அப்பா வாங்கிக்கொடுத்த நகையை விற்க உங்ககிட்ட அனுமதி வாங்கணும்னு என்ன அவசியம்?' என்று குணா தன் மனைவியை விட்டுத் தராமல் உணர்ச்சிவசப்பட, அம்பிகையின் உடைமை உணர்வு வெளிப்பட்டு, அன்றிலிருந்து அவர்கள் இருவரிடமும் பேசுவதைத் தவிர்த்தார் அம்பிகை.

நாளடைவில் இச்சூழ்நிலை இருவரையும் தனிக்குடித்தனம் செல்லவும் வழி வகுத்தது.

கிட்டத்தட்ட ஆறு வருடங்களாகப் பேச்சுவார்த்தை முற்றிலுமாக நின்றுவிட்டது.

அப்பாவின் இறப்புக்கு இருவரும் சென்றபொழுதுகூட அம்பிகை வைராக்கியமாக பேச மறுத்துவிட, இந்துவும் குணாவும் மனமொடிந்து திரும்பினர்...

Representational Image
Representational Image

மீண்டும் அம்மாவை தங்களுடன் வந்து இருக்கும்படி எவ்வளவு வேண்டியும் முடியாது என்று மறுத்துவிட்டார் அம்பிகை .

குணாவின் சகோதரி ஜானகி குடும்பத்தினர் மாற்றலாகி சென்னைக்கு வந்துவிட அவர்களை தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டார் அம்பிகை.

மாறாக குணாவும், இந்துவும் அம்மாவை நினைக்காத நாள் இல்லை. அவர்களோடு மீண்டும் சேர்ந்து வாழ இன்னும் ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

மருத்துவமனையிலிருந்து குணா அழைப்பான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாள். எதுவும் சாப்பிட மனசில்லாமல் கண்களில் நீர் ததும்ப மோட்டு வளையத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் இந்து.

அலைபேசி அழைக்க,

`என்னங்க'

`இந்து அம்மா போயிட்டாங்க'.

குணா உடைந்துபோய் அழுதான்.

சிறிது நேரம் கழித்துச் சுதாரித்துக்கொண்டு,

`நீ ஸ்கூலுக்கு போய் பவித்ராவ கூட்டிக்கிட்டு அம்மா வீட்டுக்கு வந்துடு.'

`நீங்க?'

'நாங்க இன்னும் கொஞ்ச நேரத்திலே அம்மா உடலை எடுத்துட்டு வீட்டுக்கு வந்துடுவோம்'.

`சரிங்க.'

அம்மாவிற்கு செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் குணா குறையின்றி செய்தான்.

இறுதிவரை அம்மா தன்னை மன்னித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்ற ஏக்கத்தில் அழுதுகொண்டே இருந்தாள் இந்து.

மூன்றாம் நாள் காரியம் முடிந்து, உறவினர்கள் அனைவரும் சென்றுவிட, அக்கா,

`குணா நாங்க பெங்களூருக்கு மாற்றல் வாங்கிட்டு போகலாம்னு இருக்கோம்'.

`ஏன் ஜானுக்கா, அம்மா வீட்ல அவங்க இடத்தில நீ இங்கயே இருக்கணும்னு நான் ஆசைப்படறேன். அம்மாகூட இருக்கிற கொடுப்பினைதான் இல்லை'.

`இல்லடா குணா, உங்களை விட்டு தள்ளியிருந்தாலும் அம்மா மனசு முழுவதும் நீயும் இந்துவும் தான் நிறைஞ்சு இருக்கீங்க'.

`என்னக்கா சொல்ற, அம்மாதான் கடைசி வரைக்கும் எங்க ரெண்டு பேரையும் மன்னிக்கவே இல்லயே...'

`உண்மைதான். ஆனா அதுக்காக பாசம் இல்லன்னு சொல்லிட்ட? ஏதோ ஒரு ஈகோ அவங்கள தடுத்துடுச்சே தவிர, உங்களை பத்தி பேசாத நாளே இல்ல.'

`நிஜமாவா சொல்ற' கண்களில் தாரை தாரையாகக் கண்ணீருடன் குணா கேட்க...

`பின்ன... பாசம் இல்லாமலா இந்த வீட்டை உன் பேரிலும் இந்து பேரிலும் எழுதி வெச்சிருப்பாங்க..!'

என்றும் அன்புடன்,

நித்யா இறையன்பு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு