Published:Updated:

`ம்மா... தலையணை கொண்டு வா... தூக்கம் வருது!' - வாசகி பகிரும் ஆன்லைன் வகுப்பு சோதனைகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

எல்லோரும் வணக்கம் சொல்லுங்க... இன்னைக்கு நாம தமிழ் படிக்கப் போறோம்… அதற்குள் அங்கு ஸ்கிரீனுக்குள் டாடிஈஈஈ மேம் வந்துட்டாங்க வந்து உட்காருங்க, ம்மா... மேம் வந்துட்டாங்க இங்க வா…

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு பரீட்சை ஹாலில் இயற்பியல் கேள்வித்தாளுக்காகக் காத்திருக்கும்போது சரியாக வந்து கணக்கு பேப்பரை நீட்டினார் ஆசிரியர்... ``என்ன கணக்கு பரீட்சையா நாம ஃபிஸிக்ஸ்ல்ல படிச்சுட்டு வந்தோம்’’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, டிரிங்க் என்று லாங்பெல் அடிக்க எல்லோரும் எழுதத் தொடங்க பேப்பரை கையில் வைத்துக் கொண்டு ``சோனமுத்தா போச்சா’’ என்று பேனா மூடியைத் திறக்கும்போது டிரிங்க்க் என்ற பெல் சத்தம் இப்போது காதுக்கு மிக அருகில்...

காதை பொத்திக்கொண்டு கண்ணை இறுக்கி மூடி, ``ச்சை இந்த பெல் அடிக்கிறதை யாராவதும் கொஞ்சம் நிறுத்துங்கப்பா’’ எனக் கத்திக்கொண்டே கண்களை மெல்ல திறந்து பார்த்தால் பக்கத்தில் அலைபேசியில் மணி 6.30 என்று ஒலியோடு ஒளிர்கிறது திரை...

Representational Image
Representational Image

.``எத்தனை வருஷம் ஆனாலும் இந்த பத்தாங்கிளாஸ், ப்ளஸ் டூ கிளாஸ் பரீட்சை நம்மள விடமாட்டேங்குதே ஆண்டவா’’ என்று தலையில் கையை வைக்க வாட்ஸ்அப்பில் ஸ்கூல் ஃபேரன்ட்ஸ் குரூப்பிலிருந்து `கைய்ஸ் ஆல்த பெஸ்ட் ஃபார் ஆன்லைன் கிளாஸ் ஹேவ் ஃபன் வித் குட்டீஸ்' என்று ஒரு குறுஞ்செய்தி...

``ஐயையோ இந்தக் குட்டி வாலுங்க ரெண்டும் நல்லா தூங்குதே சின்ன வாலுக்குதானே முதல்ல கிளாஸு... எழுப்பி ரெடி பண்ணனுமே...’’

அடுத்தடுத்து ஓடிய மனத்திரையை சிறிது சைலன்ட் மோடில் போட்டுவிட்டு சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு நேரே அடுக்களைக்குச் சென்று பாலை காய்ச்சி, டீயைப் போட்டு குடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால் மணி 7.30. திரும்பவும் படுக்கைக்கு ஓடிப்போயி,

``டேய் எழுந்திருங்கடா, தங்கம்ல, பொன்னுல, செல்லம்ல‌ எழுந்திரிங்க’’ என்று உருட்டி பிரட்டி எழுப்பி அப்படியே தூக்கிக் கொண்டுபோய் பாத்ரூமில் உட்கார வைத்து பிரஸ்ஸ கையில் கொடுத்து, ``மொட்டு பிரஷ் பண்ணுங்கடா... பாப்பா பிரஷ் பண்ணுங்க...’’ என்று கெஞ்சி கொஞ்சி தண்ணீரை மொண்டு ஊத்தி குளிப்பாட்டிவிட்டு துடைப்பதற்குள்,

``ஹ்ம்ம்ம்மம் நான் பக்கெட் தண்ணிக்குள்ள உட்காரணும்’’ என்று அழ, ``சரி 2 மினிட்ஸ்தான் உட்காரணும் சரியா’’ எனச் சொல்லி பக்கெட்டில் உட்கார வைத்துவிட்டு போய் மணியைப் பார்த்தால் 8.45…

Representational Image
Representational Image

இன்னும் 15 நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது என்று அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல்லை வைத்து தோசை ஊற்றி, இந்தப்பக்கம் பாலை கலந்துகொண்டு போய் டேபிளில் வைக்கும்போது மணி 8.55. 5 நிமிடத்துக்கு முன்னர் லாகின் பண்ண வேண்டும் என்று துரிதகதியாக மீட்டிங் ஐடி பாஸ்வேர்டை தட்டி உள்ளே சென்றால்,

`` வெயிட் ஃபார் ஹோஸ்ட் டூ...’’ என்று திரையில் காட்டியது, பக்கெட்டில் உட்கார்ந்துகொண்டிருந்த பாப்பா, 'ம்மா டவல்' என்று குரலெழுப்ப, ``ஐயையோ மொட்டு டைமாச்சுடா ஓடி வா ஓடிவா’’ என்று தூக்கிக்கொண்டு வரும்போதே,

``ஹாய் குட்டீஸ் ஹவ் யூ ஆல், ஹவ்‌ இஸ்‌ யுவர் ஹாலிடேஸ், நல்லா என்ஜாய் பண்ணினீங்களா... ஹாய் ஆலன், ஹாய் தாரிணி’’ என்று லேப்டாப்பிலிருந்து பேச்சு சத்தம்,

``மொட்டு அங்க பாரு மேம் உனக்காகத்தான் வெயிட் பண்றாங்க டா’’ என்று டிரெஸ்ஸை மாட்டி சேரில் உட்கார வைத்தால், `இல்லை நான் ஸோஃபாலதான் உட்காருவேன் இங்க மாட்டேன்'னு அடம்பிடித்த பிள்ளையை ஒரு கையிலும் லேப்டாப்பை மறு கையிலும் தூக்கிக்கொண்டு போய் உட்கார வைக்கும்போது …

``எல்லோரும் வணக்கம் சொல்லுங்க... இன்னைக்கு நாம தமிழ் படிக்கப்போறோம்..." அதற்குள் அங்கு ஸ்கிரீனுக்குள் `டாடிஈஈஈ மேம் வந்துட்டாங்க வந்து உட்காருங்க, ம்மா... மேம் வந்துட்டாங்க இங்க வா... மேம் வேர் இஸ் சித்ரா மேம் ஐ வான்ட் டு சி ஹெர்’’ என்று மழலை குரலோசைகள்…

ஸ்கிரினைவிட்டு வெளியில் வந்து நம் குட்டி மேடமுக்கு தோசையைப் பிய்த்து வாயில் திணிக்க…

``எல்லாருக்கும் வணக்கம்... பாட்டு பாடலாமா... நீங்க யூகேஜில பாடின பாட்டுதான் ஞாபகம் இருக்கா குட்டீஸ் இங்கே எல்லாரும் சேர்ந்து பாடலாமா... அம்மா முதல் வணக்கம்... இங்கே எல்லோரும் இப்ப என்னோடு சேர்ந்து பாடுங்க பார்ப்போம்...’’

``இந்தாம்மா எனக்கு தோசை வேணாம் மேம் பாட சொல்லுறாங்க’’ என்று வாயிக்குள்ள இருந்த தோசையை எடுத்து கையில் கொடுத்து...

Representational Image
Representational Image

"அம்மா அம்மா முதல் வணக்கம்" என மழலை கோரஸ் கேட்கத் தொடங்கியதும்... என் எண்ணவலைகளில் என்னுடைய ஒன்றாம் வகுப்பு டீச்சரோடு பாடல் பாடிக்கொண்டிருக்கும்போதே, ``வணக்கம் சொல்லி முடிச்சாச்சு, இப்போ வேறோரு பாட்டு பாடலாமா’’ என்று டீச்சர் கேட்பதற்குள்ளாகவே நம்ம வீட்டு குட்டி, ``மேம் மேம்’’ என்று கூப்பிட

``அட நம்ம புள்ளைக்கு முதல் பாட்டுல சந்தேகம்லாம் வருதே’’ என்று சந்தோஷப்பட...

``மேம் மேம் தூக்கம் வருது’’ என்று சொல்லிவிட்டாள்... அப்படியே கண்ணுமுழியை ஸ்கீரீனில் உருட்டினால், இன்னோரு குட்டி மெத்தையில் படுத்துக்கொண்டே கிளாஸ் கவனிக்கிறார்… இன்னோருத்தர் ஸ்டைலாக சேரில் சாய்ஞ்சுகிட்டு இருக்கார்... அதற்குள் நம் வீட்டு குட்டி மேடம்,

``ம்மா... தலையணை கொண்டுவா’’ என்று கேட்டு வாங்கி வைத்து சாய்மானமாகப் படுத்துக்கொண்டாள்... ``எல்லாருக்கும் தூக்கம் வருதா க்ளாப் பண்ணுங்க’’ என்று டீச்சர் சொல்ல… அதற்குள் இன்னோருத்தவங்க மேம் வாஷ் ரூம், மேம் வாஷ்ரூம் என்று ஓசை எழுப்ப... குட்டி ராணிகளையும் ராஜாக்களையும் தூக்கத்திலிருந்து விழிக்க வைக்க இரண்டு, மூன்று ஆசிரியர்கள் ஒரே ஸ்கீரினில் வந்து கைதட்டி ரைம்ஸ் பாட...`ஐ ரெஜினா மேம்', `சித்ரா மேம்... வசுந்தரா மேம்' என்று குஷியான குட்டிஸுகளும் அவர்களுடன் சேர்ந்து பாட்டு பாடி இனிதே களித்தனர்.

45 நிமிடங்களுக்குள்ளாக மழலைகளின் அழகிய சேட்டைகளைக் கண்டு கழித்து பிள்ளைத் தமிழ் பயின்று , சேர்ந்து பாடல் பாடி என மீண்டும் ஆரம்ப பாடசாலைக்கே சென்று வந்ததைப் போன்றதோர் உற்சாகம் நாள் முழுவதும் தொற்றிக்கொண்டது.

மீண்டும் டிரிங்க் பெல்… இது இன்னொரு கொஞ்சம் பெரிய குட்டி மகாராணிக்கான ஆன்லைன் கிளாஸ்‌ அலாரம்... இப்போ மேத்ஸ் படிக்கப்போறேன்..!

- ந.கிருஷ்ணவேணி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு