Published:Updated:

பள்ளியின் முதல் நாள் அவன் அழுதான், ஆனால் இன்று..! - அம்மா பகிரும் மகனதிகாரம் #MyVikatan

Representational Image ( Jude Beck on Unsplash )

அவர் சொன்னதில் ஒரு விஷயம் என் மனதில் பதிந்தது "நீ அந்தப் பள்ளியில் வேலை செய்தால்" பிள்ளையைப் பிரிய மனமில்லாமல் அதே பள்ளியில் ஆரம்ப பள்ளி ஆசிரியை வேலைக்கு விண்ணப்பித்தேன்...

பள்ளியின் முதல் நாள் அவன் அழுதான், ஆனால் இன்று..! - அம்மா பகிரும் மகனதிகாரம் #MyVikatan

அவர் சொன்னதில் ஒரு விஷயம் என் மனதில் பதிந்தது "நீ அந்தப் பள்ளியில் வேலை செய்தால்" பிள்ளையைப் பிரிய மனமில்லாமல் அதே பள்ளியில் ஆரம்ப பள்ளி ஆசிரியை வேலைக்கு விண்ணப்பித்தேன்...

Published:Updated:
Representational Image ( Jude Beck on Unsplash )

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

முதன்முதலில் பள்ளிக்கு என் ஒரே மகனை அனுப்பியது இன்றும் என் கண்முன்னே இருக்கிறது. அது ஆகிவிட்டது பதினெட்டு வருடங்கள் ஆனாலும் இன்றும் பசுமையான நினைவுகளாக என் மனம் அசைபோட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

பள்ளிக்கு சென்று அவனை வகுப்பறையில் அமர வைத்து நான் வெளியே வந்ததும் என் மகன் பின்னாலேயே ஓடிவந்து ``அம்மா... அம்மா... என்ன விட்டுட்டு போகாதேம்மா...’’ என்று கதறி அழுதது, அவனது ஆசிரியை என்னை அங்கு நிற்காமல் செல்லும்படி கூறியது, என்னைச் சுற்றி ஆட்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் நானும் என் மகனைப் பார்த்து அழுத வண்ணம் நின்றது எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கையில் மனதிற்குள் சிரிப்பு வருகிறது. ஆனால், அன்று அந்தக் கணம் நான் நொறுங்கிப் போனேன்.

Representational Image
Representational Image
Thiago Cerqueira on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் குழந்தை சாப்பிட்டதா? டாய்லட் போக அனுமதி கேட்க சொல்லிக்கொடுத்தேனே. ஒழுங்கா கேட்கத் தெரியுமா இல்லை பயத்தில் கேட்காமல் உட்கார்ந்திருப்பானா, மற்ற குழந்தைகளுடன் விளையாடுவானா என்றெல்லாம் பல கேள்விகள் உதித்து என் நிம்மதியைக் குலைத்தது.

என் கணவரிடம் அடிக்கடி அவன் இன்னமும் அழுது கொண்டிருப்பானா, சாப்பிட்டிருப்பானா, சண்டையிடாமல் மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவானா என்று தொனதொனக்க அவர் என் புலம்பல்கள் கேட்டு,

"இதெல்லாம் நீ அந்தப் பள்ளில வேலை செய்தால் உன் புள்ள பக்கத்திலிருந்தே தெரிஞ்சுக்கலாம். என்ன கேட்டா நானும் உன்ன மாதிரி இங்கதானே இருக்கேன். சாயங்காலம் அவன் வந்ததுக்கப்புறம் கேட்டு தெரிஞ்சுக்கலாம். இப்போ போய் வேற வேலைய பாரு" என்று கடுப்படித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாவம் அவரும் பிள்ளை நினைப்பில்தான் இருந்திருப்பார். ஆனால், என்னைப்போல காட்டிக்கொள்ளவில்லை அவ்வளவுதான். ஆனால், அவர் சொன்னதில் ஒரு விஷயம் என் மனதில் பதிந்தது "நீ அந்தப் பள்ளியில் வேலை செய்தால்" பிள்ளையைப் பிரிய மனமில்லாமல் அதே பள்ளியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியை வேலைக்கு விண்ணப்பித்தேன். இன்டர்வியூ நாள் வந்தது அங்கே என்னை நோக்கி பாய்ந்த முதல் கேள்வி...

"இது உங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை அல்லவே... நீங்கள் போஸ்ட் கிராஜுவேட் முடித்துள்ளீர்கள் பின்பு ஏன் விண்ணப்பித்தீர்கள் என்பதை தெரிந்துகொள்ளலாமா?" என்று கேட்டார்கள்.

Representational Image
Representational Image
Vikatan Team

என் மகனுக்காக. மகனுடன் இருப்பதற்காக சேர்ந்தேன் என்று கூறமுடியுமா?

ஏதோ ஆசிரியை ஆக ஆசை அது இது என்று சொல்லி ஒரு வழியாக என் மகன் பள்ளி செல்ல ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் நானும் ஆரம்பப் பள்ளி ஆசிரியை ஆனேன். முன்னனுபவம் ஏதுமின்றி. அதுவும் எல்.கே.ஜி வகுப்பு எனக்கு தரப்பட்டது‌. என் மகனுக்காக ஆசிரியை ஆனாலும் அந்தப் பிஞ்சு முகங்களை தினமும் பார்ப்பதில் பேரானந்தமாக இருந்தது.

ஆசிரியை ஆகியாச்சு என் மகனுடன் ஒன்றாகப் பள்ளிக்குச் சென்று வரலாம் என்று எண்ணினேன். ஆனால், வேலையில் சேர்ந்த பிறகுதான் தெரிந்தது ஆசிரியர்கள் பள்ளி முடிந்த நேரத்திலிருந்து ஒரு மணிநேரம் ஆன பின்னரே வீட்டுக்குச் செல்ல முடியும் என்பது‌. அந்த ஒரு மணிநேரம் என் மகனை எங்கே விடுவது என்ற கேள்வி எழுந்தது.

பள்ளியில் அவனை சேர்க்க... அவனை பிரிய மனமில்லாமல் நான் ஆசிரியையாக சேர... பின் எனக்காக அவன் ஒரு மணிநேரம் பள்ளியில் காத்திருக்க வேண்டியிருந்தது. அவனுக்காகக் காலை மத்திய உணவு போகத் தனியாக மாலை உண்பதற்கு ஏதாவது தினமும் எடுத்துச் செல்வேன். இதோடு எல்லாம் முடிந்தது இனி சுபமே என்று பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த சிக்கல் வந்தது.

Representational Image
Representational Image
Vikatan Team

என் மகன் தனது வகுப்பிலிருந்து ஓடிவந்து எனது வகுப்பில் அமர ஆரம்பித்தான். அம்மாவின் வகுப்பில்தான் அமருவேன் என்று ஒரே அழுகை வேறு. அந்தப் பள்ளி தலைமை ஆசிரியை முன் நானும் என் மகனும் நின்றோம். எங்கள் பிரச்னையை முன் வைத்தோம். அவர் என் மகன் என் வகுப்பில் அமர அனுமதித்தார். அவன் என் வகுப்பில் அமர சில நிபந்தனைகளை நான் அவன் முன் வைத்தேன். நல்ல பிள்ளையாக அவை அனைத்தையும் கடைப்பிடித்து எனக்கு ஒத்துழைத்தான் என் மகன்.

``கவலை என்பது அடுத்த நிமிட நிகழ்வில் மறக்க வேண்டும், அழுதாலும் நம்மால் மற்றொருவரின் பேச்சைக்கேட்டு சிரிக்கவும் முடியும், ஒன்றாக இருந்தால் சந்தோஷம் பெருகும்!’’

வகுப்பில் மேடம் என்றுதான் அழைப்பான் `அம்மா' என்று ஒருபோதும் அழைத்ததில்லை. தன் அம்மாதானே என்று எந்த வித சலுகைகளையும் அவனும் எதிர்ப்பார்க்கவில்லை நானும் கொடுக்கவில்லை. இப்படியே எல்.கே.ஜியும் யூ.கே.ஜியும் இருவரும் ஓன்றாக ஒரே வகுப்பறையில் படித்தோம். ஆம் அவன் படித்ததோ பாடப்புத்தகம் ஆனால் எனது வகுப்பில் இருந்த 30 குழந்தைகளும் என் மகன் உட்பட எனக்கு 30 வாழ்க்கை பாடப் புத்தகங்கள் ஆனார்கள்.

Representational Image
Representational Image
Vikatan Team

குழந்தைகளுடன் நாம் இணைந்து பயணிக்கும் பயணத்தில் பல பாடங்களை நமக்கு மிக சுலபமாகக் கற்றுத் தந்துவிடுவார்கள்.

கவலை என்பது அடுத்த நிமிட நிகழ்வில் மறக்க வேண்டும், அழுதாலும் நம்மால் மற்றொருவரின் பேச்சைக்கேட்டு சிரிக்கவும் முடியும், ஒன்றாக இருந்தால் சந்தோஷம் பெருகும்,

ஏதேனும் மறந்தாலும் அதை அழகாகக் கதைபோலச் சொல்லி கவர்வது, வெளிப்படையாக போலித்தனமில்லாமல் பேசுவது என்று பலவற்றை நாம் அவர்களோடு இருந்தால் கற்றுக்கொள்ளலாம். நானும் கற்றுக்கொண்டேன்.

பெற்றோர்கள் என்னிடம் வந்து,

``எங்கள் பிள்ளைகளுக்கு நீங்கன்ன ரொம்ப பிடிக்கும் மேடம்... எங்க மேம் அது சொன்னாங்க இது சொன்னாங்க என்று எப்ப பார்த்தாலும் சொல்லிக்கிட்டே இருக்காங்க.’’

என்று கூறும்போது சற்று சங்கோஜமாகவும் அதே சமயம் சந்தோஷமாகவும் இருந்தது. இதுவே என் 30 செல்வங்களும் எனக்களித்த 30 அவார்டாகக் கருதிக்கொண்டு இருக்கையிலே... பிஞ்சுகளால் நான் அந்த ஆண்டின் பள்ளி ஆண்டுவிழாவில் சிறந்த ஆசிரியை பரிசு பெற்றேன்.

Representational Image
Representational Image
Vikatan Team

என் மகன் ஒன்றாம் வகுப்புக்கு தேர்ச்சி ஆனான். அவனின் பாதை நண்பர்கள், படிப்பு, விளையாட்டு என்று மெல்ல மாறத் துவங்கியது. நானும் என் பாதையை மாற்றி அமைத்துக்கொண்டேன். +1 மற்றும் +2 வகுப்பு பிள்ளைகளுக்கு அக்கௌன்டன்ஸி மற்றும் காமர்ஸ் ஆசிரியையாக ஆர்மி ப்பளிக் பள்ளியில் நியமிக்கப்பட்டேன்.

என் படிப்பிற்கும் வேலைக்கும் அன்று சம்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டேன். அன்று யோசித்துப்பார்த்தேன்... மகன் தான் சிறுப்பிள்ளை என்றால் நானும் சிறுப்பிள்ளைத் தனமாக இருந்ததை உணர்ந்தேன். என் சிறுப்பிள்ளைத் தனம் என்னை எனக்கே புரியவைக்க கடவுள் கொடுத்த ஒரு நல்ல, சிறந்த வாய்ப்பாகக் கருதினேன்.

எனது இந்த உணர்வு எல்லா தாய்களும் அவர்கள் பிள்ளைகள் பள்ளி செல்லும் முதல் நாள் அனுபவித்திருப்பார்கள்.

இன்று என் மகன் வெளிநாட்டில் இஞ்சினியரிங் படித்து வருகிறார். அவரை கல்லூரியில் சேர்க்க நானும் என் கணவரும் அவருடன் சென்றிருந்தோம். ஒரு வாரம் ஹோட்டலில் தங்கியிருந்தோம். மூன்று நாள்கள் ஓரியன்ட்டேஷன் என்று ஓடியது. ஒரு நாள் காலேஜ் ஹாஸ்டல் ரூமை அவருக்கு செட் செய்து கொடுப்பதில் கழிந்தது. ஒரு நாள் ஊரை சுற்றிப்பார்ப்பதில் சென்றது. ஆறாவது நாள் கல்லூரி வகுப்புகள் ஆரம்பம் ஆனது.

Representational Image
Representational Image
Pixabay

ஏழாவது நாள் நாங்கள் ஊருக்கு திரும்பும் நாள்... காலை உணவு அருந்திவிட்டு நேராக கல்லூரிக்குச் சென்று எங்கள் மகன் வகுப்பு முடிந்து வரும் வரையில் காத்திருந்தோம். அவர் வந்தார் நாங்கள் மூவரும் மதிய உணவு ஒன்றாக அமர்ந்து அருந்தினோம். ஏதோ என் மனதில் ஒரு கலக்கம்.

முதல் முறையாக மகனை தூரதேசத்தில் விட்டுவிட்டு பிரியப்போகிறோமே என்றா... சொல்ல முடியாத ஒரு தவிப்பு... அப்பாவும் மகனும் மும்முரமாக வகுப்புகள், லெக்சரர்கள், கல்லூரி, பாடம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

நான் என் மகனைப் பார்த்துக்கொண்டே இருந்தேன் ஏதும் பேசாமல். அவரும் என்னை அடிக்கடி பார்த்தார். ஆனால், பேசவில்லை. பின் கேட்டார், "என்னம்மா பார்த்துட்டே இருக்க?" நான் என் மகனைப்பார்த்து...

"இப்போ உன்கூட உன் கல்லூரியிலதான் இருப்பேன், உன் வகுப்பறையில்தான் அமர்வேன் என்னை கூட்டிக்கிட்டு போகத்தான் வேணும்னு அடம்புடிச்சா என்னவாகும்" என்றேன். மகன் பதில் அளிப்பதற்கு முன் என் கணவர் முந்திக்கொண்டு,

"அம்மா தாயே விட்டா நீ உன் பையன் பின்னாடியே இஞ்சினியரிங் காலேஜ் லெக்சரரா போயிடப்போற... நான் ஒருத்தன் இங்கே இருக்கேன் மா... மனமிறங்கி வா தாயீ" என்றதும்,

மூவரும் சிரிப்பு மழையில் அன்று முழுவதும் ஊருக்கு கிளம்பும் வரையில் பழைய நினைவுகளால் நனைந்தோம்.

அன்றும் அழுதேன் என் மகனைப் பிரியும் பொழுது. அதே மாதிரி சிந்தனை... பழக்கமில்லாத நாட்டில் மகனை தனியே விட்டுவிட்டு போகப்போகிறோமே என்ன செய்வாரோ என்றல்ல... எங்கள் மகன் இப்படி ஒரு கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்து அதைத் தைரியமாக ஏற்று தனித்திருந்து சாதிக்கப் போகிறார் என்ற பெருமிதத்தில் வந்த ஆனந்த கண்ணீர் அது.

Representational Image
Representational Image
Pixabay

முதன் முதலில் மகனை

பள்ளியில் சேர்த்தபோதும் கண்கள் கலங்கின

கல்லூரியில் சேர்த்தபோதும் கண்கள் கலங்கின

இரண்டு தருணங்களிலும் கண்களில் வடிந்தது கண்ணீர்

முதலாவது முறை பரிதவிப்பினால்

இரண்டாவது முறை ஆனந்தத்தினால்

கண்ணீர் ஒன்றுதான்

ஆனால், காரணங்கள் வேறுபட்டது

பரிதவிப்பு என்னை ஆசிரியையாக மாற்றியது

ஆனந்தம் என்னை எழுத்தாளராக மாற்றியது.

- பார்வதி நாராயணன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/