Published:Updated:

திடீரென வந்தது, திடீரென மறைந்தது... நீங்காத 12 அடி உலோகத் தூண் மர்மம்!

12 அடி உலோகத் தூண்
12 அடி உலோகத் தூண் ( Utah public safety department )

அதை அங்கு யார் வைத்திருப்பார்கள், அவ்வளவு பெரிய தூண் ஒன்று அங்கு எப்படி வந்திருக்கும் என எந்த தடயமும் அங்கு இல்லை!

கடந்த வருடம், ஒரு வைரஸால் மொத்த மனித இனமும் வீடுகளுக்குள் முடங்கும் என யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அதை நிகழ்த்திக்காட்டியது 2020. இது அல்லாமல் பல விஷயங்களில் நமக்குத் தொடர்ந்து அதிர்ச்சிகளைக் கொடுத்துவரும் ஆண்டாக அமைத்திருக்கிறது 2020. எப்படியோ தட்டுத்தடுமாறி இந்த ஆண்டின் முடிவை நெருங்கிவிட்டோம். புது வருடத்தில் புது விடியல் பிறக்கும் என நம்பிக்கையில் மொத்த உலகமும் அடுத்த வருடத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இந்நிலையில் 'இன்னும் நான் எங்கேயும் போகல' என மற்றுமொரு மர்மத்தைக் கட்டவிழ்த்திருக்கிறது 2020.

நவம்பர் 18-ம் தேதி அன்றாடம் செய்யப்படும் வன ஆடுகளின் கணக்கெடுப்பை ஹெலிகாப்டர் மூலம் செய்துவந்தனர் அமெரிக்காவில் உள்ள யூட்டாவின் பொது பாதுகாப்புத்துறை அதிகாரிகள். அப்போது பிரகாசமாக பளபளவென மின்னும் ஒரு பொருளை திடீரென வானிலிருந்து பார்த்திருக்கின்றனர். 'என்னவாக இருக்கும்?' என்ற ஆர்வத்தில் தரையிறங்கி அருகில் சென்ற அவர்கள் 10-12 அடி உயரத்தில் பாறைகள் சூழ்ந்த அந்த பாலைவனத்திற்கு நடுவில் ஒரு பெரிய முக்கோண வடிவ உலோகத் தூண் ஒன்று செங்குத்தாக நிற்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அதை அங்கு யார் வைத்திருப்பார்கள், அவ்வளவு பெரிய தூண் ஒன்று அங்கு எப்படி வந்திருக்கும் என எந்தத் தடயமும் அங்கு இல்லை. மிகவும் கரடு முரடான அந்த பகுதிக்குள் வாகனங்களில் வருவது என்பது முடியாத காரியம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Monolith
Monolith
Utah public safety department
`மூன்று பறக்கும் தட்டு வீடியோக்களை உறுதிப்படுத்திய அமெரிக்கா..!’ -மீண்டும் `ஏலியன்ஸ்’ விவாதங்கள்

"இதுபோன்ற கணக்கெடுப்புகளுக்கு மிகவும் குறைந்த உயரத்தில் பறப்பது வழக்கம். அப்போதுதான் ஆடுகளின் பாலினம் வரை சரியாக பார்க்க முடியும். அப்படிச் சென்றதால்தான் இது எங்கள் கண்ணில்பட்டது" என்றனர் யூட்டாவின் பொது பாதுகாப்புத்துறை அதிகாரிகள். இதுத் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டது யூட்டாவின் பொது பாதுகாப்புத்துறை. இந்த மர்மமான உலோகத் தூண் உலக அளவில் பேசப்படும் ஒரு விஷயமாக மாறியது. பலரும் இது என்னவாக இருக்கும் என தங்களுக்குத் தோன்றியதைப் பதிவிட்டு வந்தனர்.

2001: Space Odyssey Monolith
2001: Space Odyssey Monolith

'ஏலியன்ஸ் வேலை' என்பதில் தொடங்கிப் பல விதமான கான்ஸ்பிரஸி தியரிகள் பதிவிடப்பட்டு வருகின்றன. மீம்ஸ் பல வைரலாகின. 1968-ம் ஆண்டு வெளிவந்த '2001: A Space Odyssey' திரைப்படத்தில் இதைப் போன்ற ஒரு தூண் இடம்பெற்றிருந்ததைப் பலரும் குறிப்பிட்டனர்.

மினிமலிஸ்ட் கலைஞர் ஜான் மேக்கிரக்கேனின் வடிவமைப்புகள்
மினிமலிஸ்ட் கலைஞர் ஜான் மேக்கிரக்கேனின் வடிவமைப்புகள்
Utah public safety department

இது பிரபல மினிமலிஸ்ட் கலைஞர் ஜான் மேக்கிரக்கேனின் கைவண்ணம் போலத் தெரிகிறது என 'The Art Newspaper' குறிப்பிட்டது.

"இவ்வளவு துல்லியமாக இந்த உலோகத் தூணை நிறுத்த அதே வடிவில் பாறைகளைக் கீழே தோண்டியிருக்க வேண்டும். பாறைகள் சூழ்ந்த பாலைவன நிலத்தில் இதை எப்படிச் செய்திருப்பார்கள் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது" என்றார் யூட்டாவின் பொது பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் நிக் ஸ்ட்ரீட்.

இப்படி மர்மம் விலகாததால் மக்களிடையே இந்த உலோகத் தூண் பற்றிய ஆர்வம் அதிகரித்தது. இதைப் பார்த்த யூட்டாவின் பொது பாதுகாப்புத்துறை அது இருக்கும் இடத்தை தெரிவிக்க மறுத்தது. "அந்த இடத்துக்குச் செல்ல முயல்வது மிகவும் ஆபத்தானது. அப்படி முயற்சி செய்தால் பாறைகளில் அவர்கள் சிக்கிக்கொண்டு யாரேனும் அவர்களை மீட்கும் நிலை ஏற்படும்" என்றது.

"எந்த கிரகத்திலிருந்து வந்திருந்தாலும் சரி, அரசுக்குச் சொந்தமான பொது இடங்களில் அனுமதி இல்லாமல் இப்படியான பொருட்களை நிறுவுவது சட்ட விரோதமான செயல்."
யூட்டாவின் பொது பாதுகாப்புத்துறை

எங்கு இருக்கிறது என்று தெரிவிக்கப்படவில்லை என்றாலும் சிலர் தங்கள் சொந்த முயற்சியில் இந்த உலோகத் தூண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பலரும் அங்குச் செல்ல முயற்சி செய்துவந்தனர். அப்படி அங்கு ஒரு முறை சென்று வந்த ட்ரெக்கிங் வீரர் டேவிட் சர்பேர், அடுத்த முறை அங்குச் செல்லும்போது அந்த தூண் இல்லை என இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவிட்டார். இதை உறுதிப்படுத்தியிருக்கிறது யூட்டாவின் பொது பாதுகாப்புத்துறை. 'அதை நாங்கள் நீக்கவில்லை' என்றும் தெரிவித்தது. எப்படித் தோன்றியதோ அப்படியே மாயமாக மறைந்திருந்திருக்கிறது இந்த உலோகத் தூண்.

மறைந்து போன உலோகத் தூண்
மறைந்து போன உலோகத் தூண்
Utah public safety department

'வேற்றுகிரக வாசிகளோ, மனிதர்களோ வைத்தவர்களே அதை எடுத்துச் சென்றிருக்க வேண்டும்' என்று பதிவிட்டுவருகின்றனர் மக்கள். 'அது 2020-க்கான ரீ-செட் பட்டன். அதை இப்படி மிஸ் செய்து விட்டோமே' என ஜாலியாக பதிவிட்டுவருகின்றனர் சிலர். இந்நிலையில் தற்போது இதே போன்ற ஒரு உலோகத் தூண் ருமேனியா நாட்டில் தோன்றியிருக்கிறது. இந்த உலோகத் தூணில் கூடுதலாக சில கிறுக்கல்களும் காணப்பட்டன. இதுவும் யாரால் வைக்கப்பட்டது, எப்படி வைக்கப்பட்டது என்று இன்னும் தெரிய வர வில்லை. ஆனால், பெரும்பாலும் யூட்டாவில் நடந்ததைப் பார்த்து யாரோ செய்திருக்கும் வேலையாகவே இது இருக்கும் எனத் தெரிகிறது.

ருமேனியா உலோகத் தூண்
ருமேனியா உலோகத் தூண்
இன்னும் 2020-ல் என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ?!
அடுத்த கட்டுரைக்கு