Published:Updated:

சீசன் டிக்கெட்….! - குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

தெய்வாதீனமாகச் சிலருக்குப் படிப்பு முடிந்ததும் உடனடியாக வேலை கிடைத்து, இந்த இம்சைகளுக்கு ஆளாகாமல் தப்பித்துவிடுவர். ஆனாலும், பலரின் நிலை மேலே குறிப்பிடப்பட்டதுதான்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அப்பொழுதெல்லாம் கல்லூரியில் பி.யூ.சியில் சேர்ந்து விட்டாலே சின்னதாய் ஒரு பெருமிதம் மனதில் ஓட ஆரம்பித்து விடும். அதிலும் சிறிய கிராமத்திலிருந்து முதல் மாணவனாகக் கல்லூரியில் நுழைபவர்களுக்கு ஒரு மமதை தலைக்கேறும்.

ஒரு வருடப் பி.யூ.சியைப் பாஸ் செய்து விட்டு,மூன்று வருட டிகிரியில் சேர்ந்து விட்டால் போதும்.அது இன்னும் கொஞ்சம் கூடுதலாகும்.

டிகிரி முடித்து விட்டு வீடு வரும்போது, வீட்டிலிருப்பவர்களே ஒரு மாதிரி கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். அப்பா, தட்டில் சோறை வைக்கும் அம்மாவிடம் ‘தம்பி சாப்பிட்டாச்சா?’ என்று பரிவுடன் விசாரிப்பார். வீட்டிலுள்ள மற்றையோரும் மரியாதையுடன் நடத்துவர். எந்த வேலையையும் செய்ய விடமாட்டார்கள். ’படிச்ச புள்ளையைச் சிரமப்படுத்த வேண்டாம்’ என்று ஒவ்வொருவரும் சொல்வார்கள்.

Representational Image
Representational Image

இவையெல்லாம் இரண்டு, மூன்று மாதங்களுக்கு மட்டுமே. அப்புறம்... கொஞ்சங் கொஞ்சமாக நிலைமை மாற ஆரம்பிக்கும். ஓராண்டு போய் விட்டால்... அவ்வளவுதான்.

‘தம்பி சும்மாதானே இருக்கறாப்ல. சின்னச் சின்ன வேலைகளைப் பார்க்கலாம்ல.’ என்று ஒவ்வொருவராக, மெல்ல ஆரம்பிப்பார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், ‘தம்பிக்கு இன்னும் வேல கெடக்கலியா? வீட்ல சும்மாதான் இருக்கா?’ என்று பரிதாபப்படுவதைப்போல குத்திக்காட்ட ஆரம்பிப்பார்கள்.

ஓராண்டுக்கு மேலும் வேலைக்குப் போகவில்லையென்றால், ஊரே ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிக்கும். படிக்கப்போனபோது தலைக்கேறிய மமதையெல்லாம் சுத்தமாய் காணாமல் போய், மனசுக்குள் ஒரு வெறுமை தோன்ற ஆரம்பிக்கும். காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு முன் கற்றை மயிரைக் கலைத்து விட்டுக் கொண்டதெல்லாம் பைத்தியக்காரத் தனம் என்று தோன்ற ஆரம்பிக்கும்.

காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு முன் கற்றை முடியைக் கலைத்து விட்டுக் கொண்டதெல்லாம் பைத்தியக்காரத் தனம் என்று தோன்ற ஆரம்பிக்கும்.

தெய்வாதீனமாகச் சிலருக்குப் படிப்பு முடிந்ததும் உடனடியாக வேலை கிடைத்து, இந்த இம்சைகளுக்கு ஆளாகாமல் தப்பித்து விடுவர். ஆனாலும், பலரின் நிலை மேலே குறிப்பிடப்பட்டதுதான்.

தம்பிகள் ரகுவும்,ரவியும் இந்தப் பெருமிதத்துடன் உலவும் வசந்த கால ஆரம்பத்தில் இருந்தவர்கள். ரகு, திருச்சிக்கு அருகிலுள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு முடித்து விட்டுக் கோடை விடுமுறையில், சென்னை மாம்பலத்திலுள்ள மாமா வீட்டிற்கு வந்திருக்கிறார். ரவி,சேலத்தில் ஒரு கல்லூரியில் பி.யூ.சியை முடித்து விட்டுத் தன் மாமா வீட்டிற்கு வந்துள்ளார். மாமாக்கள் இருவரும் ஒரே வங்கிக் கிளையில் பணியாற்றுவதால், ஒரே காம்பவுண்டில் வீடும் எடுத்துள்ளனர். ரகுவும், ரவியும் ‘ஒரே ஏஜ் குரூப்’ என்பதால் விரைவில் நண்பர்களாகிப் போனார்கள்.

முதலில் நடைப்பயணமாக இருவரும் சிட்டியைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார்கள். நடந்தே செல்லக் கூடிய ஒரு சில இடங்களைப் பார்ப்பதும், மாலை வேளைகளில் கடைத்தெருவில் சுற்றுவதுமாக சில நாட்களைக் கழித்தார்கள். சென்னையின் எலக்ட்ரிக் ரயிலில் ஏறிப் பார்க்க இருவருக்கும் ஆசை வர, அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவரின் மாமாக்களும் தினமும் பாரிஸ் கார்னரிலுள்ள வங்கிக் கிளைக்கு மாம்பலத்திலிருந்து எலக்ட்ரிக் ரயிலில்தான் சென்று வந்தார்கள்.

Representational Image
Representational Image

இருவரும் ‘சீசன் டிக்கட்’ வைத்திருந்தார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் விடுமுறையில் இருக்கும்போது, அந்த சீசன் டிக்கட்டுகளை எடுத்துக்கொண்டு, அவர்களுக்குத் தெரியாமலே பாரிஸ் கார்னர் சென்று சுற்றி வரலாமென்று இருவரும் ரகசிய முடிவு எடுத்தார்கள்.

ஞாயிற்றுக் கிழமையும் வந்தது. முடிவெடுத்தபடியே இருவரும் அவரவர் மாமாவின் சீசன் டிக்கட்டோடு, மாம்பலத்தில் ரயிலேறி விட்டார்கள். இருவருக்கும் ஏக குஷி.

ரயில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்களைத்தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. ஞாயிற்றுக் கிழமை என்பதால் கூட்டம் அதிகமில்லை. சிறிது நேரம் ஜன்னல் பக்க சீட்டில் உட்கார்ந்தார்கள். அப்புறம் வாசலில் வந்து நின்று முகத்தை மட்டும் வெளியே நீட்டி, தலை முடியைக் காற்றில் ஆட விட்டு ரசித்தார்கள். சேத்துப்பட்டில் ரயில் நின்ற போது கீழே இறங்கி, லேசான மோஷனில் ஏறி ‘ஹீராயிக்’ வேலை செய்து பார்த்தார்கள். எக்மோர் ஸ்டேஷனில் இறங்கி, ஸ்டேஷனைச் சுற்றிப் பார்த்து விட்டு அடுத்த ரயிலில் பாரிஸ் கார்னர் போகலாமென்று அவசர முடிவெடுத்து, அதன்படியே எக்மோரில் இறங்கினார்கள்.

வெளியே செல்லும் வாசலுக்கு அருகில் வந்த போது, ஒரு டிக்கட் பரிசோதகர் டிக்கட் கேட்க, ரவியின் டிக்கட்டைப் பார்த்த அவர் சந்தேகத்துடன் ‘பெயர் என்ன?’ என்று கேட்க, ’ரவி’ என்று முதலில் இயல்பாகத் தன் பெயரைச் சொல்லி விட, அப்புறம் சுதாரித்துக் கொண்டு மாமா பெயரைச் சொல்ல, ரவியை அழைத்துக் கொண்டு அந்தப் பரிசோதகர் நிலைய அறைக்குள் சென்று விட்டார். ரகு வெளியே வந்து சில நிமிடங்கள் காத்திருந்து பார்க்க, நேரம்தான் கழிந்ததே தவிர, ரவி வரவில்லை.

ரவியை அறைக்குள் அழைத்துச் சென்ற பரிசோதகர், கையெழுத்து போடச் சொல்ல, ரவியின் கையெழுத்துக்கும் சீசன் டிக்கட்டில் இருந்த கையெழுத்துக்கும் சம்பந்தமேயில்லாது போக, ரவிக்கு ஃபைன் போடப்பட்டது. கையில் அந்த அளவுக்குக் காசு இல்லாததால் ரவியால் ஃபைனைக் கட்ட முடியவில்லை. அறையின் ஓரமாக அவன் அமர வைக்கப்பட்டான்.

வெளியில் நின்ற ரகுவுக்கு, நேரம் ஆக ஆக மன உளைச்சல் கூடிக் கொண்டேபோனது. ஒன் இயர் சீனியராயிற்றே. என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.

மாமாவுக்குத் தெரிந்தால் சங்கடமாகி விடுமே என்ற பயம் வேறு சேர்ந்து கொண்டது.

Representational Image
Representational Image
Pixabay

என்னதான் மூளையைக் கசக்கினாலும் ஒரு வழியும் சரியாகப் புரியவில்லை. சரி. இனியும் தாமதிக்கக் கூடாது. உள்ளே சென்று அந்தப் பரிசோதகரிடம் பேசிப் பார்ப்பது என்ற அசாத்தியத் துணிச்சலுடன் ரகு உள்ளே சென்று ஒருவாறாக ரவி அமர்ந்திருந்த அறையைக் கண்டுபிடித்து உள்ளே சென்றான்.

பரிசோதகருடன் வேறு இரண்டு அதிகாரிகளும் உடனிருந்தனர். ’என்ன?’ என்று பார்வையாலேயே அவர்கள் கேட்க, ”சார். நாங்க ரெண்டு பேருந்தான் வந்தோம்.

ஏன் அவரை மட்டும் பிடிச்சி உட்கார வெச்சிருக்கீங்க.”

“ ஓ. அப்படியா? எங்க சார் ஒங்க டிக்கட்? அதைக் கொஞ்சம் காட்டுங்க.”

ரகு அவசரமாக சீசன் டிக்கட்டை எடுத்துக் காண்பிக்க, அதைப் பார்த்த பரிசோதகர், “இப்படி வாங்க. இதில ஒரு கையெழுத்து போடறீங்களா?” என்று கேட்க, ரகு சற்று அதிர்ந்தான். ‘ஓ...நாமளும் தெரியாம வந்து சிக்கிக்கிட்டோமோ.’ என்ற பயம் வர, கையெழுத்து கோணல் மாணலாக , ”ஓ. நீங்களும் இவரு கேசுதானா?

சரி. ரெண்டு பேரும் ஃபைன் கட்டணும்.” என்க, ரகுவுக்குத் தலை சுற்றியது.

-விஜய்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு