Published:Updated:

`ஃபார்ச்சூன்' பத்திரிகையின் `உலகின் சிறந்த 50 தலைவர்கள்' பட்டியல்: இடம்பிடித்த மும்பை மருத்துவர்!

Doctor aparna
Doctor aparna

உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் மும்பை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் டாக்டர் இடம் பிடித்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் `ஃபார்ச்சூன்' பத்திரிகை உலகின் தலைசிறந்த 50 தலைவர்களைத் தேர்வு செய்து வெளியிட்டு அவர்களைக் கௌரவித்து வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்து விளங்குபவர்கள் இப்பட்டியலில் இடம் பெறுவது வழக்கம். சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய பட்டியலில் மும்பையைச் சேர்ந்த பெண் டாக்டர் அபர்ணா ஹெக்டேவின் பெயர் இடம் பெற்று இருக்கிறது. அவர் 15-வது இடம்பெற்றுள்ளார்.

இவர் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையான `காமா' மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ நிபுணராகப் (Urogynaecologist) பணியாற்றி வருகிறார். மருத்துவராகப் பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல் தனது தொண்டு நிறுவனம் மூலம் நாடு முழுவதும் லட்சக்கணக்கான கர்ப்பிணிப் பெண்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரத்துக்கான நடவடிக்கைகளைக் குறைந்தபட்ச தொழில்நுட்பத்தில் செயல்படுத்தி வருகிறார்.

Fortune Magazine
Fortune Magazine
Twitter Image

2008-ம் ஆண்டு `அர்மான்' என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி மத்திய அரசு மற்றும் இதர தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கிராமப் பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்குத் தேவையான தகவல்களை மொபைல் போன் மூலம் வழங்கும் பணியை டாக்டர் அபர்ணா செய்து வருகிறார்.

`ஃபார்ச்சூன்' பத்திரிகையில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் 15வது இடத்தைப் பிடித்துள்ள டாக்டர் அபர்ணா அது குறித்து கூறுகையில், ``எனது பெயர் இறுதி செய்யப்பட்டு இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், இறுதிப் பட்டியலில் எனது பெயர் இடம் பெற்று இருப்பதை என் நண்பர்கள்தான் போன் செய்து தெரிவித்தனர்.

எனது பணிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆரம்பத்தில், மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் மருத்துவமனையோடு நிற்காமல் சமுதாயத்துக்குச் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்தேன். எனவேதான் மருத்துவமனைப் பணி முடிந்த பிறகும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் நிலையை ஆய்வு செய்தேன்.

மொபைல் போன்கள் பெண்களை நேரடியாகத் தொடர்புகொள்ள வசதியாக இருந்தது. பிரசவகாலத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைத் தெரிவிக்க இது மிகவும் வசதியாக இருந்தது. மொபைல் போன் மூலமே பெண்களுக்குத் தேவையான கவுன்சலிங் கொடுக்க முடிந்தது.

Doctor aparna
Doctor aparna

இப்போது மத்திய அரசு மற்றும் இதர தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 17 மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக நடமாடும் சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். 5 திட்டங்கள் மூலம் 2.4 கோடி பெண்கள் மற்றும் குழந்தைகளை சென்றடைந்திருக்கிறோம். இது தவிர 1.70 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சியும் கொடுக்க முடிந்தது. எங்களது கால் சென்டர் மூலமும் 70,000 பெண்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறோம். ஆரம்ப சுகாதார மேம்பாட்டுத்திட்டத்தில் அதிக அளவு முதலீடு தேவை என்பதை எங்களது இந்த சேவை உணர்த்தியிருக்கிறது. இதற்கு `அர்மான்' என்ற தொண்டு நிறுவனம் தேவையான உதவிகளைச் செய்யும்' என்று தெரிவித்தார்.

`ஃபார்ச்சூன்' பத்திரிகையின் 50 பேர் பட்டியலில் நியுசிலாந்து பிரதமர் ஜெசிண்டா, அமெரிக்க அரசியல்வாதி ஸ்டேன்சி ஆப்ராம்ஸ், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி அடார் பூனாவாலா ஆகியோர் பெயர்களுடம் இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு