Published:Updated:

"கண்ணு தெரியாது... ஆனா, நீங்க நினைக்கறத கண்டுபிடிச்சுருவேன்!" - நெகிழவைக்கும் `முறுக்கு' உதயகுமார்!

உதயகுமார்
உதயகுமார் ( சாய்தர்மராஜ் )

"எனக்கும் அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சின்னு நாலு உறவுங்க இருந்திருந்தா நல்லா இருந்துருக்கும். அந்தக் கொடுப்பினை நமக்கு இல்லை."

கையில் வைத்திருக்கும் மஞ்சள் நிற பிளாஸ்டிக் டப்பாவில் முறுக்குப் பாக்கெட்டுகள் நிறைந்திருக்கின்றன. பேருந்து பேருந்தாக ஏறி இறங்குகிறார் அந்தத் தம்பி. சாலையை ஒட்டி நிற்கும் பாட்டியின் கையைப் பிடித்து இழுத்து, "இந்தப் பக்கம் நிற்காதீங்க…'' என்று கரிசனமாக ஓரமாக நிற்கவைக்கிறார். பேருந்து நிலையத்தை ஒட்டி சிறுநீர் கழிக்கும் ஒருவரை, "அண்ணே... நாங்கள்லாம் பிழைக்கிற இடம்னே... அந்தப் பக்கம் போயி இரு" என்று உரிமையோடு சொல்கிறார். பேருந்து நிலையத்துக்குள் அந்தப் பேருந்து நுழைந்ததும் வேகவேகமாக ஓடிப்போய், `மணப்பாறை முறுக்கே, மணப்பாறை முறேக்கே...’ என்று சுவாரஸ்யமான குரலில் கூவிக் கூவி வியாபாரம் செய்கிறார். எப்படியும் ஒரு பேருந்துக்கு ஒன்றோ இரண்டோ முறுக்குப் பாக்கெட்டுகள் விற்றுவிடுகின்றன.

பேருந்துக்கு காத்திருக்கும் உதயகுமார்
பேருந்துக்கு காத்திருக்கும் உதயகுமார்
சாய்தர்மராஜ்

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். அந்தத் தம்பியின் செயல்பாடுகளும் முகமறியாத மனிதர்களிடம் அவர் காட்டும் அக்கறையும் என்னை ஈர்க்க, அவரைக் கவனிக்கத் தொடங்கினேன். தன்னையே கவனித்துக்கொண்டிருப்பதை உணர்ந்த அவர், "அண்ணே ரொம்ப நல்லாயிருக்கும்ணே... வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்க" என்று ஒரு முறுக்குப் பாக்கெட்டைத் திணித்தார். அருகில் கவனித்தபோதுதான் அவர் பார்வைச் சவால் கொண்டவர் என்பதை உணர முடிகிறது.

பேருந்துகளின் வரத்துக் குறைந்ததால் தம்பி கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தார். பேச்சுக்கொடுத்தேன்.

"எம்பேரு உதயகுமார்ணே. இருபத்தோரு வயசாகுது. பார்வை தெரியாது. நல்லா கூர்ந்து பார்த்தா நிழல் மாதிரி உருவம் தெரியும். பிறந்ததுல இருந்தே அப்படித்தான். பிறவிக்கோளாறுன்னு சொல்லிட்டாக. ஆனா, எனக்கு இந்தப் பகுதி முழுவதும் நல்லாப் பழகிருச்சு. அஞ்சாவது வரைக்கும் ஸ்கூலுக்குப் போனேன். அதுக்கு மேல ஏறலே. நான் பெறந்து கொஞ்சநாள்ல எங்க அம்மா, எங்களை விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிருச்சு. அப்பா டீ மாஸ்டரா இருந்தார். தண்ணி அடிக்காதபோது நல்ல மனுஷனா இருப்பார். தண்ணி அடிச்சுட்டா மிருகமாயிருவார். குடிச்சு குடிச்சு உடம்பு கெட்டுப்போச்சு. திடீர்ன்னு ஒருநாள் அவரும் போய்ச்சேந்துட்டார். எனக்கு அண்ணன் ஒருத்தன் உண்டு. அப்பா இறந்தப்புறம் அவன் என்னை அடிச்சுக் கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டான். நான் சம்பாரிக்கிற காசைப் பிடிங்கிக்குவான். அவனுக்குக் கல்யாணம் ஆனபிறகு என்னையை தனியா விட்டுட்டு நாகர்கோயில் பக்கம் போயி தங்கிட்டான்.

முறுக்கு வியாபாரத்தில் உதயகுமார்
முறுக்கு வியாபாரத்தில் உதயகுமார்

அநாதையா திரிஞ்ச என்னோட பசியை இந்த பஸ் ஸ்டாண்ட்தான் ஆத்துச்சு. ஆரம்பத்துல தண்ணி பாக்கெட் வித்தேன். அதுக்கு தடை போட்டபிறகு கேன் வாட்டர் வியாபாரம் செஞ்சுபாத்தேன். அதுல நஷ்டமாயிருச்சு. கையில இருந்த காசெல்லாம் போயிருச்சு. அதுக்கப்புறம் கடன் வாங்கி மணப்பாறைக்குப் போய் முறுக்கு வாங்கிட்டு வந்து வியாபாரம் செய்றேன். சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் பாப்கார்ன் விப்பேன். வெள்ளிக்கிழமை ராத்திரி மாட்டுத்தாவணி போயி 70 பாக்கெட் பாப்கார்ன் வாங்குவேன். அங்கேயே ஒரு பஸ்சுல படுத்துத்தூங்கிட்டு காலையில இங்கே வருவேன்.

அந்த பஸ்ஸோட டிரைவரும் கண்டக்டரும் என்னை புள்ளை மாதிரி பாத்துக்குவாங்க. ரெகுலரா எனக்கு சாப்பாடு வாங்கித் தருவாங்க. ராத்திரி ரெண்டரை மணிக்கு பஸ் டிரிப். அவங்களை எழுப்பி விடுவேன். அதே பஸ்சில வந்திருவேன். அது பாயின்ட் டு பாயின்ட் பஸ்தான். ஆனா எனக்காக கொட்டாம்பட்டி பைபாஸ்ல நிப்பாட்டி ரோட்டை கிராஸ் பண்ணி விட்டுட்டுப் போவாங்க.

பேருந்தில் வியாபாரம் செய்யும் உதயகுமார்
பேருந்தில் வியாபாரம் செய்யும் உதயகுமார்
சாய்தர்மராஜ்

எனக்கு இந்தக் கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்டுதான் வீடு. இங்க இருக்கவங்களுக்கு நான் செல்லப்பிள்ளை. என்ன வேலை சொன்னாலும் கேப்பேன். முறுக்கு வாங்க வாரம் 2 நாள் மணப்பாறை போவேன். 100 பாக்கெட் முறுக்கு வாங்குவேன்... 2 லாப பாக்கெட் தருவாங்க. பாப்கார்ன் மாதிரியே இதோட விலை 6 ரூபாய்தான். இங்க 4 ருபாய் சேர்த்து வச்சு பாக்கெட் 10 ரூபாய்ன்னு விப்பேன்.

நான் தூங்குவேன்ல, அந்த பஸ்சோட கண்டக்டர்தான் மணப்பாறையில் முறுக்கு எடுக்க உதவி செஞ்சார். அவர் அறிமுகப்படுத்தினதாலதான் 2 லாப பாக்கெட் கூடுதலா தர்றாங்க. டிரைவர், கண்டக்டர் அண்ணனுங்க அவங்க பிள்ளைகளோட பழைய டிரஸை எடுத்தாந்து எனக்கு கொடுப்பாங்க.

உதயகுமார்
உதயகுமார்

இப்போ நாலு கட்டப்பை அளவுக்கு டிரெஸ் சேர்ந்திடுச்சு. அதனால நமக்கு தினமும் ஒரு டிரெஸ் இருக்கு. ஆனா அளவுதான் மாறி மாறி இருக்கும். அத கண்டுக்கக் கூடாது. அருணாக்கயிறுதான் நம்ம பெல்ட். அத வச்சு பேண்ட்ட இருக்கிக்குவேன்.

பஸ் ஸ்டாண்டில் எத்தன கொசுவத்தி வச்சாலும், கொசு ரத்தம் பாக்காம விடாது. `சரி கடிச்சுட்டுப் போ'னு விட்ருவேன். காசு நிறையா சேர்த்து வச்சா திருட்டு போயிடும். அதனால கையில காசை வச்சுக்கமாட்டேன். நல்லாச் சாப்பிட்டுச் செலவு செஞ்சுருவேன்.

"நாம் வாங்குற பொருளை 3 மடங்கு லாபத்திற்கு வெளிநாடுகளில் விற்க முடியும்!" - பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் திவ்யா

எனக்கு தோணுச்சுன்னா லீவு போட்டுக்குவேன். உடம்புக்கு முடியலன்னா பக்கத்தில இருக்கிற தருமாஸ்பத்திரிக்குப் போய் ஊசி போட்டுக்குவேன். இப்படித்தான் வாழ்க்கை ஓடுது. எனக்கும் அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சின்னு நாலு உறவுங்க இருந்திருந்தா நல்லா இருந்துருக்கும். அந்தக் கொடுப்பினை நமக்கு இல்லை.

சொந்தக்காரங்களும் என்கிட்டப் பேசமாட்டாங்க. கண்ணு தெரியாட்டியும் பக்கத்துல யார் நிக்குறாங்க, என்ன நோக்கத்தோட பாக்குறாங்க, மனசுல என்ன நினைக்கிறாங்கன்னு உணர்ற கூரு இருக்குண்ணே..." என்றபடி சிரிக்கிறார் உதயகுமார்.

உதயகுமார்
உதயகுமார்

ஆடி அசைந்து ஒரு பேருந்து உள்ளே நுழைகிறது. அந்த ஒலியை உணர்ந்து அந்தப் பேருந்தின் திசையில் நகர்கிறார். எனக்கு மிகவும் அவஸ்தையாக இருந்தது. உதயகுமாராக ஒரு கணம் வாழ்ந்து பார்க்கிறேன். நடுக்கமாக இருக்கிறது. அந்தத் தம்பியின் கனவு, ஏக்கம், தன்னம்பிக்கை... எல்லாமே சிலிர்ப்பாக இருக்கிறது. நம்மைச் சுற்றி எத்தனையோ விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நமக்கான பாடங்கள் எத்தனையோ இருக்கின்றன. உதயகுமார் அவன் வார்த்தைகள் வழியாக வாழ்க்கை குறித்த ஓர் அபிப்ராயத்தை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறான்.

அடுத்த கட்டுரைக்கு