Published:Updated:

``டிஸ்னி வேர்ல்டு போல கீழடியில் அருங்காட்சியகம்!'' - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கீழடி சார்ந்தும் தமிழ்நாடு முழுக்க நடக்கவுள்ள அகழ்வாய்வுகள் சார்ந்தும் நிறைய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். சில வாக்குறுதிகளையும் அளித்தார்.

கீழடியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பார்வையிட்டார்
கீழடியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பார்வையிட்டார் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

சிவகங்கை மாவட்டம் கீழடியில், தமிழகத் தொல்லியல் துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. வருகிற செப்டம்பர் 30-ம் தேதியுடன் இந்த அகழாய்வு நிறைவுபெறும் எனக் கூறப்படுகிறது.

கீழடி நீர் மேலாண்மை கால்வாய்கள்
கீழடி நீர் மேலாண்மை கால்வாய்கள்
ஈ.ஜெ.நந்தகுமார்

'தற்போதைய கள ஆய்வுகள் முடிவுபெற்றாலும், கீழடியில் கிடைத்த பொருள்களான சுடுமண் சிற்பங்கள், பானைகள், எலும்புகள் உள்ளிட்டவை ஆய்வுக்கூடங்களில் ஆய்வு செய்யப்படும். எலும்பு தொடர்பானவை, புனே மற்றும் கேரளா ஆய்வுக் கூடங்களில் ஆய்வு செய்யப்படும்' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கீழடிக்கு இன்று விசிட் அடித்தார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அகழ்வாராய்ச்சி நடக்கும் பகுதிகளைச் சுற்றிப் பார்த்த அவர், அங்கிருந்த ஆய்வாளர்களைச் சந்தித்துப்பேசினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கீழடி சார்ந்தும் தமிழ்நாடு முழுக்க நடக்கவுள்ள அகழ்வாய்வுகள் சார்ந்தும் நிறைய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். சில வாக்குறுதிகளையும் அளித்தார்.

மாஃபா பாண்டியராஜன் பார்வையிட்ட போது
மாஃபா பாண்டியராஜன் பார்வையிட்ட போது

அமைச்சர் தந்த கீழடி ஸ்டேட்டஸ்:

  • கீழடியில் நடைபெற உள்ள 5 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி இன்னும் 2 வாரத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

  • கீழடியில், தற்போது ஒளி மூலமும் அணுக்கதிர்கள் வழியேயும் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இதோடு, வான்வழி, தரை வழி என 11 முறைகளில் அகழ்வாராய்ச்சி செய்கிறோம்.

  • கீழடி போலவே தமிழகத்தில் 70 இடங்களில் 120 அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவருகிறது.

  • கீழடியில் மத்திய தொல்லியல்துறை நடத்திய 1 மற்றும் 2 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி அறிக்கை, தமிழகத் தொல்லியல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த 1 மற்றும் 2 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பெரிய தகவல்கள் ஒன்றும் கிடைக்கவில்லை.

  • தென் தமிழகத்தை தமிழக தொல்லியல்துறை புறக்கணிக்கவில்லை. இந்த ஆராய்ச்சிகளை வைத்து, பிரிவினை வாதம் வரக்கூடாது.

  • கீழடியில், வேளாண் சமூகத்தில் கால்நடை வளர்ப்பு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

  • 2,600 ஆண்டுகளுக்கு முன்னர், இங்கே சிலிக்கா மணல் என்கிற உயர்தர மணல் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

  • கட்டுமானங்களில் நிறைய அலுமினியம் பயன்படுத்தியுள்ளனர்.

  • தொழில்துறை மேலோங்கி இருந்திருக்கிறது, நெசவுத்தொழில் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. தங்கப் பொருள்கள் மற்றும் பகடைக்காய் போன்ற விளையாட்டுப் பொருள்கள் கிடைத்துள்ளன.

  • வணிகம் சார்ந்த பொருள்கள் நிறைய கிடைத்துள்ளன.

கீழடி
கீழடி

அமைச்சர் தந்த வாக்குறுதிகள்

  • கீழடியில், 6-வது கட்ட அகழ்வாராய்ச்சியை மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து தமிழக தொல்லியல்துறை செய்யும்.

  • மத்திய தொல்லியல்துறை வசம் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 8 ஆயிரம் பொருள்களை, தமிழக தொல்லியல்துறை பெறவுள்ளது. அதற்குப் பிறகு, அதைக்கொண்டு விரைவில் 15 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

  • கீழடியில், திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கையாக உள்ளது. அப்படி அனுமதி கிடைத்தால், டிஸ்னி வேர்ல்டு மாதிரி கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

  • தொல்லியல்துறையின் பொற்காலமாக எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆட்சி இருக்கிறது. அதனால்தான் புதுக்கோட்டை, உதகை, திருநெல்வேலி உள்ளிட்ட 4 இடங்களில் 12 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கும் முயற்சியில் இருக்கிறோம். மதுரை திருமலை நாயக்கர் மஹாலை உலகத் தரத்திற்கு மாற்ற மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளோம்.

  • 'மத்திய அரசு நிதிக்காக, கீழடி அகழ்வாராய்ச்சியில் தொய்வு வரக்கூடாது' எனத் தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

  • கீழடி மட்டுமல்லாமல் மணலூர், அகரம், கொந்தகையில் அகழ்வாராய்ச்சி செய்ய அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்ததும் வேலைகள் தொடங்கப்படும்.

  • கிழக்குத் தொடர்ச்சி மலையிலும் அகழ்வாராய்ச்சி செய்யப்படும்.

  • ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கை 2 மாதத்தில் வெளியிடப்படும்.

  • இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே அதிக அளவில் கல்வெட்டுகள் உள்ளன. அதோடு, வரலாற்று சிறப்பு மிக்க அம்சங்களும் உள்ளன. விரைவில் தொல்லியல்துறை சார்பில் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

  • திருச்சியில், மத்திய தொல்லியல்துறை அலுவலகம் விரைவில் கொண்டு வர உள்ளனர்.

கீழடி
கீழடி
  • மதுரை காமராசர், காரைக்குடி அழகப்பா, அமெரிக்க ஹார்வேர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அகழ்வாராய்ச்சி, கார்பன் டேட்டீங் பரிசோதனை மையங்கள் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறோம். அது சாத்தியமானால் பண்டைய பொருள்களை 15 நாள்களில் ஆய்வுசெய்ய முடியும்.

இவ்வாறு பல்வேறு வாக்குறுதிகளை அமைச்சர் அளித்தார். இவையெல்லாம் வெறும் வாய்வார்த்தைகளாக இல்லாமல் முறையாக நிறைவேற்றப்பட்டால், அது கீழடி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லக்கூடியதாக இருக்கும் என்பதே மக்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது.