Published:Updated:

வாடகை வீட்டுப் புராணம்! - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

40 வயதாகியும் வீடு வாங்காமல் இருப்பது எவ்வளவு பெரிய வலி...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``இந்த மாசத்துக்குள்ள காலி பண்ணுங்க, இல்லைன்னா வாடகை ஏத்திக் கொடுங்கனு ஹவுஸ் ஓனர் சொல்லிட்டுப் போனாருங்க.''. செருப்பைக் கழட்டிவிட்டு வீட்டுக்குள் நுழையும் முன்னரே மனைவி கூறினாள்.

40 வயதாகியும் வீடு வாங்காமல் இருப்பது எவ்வளவு பெரிய வலி. இந்த தீபாவளி நேரத்தில் ஊருக்குப் போக டிக்கெட் விலையைக் கேட்டால் இங்கிருந்து நடந்தே போய்விடலாம் என்பது போல் தோன்றுமே அது மாதிரிதான் இதுவும்.

ஸ்கூல் பீஸூம் வீட்டு வாடகையும் வருடாவருடம் ஏறிக்கொண்டே இருக்கும். இந்த வருடம் வாங்கிய கடனை அடைப்பதற்குள் அடுத்த வருடம் வந்துவிடுகிறது. இப்படியே போனால் வெட்டவெளியில்தான் வாழவேண்டும் போல.

Representational Image
Representational Image

வீட்டு அட்வான்ஸூம் அப்படிதான். ஒவ்வொரு வீடும் மாறும்போது ஏறிக்கொண்டே போகும். விழுகிற துண்டுக்குப் புதுக் கடன் வாங்க வேண்டும். அதற்கு புது ஆளைப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே வாங்கியவரிடம் கேட்க முடியாது. ஏனென்றால் இன்னும் வாங்கிய கடனையே கொடுக்கவில்லை, அதற்குள் அடுத்த கடனா என்று முறைப்பார். இதையெல்லாம் யோசித்துக் கொண்டே சோபாவில் உட்காரப் போனேன்.

என் மனைவி பதறி ஓடி வந்து, `ஏங்க இந்த ஓரம் உக்காராதீங்க அந்த ஓரம் உக்காருங்க. இந்த ஓரம் உடைஞ்சு இருக்கு' என்று சொன்னார்.

``இது வேறையா’’ என்று கேட்டுக்கொண்டு தரையில் உட்கார்ந்து கொண்டேன்.

நான் பிறந்ததிலிருந்து (20 ஆம் நூற்றாண்டு 1980 முதல் 21 ம் நூற்றாண்டு 2019 வரை) இதோடு 22வது வீடு மாறப்போகிறேன். பழைய வீட்டு உரிமையாளர்களைப் பற்றி அசைபோட்டேன். நாவில் கசப்பு மட்டும்தான் மிச்சம். அதில் இரண்டு பேர் மட்டும் மனதில் எப்போதும் நிற்பார்கள்.

Representational Image
Representational Image

``வாடகை வீட்டில் இருப்பவர்களின் வலியை வீட்டு உரிமையாளர் புரிந்துகொண்டாலே போதும். அவங்களின் ஆயுசுக்கும் ஏன் அடுத்த தலைமுறைக்கும் வீட்டு உரிமையாளரை மறக்கமாட்டார்கள். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் சொந்த வீட்டின் அருமை. அவர்கள் இருக்கும்வரை அவர்களின் வீடு என்ற உணர்விலேயே இருப்பார்கள்’’ என்று நாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர் சீனீவாசன் சொல்வார். அதற்கு நானே உதாரணமாக இருப்பேன், அவரைப் பற்றி எழுதுவேன் என்று நான் நினைக்கவே இல்லை.

வாடகை கொடுக்கப் போகும்போது மட்டும்தான் வாடகை வீட்டில் இருக்கிறோம் என்கிற ஞாபகம் வரும். அப்பாவின் பணிச் சூழலால் வருடத்திற்கு நான்கு ஊர்கள் மாற வேண்டும். ஒவ்வொரு வட்டம் இலக்கு கொடுப்பார்கள். (நல்ல வேளை மாவட்டம் மாவட்டமாக மாறாமல் வட்டம் வட்டமாக மாத்துனாங்க) அப்பாவின் அசாத்திய பணித்திறமையினால், வட்ட இலக்கு வட்டத்தின் உள்ளே காலடி எடுத்துவைக்கும் போதே பாதி முடிந்துவிடும்.

``வருடத்திற்கு நாலு ஸ்கூல் மாற்றமுடியாது. அதனால் ஒரு இடத்தில் எங்கள குடி வைத்துவிட்டு நீங்க வட்டம் வட்டமா சுத்துங்க’’ என்று அப்பாவிடம் அம்மா தீர்க்கமாகச் சொல்லிவிட்டார். அப்போது, அப்பா இருந்தது திருச்சி லால்குடி வட்டம். லால்குடி சீனிவாசபுரத்தில் வீடு பார்த்தோம். எனக்கு வயது 7. வீட்டு உரிமையாளர் பெயர் சீனிவாசன். பெயருக்கு ஏற்றாற்போல் சீனியாகப் பேசுவார். நல்ல மனிதர். அனைவருக்குமே பிடிக்கும். அதனால் நாங்கள் இருந்த அப்பகுதிக்கு சீனிவாசபுரம் என்று அவரின் பெயரை வைத்துள்ளனர். அவர் திருச்சியில் துணிக்கடை நடத்தி வந்தார்.

Representational Image
Representational Image

லால்குடியிலேயே முதல் மூன்றடுக்கு வீடு நாங்கள் இருந்தது தான். மொத்தம் 15+1 வீடுகள். நாங்கள் மேல்மாடி. அந்த +1 வீட்டில் தான் நாங்கள் குடியிருந்தோம்.

மாதம் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வாடகை வாங்க வருவார். மாடிப்படிக்குக் கீழே அவருக்குச் சின்னதாக ஓர் அறை உண்டு. முதல் வீட்டு காலிங்பெல் மட்டும் அடித்துவிட்டு அவரின் அறையில் போய் உட்கார்ந்து கொள்வார்.

அவர் வந்த சேதி அப்படியே மேல் மாடி வரை பரவிவிடும். டாக்டரைப் பார்க்க வரிசையில் நிற்பது போன்று வரிசையாக நிற்பார்கள். அவரும், முதல் ஆள் உள்ளே போய் திரும்பும் போது அடுத்த ஆளை வரச்சொல்லுங்க என்பார். இதுதான் அவர் அவர்களிடம் பேசும் அதிகபட்ச வார்த்தையாக இருக்கும். அதே போலப் பெண்கள் யாரும் வாடகை அளிக்க வரக்கூடாது என்பது அவரின் எழுதப்படாத விதி. அப்படி யாராவது வாடகை கொடுக்க முடியவில்லை என்றால் கூட அடுத்த ஆளை வரச்சொல்லுங்க என்பார். அதிலிருந்தே புரிந்துகொள்ளவேண்டும். அடுத்த மாதம் கொடுக்கச் சொல்கிறார் என்று.

Representational Image
Representational Image

ஆண்கள் வராத வீட்டிற்கு என்னிடம் சீட்டு எழுதிக் கொடுப்பார். இந்தச் சிறுவனிடம் வாடகை கொடுத்தனுப்பவும் எனக் குறிப்பிட்டிருப்பார். ஆனால், யார் வீட்டுக்கும் சென்று வாடகை கேட்கமாட்டார். எங்களுக்கு ஏதாவது குறை இருந்தால் எழுதி அதற்கென ஒரு பெட்டி இருக்கும். துண்டுச் சீட்டில் எழுதி அதில் போட்டுவிட வேண்டும். அதைப் படித்துவிட்டு உடனே சரிசெய்து விடுவார். அப்படி அவர் அந்த அறையிலேயே தங்க நேர்ந்தால் நான்தான் எங்கள் வீட்டிலிருந்து உணவு எடுத்துச்செல்வேன். ஒரு சில சமயம் அவருடனே உறங்கி விடுவேன். அதன்பிறகு என்னைத் தூக்கி வந்து வீட்டில் போடுவார்.

என்னுடன் மட்டும்தான் அதிகம் பேசுவார். அன்றும் வாடகை வாங்க வந்து இருந்தார்.

எங்கள் வீட்டில் மொத்தம் ஏழு பேர் அதில் நான், அப்பா, அண்ணன் மட்டுமே ஆண்கள். அண்ணன் பேசுவதற்கே காசு கேட்கும் ஆள். அக்காக்கள் மூன்று பேர். எங்கள் வீட்டில் நான் மட்டுமே சீனிவாசன் அய்யாவுடன் பேசுவேன். அப்பாவால் மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் வாடகை கொடுக்க முடியும், இதனால் பல வீடுகளில் அட்வான்ஸ் தொகையிலேயே பாதி கழிந்துவிடும். அடுத்த வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க அடுத்து கடன் வாங்க வேண்டும்.

Representational Image
Representational Image

கடைசியாகத்தான் எங்கள் வீட்டு வாடகை கணக்கு வரும். அன்று நான்தான் போனேன்.

``என்னப்பா நீ வந்துருக்க’’ என்று கேட்டார். (யாரையும் வாடா போடா என்று சொல்லமாட்டார்).

``அப்பா வீட்டில் இல்லை. அண்ணன் வரலைன்னு சொல்லிட்டான். வாடகை அப்பா வந்ததும் வாங்கி வைக்கிறேன்னு அம்மா சொல்லச் சொன்னாங்க’’ என்று சொன்னேன்.

``சாப்பிட்டியா’’ என்று கேட்டுக்கொண்டே பார்லே ஜி ரொட்டி பாக்கெட்டைப் பிரித்தார்.

``இன்னும் இல்லை இன்னைக்கு ஸ்கூல்க்குப் போகலை. அதனால் இன்னும் சாப்பிடலை’’ என்று சொன்னேன்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை. பெரிய பை ஒன்றை எடுத்துக்கொண்டு மேலே ஏறினார். அய்யோ எதுவும் சொல்லப்போகிறாரோ என்று பயந்துகொண்டே அவர் கூடவே சென்றேன்.

வீட்டிற்குள் நுழைவதற்கு முன் ``வீட்டிற்குள் வரலாமா’’ என்று கேட்டுவிட்டு நேராக அடுப்படிக்குப் போனார். எல்லா டப்பாவையும் திறந்து பார்த்தார்.

``எல்லா டப்பாவும் இருக்கு. ஆனால் காலியாயிருக்கு. அதனால் தான் உன் வயிறும் காலியா இருக்கு’’ என்று சொல்லி என்னையும், அண்ணனையும் கூப்பிட்டார்.

Representational Image
Representational Image

என் அண்ணன் ``நான் வரலை’’ என்று சொன்னான். ஒரு முறை முறைத்தார். பின்னாடியே வந்துவிட்டான். அவர் வண்டியை கடைவீதிக்கு விடச்சொன்னார். இரண்டு பெரிய பை நிறைய மளிகை சாமான். ஒரு மூட்டை அரிசி. முக்கியமாக எனக்குப் பிடித்த பேரிச்சம்பழம், பார்லே ஜி பிஸ்கட். அப்புறம் சுதாவிலாஸில் புரோட்டா வாங்கிக் கொடுத்தார்.

``உங்க அக்காவைக் கூப்பிட்டு வந்து இதை எல்லாம் எடுத்துட்டுப் போகச் சொல்லு’’ என்று சொன்னார். அதுகூட 1 ரூபாய் நோட்டு 30 கொடுத்தார். ``நல்லா சாப்பிட்டு தெம்பாக இருக்கணும்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

இப்போதும் அவரை எங்கு பார்த்தாலும் காலில் விழுந்துவிடுவேன்.

இன்னோரு வீட்டு உரிமையாளர் பெயர். திருவேங்கடம்அதிதீவிர ஆதிபராசக்தி பக்தர். அந்த ஊரில் கோயில் கட்டச் சொல்லி அவருடைய இடத்தை தானமாகக் கொடுத்தவர். சாதி எதிர்ப்பாளரும் கூட.

அந்த சமயம் உடனே வீடு கிடைக்கவில்லை. ``திருவேங்கடத்தைப் போய்ப் பாருங்க’’ என்று ஒரு மாட்டுத் தரகர் சொன்னார். அந்தக் காலத்தில் தரகர் எல்லாம் கிடையாது. அவரை போய்ப் பார்த்து விவரத்தைச் சொன்னார் அப்பா. ``நம்பி வந்துட்டீங்க. இப்போதைக்கு வீடு இல்லை. வேணும்னா ஒரு மாதத்திற்கு இந்த மாட்டுக் கொட்டகையில தங்கிக்கோங்க சும்மாதான் இருக்கு. நான் ஒருமாத்தில் வீடு கட்டித்தரேன் என் வீட்டில பக்கத்தில’’ என்று சொன்னார். அதேபோல கட்டியும் கொடுத்தார். அவருக்கு இரு மகள்கள், மூன்று மகன்கள்.

Representational Image
Representational Image

யாருடனும் அவ்வளவாகப் பேச மாட்டார். ஒரு பெண்ணை உள்ளூரிலும், ஒரு பெண்னை வெளியூரிலும் திருமணம் செய்து கொடுத்திருந்தார். மகன்கள் மூவரும் வெளியூரில் படித்துக்கொண்டிருந்தனர். வாரம் ஒருமுறை அவர்கள் வருவார்கள். அதுவும் இங்கு தங்கமாட்டார்கள். அவர்களின் அக்கா வீட்டில் தங்கிக்கொள்வார்கள்.

யார் தயவும் இல்லாமல் தானே சமைத்துச் சாப்பிடுவார். அவர் அவரின் வீட்டிலேயே விபூதி தயாரிப்பார். தயாரிக்க ஆரம்பித்துவிட்டால் கடுமையான விரதமிருப்பார். இன்னும் எங்கள் வீட்டில் அவர் அளித்த விபூதிதான் இருக்கிறது. அந்தப் பகுதியில் இருந்தவர்கள் மாற்று சமூகத்தினர். அதனால் எங்களுக்கு வீடு கொடுத்தற்காக அவரைச் சிலர் திட்டினார்கள். அதற்கு அவர் ``நான் எப்பவும் மனுசனுக்குத்தான் வீடுவிடுவேன். உங்கள மாதிரி மடஜென்மத்துக்கு இல்ல’’ என்பார்.

அவர் வீட்டில் குடியிருந்த சமயம், அவரிடம் போய் ``தாத்தா நீங்க மட்டும் ஏன் சமைத்துச் சாப்பிடுறீங்க. உங்களுக்கும் சேர்த்து சமைக்கிறோம் நீங்களும் சாப்பிடுங்க’’ என்று சொன்னேன். ``அவரும் சிரித்துக்கொண்டே சரி என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டில் இருக்கும்வரை அவருக்கு துணையாக நாங்களும் எங்களுக்கு துணையாக அவருமாக இருந்தோம்.

Representational Image
Representational Image

ஒரு முறை என்னுடன் பள்ளியில் படித்த ஒரு பையன் ``எங்க வீட்ல மரவள்ளிக்கிழங்கு கொழம்பு இருக்கு சாப்பிட வர்றியா’’ என்று கேட்டான். சரி என்று நானும் போய் சாப்பிட்டு வந்தேன். இது எப்படியோ தெரிந்து ஊரில் பஞ்சாயத்தைக் கூட்டினார்கள். திருவேங்கடம் தாத்தாவின் நடு பையன் வந்து இருந்தார்.

``நான் போறேன் இவங்களுக்கு வேற வேலையே இல்லை’’ என்று சொல்லி அவர் கிளம்பிவிட்டார். திருவேங்கடம் தாத்தாவிடம் இதை அவர் சொல்ல, தாத்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது. நேராகப் போய் ``அட ஈனப்பிறவிகளா, ஒரு சின்னப்பையன் இன்னொரு சின்னப்பையன் வீட்டில் சாப்பிட்டான். அது குத்தமாடா. அவன் பேண்டாலும், இவன் பேண்டாலும் அதுதான். நாய்க்குச் சோறு வைக்குற நீங்க. மனிதனுக்குச் சோறு போட மாட்டிங்களா? இப்படித்தான் பண்ணுவோம் அப்படினா என்னைய ஊரை விட்டு ஒதுக்கி வைங்க. இப்படித்தான் பண்ணுவேன் சொல்லி இந்தப் பையன் மேல யாராவது கை வச்சிங்க. நடக்கிறதே வேறனு’’ என்று சொல்லி என்னை அங்கேயே விட்டு விட்டுக் கிளம்பினார். மொத்தக் கூட்டமும் அவரைத்தான் வேடிக்கை பார்த்தது.

அதன்பிறகு `என் மேல சுண்டு விரல்கூட படாமல் வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள். அதன்பிறகு தாத்தாவின் மகன் என்னுடன் பயங்கர நட்பாகிவிட்டார். கேரம், செஸ் எல்லாமே சொல்லிக்கொடுத்தார். இப்பவும் அந்த ஹவுஸ் ஓனர் தாத்தாவை நினைத்துக் கொள்வேன் அடிக்கடி. நாங்க அந்த வீட்டில் இருந்தவரை அவர் வாடகையே வாங்கவில்லை.

Representational Image
Representational Image

இப்பவும் ஒவ்வொரு வீடும் மாறும்போது இதுதான் கடைசி வாடகை வீடாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அந்தக் கடைசி வீடு என் ஜீவனம் இருப்பதற்குள் வருமா என்று தெரியவில்லை. ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் அட்வான்ஸ் கொடுக்க விழுகுற துண்டுக்குக் கடன் வாங்குவது வாடிக்கையாக இருக்கிறது. யாரிடம் கேட்கலாம் என்று போனை எடுத்தால், ``வீடு வேண்டுமா. சென்னைக்கு மிக அருகில் இருக்கு’’ என்று எஸ்.எம்.எஸ்-கள். விளம்பரத்தைப் பார்த்து அந்த இடம் எங்கு என்று தேடிப்பார்த்தால் செங்கல்பட்டு, அரக்கோணம் என்று நீள்கிறது. கொடுமையே. என்னத்த சொல்ல.

என் மனைவியும் நானும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து என் பெரிய மகள் வந்து கேட்டாள்.

"அப்பா நமக்குனு சொந்தமா எப்ப வீடு கட்டுவோம்?" என்று.

-சுகேஷ் சங்கரலிங்கம் & டேனியல் ராஜா. வி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு